Tuesday, December 15, 2009

இறுதிக்கட்டப் போர் ரகசியங்கள்
ஒட்டிக் கிடந்தவர்கள் முட்டிக் கொள்வதன் விளைவாக, விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போர் ரகசியங்கள் அடுத்தடுத்து வெளியாகும் எனச் சொல்லி, அதற்கான சூழலையும் விளக்கி வந்தது ஜூ.வி.! இதோ அரசியலில் குதித்திருக்கும் ஃபொன்சேகா, தன் முன்னாள் நண்பர் ராஜபக்ஷேவுக்கு எதிராகத் திருவாய் மலரத் தொடங்கிவிட்டார்!

இது வரை தமிழ் உணர்வாளர்கள் கூறி வந்த குற்றச்சாட்டுகளை, கூட்டுக் கொடுமை நடத்தியவர்களில் ஒருவரான ஃபொன்சேகாவே சொல்லியிருப்பதுதான் இதில் விசேஷம்!

கடந்த 11-ம் தேதி கட்டுப்பணம் (வேட்பாளர் டெபாசிட்) செலுத்திய ஃபொன்சேகா, உடனே ஐ.தே.முன்னணி தலைவர்களுடன் பிரசார வியூகம் பற்றி விவாதிக்கத் தொடங்கி விட்டார். அதில், 'எப்படியும் சிங்கள வாக்குகள் பாதி நமக்கு வந்து விடும். தமிழ் மக்களின் வாக்குகளைக் குறிவைப்போம். அதன்படி, இறுதிக்கட்ட யுத்த விவகாரங்களை வைத்து அரசியல்நடத்துவது தான் தோதான அணுகுமுறையாக இருக்கும்!' என முடிவெடுத்திருக்கிறார்கள். இந்நிலையில், கொழும்புவில் இருக்கும் தமிழ்ப் பத்திரிகையாளர்கள் நம்மிடம் சில விஷயங்களை முன்வைத்தனர்.

''போரின் இறுதிக்கட்டத்தில் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் நடேசன், சமாதான செயலகத்தின் பொறுப்பாளர் புலித்தேவன், ராணுவ அதிரடிப் படைப்பிரிவு தளபதி ரமேஷ் ஆகியோர் ராணுவத்திடம் சரணடைவதற்காக செஞ்சிலுவை சங்கத்தின் மூலமாகவும், நார்வே தூதுவர் எரிக் சோல்கிம்

மூலமாகவும் சில முயற்சிகளை மேற்கொண்டது உண்மைதான். மறைந்த ஆண்டன் பாலசிங்கத்தின் மனைவியான அடேலின் தோழியும், புலிகள் இயக்கத்துக்கு சில காலம் சர்வதேசத் தொடர்புகளின் மொழிபெயர்ப்பாளராக செயல்பட்டவருமான கெவின் என்பவரும் இந்த முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார்கள். இதில் எரிக், அதிபரின் ஆலோசகரான பசிலிடம் பேசிய பிறகு, பசில் போய் அதிபரிடம் பேசினார். கிட்டத்தட்ட 10,000 புலிகள் ராணுவத்திடம் சரணடையும் பட்சத்தில், அவர்கள் உயிருக்கு உத்தரவாதம் அளிப்பதாக அதிபரும் அனுமதியளித்தார். இதன்படிதான், 58-வது படையணியின் தளபதியாக இருக்கும் சவேந்திர சில்வாவிடம் இவர்கள் அனைவரும் சரணடைய வேண்டும் என உத்தரவு வந்திருக்கிறது.

மே 17-ம் தேதி அதிகாலை வெள்ளமுள்ளி வாய்க்கால் பகுதியில் வெள்ளையுடை அணிந்து, வெள்ளைக் கொடிகளைத் தாங்கியவாறு அவர்கள் வெளியில் வந்தனர். இந்த நேரத்தில் இந்த விஷயம் கோத்தபயவுக்கு தெரியவும், சவேந்திர சில்வாவை அழைத்து எல்லோரையும் சுட்டுக் கொல்லும்படி அவர்தான் உத்தரவிட்டி ருக்கிறார். அதன்படியே, அத்தனை பேரும் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இப்போது, இதைத் தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் வேலையில் இறங்கியுள்ளார் ஃபொன்சேகா. ராணுவத் தளபதியான தான், அப்போது களத்தில் இல்லை என்பதையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார்!'' என்றார்கள்.

ஃபொன்சேகாவின் இந்த அதிரடியைத் தொடர்ந்து மீடியாக்களை சந்தித்திருக்கிறார் அமைச்சர் மகிந்தா சமரசிங்கே. ''ஃபொன்சேகா தேசத்துரோகி ஆகி விட்டார். போரின்போது வெள்ளைக் கொடி ஏந்தி சரணடைய வந்த யாரையும் ராணுவம் கொல்லவில்லை என கடந்த ஜூலை 10-ம் தேதி ஃபொன்சேகாவே ஓர் அறிக்கையில் கூறியிருந்தார். இப்போது முரண்பட்டு வேறு தகவலைச் சொல்வதால், மக்களுக்கு அவர் மீதான நம்பகத்தன்மை குறைவதுதான் நடக்கும்!'' என பாய்ந்திருக்கிறார்.

இலங்கை அரசு தரப்பின் கிடுகிடுப்பை ரசித்தபடி இருக்கும் 'புதிய அரசியல்வாதி' ஃபொன்சேகா, அடுத்தடுத்து மேலும் சில பிரசார குண்டுகளை போடவும் தயாராக இருக்கிறாராம். இது தொடர்பாக ஐ.தே.க-வின் எம்.பி-க்கள் சிலரிடம் பேசினோ
''ஃபொன்சேகா, சாதாரணமான ஒரு விஷயத்தைத் தான் முதல்ல சொல்லியிருக்காரு. அடுத்து, கடற்படை தளபதி சூசையின் மனைவி குடும்பத்துடன் கைது செய்யப்பட்டபோது நடந்த விஷயங்கள், 57-வது படைப்பிரிவு தலைமையகத்தில் வைத்து பொட்டு அம்மானின் குடும்பத்துக்கு நிகழ்ந்த கொடூரம், புலிகளின் முக்கியக் கட்டளைத் தளபதிகள் 67 பேர் ஒரே நேரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டமை, தற்போது ஃபோர்த் ஃப்ளோரில் பாலகுமாரன் உள்ளிட்ட புலிகளின் அரசியல்பிரிவு தலைவர்கள் அனுபவிக்கும் துயரங்கள், மாணிக் ஃபார்ம் முகாமில் ஒரே நேரத்தில் 500 இளம் தமிழ் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பயங்கரம், பிரபாகரனுக்கு இறுதி நிமிடங்களில் நடந்த கொடூரங்கள்... இப்படி வரிசையாக யுத்த ரகசியங்களை வகைப்படுத்தி வைத்திருக்கிறார் ஃபொன்சேகா. இவை தொடர்பான ஒலி நாடாக்களும், சிங்கள ராணுவத்தினரின் செல்போன் பதிவுகளில் இருந்து எடுக்கப்பட்ட சி.டி-க்களும் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

இது தவிர, எந்தக் குற்றமும் செய்யாத, பாவமும் அறியாத அப்பாவித் தமிழர்கள் 2 லட்சம் பேரை போரில் கொல்ல வேண்டிய நெருக்கடி ஏன் வந்தது? அந்த உத்தரவைக் கொடுத்தது யார்? இந்தக் கேள்விகளுக்கும் ஃபொன்சேகா சில தெளிவுகளை ஏற்படுத்துவார்! நடந்த விஷயங்களில் சிலவற்றுக்குத் தானும் பொறுப்பேற்று, அதற்காக தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்கவும் அவர் தயாராகி வருகிறார்!'' என்கிறார்கள். ஃபொன்சேகா சொல்வதை தமிழ் மக்கள் அப்படியே நம்புவார்களா, தெரியாது! ஆனால், மோதிக் கொள்ளும் இரண்டு பெருந்தலைகளும் மாறி மாறி உண்மைகளை வெளியிடும்போது, ஈழத்துக் கொடுமை குறித்து இன்னும் பல வயிற்றெரிச்சலான காட்சிகள் நம்முன் விரியும். தாங்கிக் கொள்ளத் தயாராவோம்!

No comments:

Post a Comment