Monday, June 28, 2010

ஓமந்தையில் அனைத்து அரசசார்பற்ற நிறுவனங்களுக்கும் அனுமதி மறுப்பு- ஜ.நா விசாரணைக்குழு அமைப்புக்கு எதிராக அரசு பழிவாங்கல்

இன்றைய தினம் ஓமந்தையில் சோதனைச்சாவடியில் வைத்து வன்னி செல்ல சென்ற அனைத்து அரசசார்பற்ற நிறுவனங்களுக்கும் இராணுவத்தினர் அனுமதி மறுத்துள்ளனர். ஜ.நா விசாரணைக்குழு அமைத்ததுக்கு பழிவாங்கும் முகமாக இதனை இலங்கை அரசாங்கம் செய்துள்ளது..

Monday, June 14, 2010

விசுவமடு பாலியல் வல்லுறவு வழக்கில் நான்கு இராணுவத்தினரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு







விசுவமடு ரெட்பானா பகுதியில் கடந்த 2 ஆம் திகதி நள்ளிரவு வீடொன்றினுள் புகுந்த இராணுவத்தினர் அங்கிருந்த இரண்டு பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பான வழக்கில் நான்கு இராணுவத்தினர் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் நீதவான் சிவகுமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விசுவமடு ரெட்பானா பகுதியில் கடந்த 2 ஆம் திகதி நள்ளிரவு வீடொன்றினுள் புகுந்த இராணுவத்தினர் அங்கிருந்த இரண்டு பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகத்தின் பேரில் 6 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டிருந்;தார்கள். இன்று கிளிநொச்சி நீதிமன்றத்தில் இந் ஆறு இராணுவத்தினரோடு 30 பேர் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தியபோது, பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களும், சம்பவ நேரத்தில் வீட்டில் இருந்த ஏனைய சாட்சிகளும் எதிரிகளை அடையாளம் காட்டியுள்ளனர்.

இதனையடுத்து அடையாளம் காணப்பட்ட 4 பேர் மேலும் 14 நாட்களுக்கு நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பத்திரிகையாளர் வித்தியாதரன் வடமாகண சபை தேர்தலில் போட்டியிடுவாரா?

எதிர்வரும் வட மாகாண சபை தேர்தலில் போட்டியிட வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால் அதற்கு தான் தயார் என சுடர் ஒளி பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் என்.வி.வித்தியாதரன் தெரிவித்தார்.

சிரேஷ்ட ஊடகவியலாளரான வித்தியாதரன் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் சுடர் ஒளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பதவியிலிருந்து விலகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது சம்பந்தமாக தமிழ்மிரர் இணையதளத்தளத்திற்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

கடந்த வாரம் இது சம்பந்தமாக இலங்கையில் உள்ள சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளர்கள் சிலர் தன்னை சந்தித்து சிவில் சமூகத்தை சேர்ந்தவர்கள் அரசியலில் இறங்க வேண்டும். அந்த அடிப்படையில் எதிர்வரும் வடமாகண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் படி வேண்டினர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தன்னை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த தயார் என்றால் தான் போட்டியிட தயார் என்றேன்.

இந்த விடயம் சம்பந்தமாக அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கலந்துரையாடி சாதகமான பதில் தருவதாக கூறினார்கள். அவர்களின் பதிலை எதிர்பார்த்து கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தின் போது தமிழ் மக்களுடன் இருந்து மிகவும் கஷ்டப்பட்டவன் என்ற வகையில் வடமாகண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட பொருத்தமானவன் என நினைப்பதாக ஊடகவியலாளர் வித்தியாதரன் தெரிவித்தார்

இன்று சர்வதேச இரத்த தான தினம் : 106 பேர் இரத்த தானம்







இன்றைய சர்வதேச இரத்த தான நிகழ்வில், கொழும்பு தேசிய இரத்த மாற்று வங்கியில் 106 பேர் இரத்த தானம் செய்துள்ளதாக வைத்தியசாலை பொறுப்பாளர் டாக்டர் நாமல் பண்டார வீரகேசரி இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.

அதேவேளை, நாடு தழுவிய ரீதியில் ஆயிரக்கணக்கானோர் இரத்த தானம் செய்துள்ளனர். இன்று நாடு தழுவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளிலும் சர்வதேச இரத்த தான நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. _

கி.மா.சபை உறுப்பினர்கள் நாடு திரும்பியும் இந்தியாவில் தங்கியிருக்கும் பிள்ளையான்

தற்போது நான் புது டில்லியில் தங்கியிருப்பது தன்னுடைய தனிப்பட்ட நோக்கமே தவிர, இந்திய அரசின் உயர் அதிகாரிகளை சந்திக்கும் நோக்கில் அல்ல என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் சற்று முன் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மாகாண சபை உறுப்பினர்களையும்உள்ளடக்கிய குழு ஒன்று கடந்த வாரம் இந்தியாவின் கேரளா பகுதிக்கு சென்றிருந்தது.

இக்குழு உறுப்பினர்கள் கடந்த சனிக்கிழமை நாடு திரும்பினர். எனினும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நாடு திரும்பாமல் புதுடில்லியில் தங்கியுள்ளார்.

இது சம்பந்தமாக இந்தியாவில் தங்கியுள்ள முதலமைச்சருடன் தமிழ்மிரர் இணையதளம் நேரடியா தொடர்பு கொண்டு வினவியது.

அதற்கு அவர், தற்போது நான் புது டில்லியில் தங்கியிருப்பது தன்னுடைய தனிப்பட்ட நோக்கமாகும். இந்திய அரசின் உயர் அதிகாரிகளை சந்திக்கும் நோக்கில் இங்கு வரவில்லை.

ஒரிரு நாட்கள் இங்கு கழித்து விட்டு, கேரளா சென்று இரண்டாவது குழுவாக இந்தியா வந்துள்ள எமது மாகாண சபை உறுப்பினர்களை சந்திக்கவுள்ளேன். அதன் பிற்பாடு எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடு திரும்பவுள்ளேன் என்று முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்

மாடு,பன்றி போன்றவற்றால் தொற்றக்கூடிய "foot and mouth" நோய் அநுராதபுரத்தில் பரவல்

மாடு , பன்றி போன்றவற்றால் தொற்றக்கூடிய "foot and mouth" என்ற நோய் மத்திய மாகணத்தில் அதிகரித்துருகின்றது. அத்துடன் இந்நோய் கன்றுக்குட்டிகள் மற்றும் பண்ணைகள் காரணமாக அநுராதபுர மாவட்டத்திற்கும் பரவுவதாக சுகாதார திணைக்களத்தின் மிருக உற்பத்தி பிரிவு பணிப்பாளர் வைத்தியர் சந்திரசோம டெய்லிமிரர் இணையதளத்திற்கு தெரிவித்தார்.

இந்நோய் மிருகங்களுக்கிடையில் மிக விரைவில் பரவக்கூடிய ஒரு நோயாகும். இந்நோய் பரவுவதற்கு பிரதான காரணம் மாடுகளின் நடமாட்டமே என்று அவர் குறிப்பிட்டார்.

மன்னாரில் கடத்தப்பட்ட இளைஞர் தப்பி வந்து பொலிஸில் தஞ்சம்







மன்னார் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை இளைஞர் ஒருவர் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டுப் பின் தப்பி வந்து பொலிஸிடம் தஞ்சமடைந்தார்.

இவர் கடத்தப்பட்டுக் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். 3 லட்சம் ரூபா கப்பம் கோரப்பட்டே இவர் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இவர் தப்பி வந்து மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதையடுத்து மன்னார் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாசி நாளை இலங்கை வருகிறார்

ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாஷி நாளை இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இந்நிலையில், இலங்கை வரும் யசூசி அகாஷி, அரசாங்க அதிகாரிகள், எதிர்த்தரப்பினரின் பிரதிநிதிகள் ஆகியோரை சந்திக்கவிருப்பதாகவும் கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதரகம் தெரிவித்தது.

இந்த சந்திப்பின்போது, இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவது தொடர்பிலும் யசூசி அகாஷி கலந்துரையாடல்களை மேற்கொள்ளவிருப்பதாகவும் ஜப்பானியத் தூதரகம் குறிப்பிட்டது.

மேலும், இலங்கையில் யுத்தம் முடிவடைந்திருக்கும் நிலையில், இறுதிக்கட்ட சமாதானத்தை எட்டுவதற்கான அரசியல் தீர்வு தொடர்பில் யசூசி அகாஷி கலந்துரையாடவிருப்பதாகவும் ஜப்பானியத் தூதரகம் கூறியுள்ளது.

மீள்குடியேற்றக் கிராமங்களுக்கு விஜயம் செய்யவிருக்கும் யசூசி அகாஷி , வடக்கில் ஜப்பானின் உதவியுடன் மேற்கொள்ளப்படும், இடம்பெயர்ந்தோருக்கான திட்டங்கள் குறித்த நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளார்.

யசூசி அகாஷி யின் 20ஆவது இலங்கைக்கான விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

டக்ளஸ் மீதான வழக்கு;மத்திய,மாநில அரசு விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு

இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்ட பாரம்பரியம் மற்றும் சிறுதொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யக் கோரி தொடர்ந்த வழக்கு தொடர்பில் இந்திய மத்திய, மாநில அரசுக்கள் ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீடிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் கடந்த வாரம் இந்தியா பயணமாகியிருந்த அமைச்சரை கைது செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக மக்கள் உரிமைக்கழகச் செயலாளரும், சட்டத்தரணியுமான புகழேந்தி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், 1986ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் திகதி சென்னையில் தங்கி இருந்த டக்ளஸ் தேவானந்தா, சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்பவரை சுட்டுக் கொன்றதுடன் மேலும் 4பேரை காயப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.

சில மாதங்கள் கடந்த நிலையில் பிணையில் விடுதலை செய்யப்பட்ட 1988ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10வயது சிறுவனொறுவனைக் கடத்திச் சென்று, 7 இலட்சம் கொடுத்தால் விடுவேன் என்று மிரட்டியதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் 1989ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்ட டக்ளஸ் தேவான்ந்தா, அதன் பிறகு அவர் இலங்கைக்கு தப்பினார். இந்நிலையில் இலங்கையில் வைத்து கைது செய்யப்பட்ட அவரை இந்தியாவுக்கு அழைத்து வரும் சந்தர்ப்பத்தில், இலங்கையோடு இந்தியா சில ஒப்பந்தங்களை ஏற்படுத்தியதால், டக்ளஸ் கைது நடவடிக்கையில் மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை.

இவ்வாறானதொரு நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த வாரம் இந்தியாவுக்கு பயணமாகியிருந்தார். இந்நிலையில் அவரைக் கைது செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூருத்த சட்டத்தரணி தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த 11ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அது இன்றைய தினம் வரையில் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தனது இந்திய பயணத்தை முடித்துக்கொண்டுநாடு திரும்பினார். குறித்த வழக்கினை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொன்ட நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து மத்திய மாநில அரசுகள் ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர் என்று இந்திய செய்திகள் தெரிவித்தன.

Sunday, June 13, 2010

இலங்கை நிலவரம்;பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் விவாதம்

இலங்கையின் நிலவரம் தொடர்பில் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் எதிர்வரும் புதன்கிழமை விவாதமொன்று நடைபெறவிருப்பதாக பிரிட்டிஷ் நாடாளுமன்ற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் சியோபாயின் மெக்டொனாக்கினாலேயே மேற்படி விவாதம் நடத்தப்படவிருப்பதாகவும் அந்த இணையதளம் தெரிவித்தது.

இராணுவத்தினரின் ஒத்திகை; காலி முகத்திடல் வீதி மூடப்பட்டுள்ளது

கொழும்பு, காலி முகத்திடல் முதல் செரமிக் சந்தி வரையான (ஹில்டன் ஹோட்டல் வீதி உட்பட) பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலி முகத்திடல் பகுதியில் நடைபெறவுள்ள இராணுவ வெற்றி விழாவை முன்னிட்டு நடைபெறவுள்ள முப்படையினரின் அணிவகுப்பு மரியாதைக்கான ஒத்திகைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்நிலையிலேயே குறித்த பிரதான வீதி மூடப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான பிரஷாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணி தூதுக்குழு நாளை வன்னிக்கு விஜயம் - அநுர குமார

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தலைமையிலான தூதுக்குழுவொன்று வன்னிகான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளது.

நாளை 14ஆம் திகதி இடம்பெறவுள்ள இந்த விஜயத்தின் போது வவுனியாவிலுள்ள இடம்பெயர் முகாம்களில் தங்கியுள்ள மக்களின் நிலைமைகள் குறித்தும் கண்டறியப்படவுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்கா தெரிவித்தார்.

மூன்று நாட்களாக அமையவுள்ள இந்த விஜயத்தின் போது யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுடனான சந்திப்பொன்றும் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

விடுதலைப்புலிகளின் முன்னாள் பெண் மற்றும் ஆண் போராளிகளின் 53 இளம் ஜோடிகள் திருமண பந்தத்தில் இணைந்துகொண்டனர்











புனர்வாழ்வு முகாம்களில் தற்போது பயற்சி பெற்று வரும் விடுதலைப்புலிகளின் முன்னாள் பெண் மற்றும் ஆண் போராளிகளின் 53 இளம் ஜோடிகள் இன்று காலை திருமண பந்தத்தில் இணைந்துகொண்டனர். அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பதிவுத் திருமணங்கள் இந்து மற்றும் கிறிஸ்தவ சம்பிரதாயப்படியும் நடத்தப்பட்டன.
இந்த நிகழ்வில் இந்திய நடிகர் விவேக் ஒப்ராய், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளதை படங்களில் காணலாம்.

Saturday, June 12, 2010

சென்னையை காப்பாற்ற... நடுக்கடல் யுத்தம்- எந்திரன் ஸ்பெசல்


'இந்த வருடம் ரிலீஸ் நிச்சயம்!' என்று ஷங்கர் தன் இணையதளத்தில் அறிவித்ததில் இருந்து... டிகிரி டிகிரியாக எகிறி வரு கிறது 'எந்திரன்' ஃபீவர். 'என்னதான் நடக்கிறது உள்ளே?' என்று எட்டிப் பார்த்ததில் இருந்து...

ஹீரோ, வில்லன்... இரண்டும் ரஜினியே என்பதால் டப்பிங்கின் போது வசன உச்சரிப்பில் வித்தியாசம் வேண்டுமே, இதனால் இரண்டு விதங்களில் பேசிப் பயிற்சி எடுத்து, ஒலிப்பதிவின்போது இரண்டு குரல் களில் பேசி அசத்தி இருக்கிறார் ரஜினி. உதவிக்குத் தொழில்நுட்பமும் உண்டு!

'உப்புக் கருவாடு... ஊறவெச்ச சோறு...' என்று தியேட்டர்களைத் தடதடக்கவைத்த பாடல்போல ஃபாஸ்ட் பீட் ஒன்றைக் கொடுத்திருக்கிறார் ரஹ்மான். டான்ஸ் மாஸ்டர் தினேஷின் நடன இயக்கத்தில் செம துள்ள லும் துடிப்புமாக ஆடி இருக்கிறாராம் ரஜினி!

'சிவாஜி' படத்தில் ரஜினிக்கு மேக்கப் போட்ட பானுதான் 'எந்திரன்' மேக்கப் வுமனும். தவிர, ஐஸ்வர்யா ராய்க்கு மட்டுமே 57 லுக்குகளில் மேக்கப்பாம். யப்பா!

சந்தானம், கருணாஸ் இருவரும் காமெடிக்கு இருக்கிறார்கள். கதைப்படி பேராசிரியர் ரஜினியின் மாணவர்கள் இருவரும். ரஜினி உருவாக்கும் ரோபோ ரஜினி, ஆரம்பத்தில் நல்ல குணங்களுடன் இருக்கும். காதல், கல்யாணப் பிக்கல் பிடுங்கல்கள் இருக்காது என்பதால், ரோபோ ரஜினிக்கு கல்லூரிப் பெண்கள் மத்தியில் செம டிமாண்ட். அலேக்காக அழகிகளை மடக்கும் ரோபோ ரஜினியைக் கவிழ்க்க, 'காய்ந்துகிடக்கும்' சந்தானம், கருணாஸ் மேற்கொள்ளும் முயற்சிகள்தான் காமெடிக் கதகளி. 'நாங்க செய்ற எல்லாத்தையும் உன்னால செய்ய முடியாது!' என்று ரோபோ ரஜினிக்கு இருவரும் சவால்விட்டு உதார்விடுவது உச்சக்கட்ட காமெடிக் குருமா!

'எந்திரன்' க்ளைமாக்ஸ் காட்சி பிரமாண்டத்தின் உச்சமாக இருக்குமாம். எண்ணூரில் அமைந்துள்ள புதிய துறைமுகத்தை நோக்கி பிரமாண்டக் கப்பல் ஒன்று வரும். கப்பல் முழுக்க அடுக்கப்பட்டுஇருக்கும் கன்டெய்னர்களில் வெடி மருந்துகள். கப்பலைச் செலுத்துவது வில்லனான ரோபோ ரஜினி. கப்பல், துறைமுகத்தில் மோதி வெடித்தால், ஒட்டுமொத்த சென்னையும் பஸ்பம் ஆகிவிடும். சென்னையை அழிக்கும் நோக்கத்தோடு வரும் ரோபோ ரஜினி யைத் தடுக்க, நடுக்கடலில் அதோடு மோதுவார் பேராசிரியர் ரஜினி. வெடிமருந்தை நடுக்கடலிலேயே பற்றவைத்து சென்னையைக் காப்பாற்றுவதுதான் க்ளைமாக்ஸ்!

படத்தில் ஒன்றல்ல, இரண்டல்ல... எக்கச்சக்க வில்லன் ரோபா ரஜினிக்கள் உண்டு. ரோபோ ஃபார்முலா அறிந்துகொண்டு ஏகப்பட்ட ரோபோ ரஜினிக்களை உருவாக்குவார் வில்லன் டேனி டெங்ஷோபா. அது தயாராகும் தொழிற்சாலைக்கே சென்று அவற்றை அடித்துத் துவம்சம் செய்ய வேண்டிய கடமை நல்ல ரஜினிக்கு. ஹாலிவுட் படம் 'ஐ ரோபாட்' போல முழுக்க முழுக்க அனிமேஷன் எலெக்ட்ரானிக்ஸில் எக்கச்சக்க ரஜினிகள் திரையில் சாகசம் செய்வார்கள்!

அழகு மட்டுமல்ல; ஐஸ்வர்யா இதில் அதிரடியும் காட்டுகிறார். கதைப்படி பேராசிரியர் ரஜினிக்கு கராத்தே தெரியும். ரோபோ ரஜினியிடம் இருந்து தப்பிக்க ஐஸ்வர்யாவுக்கு கராத்தே கற்றுத் தருவார் அவர். இதற்காக ரஜினி, ஐஸ்வர்யா இருவருமே 10 நாட்கள் காராத்தேவின் அடிப்படை வித்தைகளைக் கற்றுக்கொண்டு இருக்கிறார்கள்!

'அரசியலில் என்றைக்குமே நான் நிராயுதபாணி', 'வாழ்க்கை கொடுப்பவன் வாக்காளன்... வாய்க்கரிசி போடுறவன் வேட்பாளன்', 'அர்த்த சாஸ்திரம் உங்க வழி.. தர்ம சாஸ்திரம் என் வழி' இவையெல்லாம் படத்தில் ஆங்காங்கே ரஜினி அடிக்கும் பஞ்ச் டயலாக்குகள்!

ஜூலை 10 அல்லது ஆகஸ்ட் 10... 'எந்திரன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தத் திட்டம். ஸ்பாட்.... அநேகமாக, துபாய்!

ரஜினியின் ஆராய்ச்சிக்கூட செட்டின் மதிப்பு ஐந்து கோடி ரூபாய். அலுமினிய ஷீட்டுகளால் கிழக்கு கடற் கரைச் சாலையில் பிரமாண்டமாக இந்த செட்டை இழைத்திருக்கிறார் கலை இயக்குநர் சாபு சிரில்!

முதல்வருக்கு பெப்ஸி நடத்திய விழாவுக்கு சென்னை வந்த அமிதாப், 'எந்திரன்' ஷூட்டிங் ஸ்பாட்டில் எட்டிப்பார்த்து இருக்கிறார். அப்படியே அவரை ஒரு காட்சியில் நடிக்கவைத்துவிட்டார் ஷங்கர்!

'எந்திரன்' டப்பிங் முழுவதும் முடிந்த பின் திருப்பதி சென்று ஏழுமலையானுக்கு விசேஷப் பூஜை செய்யும் திட்டத்தில் இருக்கிறார் ரஜினி!


நன்றி ஆனந்த விகடன்

அடுத்த படத்துக்கு நித்தி ரெடி- ஸ்டார் த கமேரா


50 நாள் சிறைவாசத்திற்கு பின்னர் செக்ஸ் புகாரில் சிக்கிய சாமியார் நித்தியானந்தா நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருந்தது நித்தியானந்தா மீதான குற்றச்சாட்டு. இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஏப்ரல் மாதம் இமாச்சல பிரதேசத்தில் ஒரு மடத்தில் தங்கி இருந்த நித்தியானந்தா கர்நாடக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து போலீசார் கஸ்டடியில் வைத்து விசாரிக்கப்பட்டார்.


இந்நிலையில் 50 நாள் ஜெயில் காற்றை சுவாசித்த நித்தியானந்தாவுக்கு கர்நாடக ஐகோர்ட் நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் ( இன்று ) வழங்கியது. இவர் நாளை ஜெயிலில் இருந்து விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜாமீன் அளித்த கோர்ட், அவருக்கு பல நிபந்தனைகளை விதித்துள்ளது. இதன்படி ஆசிரமத்தை விட்டு வெளியே போகக்கூடாது. மதம் தொடர்பான சொற்பொழிவுகள் ஆற்றக்கூடாது. பிடதி போலீஸ் ஸ்டேஷனில் 15 நாட்களுக்கு ஒருமுறை வந்து கையெழுத்திட வேண்டும். பாஸ்போர்ட் ஒப்படைக்க வேண்டும் என பல நிபந்தனைகள் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.


இவரது லீலை குறித்து ஜாமீன் அளித்த நீதிபதி வெளியிட்டுள்ள கருத்தில், நித்தியானந்தா மக்கள் மனதை புண்படுத்தி விட்டார், ஆன்மிகம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றியுள்ளார் என கூறியுள்ளார். இதற்கிடையில் ரஞ்சிதாவுடன் நித்தி இருந்த வீடியோ காட்சியில் எவ்வித சந்தேகமும் இல்லை. அவர், அவரேதான் என்று இதனை ஆய்வு செய்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Friday, June 11, 2010

மாணவன் தாக்கி சக மாணவன் உயிரிழப்பு

ஆனமடுவ பகுதியை சேர்ந்த 16 வயதுடைய மாணவனின் தலையை பிடித்து சக மாணவன் குழாய் கிணற்றில் தாக்கியதால் காயத்திற்குள்ளானவர் உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபரான மாணவன் குறித்த மாணவனின் கழுத்தை நெறித்தும் குழாய் கிணற்றில் பிடித்து தாக்கியதாலும் காயத்திற்குள்ளா மாணவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். ஆனமடுவ வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே குறித்த மாணவன் உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை ஆனமடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்.

இவர்கள் இருவருக்குமிடையில் தண்ணீர் போத்தல் ஒன்றுக்காகவே சண்டை ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரவி கருணாநாயக்கவின் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு

ஆயுதங்களை விநியோகிப்பதன் மூலம் இலங்கைக்குள் பிரச்சினைகளை ஏற்படுத்த இந்தியா முனைப்புக் காட்டுவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்த குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்த விடயம் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும் எந்த ஒரு அடித்தளமும் இல்லாமல் கூறப்பட்டதாகவும் இந்திய இராஜதந்திரி ஒருவர் குறிப்பிட்டார்.

வடக்கு, கிழக்கு இணைப்பு உடனடியாகச் சாத்தியமில்லை என்பதனை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளதாக டக்ளஸ் தெரிவிப்பு



இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர் வுக்காக அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட் டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்து மாறு இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஆனால் வடக்கு, கிழக்கு இணைப்பு உடனடியாகச் சாத்தியமில்லை என்பதையும் இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது.


யாழ்ப்பாணம்,ஜூன்12
இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர் வுக்காக அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட் டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்து மாறு இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஆனால் வடக்கு, கிழக்கு இணைப்பு உடனடியாகச் சாத்தியமில்லை என்பதையும் இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது.
இவ்வாறு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவி ருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த அமைச் சர் அங்கிருந்து திரும்பிய பின்னர், தொலை பேசியூடாக யாழ்ப்பாணத்திலுள்ள ஈ.பி.டி. பி.யின் தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை செய்தியாளர்களுடன் உரையாடிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு:
ஜனாதிபதியுடன் இணைந்து மேற் கொண்ட இந்தியப் பயணமானது பெரும் வெற்றியை அளித்துள்ளது. புதிய நம்பிக் கைகளைக் கட்டியெழுப்பியுள்ளது.

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி, ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், எதிர்க்கட்சித் தலைவி மற்றும் தமிழ் நாட்டு அமைச்சர் கள், எம்.பி.க்களை சந்தித்துக் கலந்துரை யாடினோம்.
நாம் நடைமுறைச் சாத்தியமான விட யத்தை முன்வைத்தோம். எமது திட்டத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். மக்கள் நலனை முன்னிறுத்தியே எமது கோரிக்கை அமைந்திருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியா வுக்குச் சென்று தமிழகத் தலைவர்களைச் சந்தித்துவிட்டு தமக்குள்ள உள்நோக் கத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு பக்க அரசியல் கருத்துக்களை வெளிப் படுத்தி வந்தனர்.
அரசியல் தீர்வு குறித்து இந்தியத் தலை வர்களுடன் பேசப்பட்டதுடன் தமிழ் மக் களின் மீள்குடியேற்றம் தொடர்பாகவும் நாம் சில விடயங்களைத் தெளிவுபடுத்தினோம். மிதிவெடி அபாயம், காணி உரிமை கோரல் பிரச்சினை, நிதிப்பிரச்சினை போன்றவை குறித்து நாங்கள் தெளிவுபடுத்தினோம்.
வடக்கு கிழக்குப் பகுதிகளில் மீள் குடியேறிய மக்களுக்கு ஐம்பதாயிரம் வீடு களை அமைத்துக் கொடுக்க இந்தியா ஒப் புக்கொண்டது. இதற்கென ஆயிரம் கோடி ரூபாவை வழங்குவதற்கும் உறுதியளித் துள்ளது.
யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கு புனரமைத்தல், மாநகர சபைக்குக் கட்ட டம் அமைத்தல், உள்ளிட்ட சில திட்டங் களுக்கு உதவுவதாகவும் வாக்குறுதி அளித் துள்ளன.
இலங்கைக்கு ஆயிரம் கோடி ரூபாவை 20 வருட கடன் அடிப்படையில் வழங்கு வதற்கும் சம்மதம் தெரிவித்துள்ளன.
மேலும் என்னைக் கைது செய்யக் கோரி சட்டத்தரணி புகழேந்தி தொடர்ந்த வழக் கானது உள்நோக்கம் கொண்டது. அது என்மீது சேறு பூசும் செயலாகும். சட்ட ரீதி யாக அந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். 1986இல் தீபா வளி தினத்தன்று இடம்பெற்ற சூட்டுச் சம்பவத்துக்கும் எனக்கும் நேரடித் தொடர் பில்லை. அது திட்டமிட்ட கொலையுமில்லை. தவறுதலாக இடம்பெற்றதாகும்.
இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் இந்தியா சென்ற என்மீது வழக்குத் தொட ராமல் இந்த முறை வழக்குத் தொடர முயற்சிப்பது ஏன்? அது உள்நோக்கம் கொண்டதாகும் என்றார்.



அமைச்சர்களான சிலர் இன்னமும் ஆயுதங்களை வைத்திருக்கின்றனர் நாடாளுமன்றில் ரவி கருணாநாயக்க தெரிவிப்பு




30வருட பயங்கர வாதத்திலிருந்து விலகி ஜன நாயகத்துக்குள் நுழைந்து அமைச்சர்களான சிலர் இன்றும் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருக்கின்றனர் என்று ரவி கருணா நாயக்க எம்.பி.நேற்று நாடாளுமன்றில் கூறினார்.
சட்டவிரோத ஆயுதங்களைக் களைவது தொடர்பான தனிநபர் பிரேரணை ஒன்றை நேற்று நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:
நாட்டில் அதிக எண்ணிக்கையில் சட்டவிரோத ஆயுதங்கள் உள்ளன. பிரதேச சபை உறுப்பினர்கள் கூட இப்படியான ஆயு தங்களை வைத்திருக்கின்றனர். ஜன நாயகத்துக்கு அச்சுறுத்தலாக அமையும் இவ்வகையான ஆயுதங்கள் அனைத்தையும் களைவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சட்டவிரோத ஆயுதங்கள் அனைத்தும் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட வேண்டும். அவர்களுக்கு உரிமம் தேவைப்பட்டால் உரிமம் வழங்கமுடியும்.
30 வருட பயங்கரவாதத்தில் இருந்து விலகி ஜனநாயகத்துக்குள் நுழைந்து அமைச்சர்களாகியவர்களும் ஆயுதங்களை வைத்துள்ளனர். இதனால் பிரச்சினை வரு கின்றது. இந்த நிலைமை தொடர்ந்தால் இன்னும் 10,15 வருடங்களில் நிலைமை மோசமாகும்.
அரசியல் கட்சிகளோ, அரசியல்வாதிகளோ ஆயுதங்களை வைத்திருக்கத் தேவையில்லை. கிழக்கில் அரசியல் கட்சி கள் ஆயுதங்கள் வைத்துள்ளன என்று அமைச் சர் கருணாவே சொல்கிறார்.
நாடுமுழுவதும் உள்ள இவ்வாறான சட்டவிரோத ஆயுதங்கள் அனைத்தும் களையப்பட வேண்டும். கட்சி பேதங் களை மறந்து நாம் அனைவரும் ஒன்றி ணைந்து இந்த விவகாரத்தில் செயலாற்ற வேண்டும். என்றார்.

யாழ் குடாட்டிற்கு எதிர்வரும் 14ஆம் திகதி ராஜித சேனாரட்ன விஜயம்

யாழ் குடாட்டிற்கான விஜயமொன்றை எதிர்வரும் 14ஆம் திகதி கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன மேற்கொள்ளவுள்ளார்.

இந்நிலையில், யாழ் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்திற்கான புதிய கட்டிடத்தையும் அமைச்சர் தனது விஜயத்தின்போது திறந்து வைக்கவுள்ளார்.

ஒட்டுசுட்டான் தான்தோன்றியீஸ்வரர் ஆலய உற்சவத்தில் பக்தர்களுக்கு அனுமதி

பிரசித்தி பெற்ற ஒட்டுசுட்டான் தான்தோன்றியீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் வெளியிடத்து பக்தர்கள் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், யாழ்ப்பாணத்திலிருந்து மேற்படி ஆலயத்துக்கு செல்லும் பக்தர்கள் மாங்குளம் ஒட்டுசுட்டான் வீதியூடாகவும், வவுனியாவிலிருந்து செல்லும் பக்தர்கள் புளியங்குளம் நெடுங்கேணி வீதியூடாகவும் செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அவர் மேலும் கூறினார்.

இன்று ஆரம்பமான ஒட்டுசுட்டான் தான்தோன்றியீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் எதிர்வரும் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

மேர்வின் சில்வாவின் லேட்டஸ்ட் காமெடி


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அல்லது வடக்கில் பணியாற்றிய சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளில் ஜெனரல் சரத் பொன்சேக்கா ஈடுபட்டால், தான் அவரை கொன்று தான் மரணிக்க தயார் என பெருந்தெருக்கள் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். கிரிபத்கொடவில் நேற்று (10) நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
முன்னாள் இராணுவத் தளபதி , விடுதலைப்புலிகளுக்கு எதிராக வடக்கில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின் இரகசியங்களை சர்வதேசத்தின் மத்தியில் முன்வைத்துள்ளதாகவும் இதனால் அவருக்கு எதிராக தனியான சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும் மேர்வின் சில்வா கூறியுள்ளார். இராணுவத்தினருககு எதிராக ஜெனரல் சரத் பொன்சேக்கா வெளியிட்டுள்ள தகவல்கள், இலங்கையின் இராணுவத்திற்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கமல் குணரட்ன, சவேந்திர சில்வா, ஜகத் டயஸ் போன்ற போர் வீரர்களை காட்டிக்கொடுப்பதற்காக பொன்சேக்கா வெளியிட்;;டுள்ள கருத்துக்களை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

Thursday, June 10, 2010

ஜெனரல் சரத் பொன்சேகாவின் கென்யா பயணம்;பாதுகாப்பு அமைச்சே தீர்மானிக்கும்

சபாநாயகர் சமல் ராஜபக்ஸவினால் கோரிக்கைக் கடிதமொன்று கையளிக்கப்படும் பட்சத்தில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் கென்யாவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற சங்கத்தின் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்கான அனுமதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.

குறித்த கோரிக்கை விடுக்கப்படாத பட்சத்தில் இராணுவ பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினறுமான ஜெனரல் சரத் பொன்சேகாவை, குறித்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கான அனுமதி வழங்குவதா? இல்லையா என்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சே தீர்மானிக்கும் என்று அமைச்சின் பேச்சாளரான லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.

19ஆவது உலக கிண்ண கால்பந்து போட்டி ஜொஹன்னஸ்பர்க்கில் இன்று ஆரம்பம்

உலகம் முழுவதிலுமுள்ள கால்பந்து ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் 19ஆவது உலகக் கிண்ண கால்பந்து போட்டித் தொடர் தென் ஆப்பிரிக்காவின் ஜொஹன்னஸ்பர்க் நகரில் இன்று ஆரம்பமாகிறது.

இந்த உலகக் கின்ண கால்பந்துப் போட்டியை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறையென சர்வதேச கால்பந்து சம்மேளனம் நடத்தி வருகிறது. தற்போது தென் ஆப்பிரிக்காவின் ஜொஹன்னஸ்பர்க்கில் 19ஆவது உலகக் கிண்ணப் போட்டிகள் இன்று முதல் நடைபெறவுள்ளன. இந்நிலையில் இந்தப் போட்டியின் ஆரம்ப விழா நேற்று ஆர்லான்டோ ஸ்டேடியத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

அந்தவகையில் இன்று ஜொஹன்னஸ்பர்க்கில் நடைபெறும் முதல் போட்டியில், தென் ஆப்பிரிக்காவும், மெக்சிகோவும் மோதுகின்றன. அத்துடன் ஜூலை 11ஆம் திகதியே இறுதி்ப் போட்டி நடைபெறவுள்ளது.

64 போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் அதில் மொத்தம் 32 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த 32 அணிகளும் தலா நான்கு அணிகளைக் கொண்ட எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் 16 அணிகள் காலிறுதிப் போட்டிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும். அவற்றிலிருந்து 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். அதிலிருந்து நான்கு அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

பிரேசில், அர்ஜென்டினா ஆகிய அணிகள் வழக்கம் போல ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பையும், ஆதரவையும் ஏந்தியபடி போட்டித் தொடருக்குள் நுழையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆபாச விளம்பரப்பலகை, சுவரொட்டிகளை அகற்றுவதற்கு தீர்மானம்

கொழும்பு நகரில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் ஆபாச விளம்பரப் பலகைகள் மற்றும் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகளை அகற்றுவதற்கு பெண் பொலிஸாரும் சிறுவர் சபையும் இணைந்து தீர்மானித்துள்ளன.

அத்துடன், கவர்ச்சிப் படங்களைப் பிரசுரிக்கும் சஞ்சிகைகள் மற்றும் பத்திரிகைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பெண் பொலிஸாரும் சிறுவர் சபையும் இணைந்து எச்சரிக்கை விடுத்துள்ளன.

இந்நிலையில், கொழும்பு நகரில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் ஆபாச விளம்பரப் பலகைகள் மற்றும் படங்களை அகற்றும் நடவடிக்கைகளை இவர்கள் இன்று முதல் ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, கையடக்கத் தொலைபேசி ஊடாக பயன்படுத்தப்படும் ஆபாச இணையதளங்களை தடைசெய்வதற்கான நடவடிக்கையை ஏற்கனவே பெண் பொலிஸார் மற்றும் சிறுவர் சபையும் இணைந்து மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு, கிராண்ட்பாஸில் கொள்கலன் கவிழ்ந்ததில் பெரும் வாகன நெரிசல்

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் கொள்கலனொன்று விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியிலுள்ள இலங்கை மின்சார சபையின் மதில் சுவரில் மோதியதை அடுத்தே இந்த விபத்து சம்பவித்துள்ளது. இதனால் குறித்த மதில் சுவர் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு நோக்கி பஞ்சு ஏற்றி வந்த கொள்கலன், அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாது மின்சார சபையின் மதில் சுவரில் மோதி குடைசாய்ந்துள்ளது.

இதனால் கொழும்பு-கண்டி வீதியில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குடைசாய்ந்துள்ள கொள்கலனை அங்கிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கை இந்திய உடன்படிக்கையின் கீழ் தாம் பொதுமன்னிப்பை பெற்றுள்ளேன்: டக்ளஸ் தேவானந்தா




இந்திய இலங்கை உடன்படிக்கையின் கீழ் அனைத்து அரசியல் தலைவர்களும் பொதுமன்னிப்பை பெற்றுள்ளார்கள் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளது.

எக்ஸ்பிரஸ் இந்தியா. கொம். இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்

1986 ஆம் ஆண்டு சென்னை சூழமேடு பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் நேற்று சென்னை மேல் நீதிமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தாவை கைதுசெய்யுமாறு கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதைவிட டக்ளஸ் தேவானந்தா மீது கொலை, கொள்ளையில் ஈடுபட்டதாக தமிழ்நாட்டில் 3 வழக்குகள் உள்ளன.

இது தொடர்பில் கருத்துரைத்துள்ள அமைச்சர், இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்டுள்ள ஒப் பந்தப்படி எல்லா அரசியல் தலைவர்களுக்கும் மன்னிப்பு வழங்கப்பட்டு உள்ளது. எனக்கும் ஏற்கனவே மன்னிப்பு கொடுக்கப்பட்டு விட்டது. எனவே எந்த வழக்குகளும் என்னை கட்டுப்படுத்தாது.

எனினும் சட்டரீதியான முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டால் அதற்கு முகங்கொடுக்கவும் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் இந்தியாவுக்கு தற்போது சட்ட விரோதமாக வரவில்லை. உரிய சட்டப்படி வந்துள்ளேன். நான் இந்தியா வந்து செல்ல எந்த தடையையும் அரசு விதிக்கவில்லை. அந்த பட்டியலில் நான் இல்லை.

இதேவேளை இந்திய அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர், இது தொடர்பில் கருத்துரைக்கையில், இந்தியாவுக்குள் பிரவேசிக்காதபடியான கண்காணிப்பு பட்டியலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பெயர் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளி: சென்னை பொலிஸ் கமிஷனர்



சென்னை பொலிஸ் கமிஷனர் இராஜேந்திரனிடம், செய்தியாளர்கள் இன்று டக்ளஸ் தேவானந்தா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கமிஷனர் இராஜேந்திரன், டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் ஒரு குற்றவாளி என்று கூறியுள்ளார்.

இலங்கையில் பாரம்பரியம் மற்றும் சிறுதொழில் அமைச்சராக இருப்பவர் டக்ளஸ் தேவானந்தா. இவர் இலங்கை அதிபர் ராஜபக்சவுடன் இந்தியா வந்துள்ளார்.

1986ம் ஆண்டு நவம்பர் 1 ம் தேதி சென்னையில் டக்ளஸ் தேவானந்தா தங்கி இருந்த போது, சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்பவரை சுட்டுக் கொன்றார். மேலும் 4 பேரை காயப்படுத்தினார்.

இந்த சம்பவத்தில் டக்ளஸ் கைது செய்யப்பட்டார். சில மாதங்கள் கழித்து ஜாமீனில் அவர் வெளியே வந்தார்.

வெளியே வந்த பிறகு, 1988 ம் ஆண்டு நவம்பர் மாதம் 10 வயது சிறுவனை கடத்திச் சென்று, 7 லட்சம் கொடுத்தால் விடுவேன் என்று மிரட்டினார் என்று கீழ்ப்பாக்கம் பொலிஸில் டக்ளஸ் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார்.

1989 ம் ஆண்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு அவர் இலங்கைக்கு தப்பி ஓடிவிட்டார்.

இலங்கையில் கைது செய்து, இந்தியாவுக்கு கொண்டு வரும் சந்தர்ப்பத்தில், இலங்கையோடு இந்தியா சில ஒப்பந்தங்களை ஏற்படுத்தியதால், டக்ளஸ் கைது நடவடிக்கையில் மேல்கொண்டு முயற்சிகள் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் டக்ளஸ் தேவானந்தா, இந்தியாவுக்கு வந்துள்ளார். அவரை கைது செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக மக்கள் உரிமைக்கழகச் செயலரும் வக்கீலுமான புகழேந்தி கொடுத்துள்ள மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை பொலிஸ் கமிஷனர் இராஜேந்திரனிடம், டக்ளஸ் தேவானந்தா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த சென்னை பொலிஸ் கமிஷனர் இராஜேந்திரன், டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளி. அவர் மீது மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளது. இது குறித்து டில்லி பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளோம். மேற்கொண்டு நடவடிக்கைகளை டில்லி பொலிஸார்தான் பார்க்க வேண்டும். டில்லி பொலிஸார் கேட்டுக்கொண்டால், தமிழகத்தில் இருந்து சிறப்பு காவல்படையை அனுப்பி உதவி செய்யப்படும். ஆனால் டில்லி பொலிஸார் தான் கைது நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றார்.

பனடோல் மாத்திரை கூட இல்லை வன்னியில் குடியேற்றப்பட்ட மக்களுக்கு நடமாடும் வைத்திய சேவை நடத்துக செல்வம் எம்.பி. அரசிடம் வலியுறுத்து






வன்னியில் மீள்குடியமர்த்தப்பட்ட பகுதிகளில் நடமாடும் வைத்தியசேவையை நடத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் எம்.பி.யான செல்வம் அடைக்கல நாதன் நேற்று நாடாளுமன்றத்தில் வலியு றுத்தினார்
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வைத்தியசேவை தொடர்பான சபை ஒத்தி வைப்புவேளை பிரேரணையில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இது தொடர் பாக மேலும் கூறியவை வருமாறு:
வன்னியில் மீள்குடியமர்த்தப்பட்ட பகுதிகளில் வைத்தியசேவைக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது. பனடோல் மாத் திரைகூட அங்கு இல்லை. அங்கு நட மாடும் வைத்தியசேவை ஒன்று நடத்தப் படவேண்டும்.
வைத்தியர்கள் அங்கு தங்கிச் சேவை செய்வதற்கு அரசு வசதிகளைச் செய்து கொடுக்கவேண்டும். அவர்கள் அங்கு சேவை செய்ய மனமிருந்தாலும் அவர்கள் தங்குவதற்கு இடமில்லை.
வன்னியில் தங்கி அம்மக்களுக்கு சேவை செய்யவிரும்பும் வைத்தியர்களுக்கு அரசு முன்னுரிமை வழங்கவேண்டும். அவர்களை ஊக்கப்படுத்துவதன் மூலம் வன்னி மக்களுக்கான இந்தச் சேவை யைப் பெற்றுக்கொடுக்கமுடியும்.
வன்னி மக்களின் சுகாதார விடயம் தொடர்பில் அரசு தீவிர கவனம் செலுத்தவேண்டும். அவர்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்றார்.

அறிமுகமா-அங்கீகாரமா




இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தூதுக்குழுவில் இடம்பெற்றுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சர்ச்சைக்குரிய ஒருவராக மாறியுள்ளார்.அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.இந்தியப்பிரதமர் மன்மோஹன் சிங்கிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியால் அறிமுகம் செய்துவைக்கப்படுவதை படத்தில் காணலாம்

போஷாக்கிற்காக 500 மில். ரூபா செலவிடாத அரசு ஐஃபா விழாவுக்கு 800 மில்லியன் ரூபா செலவிட்டது: சஜித் கண்டனம்



இலங்கையை அச்சுறுத்தியுள்ள போஷாக்கின்மை குறைபாட்டை நிவர்த்திக்க 500 மில்லியன் ரூபாவை செலவிட தயாரில்லாத அரசு இந்திய நடிகர்களை அழைத்து நடத்திய களியாட்டத்துக்கு 800 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக ஐ.தே.க.வின் பா.உ. .சஜித் பிரேமதாஸ குற்றம்சாட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற சுகாதார அமைச்சு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குற்றம் சாட்டிய சஜித் பிரேமதாஸ மேலும் கூறியதாவது;

இலங்கையில் நீண்டகால போஷாக்கின்மையால் 4 இலட்சம் சிறுவர்களும் வயதுக்கு ஏற்ற நிறையின்றி 5 இலட்சம் சிறுவரும் வயதுக்கு ஏற்ற உயரமின்றி 2 இலட்சம் சிறுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையின் சனத் தொகையில் 30 வீதமானோர் பெண்கள் இவர்களில் 15 இலட்சம் பேர் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீரிழிவு, இரத்த அழுத்தம், இதயநோய் போன்றவற்றால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 100 க்கு 20 வீதமான பெண்கள் இரத்தச் சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விற்றமின் ஏ குறைபாட்டால் 5 வயதுக்கு குறைந்த 25 வீதமான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையை பொறுத்தவரையில் திரிபோஷ திட்டம் செயலிழந்து போயுள்ளது. அத்திட்டத்தை முன்னெடுக்க தற்போதைய அரசிடம் எந்தத் திறமையும் இல்லை.

இலங்கையில் 100 க்கு 20 வீதமானோர் செல்வந்தர்களாகவுள்ளனர். அதேபோல் 100 க்கு 20 வீதமானோர் மிகவும் வறுமைக்குட்பட்டவர்களாவுள்ளனர்.

எனவே இவ்வாறு வறுமையால் பாதிக்கப்பட்ட மக்களை இலக்கு வைத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள போஷாக்கின்மை பிரச்சினையால் கல்வி மட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த போஷாக்கின்மை பிரச்சினையை தனியாக சுகாதார அமைச்சினால் மட்டும் தீர்த்து வைக்க முடியாது.

தேசிய போஷாக்கு உபாயத்தை கடைப்பிடிக்க வேண்டும். அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும். அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள போஷாக்கின்மை பிரச்சினையை தீர்க்க 500 மில்லியன் ரூபா போதுமானது. ஆனால் இதனை செலவிடத் தயாரில்லாத அரசு இந்திய நடிகர்களை அழைத்து 800 மில்லியன் ரூபாவை செலவிட்டு களியாட்ட விழா நடத்துகின்றது.