Wednesday, December 16, 2009

இலங்கை அரசின் துரோகமும் வஞ்சகமும்

விடுதலைப்புலிகள்


துரோகமும் வஞ்சகமும் வெகுசீக்கிரமே வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்பார்கள். அதுவும், சேர்ந்து சதி செய்தவர்களுக்குள் சண்டை ஆரம்பித்துவிட்டால் இன்னும் வேகமாகவே வெளிவரும். அதிகாரப் பங்கீட்டு ஆசையில், மகிந்தா ராஜபக்ஷேவுக்கும் சரத் ஃபொன்சேகாவுக்கும் ஏற்பட்ட மோதலில், பல்வேறு ரகசியங்களைத் தினமும் வெளியிடுகிறார் சரத் ஃபொன்சேகா. 'நான் ராணுவப் புரட்சி செய்யப்போவதாகச் சந்தேகப்பட்டு, இந்தியாவின் உதவியை மகிந்தா கேட்டார். இந்தியக் கடற்படை நமது எல்லையில் அக்டோபர் 15-ம் தேதி காத்திருந்தது' என்பது சரத் வீசிய முதலாவது அஸ்திரம். உடனே, அதிர்ச்சியில் அதிர்ந்த இந்தியா, 'அப்படி எதுவும் நடக்கவில்லை' என்று மறுத்தது. அடித்துப் புரண்டு கொழும்புக்கு ஓடினார் அமைச்சர் பிரணாப் முகர்ஜி.

இப்போது இரண்டாவது அஸ்திரத்தை வீசியிருக்கிறார் சரத். மனசாட்சியுள்ள அனைவர் மனதையும் திடுக்கிடவைக்கும் கோரக் கொலையாக நடந்த சம்பவம் அது. புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த நடேசன், சமாதானச் செயலர் புலித்தேவன், முக்கியத் தளபதி ரமேஷ் ஆகிய மூன்று பேருடன் அவர்கள் குடும்பத்தினரும் இணைந்து வெள்ளைக் கொடியைக் கையில் தாங்கிச் சரணடைவதற்காக நடந்து வரும்போது நாலாபுறமும் இருந்து பாய்ந்து வந்த அலுமினியக் குண்டுகள் அவர்களைச் சல்லடையாகக் துளைத்தெறிந்த சம்பவம், சமீபகாலச் சரித்திரத்தில் வேறு எங்கும் நடக்காத துரோகக் கதை. வெள்ளைக் கொடியில் ரத்தச் சிதறல்கள் விழுந்ததை உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்தன. மனித உரிமை அமைப்புகள் இதைக் கண்டித்தன. 'அவர்கள் சமாதானத்துக்காக வரவில்லை' என்று சிங்கள அதிகாரிகள் மறுத்தார்கள். இன்று அரசியலில் குதித்து, 'அடுத்த ஜனாதிபதி நான்தான்' என்ற கனவில் மிதந்துகொண்டு இருக்கும் சரத் ஃபொன்சேகா, இந்த விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கிறார். "நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகிய மூன்று பேரும் நார்வே மற்றும் வெளிநாட்டுத் தரப்புகள் மூலமாகச் சரணடையப் போவதை ஜனாதிபதியின் அரசியல் ஆலோசகர் பசில் ராஜபக்ஷேவுக்குச் சொன்னார்கள். இந்தத் தகவலை கோத்தபய ராஜபக்ஷேவுக்கு பசில் சொல்லியிருக்கிறார். அதன்படி வெள்ளைக் கொடியும் வெள்ளை ஆடையும் அணிந்து இவர்கள் மே 17-ம் தேதி அதிகாலை சரணடையலாம் என்று சொல்லப்பட்டது. அப்போது 58-வது படையணித் தளபதியான சவேந்திர சில்வாவுக்கு கோத்தபய ராஜபக்ஷே ஓர் உத்தரவு போட்டார். 'யாரும் சரணடையக் கூடாது. அனைவரையும் சுட்டுக் கொல்லுங்கள்' என்று சொல்லியிருக்கிறார். அதன்படி அனைவரும் கொல்லப்பட்டார்கள்"- இதுதான் சரத் விவரிக்கும் செய்தி. இலங்கையின் போர்க் குற்றத்துக்கு இதைவிட முக்கியமான ஆதாரம் வேறு தேவையில்லை. இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை. 'நான் அப்படிச் சொல்லவே இல்லை!' என்று மறுத்திருக்கிறார் ஃபொன்சேகா.

இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் அனைவருக்குமே உள்காய்ச்சல் ஆரம்பித்திருக்கிறது. இதுபற்றி சிங்கள ராணுவத்தின் தளபதிகள் கருத்துச் சொல்ல மறுத்துள்ளார்கள். 58-வது படையணித் தளபதி சவேந்திர சில்வாவும் கருத்துச் சொல்ல மறுத்துள்ளார். 'புலிகள் சரணைடையப் போகும் தகவலை எனக்குத் தொலைபேசி மூலம் சொல்லியிருந்தார்கள்!' என்கிறார் நார்வே சர்வதேச விவகார அமைச்சர் எரிக் சோல்கிம். "நார்வேயிடம் இருந்து புலிகள் சரணடைவது தொடர்பாக எந்தத் தகவலையும் நான் பெறவில்லை!" என்று பசில் ராஜபக்ஷே மறுத்திருக்கிறார். இப்படி வெள்ளைக் கொடியுடன் வந்தவர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டது உலக சமுதாயத்தின் முன் மறைக்கப்படுகிறது. ஆனால், அந்தக் கொலைக்கு முக்கியமான சாட்சியாக 'சண்டே டைம்ஸ்' செய்தியாளர் மேரி கெல்வின் இருக்கிறார். உண்மையில் அன்று நடந்தது என்ன என்பதை அவர் உலகத்தின் முன்னால் சொல்லிவிட்டார்.

"இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் கடைசியாக புலிகள் நிலைகொண்டு இருந்த மிகச் சிறிய காட்டுப் பகுதியில் இருந்து மே 17-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் எனக்கு சேட்டிலைட் போனில் அழைப்பு வந்தது. இயந்திரத் துப்பாக்கி சத்தங்களைப் பின்புறத்தில் என்னால் கேட்க முடிந்தது. எட்டு வருடங்களுக்கு முன்பே எனக்கு நடேசன், புலித்தேவனைத் தெரியும். அவர்களும் ஏனைய 300 போராளிகளும் அவர்களது குடும்பங்களும் தங்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சியாக என்னிடம் பேசினார்கள். 'ஆயுதங்களைக் கீழே போட நாங்கள் தயார். எங்களது பாதுகாப்புக்கு அமெரிக்கா அல்லது பிரிட்டன் உத்தரவாதம் தர வேண்டும். தமிழர்களுக்கு ஒரு அரசியல் தீர்வை முன் வைக்க வேண்டும் ஆகிய மூன்று நிபந்தனைகளுடன் சரணடையத் தயார்' என்று நடேசன் என்னிடம் சொன்னார்.

அமெரிக்கா, பிரிட்டன் அதிகாரிகளிடம் பேசிய நான், அப்போது கொழும்பில் இருந்த ஐ.நா. சிறப்புத் தூதுவர் விஜய் நம்பியாரிடம் பேசினேன். அவர் இந்தத் தகவலை இலங்கை அரசுக்குச் சொல்வதாகச் சொன்னார். இது நடேசனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. பதுங்கு குழிக்குள் சிரித்தபடி தாங்கள் இருக்கும் படத்தை எடுத்து புலித்தேவன் எனக்கு அனுப்பிவைத்தார். அதன்பிறகு எந்தத் தகவலும் இல்லை. அதிகாலை ஆகிவிட்டது. 'புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டார்கள்' என்று நம்பியாரிடம் மீண்டும் சொன்னேன். 'நான் ஜனாதிபதியிடம் பேசிவிட்டேன். வெள்ளைக் கொடியைப் பிடித்தபடி அவர்கள் வந்தால் போதும்' என்று நம்பியார் என்னிடம் சொன்னார். லண்டனில் இருந்து நடேசனுக்கு போன் கிடைக்கவில்லை. தென்னாப்பிரிக்காவுக்கு அழைத்து அவருக்கு சொல்லச் சொன்னேன். அவர்களாலும் தொடர்புகொள்ள முடியவில்லை. ஆனால், அதற்குள் அங்கு எல்லாம் நடந்து முடிந்து விட்டது. அன்று மாலை அவர்களது உடல்களைத் தான் டி.வி-யில் பார்த்தேன்.

இதற்கிடையில் இலங்கை எம்.பி. ஒருவரை நடேசன் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். அவர் ஜனாதிபதிக்குப் பேசியிருக்கிறார். சரணடைந் தால் முழு பாதுகாப்புடன் நடத்தப்படுவார்கள் என்று அவரும் சொல்லியிருக்கிறார். அதன்படி நம்பிக்கையுடன் நடந்து போயிருக்கிறார் நடேசன். ஆனால், 6.20 மணிக்கு அனைத்தும் முடிந்தது. சில பயங்கரவாத நடவடிக்கைகளால் புலிகளைச் சர்வதேச நாடுகள் தடை செய்திருந்தாலும், நடேசனும் புலித்தேவனும் தமிழர் உரிமைப் பிரச்னைக்கு ஓர் அரசியல் தீர்வையே விரும்பியிருந்தார்கள். அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் தமிழர்களுக்கு நம்பிக்கையான அரசியல் தலைவராகி இருப்பார்கள்!" என்று சொல்லியிருக்கிறார் மேரி கெல்வின்.

நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோர் தலைமையில் சுமார் 300 பேர் சரணடைய வந்திருக்கிறார்கள். இவர்களைப் பார்த்ததும் ராணுவம் சுட ஆரம்பித்தது. இதில் நான்கைந்து பேர் மட்டுமே தப்பிக்க முடிந்ததாம். நடேசனின் மனைவி ஒரு சிங்களப் பெண்மணி. ராணுவம் சுட்டதைப் பார்த்த அவர், சிங்களத்தில் கத்தியிருக்கிறார். "நடேசன் சரணடைய வருகிறார். அவரை ஏன் சுடுகிறாய்?" என்று கேட்டிருக்கிறார். அந்த நொடியில் பறந்து வந்த குண்டு அவரையும் பலி வாங்கியது. புலிகளிடம் ஆறு சிங்கள் ராணுவ வீரர்கள் பணயக் கைதிகளாக ஐந்து ஆண்டுகளாக இருந்தார்கள்.இனி தப்பிக்க வழியில்லை என்று தெரிந்ததும் மே 15-ம் தேதி அதிகாலையில் அந்த ஆறு பேரையும் அனுப்பிவைத்தார்கள் புலிகள். ஆனால், நடேசனின் மனைவி சிங்களப் பெண்மணி என்று தெரிந்தே கொன்றது ராணுவம். "இந்த அரக்கத்தனத்தில் தனக்குப் பங்கு இல்லை. மேலும், கடைசி மூன்று நாட்கள் நடந்தது எதுவும் எனக்குத் தெரியாது" என்கிறார் ஃபொன்சேகா. அப்படியானால், மூன்று நாட்கள் நடந்தவை உலகத்தின் முன்னால் நிரூபிக்கத்தக்க போர்க்குற்றங்களாக இருப்பதால், அவர் தப்பிக்க முயற்சிக்கிறார்.

இந்தியாவின் மிக முக்கியமான மனித உரிமை அமைப்பான பி.யு.சி.எல்-லின் தமிழகப் பொறுப்பாளராக இருக்கும் வழக்கறிஞர் சுரேஷ், இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்த ஆவணங்களைச் சேகரித்து, உலக நாடுகளின் கவனத்துக்குக் கொண்டுசேர்க்கும் பணியைத் தொடர்ச்சியாகச் செய்து வருகிறார். "வெள்ளைக் கொடியோடு சரணடைய வந்தவர்களைச் சுட்டுக் கொன்றார்கள் என்று நாங்கள் சொன்னபோது நம்ப மறுத்தார்கள். ஆனால், இன்று சரத் ஃபொன்சேகாவே ஒப்புக்கொண்டுவிட்டார். மகிந்தாவுக்கும் ஃபொன்சேகாவுக்கும் நடக்கும் உள்சண்டையால் இது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. ஐ.நா. மனித உரிமை அறிக்கைப்படியும் ஜெனிவா வார் கன்வென்ஷன்படியும் நடேசன் உள்ளிட்ட சரண் அடைந்த புலிகள் கொல்லப்பட்டது மாபெரும் குற்றம். போர்ச் சூழலில் தொடர்புடைய எதிர்த்தரப்பினர் சரணடையும்போது அவர்களது உயிருக்கும் உடைமைக்கும் உத்தரவாதம் உண்டு. அவர்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும் என்று இருக்கிறது. நடேசனுடன் அப்பாவிப் பொதுமக்களும் பெண்களும் போயிருக்கிறார்கள். அவர்களும் சுடப் பட்டுள்ளார்கள். எனவே, இவை அப்பட்டமான மனித உரிமை மீறல். போர்க்குற்றம்தான். அடுத்த மாதம் ஐரோப்பிய நாடுகளில் நடக்க இருக்கும் கூட்டத்தில் இதைப் பதிவு செய்வேன்!" என்று சொல்கிறார் சுரேஷ்.

இலங்கைத் தேர்தல் முடிவதற்கு முன் இன்னும் எத்தனை கோரங்கள் வெளியில் வந்து உலகை உலுக்கப்போகின்றவோ?! அப்போதும்கூட உலக நாடுகளிடம் மயான அமைதிதான் நிலவுமோ என்னவோ?!

No comments:

Post a Comment