Thursday, May 6, 2010

கிளிநொச்சியில் லெப்.கேணல் சந்திரன் பூங்கா இராணுவ நினைவு தூபியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது


கிளிநொச்சி மாவட்ட முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் சந்திரன் நினைவாக அமைக்கப்பட்ட சந்திரன் பூங்கா முற்றாக அழிக்கப்பட்டு அங்கு வன்னியில் உயிரிழந்த படையினரின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபி சிங்கள படைத்துறைச் செயலர் கோத்தபாய ராஜபக்சவினால் இன்று திறக்கப்பட்டுள்ளது.

சந்திரன் பூங்காவும் அதற்கு அண்மையாக அமைக்கப்பட்டிருந்த பண்பாட்டு மண்டபம், தமிழீழ அரும்பொருட்காட்சியகம், சந்திரன் பூங்காவிற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த பாண்டியன் சுவையூற்று அனைத்தும் தரைமட்டமாக அழிக்கப்பட்டிருந்தன.

சந்திரன்பூங்காவின் மத்தியில் லெப்.கேணல் சந்திரன் நினைவாக அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபியினை அழித்த படையினர் அதனையே மாற்றியமைத்து, படையினர் நினைவான நினைவுத்தூபியினை உருவாக்கியிருந்தனர். இந்த நிலையில் இன்று அந்தத் தூபி திறப்பு நிகழ்வு நடந்தேறியுள்ளது.

இதற்கென கிளிநொச்சி அறிவமுது சந்தியில் இருந்து இரணைமடுச் சந்திவரையான பகுதியினை முழுமையான போக்குவரத்துக்குத் தடை செய்திருந்த படையினர் பல மணி நேரமாக குறித்த பாதையினை முற்றாக மூடியிருந்தனர்.

வீதியின் இருமருங்கிலும் சிங்கள கொடிகள் பறக்கவிடப்பட்டு சந்திரன் பூங்காவைச் சூழ உள்ள அனைத்துப் பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

கிளிநொச்சி பொதுவிளையாட்டு மைதானத்தில் இரண்டு உலங்குவானூர்திகள் தரையிறங்கியிருந்தன. கோத்தபாய உட்பட்ட உயர் அதிகாரிகள் பங்கொண்ட நிகழ்வின் போது, கண்டிய நடனம் உட்பட்ட சிங்களக் கலாச்சார பிரதிபலிப்பாகவே நிகழ்வு நடைபெற்றது.

சிங்கள மயப்படுத்தப்பட்ட இந் நிகழ்வினால் கிளிநொச்சி மக்கள் இன்று போக்குவரத்து உட்பட்ட அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்வதில் பலத்த நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தனர். என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment