Thursday, May 6, 2010

அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அவசரகால சட்ட விதி மீறப்படுகிறது : கூட்டமைப்பு எம்.பி







அதியுயர் பாதுகாப்பு வலயம் மற்றும் இடம்பெயர்ந்தோருக்கான முகாம்கள் உள்ளிட்ட பல விடயங்களில் அரசாங்கம் அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகளை மீறியே செயற்படுகின்றது என கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் எம்.பியான சுமந்திரன் தெரிவித்தார்.

இராணுவ வெற்றியை வெற்றிக்களிப்பாகக் கொண்டாடாமல் உணர்வுபூர்வமாகவும் அடுத்தவரின் மனதைப் புண்படுத்தாமலும் நினைவுகூரும் விதத்தில் அனுஷ்டிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான இரண்டாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

"அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகள் இலகுபடுத்தப்பட்டதாகக் கூறி வெளிவிவகார அமைச்சர் 12 விடயங்ள் பற்றி குறிப்பிட்டார். அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கும் பிரேரணை மீதான விவாதத்தின்போதே ஒழுங்குவிதிகள் திருத்தம் பற்றி பேசுகின்றோம். திருத்தங்கள் நடைமுறை சாத்தியமானதல்ல, போதுமானதல்ல.

1995ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகளில் சில மட்டும் தளர்த்தப்பட்டுள்ளன. பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளுக்கென 2006ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட விசேட பிரிவுகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

தற்போதைய நிலைமையில் சரணடையும் ஒருவரது வாக்குமூலம் மட்டுமே அவரை புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்புவதற்கு போதுமானதாக இருக்கின்றது. இது ஜனநாயகக் கொள்கைக்கு எதிரானதாகும். சரணடைவோரின் வாக்குமூலம் பெறப்பட்டு நீதிமன்றத்தின் முன் கொண்டுசெல்ல வேண்டும். நீதிமன்றமே புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்புவதா? இல்லையா? என்பதனைத் தீர்மானிக்க வேண்டும்.

ஆனால் 11 ஆயிரம் பேர் இனங்காணப்படாத இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதில் எவருமே நீதிமன்ற நடைமுறைகளை கடைப்பிடிக்கவில்லை. அதுமட்டுமன்றி படையினருக்கு இன்னும் பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கின்றமை பிரச்சினையான விடயமாகும். அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகள் நிறைவேற்றப்பட்டாலும் அரசாங்கம் சட்டத்தை மீறி செயற்பட்ட சந்தர்ப்பங்கள் பல இருக்கின்றன.

அதற்கு பல உதாரணங்களை காண்பிக்க முடியும். குறிப்பாக வலிகாமம் அதியுயர் பாதுகாப்பு வலயம் அவசரகாலச் சட்டத்திற்கு முரணானது. அதியுயர் பாதுகாப்பு வலயம் சட்டரீதியானது அல்ல. சட்டத்தின் பிரகாரம் ஏற்படுத்தவில்லை, ஏற்பாடுகள் கிடையாது.

இடம்பெயர்ந்த முகாம்களில் சுமார் 80 ஆயிரம் பேர் இன்னும் இருக்கின்றனர். அவர்களுக்கு தடுப்பு காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கவில்லை. அவசரகாலச் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீறியே செயற்படுவதனால் அதைப்பற்றி நாடாளுமன்றில் பேசுவதில் அர்த்தமில்லை. என்றாலும் ஒழுங்குவிதிகளை மீறி செயற்பட வேண்டாம் என அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

நல்லிணக்க ஆணைக்குழு வரவேற்கத்தக்கது

அதேவேளை, உண்மைகளை ஆராய தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவொன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார். இது தென்னாபிரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும். இது வரவேற்கத்தக்கதாகும்.

சிந்தனை ரீதியில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். 20 வருடங்களாக இடம்பெற்றது படையினருக்கும் ஆயுதகுழுவொன்றிற்கும் இடையிலான யுத்தமல்ல. இது நீண்டகால யுத்தமாகும். இதனால் இன மக்களுக்கிடையில் இடைவெளி இருந்தது என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவே அனைவரும் ஒன்றிணைந்து வாழ சிந்தனையில் மாற்றம் தேவை.

எதிர்வரும் 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை யுத்த வெற்றிவாரம் கொண்டாடப்படவுள்ளது. இது மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட வேண்டிய விடயமாகும். அடுத்தவர் மனதை புண்படுத்துவதாக இது அமைந்துவிடக் கூடாது.

வெற்றிக்களிப்பாக அன்றி யுத்தத்தில் உயிரிழந்த,காயமடைந்த, படையினரை மட்டுமல்லாது உயிரிழந்த, காயமடைந்த உறவினர்கள், உடைமைகளை இழந்த மக்களையும் நினைவுகூருவதாக அமைய வேண்டும்.

இதில் உயிரிழந்த அனைவரும் இலங்கையர்கள். அவர்கள் உயிர் துறந்ததினாலேயே இந்த சுதந்திரம் கிடைத்தது. அதற்கேற்றவாறு இதனை அனுஷ்டிக்க வேண்டும். எனவே மக்கள் மத்தியில் சிந்தனை ரீதியில் மாற்றத்தை ஏற்படுத்தாது விட்டால் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது" என்றார்.

No comments:

Post a Comment