Thursday, May 6, 2010

நாடு கடந்த தமிழீழ அரசை முறியடிக்க அரசு மும்முரம் வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தூதர்கள் ஊடாக நடவடிக்கை


2




நாடு கடந்த தமிழீழ அரசொன்றை அமைப்பதற்குப் புலிகள் வெளிநாடுகளில் மேற்கொண்டு வரும் முயற்சிகளை முறியடிப்பதில் அரசு மும் முரமாக ஈடுபட்டிருக்கிறது என்றும் இதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறு வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களுக்கு இலங்கை அரசு ஆலோசனை வழங்கியிருக்கிறது என்றும் வெளி விவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நேற்று நாடாளுமன்றில் கூறினார். நாடாளுமன்றில் நேற்று இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோதே இவ்வாறு அவர் கூறினார்.
அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு:
மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராகச் செயற்படுகின்றன என்று சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் எதுவித உண்மையுமில்லை. எமக்கு முழுமையான உதவியை வழங்கப்போவதாக அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார்.
அவசரகால ஒழுங்கு விதிகள் சில நீக்கப்பட்டிருப்பதால் மேற்குலக நாடுகள் பல எமக்குத் தொடர்ச்சியாக வாழ்த்துக்களைத் தெரிவித்த வண்ணம் உள்ளன.
பூட்டானில் இடம்பெற்ற சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற எமது ஜனாதிபதி அங்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்துப் பேசினார். இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கும், தெற்காசியாவின் பொருளாதார அபிவிருத்திக்கும் உதவப்போவதாக இந்தியப் பிரதமர் எமது ஜனாதிபதியிடம் கூறினார்.
அதேபோல், ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் எமக்கு உதவ முன்வந்துள்ளன. அடுத்த வாரம் எமது ஜனாதிபதி ஈரான் செல்கிறார். அங்கு பல நாடுகளின் தலைவர்களை ஜனாதிபதி சந்தித்துப் பேசுவார்.
அண்மையில் எமது ஜனாதிபதி ரஷ்யா சென்று அங்கு பல முக்கிய சந்திப்புகளை நிகழ்த்தினார். இதன் பயனாக அங்குள்ள பல நிறுவனங்கள் எமது நாட்டுப் பொருளாதாரத்துக்கு உதவ முன்வந்துள்ளன.
இவ்வாறு பல நாடுகள் பல வழிகளில் எமக்கு உதவி வருகின்றன. வெளிநாடுகளில் உள்ள புலிகள் அங்கு நாடு கடந்த அரசொன்றை அமைப்பதற்கு முயற்சி செய்து வருகின்றனர். அந்த முயற்சியை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு நாம் வெளிநாடுகளில் உள்ள எமது நாட்டுத் தூதரகங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம் என்றார்

No comments:

Post a Comment