Tuesday, October 28, 2008

கொழும்பிலும் மன்னாரிலும் : தமிழீழ வான் புலிகள் தாக்குதல்



சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள எண்ணெய்க்குதம் அருகிலும், மன்னார் மாவட்டத்தில் உள்ள தள்ளாடி படைத்தளம் மீதும் தமிழீழ வான் புலிகள் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இத் தாக்குதல் தொடர்பாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளதாவது, தள்ளாடி சிறிலங்கா படைத்தளம் மீது இன்று செவ்வாய்க்கிழமை இரவு 10.50 மணியளவில் விடுதலைப் புலிகளின் விமானம் ஒன்று தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் பாரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. அதேநேரம் கொழும்பில் உள்ள எண்ணெய்க்குதம் அருகேயும் விடுதலைப் புலிகளின் விடூமானங்கள் குண்டுகளை வீசியுள்ளது என்று தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் வானூர்திக்கு எதிராக சிறிலங்கா படையினர் வானூர்தி துப்பாக்கிகள் தாக்குதலை நடத்தியுள்ளது என்று படைத்தரப்பு மேலும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: மன்னார் மாவட்டத்தில் உள்ள தள்ளாடி சிறிலங்கா தரைப்படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10:20 நிமிடத்துக்கு குண்டுத்தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் தள்ளாடி தரைப்படைத்தளம் பலத்த சேதமடைந்துள்ளது. பலர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர். அதேநேரம், சிறிலங்காவின் தலைநகரில் அமைந்துள்ள களனி திச அனல் மின் உற்பத்தி நிலையம் மீது நேற்று இரவு 11:45 நிமிடத்துக்கு வான்புலிகள் வெற்றிகரமான தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த இரு இடங்களிலும் தாக்குதலை நடத்தி விட்டு வானூர்திகள் பாதுகாப்பாக தளம் திரும்பியுள்ளன என்று விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வான் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சிறீலங்கா அறிவித்துள்ள நிலையில் வான் புலிகள் எவ்வாறு கொழும்பு வரை வந்து தாக்குதல் நடத்திவிட்டு மீண்டும் திரும்பிச் சென்றுள்ளனர் என்பது பெரும் ஆச்சரியமளிப்பதாக சர்வதேச ஆங்கில ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன

சிறிலங்கா அரசின் வாக்குறுதிகளில் நம்பிக்கை தொடர்வது எதனால்...?: தினமணி நாளேடு கேள்வி



இந்திய அரசுக்கும் தமிழ்நாடு முதல்வர் கலைஞர் மு.கருணாநிதிக்கும் சிறிலங்கா அரசின் வாக்குறுதிகளில் நம்பிக்கை தொடர்வது எதனால் என்பது புரியவில்லை என்று தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் தினமணி நாளேடு கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பில் அந்த நாளேட்டில் வெளிவந்துள்ள ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜெயவர்த்தன காலத்திலிருந்து கூறப்படும் மாகாணங்களுக்குக் கூடுதல் அதிகாரம் தருவோம், அப்பாவிப் பொதுமக்களை எக்காரணம் கொண்டும் தாக்க மாட்டோம், பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்கு தடையின்றி நிவாரண உதவிகள் வழங்கப்படும், இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் போன்றவற்றைக் கேட்டுக் கேட்டு நமக்கெல்லாம் சலித்துவிட்டாலும், இந்திய அரசுக்கும், நமது முதல்வருக்கும் சிறிலங்கா அரசின் வாக்குறுதிகளில் நம்பிக்கை தொடர்வது எதனால் என்பது புரியவில்லை.

மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்கிற தனது நம்பிக்கை வீண்போகவில்லை என்றும் மத்திய அரசின் நடவடிக்கைகள் தனக்குத் திருப்தி அளிப்பதாகவும் முதல்வர் கூறி இருப்பது விசித்திரமாக இருக்கிறது. மத்திய அரசு அப்படி என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று தெரியவில்லை. பசில் ராஜபக்சவிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பலமுறை தந்த உதட்டளவு உத்தரவாதத்தை மறுபடியும் பெற்றிருப்பது முதல்வரைத் திருப்திப்படுத்தி இருப்பது ஆச்சரியம்தான்.

அல்லற்படும் இலங்கைத் தமிழர்களுக்குப் பாதுகாப்பும், பாதிக்கப்பட்டால் நிவாரணமும் தர வேண்டிய கடமை சிறிலங்கா அரசுக்கு உண்டு. அதை அவர்கள் செய்யத் தவறி இருப்பதிலிருந்தே, எந்த அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது என்று நாம் புரிந்து கொள்ளலாம். அவதிப்படும் இலங்கை குடிமக்களான தமிழர்களுக்குத் தங்களது செலவில் நிவாரணம் கூடத் தரத் தயாராக இல்லாமல் அதை இந்தியாவிலிருந்து கேட்டுப் பெறுகிறது அந்த அரசு என்றால், நாம் ஏமாளிகளாக இருக்கிறோம் என்றுதானே பொருள்?

தன்மான உணர்வு, சுயமரியாதை என்று ஊருக்கு உபந்நியாசம் செய்யும் முதல்வர், தன்மானமும், சுயமரியாதையும் இல்லாமல் தனது நாட்டுக் குடிமக்களுக்கு அன்னிய நாட்டின் நிவாரணம் கேட்கும் சிறிலங்கா அரசுக்குக் கண்டனம் தெரிவிக்காமல் இங்கே நிவாரண நிதி திரட்ட முற்பட்டிருக்கிறார். முன்பு, பழ. நெடுமாறன் திரட்டி வைத்திருந்த மருந்துகள் மற்றும் நிவாரணப் பொருட்களை வீணடித்தபோது இல்லாத உத்வேகம், இப்போது திடீரென்று முதல்வருக்கு வந்திருக்கிறதே, அது ஏன்? புரியவில்லை!

விடுதலைப் புலிகள் அப்பாவிப் பொதுமக்களை மனிதக் கவசங்களாகப் பயன்படுத்துவதால் அவர்கள், சிலவேளைகளில் பாதிப்புக்கு உள்ளாக நேர்கிறது என்பது சிறிலங்கா அரசின் வாதம். நடத்துவது என்னவோ விமானக் குண்டு வீச்சு. அதில் எங்கிருந்து வருகிறது மனிதக் கவசம் என்று கேள்வி கேட்கக்கூடவா முதல்வருக்கும், மத்திய அரசுக்கும் தெரியாமல் போய்விட்டது?

கிளிநொச்சியில் இருக்கும் ஒரே மருத்துவமனையும் குண்டு வீச்சுக்கு இரையாகி விட்ட நிலையில் மருத்துவ வசதி இல்லாமல் அங்கே அப்பாவிகள் செத்து மடிகிறார்கள். போர்நிறுத்த அறிவிப்புக்குப் பிறகு தான் பேச்சுவார்த்தை என்றல்லவா முதல்வர் இந்திய அரசை வற்புறுத்தி இருக்க வேண்டும்.

இலங்கைப் பிரச்சினையில் அரசியல் தீர்வு என்று பேசுபவர்கள், முதலில் அதிகாரிகள் மூலம் இந்தப் பிரச்சினையை அணுகுவதை நிறுத்த வேண்டும். இலங்கைப் பிரச்சினையைப் பற்றி நன்றாகத் தெரிந்த தமிழக அரசியல்வாதி ஒருவரை உள்ளடக்கிய இந்தியக் குழுவால் மட்டும்தான் இலங்கையின் சமாதானத்துக்கு வழிகோல முடியுமே தவிர, அதிகாரிகளால் முடியாது என்று எடுத்துச் சொல்ல முதல்வர் ஏன் தயங்குகிறார்?

மத்திய அரசை வேதனைக்கு உள்ளாக்கும் வகையில் சிக்கலை உருவாக்க மாட்டோம் என்று முதல்வர் கருணாநிதியும், சிறிலங்கா அரசின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட மாட்டோம் என்று மத்திய அரசும் நிலைப்பாடு எடுத்திருக்கும்போது, அங்கே அன்றாடம் செத்து மடியும் அப்பாவித் தமிழர்களுக்கு எப்படி நிவாரணமும் நியாயமும் கிடைக்கும்? நாம் அனுப்பும் நிதியும், நிவாரணமும் சிறிலங்கா அரசால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குப் போய்ச் சேரும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

நாற்பதாண்டுப் பிரச்சினையை நான்கு நாட்களில் தீர்க்க முடியாது என்கிற முதல்வரின் கருத்து சிரிப்பை வரவழைக்கிறது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தின்போதும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகலின் போதும், மனிதச் சங்கிலி நடத்தியபோதும் தெரியாத இந்த உண்மை, மத்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் வந்தவுடன்தான் முதல்வருக்குத் தெரிந்ததா என்ன? அது போகட்டும். கடந்த ஒன்பது ஆண்டுகளாக மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த திமுக இந்தப் பிரச்சினைக்கு ஏன் தீர்வு காண முயற்சிக்கவில்லை?

பாகிஸ்தானின் முன்னாள் உளவுத்துறைத் தலைவர் கொழும்பில் பாகிஸ்தான் தூதுவராக அமர்ந்து ராஜபக்ச அரசுக்கு ஆலோசனை வழங்கி வரும் நிலையில், சீனாவுடன் மிக நெருக்கமான உறவை சிறிலங்கா அரசு வளர்த்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்திய அரசு உதட்டளவு உத்தரவாதத்தை நம்புவது சரியான இராஜதந்திரம் ஆகாது! என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஈழத் தமிழர்களுக்காக 26 லட்சம் ரூபா நிதி குவிப்பு



இலங்கையில் பாதிப்புக்குள்ளான தமிழ் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் கருணாநிதி விடுத்த வேண்டுகோளை ஏற்று நிதி குவிந்தது. இன்று ஒருநாள் மட்டும் சுமார் 26 லட்ச ரூபா நிதி சேர்ந்தது.

இலங்கையில் தமிழ் மக்கள் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். அவர்களுக்கு உணவுப் பொருட்கள், உடைகள் மற்றும் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதைத் தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமை முதலமைச்சர் கருணாநிதி, தமது சொந்த நிதியாக 10 லட்சம் ரூபாவை தலைமைச் செயலாளர் சிறிபதியிடம் வழங்கினார். அதைத் தொடர்ந்து மாநில அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, வெள்ளக்கோயில் சாமிநாதன் ஆகியோர் தங்கள் ஒரு மாத சம்பள தொகையினை முதலமைச்சரிடம் நிதியாக வழங்கினர்.

மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராஜா, பழனிமாணிக்கம், ரகுபதி, வேங்கடபதி, ராதிகா செல்வி ஆகியோர் தலா 50 ஆயிரம் ரூபாய் நிதியினை முதலமைச்சர் கருணாநிதியிடம் இன்று வழங்கினார்கள்.



கவிஞர் வைரமுத்து ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கினார். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி 50 ஆயிரம் ரூபாயும், செ.குப்புசாமி வசந்தி ஸ்டான்லி, ஜின்னா, கிருஷ்ணசாமி ஆகியோர் தலா 25 ஆயிரம் ரூபாயும் இலங்கை தமிழருக்கான நிவாரண நிதியாக முதல்வரிடம் வழங்கினர். டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் வேந்தரும், புதிய நீதிக்கட்சி தலைவருமான ஏ.சி.சண்முகம் இலங்கை தமிழருக்கான நிவாரண நிதியாக 5 லட்சம் ரூபாவை முதலமைச்சர் கருணாநிதியிடம் இன்று வழங்கினார்.

தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக அதன் நிர்வாகி இரத்தினசபாபதி 3 லட்சம் ரூபாவும், முன்னாள் அமைச்சர் பூங்கோதை 25 ஆயிரம் ரூபாவும் நிதி உதவி வழங்கினார்.

முதலமைச்சரின் செயலாளர்கள் சண்முகநாதன், இராஜமாணிக்கம், இராஜரத்தினம், தேவராஜ், பிரபாகர் ஆகியோர் தலா 10 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கினார்கள்.

முதல்வர் அலுவலக சிறப்பு உதவியாளர் முத்து வாவாசி 5 ஆயிரம் ரூபாயும், மக்கள் தொடர்பு அலுவலர் மருதவிநாயகம் 5 ஆயிரம் ரூபாயும், முதல்வரின் அலுவலக முதுநிலை உதவியாளர் வெங்கட்ராமன் 2 ஆயிரம் ரூபாயும், டபேதார் ஏழுமலை ஆயிரம் ரூபாயும் இலங்கை தமிழருக்கான நிவாரண நிதியாக முதல்வரிடம் வழங்கினார்கள்.

பரந்தனில் சிறிலங்கா வான்படையின் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட மூவரும் அடையாளம் காணப்பட்டனர்



கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் குமரபுரம் கிராமத்தில் உள்ள பாடசாலைக்கு அருகான மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்கள் மூவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட மூவரின் உடலங்களையும் அவர்களின் உறவினர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

பூநகரியைச் சேர்ந்தவர்களான சங்கரலிங்கம் சிவநேசன் (வயது 28)

கந்தசிவம் சிவநாயகி (வயது 36)

தேவநாதன் சிவரூபன் (வயது 24)

ஆகியோர் கொல்லப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட மூவரும் பூநகரியிலிருந்து இடம்பெயர்ந்து பரந்தன் வழியாக சென்று கொண்டிருந்த போது சிறிலங்கா வான்படையின் குண்டுத்தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.

பரந்தனின் சிறிலங்கா வான்படை குண்டுத்தாக்குதல்: 3 பேர் பலி; 11 பேர் காயம்; 1,300 மாணவர்கள் நூலிழையில் உயிர் தப்பினர்



கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் பாடசாலைக்கு அருகான மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். 11 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் 1,300 மாணவர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

பரந்தன் குமரபுரம் கிராமத்தில் உள்ள பரந்தன் இந்து வித்தியாலயத்துக்கு அருகான மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11:15 நிமிடமளவில் சிறிலங்கா வான்படையின் மிக் - 27 ரக வானூர்திகள் இரண்டு குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளன.

மக்கள் செறிவாக வாழ்ந்து வரும் குடியிருப்பு மற்றும் போக்குவரத்து வீதியை இலக்கு வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


[படம்: புதினம்]


[படம்: புதினம்]


[படம்: புதினம்]

சுமார் 1,300 மாணவர்கள் கல்வி கற்றுக்கொண்டிருந்த வேளையில் பரந்தன் சந்தை மற்றும் நகரம் செறிவான மக்களுடன் இயங்கிக்கொண்டிருந்த வேளையில் மக்களுக்கு அவலத்தையும் அழிவையும் ஏற்படுத்தும் வகையில் மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் குண்டுத்தாக்குதலை நடத்தின.

இதில் வீதியால் சென்று கொண்டிருந்த மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பொதுமக்களின் எட்டு வீடுகள் அழிந்துள்ளதுடன் பத்து வீடுகள் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன. வீடுகளில் இருந்த பொதுமக்கள் மூவரும், மாணவர்கள் மூவருமாக ஆறு பேர் காயமடைந்தனர்.

குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற போது பாடசாலை மாணவர்கள் தேர்வு எழுதிக்கொண்டிருந்தனர். வான்படையின் மிலேச்சத்தனமான குண்டுத்தாக்குதலால் மாணவர்கள் பதறி- அவலப்பட்டு- சிதறி ஓடினர்.


[படம்: புதினம்]


[படம்: புதினம்]


[படம்: புதினம்]

மாணவர் அவலப்பட்டு காப்பகழிகளுள்ளும் வெளியிலும் கதறி அழுதவாறு சிதறியோடினர். பாடசாலை வளாகத்திலும் வகுப்பறைகளிலும் குண்டுச்சிதறல்கள் வீழ்ந்துள்ளன. இதில் மாணவர்கள் காயமடைந்தனர்.

வான்படையின் குண்டுத்தாக்குதலினால் பரந்தன் நகரம் அவலப்பட்டு சிதறி ஓடியது.

திட்டமிட்டு சிறிலங்கா வான்படை மக்கள் குடியிருப்புக்களை இலக்குவைத்து இக்குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளது.

குண்டுத்தாக்குதலில் கிறிஸ்டி (வயது 16) எனும் மாணவனின் வாயில் குண்டுச்சிதறல் தாக்கியுள்ளதுடன் கனிஸ்டன், தனுசன் ஆகிய மாணவர்களும் காயமடைந்துள்ளனர்.


[படம்: புதினம்]


[படம்: புதினம்]


[படம்: புதினம்]

வீடுகளிலிருந்து காயமடைந்த சுகுமார் ரதி (வயது 47), பத்மசீலன் (வயது 37), வீ.காண்டீபன் (வயது 29) ஆகியோர் கிளிநொச்சி நகரில் இயங்கிவரும் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வீதியில் சென்று கொண்டிருந்த நிலையில் கொல்லப்பட்ட மூன்று பேரும் உடனடியாக அடையாளம் காணப்படவில்லை. மேலும் ஐந்து பேர் பேர் சிறுகாயங்களுக்குள்ளாகினர்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் ஏற்பட்ட பெரும் எழுச்சி காரணமாக இராஜதந்திர அழுத்தங்களுக்கு அஞ்சி கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பொதுமக்கள் மீதான வான்தாக்குதலை இடைநிறுத்தி வைத்திருந்த சிறிலங்கா அரசு-

எக்காரணம் கொண்டும் மத்திய அரசுக்கு நெருக்கடியை தரமாட்டோம் என்று தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அறிக்கை விடுத்ததன் மூலம் தான் முன்னர் விதித்திருந்த பதவி விலகல் காலக்கெடுவிலிருந்து விலகியதனையடுத்து-

சிறிலங்கா அரசு பொதுமக்கள் மீதான வான் தாக்குதல்களை அதிகரித்துள்ளதாக கொழும்பு அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் மக்கள் அனைவரும் விடுதலைப் புலிகளாகவே பார்க்கப்படுகின்றனர்: "நசனல் போஸ்ட்"



சிறிலங்காவின் தலைநகரில் கடத்தல்கள் அசாதாரணமவை அல்ல. தமிழ் மக்கள் அங்கு சந்தேகத்துடன் நடத்தப்படுவதுடன், தமிழீழ விடுதலைப் புலிகளாகவே பார்க்கப்படுகின்றனர் என்று கனடாவில் இருந்து வெளிவரும் "நசனல் போஸ்ட்" ஏடு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த ஏட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மாலினி தம்பிப்பிள்ளையின் நான்கு வயது மகள் தொடர்ந்து ஒரே கேள்வியை தனது தாயாரிடம் கேட்டு வருகின்றார். எல்லா குழந்தைகளுக்கும் தந்தை உள்ள போதும் எனது தந்தை எங்கே? என்பது தான் அந்த கேள்வி.

சிறிலங்காவில் பலவந்தமாக காணாமல் போன பல நூறு பேர்களில் (ஏன் பல ஆயிரமாக கூட இருக்கலாம்) உனது தந்தையும் ஒருவர் என்ற பதிலை இந்த பாலர் பாடசாலைக்கு செல்லும் குழந்தைக்கு புரிய வைப்பது கடினமானது.

கனடாவின் ரொறன்ரோ நகரில் உள்ள நப்கின் தொழிற்சாலையில் தொழில் புரிந்து வரும் திருமதி தம்பிப்பிள்ளை, தனது கணவர் காணாமல் போன நாள் தொடக்கம் பலரிடமும் உதவிகளை கேட்டு தபால்களை அனுப்பியவாறு உள்ளார். அவரது கணவர் கடந்த மாதம் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் வெள்ளை வானில் வந்தோரால் கடத்தி செல்லப்பட்டிருந்தார்.

எனக்கு எனது கணவர் வேண்டும், எனது குழந்தைக்கு அவரின் தந்தையார் வேண்டும் என ஸ்காபரோவில் உள்ள தனது இல்லத்தில் இருந்து வழங்கிய நேர்காணலின் போது அவர் தெரிவித்திருந்தார். அங்கு அவரின் கணவரின் புகைப்படம் காணப்பட்டது.

திருமதி தம்பிப்பிள்ளை ரொறன்ரோ நகருக்கு 1998 ஆம் ஆண்டு வந்திருந்தார். சிறிலங்காவில் 25 வருடங்களாக இடம்பெற்று வரும் போரில் இருந்து தப்பிப்பதற்காக கனடாவில் அடைக்கலம் புகுந்த பல ஆயிரம் தமிழ் மக்களில் இவரும் ஒருவர்.

இவர் 2003 ஆம் ஆண்டு சிறீதரன் சுப்பிரமணியம் என்பவரை திருமணம் செய்திருந்தார். அவரும் ஏற்கனவே கனடாவிற்கு குடிபெயர்ந்திருந்தவர். ஆனால் அவர் கனேடிய குடிமகனாக தன்னை ஆவணப்படுத்தி கொள்ள முனைந்த சமயத்தில் அவரின் புகலிட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டிருந்தார்.

சிறிலங்காவுக்கு திரும்பிய அவர் உணவகம் ஒன்றில் வேலை பார்த்து வந்ததுடன், அவரை மீண்டும் கனடாவுக்கு வரவழைப்பதற்கான விண்ணப்பத்தை அவரின் மனைவி மேற்கொண்டிருந்தார். சிறிலங்காவுக்கான கனடிய தூதரகம் அவரை நேர்காணலுக்கு அழைத்திருந்த போதும் அவரின் விண்ணப்பம் தொடர்பான முடிவுகள் எதனையும் கனடிய தூதரகம் தெரிவிக்கவில்லை.

கடந்த செப்ரம்பர் மாதம் 19 ஆம் நாள் காலை 10:20 நிமிடமளவில் சுப்பிரமணியமும் அவரது நண்பர் ஒருவரும் வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டிருந்தனர்.

இதே போன்ற ஏராளமான கதைகளை நாம் கேட்டுக்கொண்டிருந்கின்றோம் என கனடா தமிழ் காங்கிரசின் பேச்சாளர் டேவிட் பூபாலப்பிள்ளை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஒரு சுயாதீனமான விசாரணைக்குழுவை ஐக்கிய நாடுகள் சபை அமைத்து காணாமல் போனோர் மற்றும் கடத்தப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது காங்கிரசின் கோரிக்கை.

சுப்பிரமணியத்தின் விண்ணப்பம் மீதான முடிவை எடுப்பதற்கு கனடா அரசு அதிக காலம் எடுத்ததும் கடத்தப்படுவதற்கு துணை போய் உள்ளதாகவும், இதில் கனடா நாட்டின் செயற்பாடுகள் தோல்வி கட்டுள்ளதாகவும் பூபாலப்பிள்ளை மேலும் தெரிவித்துள்ளார்.

சுப்பிரமணியத்துடன் கடத்தப்பட்ட நபர் விடுவிக்கப்பட்டுள்ள போதும், சுப்பிரமணியம் தொடர்பான தகவல்கள் எதுவும் இல்லை.

கொழும்பில் உள்ள அவரின் குடும்பத்தினர் இது தொடர்பாக காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள போதும், தமது தடுப்புக்காவலில் சுப்பிரமணியம் இல்லை எனவும், அவர் தொடர்பான தகவல்கள் எதுவும் தெரியாது எனவும் காவல்துறையினர் கைவிரித்துள்ளனர்.

அவர் கடத்தப்பட்டதற்கான காரணங்களை என்னால் அனுமானிக்க முடியாது உள்ளது, எனது கணவர் சட்டத்திற்கு புறம்பாக செயற்படுவதில்லை. விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் அல்ல என திருமதி தம்பிப்பிள்ளை தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.

சிறிலங்காவின் தலைநகரில் கடத்தல்கள் அசாதாரணமவை அல்ல. தமிழ் மக்கள் அங்கு சந்தேகத்துடன் நடத்தப்படுவதுடன், விடுதலைப் புலிகளாகவே பார்க்கப்படுவதாக முறைப்பாடுகள் உண்டு.

சிறிலங்காவில் உள்நாட்டு போர் ஆரம்பித்ததில் இருந்து பல நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக மனித உரிமை கண்ணாணிப்பகம் கடந்த மார்ச் மாதம் தெரிவித்துள்ளது.

2005 ஆம் ஆண்டுக்கும் 2007 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 1,500-க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவை மேலும் தெரிவித்துள்ளன.

மனித உரிமை கண்காணிப்பகம் மற்றும் சிறிலங்காவின் மனித உரிமை குழுக்களில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளில் பெரும்பாலனவை அரச படையினரின் தொடர்புக்கான ஆதாரங்களை தெளிவுபடுத்தியுள்ளன.

கடத்தப்பட்டவர்களில் சிலர் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என சில தகவல்கள் தெரிவிக்கின்ற போதும், மேலதிக விசாரணைகள் எதுவுமின்றி அவர்களை மறைவான இடங்களில் தடுத்து வைப்பதை நியாயப்படுத்த முடியாது.

அண்மைக்காலமாக சிறிலங்காவின் உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ளது. விடுதலைப் புலிகளை கனடா அரசும் பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுத்தியுள்ளது.

சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை கடந்த மாதம் "நசனல் போஸ்ட்" ஏடு நேர்காணல் கண்ட போது, காணாமல் போனவர்களில் பலர் மேற்குலக நாடுகளுக்கு சென்றுள்ளதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, October 27, 2008

கிழக்கில் ஜனநாயகம் என்ற அரசாங்கத்தின் கூற்றை சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் நிராகரித்துள்ளது



கிழக்கில் ஆயுதக் குழுக்கள் இருக்கும் வரை, அங்கு ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியாது என அமெரிக்கா நியூயோர்க்கை தலைமையகமாக கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

கண்காணிப்பகத்தின் சட்ட மற்றும் கொள்கைத் திட்டப்பணிப்பாளர் ஜேம்ஸ் ரோஸ் இது தொடர்பாக இலங்கையின் ஆங்கில இதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

அதிகாரிகளின் முன்னிலையிலேயே கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பொதுக்கூட்டம் ஒன்றிற்காக பொதுமக்கள் பேரூந்துகளின் மூலம் ஆயுததாரிகளால் பலவந்தமாக அழைத்து வரப்பட்டமை அங்கு ஜனநாயகம் இல்லை என்பதை எடுத்துக்காட்டுவதாக ரோஸ் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் கிழக்கில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளதாக கூறுகின்ற போதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவம், அரசாங்கத்தின் கூற்றில் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது என ஜேம்ஸ் ரோஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஒரு பிரிவினர் தமிழ்நாட்டுக்கு எதிரான இந்த கூட்டத்திற்குப் பொதுமக்களைப் பலவந்தமாக அழைத்து வந்தபோதும் மற்றும் ஒரு குழு அதனை தடுத்து நிறுத்தியதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.பொதுமக்கள் பலவந்தமாக பேரூந்துகளில் ஏற்றி வரப்பட்டமையை மட்டக்களப்பு பொலிஸாரும் ஏற்றுக்கொண்டதாக ஆங்கில இதழ் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு, கடத்தல்கள், கொழும்பின் தமிழ் வர்த்த்கர்களிடம் கப்பம் பெறல் உட்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்பு சபை, என்பன குற்றம் சுமத்தியுள்ளன.

அத்துடன் எல்லைகளற்ற பத்திரிகையாளர் சங்கம், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு, பொதுமக்களுக்கு எதிராக,கொலைக் குழுவாக செயற்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளதாகவும் இன்றைய ஆங்கில செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

புலிகளின் இலகுரக விமானத்தை செலுத்திய வெளிநாட்டவருக்கு ஒரு தாக்குதலுக்காக 5000 டொலர்



தமிழீழ விடுதலைப் புலிகளின் இலகு ரக விமானங்களின் மூலம் தாக்குதல் மேற்கொள்வதற்காக வெளிநாட்டு விமானிக்கு ஒவ்வொரு தாக்குதலுக்கும் தலா 5000 அமெரிக்க டொலர் வழங்கப்படுவதாக லக்பிம நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக நிலையான சம்பளமொன்றும் குறித்த வெளிநாட்டு பிரஜைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விடுதலைப் புலிகளுக்காக தாக்குதலை மேற்கொள்ளும் ஒர் வெளிநாட்டு விமானி கொல்லப்பட்டுள்ளதாகவும், மற்றுமொருவர் இன்னமும் வன்னியில் தங்கியிருப்பதாகவும் புலனாய்வுத்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இலங்கையில் சிறைக்கைதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை – ஐ.நா. பிரதிநிதி மென்பொர்ட் நொவிச்



இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் சிறை வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை எனவும், குறித்த கைதிகள் மீது பல்வேறு அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதாகவும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் கைதிகள் சித்திரவதை குறித்த விசேட பிரதிநிதி மென்பொர்ட் நொவிச் தெரிவித்துள்ளார்.

இலங்கை, பரகுவே, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் சிறை வைக்கப்பட்டுள்ள நபர்கள் பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளாவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மிகச் சிறிய அறைகளில் பெருந்தொகையான கைதிகள் தடுத்து வைக்கப்படுவதன் மூலம் அவர்களர் அடிப்படை உரிமை மீறப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பொதுவாக சர்வதேச நியமங்களுக்கு அமைவாக கைதிகளுக்கு வழங்கப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து இலங்கை போன்ற நாடுகளில் அதிக கவனம் செலுத்தப்படுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உணவு, குடிநீர் மற்றும் சமூக பாதுகாப்பு குறித்து அதிக கவனம் செலுத்தப்படுவதில்லை என நொவிச் தெரிவித்துள்ளார்.

சட்ட மற்றும் பொலிஸ் நிலையங்களில் காணப்படும் ஊழல் மோசடிகள் இந்த நிலைமையை மேலும் மோசமடையச் செய்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்து கட்சிக்கூட்டத்தை உடனடியாக கூட்டுமாறு நெடுமாறன் வேண்டுகோள்



அனைத்து கட்சிக்கூட்டத்தை உடனடியாக கூட்டுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதியிடம் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் பழ. நெடுமாறன் இன்று திங்கட்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் ஆலோசகரும் சகோதரருமான பசில் ராஜபக்ச டில்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்துப் பேசியப் பிறகு அதன் தொடர்ச்சியாக பிரணாப் முகர்ஜி சென்னையில் முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேச்சு நடத்திய பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்த விவரங்கள் தமிழர்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை.

இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும், இந்திய அரசு சிறிலங்காவுக்கு ஆயுத உதவி செய்யக்கூடாது என்றும் தமிழக அனைத்து கட்சிகள் செய்துள்ள முடிவு குறித்து பிரணாப் முகர்ஜி எதுவும் கூறாதது தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

பிரணாப் முகர்ஜியின் அறிவிப்புக் குறித்து விவாதிக்க அனைத்து கட்சிக்கூட்டத்தை உடனடியாகக் கூட்டுமாறு முதலமைச்சரை வேண்டிக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

செங்கலடியில் துணை இராணுவக்குழுவின் பிரதான முகாம் தாக்கியழிப்பு: 4 பேர் பலி; 6 பேர் சிறை பிடிப்பு


[செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2008, 01:43 மு.ப ஈழம்] [தாயக செய்தியாளர்]
மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடியில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான கருணா குழுவின் பிரதான முகாம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆறு பேர் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

செங்கலடியில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான கருணா குழுவின் பிரதான முகாம் மீது இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 12:15 நிமிடமளவில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதலில் கருணா குழுவைச் சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆறு பேர் விடுதலைப் புலிகளால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.

முகாம் தாக்கி நிர்மூலமாக்கப்பட்டுள்ளதுடன் ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

ரி-56-2 ரக துப்பாக்கி - 05, ரி-56 ரக துப்பாக்கி - 03 மற்றும் பெருமளவிலான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்தனர்.

அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் படைத்தரப்பைச் சேர்ந்தவரின் உடலம் ஒப்படைப்பு



வன்னிக் களமுனையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரின் உடலம் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

வன்னியின் மேற்கு களத்தில் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்கா படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட படையினரில் ஒருவரின் உடலம் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றப்பட்ட இந்த உடலம் இன்று அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் விடுதலைப் புலிகளால் கையளிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் அனைத்துலக நிறுவனங்களுக்கான தொடர்பகத்தினரால் இந்த உடலம் இன்று கையளிக்கப்பட்டது.

அம்பாறையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரை வழிமறித்து புலிகள் தாக்குதல்: ஒருவர் பலி



அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரை தமிழீழ விடுதலைப் புலிகள் வழிமறித்து நடத்திய தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இருவர் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பில் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

கஞ்சிக்குடிச்சாறு காட்டுப்பகுதியில் ஊடுருவல் நடவடிக்கையினை மேற்கொண்ட சிறப்பு அதிரடிப்படையினரை இன்று திங்கட்கிழமை பிற்பகல் 12:50 நிமிடமளவில் விடுதலைப் புலிகள் வழிமறித்து தாக்குதல் நடத்தினர்.

இதில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். இருவர் காயமடைந்தனர் என்று விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்தனர்.

சிதம்பரத்தின் கொழும்பு வருகையின் பின்னணி என்ன?: ஐ.தே.க. கேள்வி



இந்தியாவின் மூத்த அமைச்சரும் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் இன்னும் சில நாட்களில் கொழும்புக்கு பயணம் செய்யவுள்ளதன் நோக்கம் என்ன என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் காசிம் கேள்வி எழுப்பியுள்ளார்.

போரை தொடர்ந்து நடத்த முடியாது என்பதனால் அரசாங்கம் சமாதான முயற்சி என்ற பெயரில் இந்தியாவின் உதவியை கோரியிருக்கின்றது எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தற்போதைய நிலைமை தொடர்பாக விளக்கமளித்த அவர், புலிகளுக்கு எதிரான போரை அரசாங்கம் தொடர்ந்து நடத்த வாய்ப்பில்லை எனவும் எடுத்துக்கூறியுள்ளார்.

இந்தியாவின் மூத்த அமைச்சர் சிதம்பரம் இன்னும் சில நாட்களில் கொழும்புக்கு வருகை தரவுள்ளதாக இரகசிய தகவல் கிடைத்துள்ளது. அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்துவதற்காவே அவர் கொழும்புக்கு வருகின்றார்.

அப்படியானால் அது என்ன தீர்வு? புலிகளுடனான போரை கைவிடப்பட்டுள்ளதா? இந்த கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் காசிம் வற்புறுத்தியுள்ளார்.

புலிகளுக்கு எதிராக படையினர் வெற்றி பெற்று வரும் நிலையில் யாரை கேட்டு புலிகளுடனான போரை அரசாங்கம் நிறுத்தியது என்றும் கேள்வி மேல் கேள்வி எழுப்பியதுடன் மூத்த அமைச்சர் ப.சிதம்பரம் வருகை தரவுள்ளமை தொடர்பில் அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிராக கருத்துக்கூற உரிமை உண்டு எனில் ஆதரித்து குரல் எழுப்பவும் உரிமை உண்டு: தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி


[திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2008, 09:21 மு.ப ஈழம்] [ந.ரகுராம்]
ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக கருத்துக்கூற உரிமை உண்டென்றால் ஆதரித்துக் குரல் எழுப்பவும் உரிமை உண்டு என்று தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியச் தண்டனைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதிமுக பொதுச்செயலார் வைகோ அவைத்தலைவர் கண்ணப்பன், இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டதை கண்டித்து வெளியிட்ட அறிக்கையிலேயே தமிழ்ப் படைப்பாளிக்ள் முன்னணி இவ்வாறு தெரிவித்துள்ளது.

தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை காக்க செப்ரெம்பர் 23 ஆம் நாள் ஒரு தொடர் முழக்க போராட்டத்தை சென்னையில் நடத்தியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்தின்போது ஈழத்தின் புகழ்மிக்க அரசியல் ஆய்வாளரான மு.திருநாவுக்கரசு எழுதிய இந்திய இராஐதந்திரத்தின் தோல்வி பற்றியதான இரண்டு கட்டுரைகளை சிறுபிரசுரமாக வெளியிட்டு விநியோகித்தும் இருந்தனர்.

அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், பிரிவினையைத் தூண்டுமாறு பேசியதாகவும் இந்தி தண்டனைச் சட்டத்தின் கீழும், சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச்சட்டத்தின் கீழும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அவைத் தலைவர் கண்ணப்பன், திரைத்துறை கலைஞர்களான இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிய கருத்துரிமையைப் பறிப்பதாகவும், ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பதாகவும் உள்ள அரசின் அடக்குமுறையை எழுத்தாளர்கள், படைப்பாளிகள் சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

ஒருபுறம் ஈழ மக்களுக்கும் ஈழ விடுதலைக்கும் ஆதரவாக இருப்பது போல காட்டிக்கொண்டு, இன்னொரு பக்கம் ஈழ விடுதலைக்கு குரல் கொடுப்போரை சிறையில் அடைப்பது என்னும் ஆட்சியாளர்களின் நடவடிக்கை, அவர்களின் இரட்டை முகத்தை அம்பலப்படுத்துகின்றது.

ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக கருத்துக்கூற உரிமை உண்டென்றால் ஆதரித்துக் குரல் எழுப்ப மற்றவர்களுக்கும் உரிமையுண்டு என்ற அடிப்படையில் சொல்லொண்ணாத் துயரங்களுக்கு ஆளாகி, சொந்த பூமியிலேயே அகதிகளாய் அலைகின்ற ஈழ மக்களுக்கும் அந்த மக்களின் விடுதலைக்கும் குரல் கொடுக்கும் சக்திகள் ஒருமித்த குரலில் இணைந்து அடக்குமுறையை எதிர்க்குமாறு தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி கேட்டுக்கொள்கின்றது.

கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு தமிழ்ப்; படைப்பாளிகள் முன்னணி கோருகின்றது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து விழித்திருந்தால் இந்திய அரசு இன்னும் கொஞ்சம் அசையும்: சோலை



நாம் தொடர்ந்து விழித்திருந்தால் இந்திய அரசு இன்னும் கொஞ்சம் அசையும். இல்லையேல் சிங்கள இனவாத அரசுடன்தான் கைகுலுக்கும். இதுதான் இதுவரை நாம் கண்ட நடைமுறை என்று அரசு தனிமைப்பட்டுத் தவிக்கிறது- இந்தியா என்ன செய்யப்போகிறது? என்று தமிழ்நாட்டின் மூத்த ஊடகவியலாளரும் எம்.ஜி.ஆரின் ஆலோசகராக செயற்பட்டவருமான சோலை தெரிவித்துள்ளார்.

குமுதம் குழுமத்தின் "றிப்போர்ட்டர்" வாரமிருமுறை இதழில் சோலை எழுதியுள்ள கட்டுரை:

டெல்லியில் சிறிலங்கா தூதுவரை நமது வெளியுறவுச் செயலாளர் சிவசங்கரமேனன் அழைத்தார். பேச்சுவார்த்தையின் மூலம் ஈழப் பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு காண வேண்டும் என்பதுதான் இந்திய அரசின் நிலை என்பதனை எடுத்துரைத்தார். செய்தி வந்தது. இப்படிச் சொன்னது சிவசங்கரமேனன்தானா? நம்ப முடியவில்லை.

எந்த இலங்கைப் பிரச்னையென்றாலும் அங்குள்ள தமிழர்களின் நலன்களை முன்னிறுத்தித்தான் நேருவும் இந்திரா காந்தியும் முடிவெடுத்தனர். ஆனால், அதன்பின்னர் ராஜீவ் காந்தி காலத்தில் இந்தியா தடம்புரண்டது. ஈழப் பிரச்சினையில் இந்திரா வகுத்த பாதையிலிருந்து இந்திய அரசு வழுக்குப் பாதையில் அடியெடுத்து வைத்தது.

1987 ஆம் ஆண்டு இந்தியா - இலங்கை உடன்பாடு ஏற்பட்டது. அதன்பின்னர் ராஜீவ் காந்தி இலங்கை சென்றதும், மரியாதை அணிவகுப்பில் நின்ற ஒரு சிங்கள வெறியன் அவரைக் கொலை செய்ய முயன்றதும் மறக்கக்கூடிய நிகழ்ச்சியா? அதன்பின்னர் இந்திய இராணுவம் ஈழப்பரப்பில் இறங்கியது.

ராஜீவ் காந்தி காலத்தில் இலங்கையில் இந்தியத் தூதராக இருந்தவர்களில் ஒருவர் சிவசங்கரமேனன். இந்திய உளவுத்துறைத் தலைவராக இருந்தவர் எம்.கே.நாராயணன். இன்றைக்கு அதே மேனன் இந்திய அரசின் வெளியுறவுச் செயலாளர், எம்.கே. நாராயணன் பிரதமரின் பாதுகாப்புத்துறை ஆலோசகர். ரொமேஷ் பண்டாரி என்பவர் இந்திய வெளியுறவுச் செயலாளராக இருந்தார். சிங்கள இனவாத அரசு அவரது துணைவியாருக்கு விலை மதிப்புமிக்க வைர நெக்லசை வாங்கித் தந்ததாக பிரபல இந்திய ஆங்கில ஏடு எழுதியது.

தீட்சித் என்று இன்னொருவர் தூதுவராக இருந்தார். பிரபாகரனைச் சுட்டுக்கொல்லும்படி யாழ்ப்பாணத்திலிருந்த இந்திய இராணுவத் தளபதிகளை நச்சரித்தார். அமைதியை நிலைநாட்ட வந்திருக்கிறோமே தவிர, பிரபாகரனைச் சுட்டுக்கொல்வற்காக அல்ல என்று தளபதிகள் மறுத்தனர். 'பேச்சுவார்த்தைக்கு பிரபாகரனை அழைத்து வரும்போதே தீர்த்துக்கட்டுங்கள். மேலிடத்து உத்தரவு" என்றார். மறுத்து விட்டனர்.

தனிப்பட்ட எவர்மீதும் குற்றம் கூற வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்வுகளை இப்போது நாம் சுட்டிக்காட்டவில்லை. அன்னை இந்திரா காந்திக்குப் பின்னர் அரியணைக்கு வந்தவர்களுக்கும், அதிகார வர்க்கத்திற்கும் ஈழ மக்களின் நியாயத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. சிங்கள இனவாத அரசு ஈழத் தமிழர்களை அழித்திட அடுத்தடுத்து பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டது. அதன் பின்னர்தான் ஈழத்து இளைஞர்கள் போர்க்குணம் கொண்டு புலிப்பாய்ச்சலுக்குத் தயாரானார்கள்.

ராஜீவ் காந்தியின் மரணம் சிங்கள இனவாதிகளுக்கும், இங்குள்ள ஈழத்து எதிராளிகளுக்கும் ஆயுதமாகக் கிடைத்தது. அன்னை இந்திராவின் அந்த அருந்தவப் புதல்வனின் இழப்பை ஈடுசெய்ய முடியாதுதான். இன்றைக்கும் நமது இதயங்களில் இரத்தம் கசிகிறது. ஆனால் அதனையே காரணம் காட்டி ஈழத் தமிழினத்தை அழிக்க வேண்டுமா? அதற்குத் துணை போக வேண்டுமா?

நடந்து போன துயர சம்பங்களைக் கடந்து இனி நடக்க வேண்டிய காரியங்களைக் காண்போம் என்ற மனநிலைக்கு அன்னை சோனியாவே வந்திருக்கிறார்.

அன்னை இந்திரா காந்தியைப் பலி கொண்டவன் ஒரு சீக்கியன். அதனைத் தொடர்ந்து ஆத்திரம், ஆவேசத்தில் நடந்த சீக்கியப் படுகொலைகளுக்கு மன்னிப்புக் கேட்டு விட்டோம். ஒரு சீக்கியன் செய்த பாதகச் செயலுக்காக ஒரு இனமே அழிய வேண்டுமா? அதனால்தான் ஒரு சீக்கியரையே நாட்டின் பிரதமராக ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.

கடந்த நான்கு ஆண்டுகளாக ஈழத் தமிழ் இனத்தை அழிக்கின்ற வேலைகளை சிங்கள இனவாத அரசு வெறிகொண்டு வேகப்படுத்தியிருக்கிறது. அதற்காக எத்தனையோ நாடுகளில் ஆயுதம் வாங்கிக் குவித்திருக்கிறது. அந்த ஆயுதங்களால் போரைத் தீர்மானிக்க முடியாது.

ஆனால், இந்திய அரசு சிங்கள இனவாத அரசிற்கு பெரும் சேவகம் செய்திருக்கிறது. ஈழப் போராளிகளின் கடல் நடமாட்டத்தைக் கண்காணிப்பதே இந்திய கடற்படைதான் என்று குற்றச்சாட்டு எழுந்தது. அதனை சிங்கள கப்பற்படைத் தளபதியே பகிரங்கமாக அறிவித்தார்.

சிங்கள இராணுவத்தினருக்கு தமிழ் மண்ணிலேயே பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த அநியாயம் அம்பலமானதும் சிங்களவர்கள் வட மாநிலப் பயிற்சி நிலையங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

கொழும்பிற்கு அருகிலுள்ள இராணுவ விமானத் தளங்கள் மீது ஈழப் போராளிகளின் சிட்டுக் குருவி விமானங்கள் தாக்குதல் தொடுத்தன. அதனைக் கண்டு சிங்களவன் சீற்றம் கொண்டதைவிட நமது இந்திய அதிகாரிகள்தான் அதிக ஆவேசம் கொண்டனர். எனவே, இந்திய - சிங்கள கூட்டு ரோந்து வேண்டும் என்றன. அப்படிச் சொன்னவரே சிவசங்கர மேனன்தான்.

ஈழத்தில் தினம் தினம் சிங்கள விமானங்கள் குண்டுமாரி பொழிகின்றன. குடியிருப்புக்கள், பள்ளிகள், வயல்கள், கோயில்களை அழிக்கின்றன. குழந்தைகள் காப்பகம் கூட அழிக்கப்பட்டது. அப்போதெல்லாம் நமது இதயங்கள் படபடத்தன. டெல்லி அதிகாரிகளோ அதற்காகக் கண்டனம் கூடத் தெரிவித்ததில்லை. ஆனால் சிங்கள அரசுக்கோ இராணுவத்திற்கோ சேதம் என்றால் எல்லா உதவிகளையும் செய்தனர். இன்றுவரை செய்கின்றனர்.

இதற்கு அவர்களைக் குற்றம் சாட்டக்கூடாது. நாமே குற்றவாளிக்கூண்டில் நிற்க வேண்டும். இங்குள்ள தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை. உகாண்டாவில் குஜராத்திகளுக்குச் சோதனையென்றால் கட்சி வேறுபாடின்றி அணிதிரள்கின்றனர். ஜாம்பியாவில் மார்வாடிகளுக்கு ஆபத்து என்றால் மத்திய அரசே குரல் கொடுக்கிறது.

இப்போது தமிழகம் ஈழத் தமிழர்களுக்காக அணிதிரள்கிறது. முதல்வர் கூட்டிய சர்வகட்சிக் கூட்டத்திற்குப் பின்னர் மத்திய அரசும் சோம்பல் முறிக்கிறது. அரசியல் மாச்சரியங்களால் இதயங்களைக் கருக்கிக் கொண்டவர்கள் மனசாட்சிக்கு விரோதமாகச் செயல்பட்டு தனிமைப்பட்டு வருகிறார்கள். அவர்களைப் பற்றி கவலை கொள்ளாது இப்போது உருவாகி இருக்கும் ஒற்றுமை வலிமை பெற வேண்டும். அந்த வலிமைதான் இந்திய அரசை அசைக்கும். ஈழத் தமிழர்களுக்குக் கரம் கொடுக்கும். ஈழத்துக் கதிரவனை மறைக்கும் கார்மேகங்கள் கலையும்.

அங்குள்ள தமிழர்களின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாக்க இலங்கை அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்று செய்தி வந்தது. அடுத்து நமது வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்புவிற்குப் பயணம். ஆஹா! இனி ஈழத்தின் கிழக்கு வெளுத்துவிடும் என்று நம்பினால் ஏமாந்துவிடுவோம். அதே சமயத்தில் அவர்களுடைய முயற்சியைப் பாராட்டுகிறோம்.

தமிழகத்தில் ஈழப் பிரச்னை எதிரொலிக்கும் போதெல்லாம் நமது பிரதமர்கள் சிங்கள இனவாத அரசிற்கு வேதாந்தம் சொல்வார்கள். இதற்கு முன்னர் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர்களாக இருந்த நரசிம்மராவ், நட்வர்சிங் போன்றவர்கள் கொழும்பிற்குப் பயணம் போய் வந்திருக்கின்றனர். அதனால் என்ன பலன் ஏற்பட்டது?

இராமேஸ்வரத்திற்கு அப்பால் இந்தியக் கடலில் மிதக்கும் நமது போர்க் கப்பல்கள் இடம் மாற வேண்டும். அதனை நமது பிரதமர் செய்தால்தான் நம்பிக்கை பூக்கும். இந்திய ஆயுதங்கள் அளிப்பது நிறுத்தப்பட வேண்டும். அப்போதுதான் எல்லோருக்கும் நிம்மதி பிறக்கும்.

ஈழப் போராளிகளை எதிர்த்து சிங்கள இராணுவம் போர் புரிவதை நாம் விமர்சிக்கவில்லை. ஆனால் போராளிகளுடன் போர் என்ற பெயரால் எத்தனை ஆயிரம் அப்பாவி ஈழத்து மக்கள் மடிந்திருக்கிறார்கள்?

ஈழப் போராளிகளின் பாசறைகள் தாக்கப்படுவது பற்றி நாம் கவலை கொள்ளவில்லை. ஆனால் லட்சோப லட்சம் தமிழ் மக்களை சிங்கள இனவாத அரசு அநாதைகளாக அகதிகளாக கண்ணீரும் கம்பலையுமாக அலையவிட்டுக் கொன்று குவிப்பதைத்தான் நாம் எதிர்க்கிறோம்.

நாம் தொடர்ந்து விழித்திருந்தால் இந்திய அரசு இன்னும் கொஞ்சம் அசையும். இல்லையேல் சிங்கள இனவாத அரசுடன்தான் கைகுலுக்கும். இதுதான் இதுவரை நாம் கண்ட நடைமுறை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை ஒதுக்கி வைத்து ஈழத் தமிழர் பிரச்சினைக்கு என்றுமே தீர்வு இல்லை: இரா.சம்பந்தன்



இந்தியாவை ஒதுக்கி வைத்து ஈழத் தமிழர் பிரச்சினைக்கு என்றுமே தீர்வு இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சுவிசிலிருந்து வாரமிருமுறை வெளிவரும் 'நிலவரம்' ஏட்டுக்கு அவர் அளித்த நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

வன்னி மக்களின் அவலம் தொடர் கதையாக இருக்கின்றது. அனைத்துலக தொண்டு நிறுவனங்களைப் பலவந்தமாக வெளியேற்றிய சிங்கள அரசு அங்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் செல்வதையும் தடுத்து வருகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல மட்டங்களில் முயற்சி செய்தும் மாற்றம் எதுவும் இன்றி நிலைமை தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது. இந்நிலையில் உங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

வன்னியில் நடைபெறுகின்ற மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக மக்களுக்கு ஏற்படுகின்ற அழிவுகள், இழப்புக்கள், உயிர்ச் சேதங்கள், தொழில் இழப்புகள், குடிப்பெயர்வுகள் போன்ற விடயங்கள் சம்பந்தமாக நாங்கள் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பல்வேறு மட்டங்களில் குரல் கொடுத்து வந்திருக்கின்றோம்.

இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பிரதிநிதியுடன் இந்த விடயம் தொடர்பாக தொடர்ச்சியாக நாங்கள் உரையாடி வந்திருக்கின்றோம். அவர்களுக்கு வன்னியில் இருந்து வெளியேறும் நோக்கம் இருக்கவில்லை. தங்களுடைய கடமைகளைப் புரிவது கஸ்டமாக இருந்த போதிலும், மேலும் கஸ்டங்கள் ஏற்படலாம் என அவர்கள் எதிர்பார்த்த போதிலும் கூட வெளியேற வேண்டுமென்ற எண்ணம் அவர்களுக்கு இருக்கவில்லை. நிச்சயமாக அரசாங்கத்தின் வற்புறுத்தல் காரணமாகத் தான் அவர்களும் ஏனைய அனைத்துலக தொண்டு நிறுவனங்களும் வன்னியில் இருந்து வெளியேறி இருக்கின்றார்கள்.

அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் இந்த விதமாக நிறுவனங்களை வெளியேற்றினால், கட்டாயப்படுத்தினால் மக்களுடைய கஸ்டங்கள் அதிகரிக்கும். இவ்வாறு மக்களுடைய கஸ்டங்கள் அதிகரித்தால் அதன் காரணமாக மக்கள் தாங்களாகவே அந்தப் பிரதேசத்திலிருந்து வெளியேறி தங்களுடைய கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வருவார்கள் என அரசாங்கம் எண்ணியிருக்கலாம். ஆனால், அரசாங்கத்தின் அந்த நோக்கம் கைகூடவில்லை. மக்கள் வரவில்லை.

மக்கள் வரமாட்டார்கள் என்ற கருத்தை நாங்கள் முன்கூட்டியே பகிரங்கமாகக் கூறியிருந்தோம். அரசாங்கத்தின் இந்த விதமான போக்குத் தான் இன்றைக்கு தாமதித்தாவது அனைத்துலக சமூகம் இதைப்பற்றித் தங்களுடைய நிலைப்பாட்டைப் பகிரங்கமாகச் சொல்வதற்கு ஒரு காரணமாக அமைந்திருக்கின்றது.

இறுதியாக நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை விவாதத்தின் போது இது பற்றித் தெளிவாக நான் நாடாளுமன்றத்தில் பேசியிருந்தேன். இது அனைத்துலக மனித உரிமைகளை, அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களையும், உரிமைகளையும் மீறுகின்ற ஒரு செயல். இது இனப் படுகொலைக்குச் சமமானது எனக் கூறியிருந்தேன். தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இனப் படுகொலை ஒரு தொடர்கதையாக நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. தொடர்ந்தும் அனைத்துலக சமூகம் இதில் மௌனம் சாதிக்கக்கூடாது. அவர்கள் இந்த விடயங்களைத் தமது கவனத்தில் எடுத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நாங்கள் கேட்டிருந்தோம்.

இது சம்பந்தமாக நாங்கள் இங்கே ஐ.நா. சபை மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்திற்குச் சென்று- அவர் தற்போது ஜெனீவாவில் இல்லை - அங்குள்ள பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மூவரைச் சந்தித்து அவர்களுக்கு நாங்கள் இந்த விடயத்தை விளக்கிச் சொன்னோம். கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் சம்பந்தமாக, கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட அழிவுகள் சம்பந்தமாக, மீள்குடியமர்வதில் மக்கள் எதிர்நோக்கும் கஸ்டங்கள் சம்பந்தமாக, அதி உயர் பாதுகாப்பு வலயப் பிரகடனம் அவ்விதமான செயல்கள், அந்தவிதமான நடவடிக்கைகள் மக்கள் குடியேறுவதில் தங்களுடைய வாழ்க்கையை மீள ஆரம்பிப்பதில் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், எதிர்நோக்குகின்ற விடயங்கள் சம்பந்தமாக பல அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் வெளியிட்ட அறிக்கைகளை உள்ளடக்கிய நாடாளுமன்றத்தில் நான் நிகழ்த்திய உரைகளின் பிரதிகளை அவர்களுக்குக் கையளித்து அது விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் கவனத்திற்கு அவர் ஜெனீவா திரும்பியதும் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் இது விடயம் சம்பந்தமாக மனித உரிமைகள் ஆணையாளர் தன்னுடைய கருத்தை வெளியிட வேண்டும், நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டிருக்கின்றோம்.

இந்தியாவும் தற்போதைய நிலைமையை உணர்ந்து இந்த நிலைமை தொடர முடியாது என்றொரு நிலைப்பாட்டுக்கு வந்திருக்கின்றது என்று தோன்றுகின்றது. சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் சிறிலங்கா அரசாங்கம் இந்தப் பகுதிகளில் வாழுகின்ற தமிழ் மக்களை அந்த நாட்டு குடிமக்களாக கருதவில்லை. அவர்கள் இந்த நாட்டு குடிமக்களே அல்ல அந்நியர்கள் என்ற அடிப்படையில் தான் சிறிலங்கா அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது. இதை நாங்கள் நாடாளுமன்றத்தில் மிகத் தெளிவாகக் கூறியிருக்கின்றோம்.

இந்த விடயங்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்தால் கூறப்படும் தகவல்கள் அநேகமாக உண்மைக்கு மாறானவை. கிழக்கு மாகாணத்தில் போர் காரணமாக ஒரு தமிழர் கூடச் சாகவில்லை என அரச கூறுகின்றது. ஆனால், எங்களுடைய கணிப்பின்படி, பல்வேறு மனித உரிமை அமைப்புகளுடைய அறிக்கைகளின் அடிப்படையில் குறைந்தது 300 பேர் கொல்லப் பட்டிருக்கின்றார்கள் 261 பேரின் பெயர் விபரங்களை நான் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறேன். இதனைச் சமர்ப்பித்து மூன்று பேர் அடங்கிய ஆணைக்குழு நியமிக்கும் படியாக அரசுக்கு ஒரு அறைகூவல் விடுத்தேன். ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் மூவர் ஒரு சிங்களவர், ஒரு தமிழர், ஒரு முஸ்லிம் மூவரையும் உள்ளடக்கி ஒரு ஆணைக்குழுவை நியமித்து இந்த விடயம் தொடர்பாக உண்மையை அறிந்து ஒரு அறிக்கையை வெளியிடுமாறு நான் அரசாங்கத்திடம் கேட்டேன். அந்தக் குழுவின் தலைவராக முஸ்லிம் ஒருவரையே நியமிக்குமாறும் கேட்டிருந்தேன். ஆனால், அரசு அதனைச் செய்யவில்லை. செய்யவும் மாட்டாது. ஏனென்றால், அவ்வாறு விசாரணை மேற்கொண்டால் உண்மை வெளிவந்துவிடும்.

ஐ.நா. மனித உரிமைகள் முன்னாள் ஆணையாளர் லூய்ஸ் ஆர்பர் அவர்கள் கடும் முயற்சியெடுத்தும் இலங்கையில் ஐ.நா. சபையினுடைய ஒரு கண்காணிப்பு அமைப்பை உருவாக்க முடியவில்லை. அதாவது சகல விடயங்களும் சம்பந்தமாக அவதானிப்பதற்கு ஒரு கண்காணிப்பு அமைப்பை ஏற்படுத்துவதற்கு அவர் கடும் முயற்சி எடுத்தபோதும் அது கைகூடவில்லை. சிறிலங்கா அரசு அதற்கு இனங்கவில்லை.

இவையெல்லாம் எதை உணர்த்துகின்றன வென்றால் தாங்கள் தொடர்ச்சியாக மனித உரிமைகளை மீறலாம். தமிழ் மக்கள் மீது சொல்லொணாத் துயரங்களை அவர்கள் திணிக்கலாம். இது வெளிவராமல் தாங்கள் மறைக்கலாம் என சிறிலங்கா அரசாங்கம் நினைக்கின்றது. அது நடைபெறக்கூடிய விடயமல்ல. தற்போதும் அது நடைபெறவில்லை. எப்போதும் நடைபெறக்கூடிய விடயமும் அல்ல. இதனுடைய விளைவுகளை சிறிலங்கா அரசு எதிர்நோக்க வேண்டிய காலம் விரைவில் வரும் என நான் நினைக்கின்றேன்.

தென் தமிழீழப் பிரதேசத்தில் குறிப்பாக திருமலை மாவட்டத்தில் மீளக் குடியமரும் மக்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்வதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. உண்மையில் அங்கு நிலைமைகள் எவ்வாறு உள்ளன?

கிழக்கு மாகாணத்தில் சிறப்பாக திருகோணமலையில் அதுவும் தற்போது அதீத உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனம் செய்யப்பட்டிருக்கும் பிரதேசத்தில் மக்கள் மீளக் குடியமர்வது கடினமான விடயம். அது சட்டத்தால் தடுக்கப்பட்டிருக்கின்றது. அந்தப் பகுதி அதி உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனம் செய்யப்பட்டு சிறப்பாக அந்தப் பகுதியில் மக்களுடைய வீடுகள் யாவும் அழிக்கப்பட்டுள்ளன. அங்கு தோட்டங்களோ பயிர்களோ எதுவுமே இல்லை. தான் நினைத்தவாறு புதிய பாதைகளை அரசாங்கம் அமைத்து வருகின்றது. தங்களுடைய தேவைகளுக்காக அந்தப் பாதைகளை அமைக்கின்ற பொழுது தமிழ் மக்கள், முஸ்லிம் மக்களுடைய சொந்தக் காணிகள் அவர்களுடைய குடியிருப்பு நிலங்கள், வயல்கள் இந்த விதமான காணிகளைச் சுவீகரித்து அவர்கள் இதை அமைக்கிறார்கள். மக்களுக்கு எதுவிதமான நட்ட ஈடு வழங்காமலும், அவர்களுடைய ஆலோசனையைப் பெறாமலும் சேருவிலவையும் பொலனறுவையையும் இணைக்கும் தெருவொன்று அமைக்கப்படுகின்றது.

மாவிலாறு ஊடாக வெலிகந்தயையும் பொலனறுவையையும் இணைத்து மற்றுமொரு தெரு அமைக்கப்படுகின்றது. இளைப்பாறிய இராணுவத்தினருக்கு வீடுகள் கட்டித் தர பாரியளவில் காணிகள் துப்பரவாக்கப்பட்டு ஆரம்ப வேலைகள் நடைபெறுகின்ற தருணத்தில் இந்த விடயம் பற்றி நாங்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து அந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கின்றது. ஆனால், எவ்வளவு காலத்திற்கு என்று கூற முடியாது.

அந்தவிதமாக சிங்கள மக்களை அங்கு குடியேற்றுவதற்கும் பலவிதமான முயற்சிகள் நடைபெறுகின்றது. இறால்குழி எனும் இடத்தில் 32 சிங்களக் குடும்பங்கள் குடியேற வந்தன. ஆனால், சிறிது காலத்தின் பின் அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டார்கள். ஏனெனில், அங்கே தமக்குப் பாதுகாப்பு இல்லை என்பது அவர்களுக்குத் தெரியும்.

புதிய வர்த்தக வலயங்கள், தொழில் வலயங்கள் என்று பல ஆரம்பிக்கப்பட்டு அவை மூலமாக அங்கே சிங்களக் குடியேற்றத்தைத் தொடர்வதற்கு முயற்சிகள் நடைபெறுகின்றன. சிங்கள அரசினால் ஆரம்பத்தில் கையாளப்பட்ட நடைமுறைகள் அதன் விளைவுகளை எல்லாம் அறிந்த பிறகும் கூட அவற்றை முழுமையாகக் கைவிடும் நோக்கம் அவர்களுக்கு இல்லை.

கிழக்கு மாகாணத்தில் சிங்களப் பெரும்பான்மை ஏற்படுத்தப்பட வேண்டும். என்பதில் அரசாங்கம் மிகவும் உறுதியாக இருந்து செயற்படுகின்றது. இது தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல. முஸ்லிம் மக்களுக்கும் பாதிப்பு. உதாரணமாக தற்போது அமைச்சர் பேரியல் அஸ்ரப் அவர்கள் ஆழிப்பேரலையால் பாதிகப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு வீடுகள் கட்டித்தர சில முயற்சிகள் எடுத்தபோது அந்த முயற்சிகள் துவேசத்தைக் கக்கும் சில தேசிய இயக்கங்களால் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. அதேவிதமாக முஸ்லிம் மக்களுடைய ஆட்சியில் நீண்டகாலமாக இருந்த பல காணிகள் தற்போது சூழல் சுற்றாடல் அமைச்சின் சில நடவடிக்கைகள் மூலமாக அவை முஸ்லிம் மக்களுடைய உரிமைகளை இல்லாமலாக்கக் கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

ஆதலால் கிழக்கு மாகாணத்தில் தற்போது உருவாகி வரும் நிலைமை தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல, தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் - தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் - ஏற்பட்டு வருகின்ற ஒரு நிலைமை என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தச் சந்தர்ப்பத்தில்; இதை நன்றாக உணர்ந்த முஸ்லிம் மக்கள் தங்களுடைய நிலைப்பாட்டை கிழக்கு மாகாணத்தில் தாங்கள் பாதுகாப்பாக இருந்தால் அது தாங்களும் தமிழ் மக்களும் ஒன்றாகச் சேர்ந்து சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த மக்கள் என்ற அடிப்படையில் ஒருமித்து போராடுவதன் மூலமாகத் தான் அதை அடையலாம் என்பதையும் இன்று அவர்கள் உணர்ந்திருக்கின்றார்கள். அதை இன்னமும் வலுப்படுத்த வேண்டிய ஒரு தேவை இருக்கின்றது. அது வலுப்படுத்தப்பட வேண்டும். அந்தக் கிழக்கு மாகாண மண் தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் உரிய மண். அதனால் இந்த விடயத்தில் நாங்கள் தற்போது கூடிய அக்கறை செலுத்தி வருகின்றோம்.

2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டுத் தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் 2009 ஏப்ரலில் 5 ஆண்டுகளை நிறைவு செய்கின்றது. இந்நிலையில் மீண்டுமொரு பொதுத் தேர்தல் நடைபெறுமானால் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் த.தே.கூ. போட்டியிடக்கூடிய நிலை இருக்கிறதா? அத்தகைய உகந்ததொரு சூழல் ஒன்று உருவாவதற்கான அறிகுறிகள் இருக்கிறதா?

எதிர்காலத்தைப் பற்றி இப்போது பேச நான் விரும்பவில்லை. ஆனால், தமிழ்பேசும் மக்கள் நாடு சுதந்திரம் அடைந்த காலம் முதல் தந்தை செல்வாவினுடைய தலைமையின் கீழ் குறிப்பிட்ட சில கொள்கைகளை முழுமையாக பின்பற்றி, கைப்பற்றி அவற்றைப் பின்தொடர்ந்து வந்திருக்கின்றார்கள். அதை முன்னெடுத்து வந்திருக்கின்றார்கள்.

அதாவது, தமிழ் மக்கள் ஒரு தனியான தேசிய இனம். அவர்கள் சரித்திர ரீதியாக தமிழ்பேசும் முஸ்லிம் மக்களுடன் இணைந்து வடகிழக்கில் வாழ்ந்து வந்திருக்கின்றார்கள். அந்தப் பகுதிகளில் அவர்கள் எப்பொழுதும் பெரும்பான்மையாக இருந்து வந்திருக்கின்றார்கள். ஒரு காலகட்டத்தில் அவர்கள் மிகவும் பெரிய பெரும்பான்மையாக இருந்திருக்கின்றார்கள்.

அந்த அடிப்படையில் அந்த மக்களுக்கு அந்தப் பிரதேசத்தில் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துண்டு. இது தான் எங்களுடைய அரசியல் சித்தாந்தம். இதிலிருந்து தமிழ் மக்கள் இன்னமும் மாறவில்லை என்பது என்னுடைய கருத்து.

இந்த நிலைப்பாட்டில் இருந்து எங்களுடைய மக்களால் மாற முடியாது. மாறவும் மாட்டார்கள். ஆனால், இன்றைக்கு பல்வேறு குழப்பங்களின் காரணமாக அரசாங்கத்தினுடைய பலவிதமான தலையீடுகளின் காரணமாக, பல்வேறு வகைகளில் நடைபெறுகின்ற தலையீடுகளின் காரணமாக சிலவேளை குழப்பங்கள் இருக்கலாம். ஆனால், இந்த அடிப்படையை தொடர்ந்தும் மக்கள் பின்பற்றுவார்கள் என்பதில் எனக்கு எதுவித சந்தேகங்களும் இல்லை. ஏனென்றால், 60 வுருடங்களுக்கும் மேலாக மக்கள் இதனைத் தொடர்ந்து பின்பற்றி வந்திருக்கின்றார்கள்.

ஆகவே அவர்களுடைய அரசியல் சித்தாந்தம் அது தான் அவர்களுக்கு விடிவைத் தரக்கூடிய ஒரு நிலைமை. எங்களுடைய சுயநிர்ணய உரிமை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அதாவது எங்கள் விடயங்கள் சம்பந்தமாக நாங்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வருகின்ற எந்தப் பிரதேசத்திலும் எடுக்கின்ற முடிவுகள் எங்களுடைய மக்களின் பிரதிநிதிகளால், எங்களுடைய மக்களால் எடுக்கப்பட வேண்டும். அது கொழும்பில் எடுக்கப்பட முடியாது. சிங்கள அமைச்சர்களால் எடுக்கப்பட முடியாது. அவர்களுடைய கையாட்கள் மூலமாக எடுக்கப்பட முடியாது.

ஆகையால் இதை உணர்ந்து உண்மையை எல்லோரும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.

ஈழத் தமிழர் விவகாரம் தொடர்பில் அனைத்துலக சமூகத்துடன் தொடர்புகளைப் பேணி வருகின்றவர் நீங்கள். தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வாக அனைத்துலகம் எத்தகைய தீர்வைப் பரிந்துரைக்கின்றது? இது தொடர்பில் முன்னைய நிலைப்பாட்டில் இருந்து ஏதும் மாற்றங்கள் தெரிகின்றதா?

அனைத்துலக சமூகம் எப்பொழுதும் பேச்சுவார்த்தை மூலமாக ஒரு அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும் என்கின்ற கருத்தைத் தான் முன்வைத்தது. முன் வைத்துக் கொண்டு வருகின்றது. இந்தியாவும் அந்த நிலைப்பாட்டைத் தான் பின்பற்றி வந்திருக்கின்றது.

ஆனால், எங்களுடைய சந்திப்புகளின் போது கடந்த சில வருடங்களாக நாங்கள் ஒன்றை மிகவும் தெளிவாகக் கூறி வருகின்றோம். அரசியல் தீர்வு, இலங்கையினுடைய ஒருமைப்பாடு, ஒற்றுமை என்பவை வெறும் முழக்கங்களாக இருக்க முடியாது. அவற்றுக்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும். இலங்கையினுடைய ஒற்றுமை, ஒருமைப்பாடு பேணிப் பாதுகாக்கப்பட வேண்டுமாக இருந்தால் இந்த நாட்டில் வாழுகின்ற சகல மக்களுக்கும் அவர்களுக்குரிய அரசியல் அங்கீகாரம் கிடைக்க வேண்டும். கிடைக்காமல் அதைப்பற்றிப் பேசுவதில் அர்த்தமில்லை. இதுபற்றி பாரதப் பிரதமருக்குக் கூட நாங்கள் தெளிவாகக் கூறியிருக்கின்றோம். பாரதப் பிரதமர் மன்மோகன் சிங்கை நாங்கள் சந்தித்தபோது இந்த விடயங்களை அவரிடம் நான் மிகவும் தெளிவாகக் கூறியிருக்கின்றேன்.

இலங்கை ஒரு நாடாகப் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டுமாக இருந்தால் சரித்திர ரீதியாக தமிழ் மக்கள் வாழ்ந்து வந்த பிரதேசம் இலங்கை - இந்திய அனைத்துலக ஒப்பந்தத்தின் மூலமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நிலைப்பாடு அங்கீகரிக்கப்பட வேண்டும். தொடர்ந்து அது நடைமுறையில் இருக்க வேண்டும். சூழ்ச்சிகளின் மூலமாக வடக்கு - கிழக்கை பிரித்துவிட்டு அதற்குப் பிறகு இலங்கை ஒரு நாடாக இருக்க வேண்டும் எனப் பேசுவதில் அர்த்தம் இல்லை.

வடக்கு - கிழக்கைப் பிரிப்பதாக இருந்தால் எந்த நாளும் இலங்கை ஒரு நாடாக இருக்க முடியாது. வடக்கு - கிழக்கு இலங்கைக்கு வெளியே உள்ள பிரதேசமாக இருக்க வேண்டும். இந்த உண்மைகளை அனைத்துலக சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.

எங்களுக்கு உள்ளக சுயநிர்ணய உரிமையைத் தந்து சுயமரியாதையுடன் அரசியல் அதிகாரத்துடன் வாழக்கூடிய நிலைமை எமக்குக் கிடைக்காவிட்டால் அனைத்துலக சட்டத்தின் பிரகாரம் அது முழுமையான வெளி சுயநிர்ணய உரிமைக்கு உரித்தைத் தருகின்றது.

தொடக்கத்தில் நாங்கள் பிரிவினையைக் கேட்கவில்லை. தனிநாட்டைக் கேட்கவில்லை. நாங்கள் சமஸ்டியின் அடிப்படையில் உள்ளக சுயநிர்ணய உரிமையைத் தான் கேட்டோம். இன்றும் அதனை நாங்கள் எதிர்பார்க்கின்றோம். ஆனால், சிறிலங்கா அரசாங்கம் தர மறுக்கின்றது. தர மறுத்தால்? எங்களுடைய உரிமை மறுக்கப்படக்கூடாது என்பதை அனைத்துலக சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும். இதனை நாம் அவர்களக்குச் சொல்ல ஆரம்பித்து விட்டோம். மிகவும் தெளிவாகச் சொல்லுகின்றோம். அவர்களும் அதைப் புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கின்றார்கள். அதனுடைய நியாயத்தை அவர்கள் தற்போது புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கின்றார்கள்.

ஈழத் தமிழர் விவகாரம் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் மீண்டுமொருமுறை விவாதப் பொருளாக மாறியிருக்கின்றது. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளைத் துறக்கப் போவதாக எச்சரித்திருக்கின்றார்கள். கலைஞர் கருணாநிதியின் மகள் கனிமொழி உட்பட பலர் தமது பதவி விலகல் கடிதங்களைக் கையளித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த மீள் எழுச்சிக்குக் காரணம் என்ன? இது தொடரும் என நினைக்கின்றீர்களா?

இந்த மீள் எழுச்சிக்குக் காரணம் என்னவென்றால், எனது கணிப்பின்படி சமீப காலங்களில் தமிழ் நாட்டு மக்கள் மத்தியில் ஒரு உணர்வு உருவாகியிருக்கின்றது. அது என்னவென்றால் சிறிலங்கா அரசாங்கம் ஒரு போதும் அங்கே வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு நீதி நியாயம் வழங்க மாட்டாது. அதற்கு மாறாக சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களை அழித்து ஒழிப்பதற்கு இன்றைக்கு ஒரு போரை நடத்திக் கொண்டு வருகின்றார்கள். இதுவே உண்மை. புலிகளை சிறிலங்கா அரசாங்கம் குற்றம் கூறி தமிழ் மக்களை விடுவிப்பதற்குத் தாங்கள் செயற்படுகின்றோம் என்று கூறினால் தமிழ் மக்களுக்கு ஒரேயொரு அரசியல் தீர்வை தாராளமாக சிறிலங்கா அரசாங்கம் வழங்க வேண்டும். அந்தவிதமான ஒரு தீர்வை வழங்காமல் இந்த போரில் ஈடுபட்டுக்கொண்டு தமிழ் மக்களை விடுவிப்பதற்காக நாங்கள் செய்கிறோம் எனக் கூறமுடியாது. இதனை இன்றைக்கு தமிழ் நாட்டில் உள்ள மக்கள் நன்கு உணரத் தொடங்கியுள்ளார்கள்.

நானறிந்த வகையில், சமீபத்தில் செய்திகளில் படித்த வகையில் ஆனந்த விகடன் மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற ஊடகங்கள் கூட இந்த விடயங்கள் சம்பந்தமாக மக்களிடம் இருந்து கருத்துக்கணிப்பு எடுத்த போது இந்த நிலைமை தெரிய வந்தது. ஆகையால், இதுவே இந்த மாற்றத்துக்குக் காரணம் என நான் நினைக்கின்றேன். ஆனால், இதை மிகவும் பக்குவமாக முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கும் உண்டு.

இந்த எழுச்சி தொடருமா?

தொடர வேண்டும். தொடருமா இல்லையா என்பது பல்வேறு நிகழ்வுகளில், நகர்வுகளில், பல்வேறு கருமங்களில் தங்கியிருக்கின்றது. ஆனால், எங்களுடைய கருமங்களை நாங்கள் தெளிவாக முன்னெடுத்தால் நிலைமை தொடரும். ஏனென்றால் இது நீண்டகாலமாக மக்கள் மத்தியில் ஏற்பட்ட கருத்துக்கள், சிந்தனைகளின் அடிப்படையில் உருவான ஒரு நிலைப்பாடு. பலவிதமான கசப்பான நிகழ்வுகளின் மத்தியில், பலவிதமான கருத்து வேறுபாடுகளின் மத்தியில், நீண்ட காலமாக மக்கள் அங்கத்தைய நிலைமையை அவதானித்த பிறகு உருவாகிக் கொண்டு வருகின்ற ஒரு நிலைப்பாடு. ஒரு உணர்ச்சியின் அடிப்படையில் உருவான நிலைப்பாடு மாத்திரமல்ல. ஆகவே இது தொடரும். தொடரக்கூடிய வகையில் நாங்களும் செயற்பட வேண்டும் என நான் நினைக்கின்றேன்.

இத்தகைய பின்னணியில் நீங்கள் பாரதப் பிரதமரை மீண்டும் சந்திக்க இருப்பதாகத் தெரிகின்றது. இந்த சந்திப்பில் எது பற்றிக் கதைக்க இருக்கின்றீர்கள்?

பேச வேண்டிய விடயங்கள் சகலவற்றையும் பற்றிப் பேசுவோம். பாரதப் பிரதமரைச் சந்திக்கும் போது அது பற்றிப் பார்ப்போம். அது பற்றி இப்போது சொல்ல முடியாது. அது அநாகரிகமாக இருக்கும். ஆனால், பாரதப் பிரதமரோடு பேச வேண்டிய அத்தனை விடயங்களையும் ஒளிவுமறைவின்றி மிகவும் தெளிவாக மிகவும் உறுதியாகப் பேசுவோம்.

தமிழர்கள் பிரிந்துபோக விரும்புகின்றார்கள். இந்தியாவோ ஐக்கிய இலங்கைக்கு உள்ளேயே தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றது. இந்த நிலையில் இந்தியாவின் அனுசரணையுடன் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படுவது சாத்தியமா?

இந்தியாவை நாங்கள் ஒரு போதும் ஒதுக்கி வைக்க முடியாது. எங்கள் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணுவதில் இந்தியாவுக்கு முக்கியமான பங்கு இருக்கின்றது. அந்தப் பங்களிப்பை இந்தியா செய்ய வேண்டும். இந்தியா எமது பக்கத்தில் நிற்காது விட்டால் அனைத்துலக சமூகம் எங்கள் பக்கத்தில் நிற்காது. அமெரிக்காவோ, ஐரோப்பிய ஒன்றியமோ அல்லது ஐக்கிய இராச்சியமோ அல்லது வேறெந்த நாடோ எங்கள் பக்கத்தில் நிற்கும் என நாங்கள் எதிர்பார்க்க முடியாது.

இந்தியா எங்களுடன் இருக்குமாக இருந்தால் அனைவரும் எங்களுடன் நிற்பார்கள். நாங்கள் தனியே நிற்க முடியாது. இதனை எல்லோரும் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். நாங்கள் ஒரு போதும் தனியே நிற்க முடியாது. எங்களுக்கு உதவி தேவை. எங்களுக்கு உதவக்கூடிய ஒரேயொரு நாடு இந்தியா. மற்ற விடயங்கள் காலப்போக்கில் முறையாகக் கையாளப்பட வேண்டிய விடயங்கள். அதைப்பற்றி நான் தற்போது பேச விரும்பவில்லை.

தமிழரின் விடுதலைக்காக களத்திலே புலிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அனைத்துலக இராஜதந்திர மட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போராடிக் கொண்டிருக்கின்றது. புலம்பெயர் தமிழர்களும் தங்களால் முடிந்தளவு பங்களிப்பை நல்கி வருகின்றனர். இதில் புலம்பெயர் தமிழர்கள் இன்றும் காத்திரமாகச் செய்யக்கூடிய பணி ஏதாவது உள்ளதா?

புலம்பெயர்ந்த மக்கள் சிறப்பாக தாங்கள் வாழுகின்ற நாடுகளில் இன்று ஓரளவிற்கு நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒரு சூழலில் அவர்கள் தமிழர்களுடைய தாயகம், தமிழர்களுடைய தேசியப் பிரச்சினை, தமிழர்களுடைய சுயநிர்ணய உரிமை போன்ற கருமங்களைப் பற்றி அவர்கள் மிகவும் அவதானிப்புடன் இருக்க வேண்டும். தங்கள் தங்கள் நாடுகளிலே தங்களுடைய அரசாங்கத்திற்கு எங்களுடைய மக்களுடைய கோரிக்கைகளின் நியாயத்தை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். அதற்காக ஆதரவு திரட்ட வேண்டும்.

நாங்கள் நியாயத்தைக் கேட்கின்றோம். இன்றைக்கு இலங்கையில் வன்முறைகள் நடைபெறுகின்றதாய் இருந்தால் தமிழ் மக்களுக்கு உரிய நேரத்தில், உரிய காலத்தில், உரிய முறையில் நியாயம் வழங்கப்படாத காரணத்தின் நிமித்தம் தான் இன்றைக்கு அங்கு வன்முறை நிலவுகின்றது. இன்றைக்குக் கூட அந்த நியாயத்தைத் தருவதற்கு சிறிலங்கா அரசு தயாராக இல்லை. அந்தக் கருத்தை புலம்பெயர் தமிழர்கள் முன்வைக்க வேண்டும். சகல வழிகளிலும் தமிழர்களுடைய பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டிய வகையில் தமிழர்களுடைய நீண்டகாலப் போராட்டம் வெற்றி பெறக்கூடிய வகையில் உதவிகளை புலம்பெயர் மக்கள் செய்து வரவேண்டும். அது உங்களுடைய கடமை.

புலம்பெயர் மக்களில் சாதாரண மக்கள் புலம்பெயர் நாடுகளில் நடைபெற்று வரும் போராட்டங்கள், கவனயீர்ப்பு நிகழ்வுகளில் பங்கு பற்றி வருகின்றார்கள். ஆனால், புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ்ப் புத்திஜீவிகளில் அநேகர் - குறிப்பாக கனடா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் வாழ்வோர் இன்னமும் ஒதுங்கியே இருக்கின்றார்கள். அவர்களுடைய பங்களிப்பு குறைவாகவே உள்ளது. அவர்களை சிறப்பாக எமது செயற்பாடுகளில் பங்கெடுக்கச் செய்ய என்ன செய்யலாம்?

அதைப்பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டும். நீங்கள் கூறுகின்ற கருத்தை என்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. அனைத்துப் புத்திஜீவிகளும் அந்த நிலைமையில் இல்லை. தொடக்கத்தில் பலரும் மிகவும் அக்கறையாக இருந்தார்கள். பெரும் ஆர்வமாக இருந்தார்கள். அது விடயம் சம்பந்தமாக ஆய்வு செய்து விசாரித்து நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்பட வேண்டியிருந்தால் அதனை நாங்கள் செய்ய வேண்டும் என்றார் சம்பந்தன்.

யாழ். சென்று திரும்பிய போது கைது செய்யாத ஜெயலலிதா தற்போது என்னை கைது செய்ய வலியுறுத்துவது ஏன்?: திருமாவளவன் கேள்வி


[திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2008, 07:26 மு.ப ஈழம்] [க.நித்தியா]
யாழ்ப்பாணம் சென்று திரும்பிய போது கைது செய்யாத அப்போதைய முதல்வரான ஜெயலலிதா தற்போது மட்டும் என்னை கைது செய்ய வலியுறுத்துவது ஏன்? என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ஜுனியர் விகடன் வாரமிருமுறை இதழுக்கு திருமாவளவன் தெரிவித்துள்ளதாவது:

என்னை ஏன் கைது செய்யவில்லை என்று கேட்கும் ஜெயலலிதாவிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். "நீங்கள் முதல்வராக அமர்ந்திருந்த போதுதான் நான் யாழ்ப்பாணத்துக்குப் போய் ஒரு மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு, எட்டு நாட்கள் அங்கேயே தங்கியிருந்து விட்டு வந்தேன். திரும்பவும் பொடா சட்டம் நடைமுறையில் இருந்தபோதும், ஒரு மாநாட்டில் கலந்துகொள்ள யாழ்ப்பாணம் சென்று வந்தேன். வெளிப்படையாக அமைந்த அந்தப் பயணத்துக்காக அப்போது ஏன் ஜெயலலிதா என்னைக் கைது செய்யவில்லை?"

"ஈழத் தமிழர்களின் ஒப்பாரியிலும் அரசியல் நடத்தும் பெண் தலைவருக்குத் தாயுள்ளம் துளியும் இல்லை! எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வை மக்கள் விரோத கட்சியாக நடத்தி, அதற்கு தலைமை தாங்கிக் கொண்டிருக்கிறார். ஈழத் தமிழர்களுக்காக எந்நேரமும் போராடும் அண்ணன் வைகோ, இப்போதாவது அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறி ஜெயலலிதாவைத் தனிமைப்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால், அது ஈழத் தமிழர்களுக்கு அவர் செய்யும் மிகப் பெரிய உதவி!" என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய மத்திய அரசுக்கு சிக்கலை உருவாக்க மாட்டோம்: கருணாநிதி



ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய மத்திய அரசுக்கு சிக்கலை உருவாக்க மாட்டோம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை நேற்று ஞாயிற்றுக்கிழமை 90 நிமிடம் வரை சந்தித்து பேச்சு நடத்திவிட்டு கருணாநிதி ஊடகவியலாளர்களுக்கு அளித்த பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கேள்வி: மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜியுடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்தியாக இருக்கிறதா?

பதில்: இதிலே குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களெல்லாம் முடிவடைந்தால்தான் முழு திருப்தி அடைய முடியும் என்று நம்புகிறேன்.

கேள்வி: உடனடி தீர்வு, போர் நிறுத்தம்தான் என்றால் நோர்வே தூதுக்குழு தலையிட்டதுபோல் இலங்கையில் உடனடி போர் நிறுத்தத்திற்கு முயற்சிக்கப்படுமா?

பதில்: இப்பொழுது நோர்வே மாதிரி எல்லாம் ஆகாது. அப்படி பேச்சு எதுவும் இல்லை.

கேள்வி: போர் நிறுத்தம் உண்டா?

பதில்: கிட்டத்தட்ட அவர் சொல்கிற மாதிரி 40 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறுகிற ஒரு போராட்டம் இது. இது நான்கு நாட்களில் முடியாது. நாம் போர் நிறுத்தம் வேண்டும் என்று சொன்னது, பொதுமக்களை இன்னல்களிலிருந்து காப்பாற்றுவதற்காக தான். இப்பொழுது சிறிலங்கா அரசு, நாங்கள் பொதுமக்களை நிச்சயமாக தாக்கமாட்டோம் என்ற உறுதிமொழியை அளித்திருக்கிறார்கள். போர் நிறுத்தத்திற்கு உடனே அமர்ந்து பேச வேண்டிய ஒரு சூழ்நிலை இருக்கிறது. அதை இந்தியாவே முன்னின்று நடத்துகிறதா? அல்லது வேறு நாடுகளுடைய முயற்சியால் நடைபெறுகிறதா? அல்லது வேறு ஏதாவது ஒரு அமைப்பின் மூலம் நடைபெறுவதா? என்பது பற்றி இன்னும் தீர்க்கமான முடிவுக்கு வரவில்லை. இருந்தாலும் போர் நிறுத்தத்திற்கான வழிமுறைகள் ஆராயப்பட்டு, அவைகள் மேற்கொள்ளப்படுவதற்கு தடை எதுவும் இப்பொழுது இல்லை.

கேள்வி: நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகல் பற்றி...

பதில்: அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார். இப்பொழுது அந்த முடிவை நிறைவேற்றினால், இந்தியாவிலே அரசியல் நிலைமை பல சிக்கல்களுக்கு ஆளாகும். ஆகவே அந்த முடிவை ஒத்திவையுங்கள் என்று பிரணாப் முகர்ஜி கேட்டுக்கொண்டிருக்கிறார்.

கேள்வி: மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி பேசும்போது, நான் முதலமைச்சரிடம் பேசினேன். அவர் மத்திய அரசுக்கு எந்த நெருக்கடியும் தரமாட்டேன் என்று உறுதிமொழி அளித்திருப்பதாக சொல்லியிருக்கிறாரே?

பதில்: மத்திய அரசுக்கு சிக்கல் உருவாக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டார். நிச்சயமாக உருவாக்க மாட்டேன் என்று சொன்னேன்.

கேள்வி: விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று பிரபாகரன் ஒரு அறிக்கை விட்டிருக்கிறாரே, அது பற்றி தங்கள் கருத்து என்ன?

பதில்: அதற்கு இந்திய அரசுதான் கருத்து தெரிவிக்க வேண்டும். நான் எப்படி கருத்து சொல்ல முடியும்!

கேள்வி: சிறிலங்காவின் தூதுக்குழு சார்பாக பசில் ராஜபக்ச கூறிய கருத்துகள் அனைத்தையும் மத்திய அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறதா? எதிர்த்தரப்பான இலங்கை தமிழ் அமைப்புகளும், இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதனை முழுமையாக மத்திய அரசு நம்பக்கூடாது. எங்கள் தரப்பின் கருத்தையும் கேட்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்களே?

பதில்: இன்றைக்குத்தான் வந்து சில கருத்துகளை சொல்லியிருக்கிறார். அதை நம்முடைய மத்திய அரசு சிந்தித்து முடிவெடுக்கும் என்று நான் நம்புகிறேன்.

கேள்வி: நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகலுக்கு 28 ஆம் நாள் கெடு கொடுத்திருந்தீர்களே, தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் அது தேவையில்லை என்று கருதுகிறீர்களா?

பதில்: இன்றைக்கு நடைபெற்ற நிகழ்ச்சியை நம்முடைய மத்திய வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜி விளக்கியிருக்கிறார். அதிலிருந்து புரிந்து கொள்ளுங்கள். அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அப்போது எடுத்த முடிவில் அந்த கட்சிகளுக்கிடையே மாறுபட்ட கருத்துகள் இருப்பதால் அவர்களையும் கலந்துகொண்டுதான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்றார் கருணாநிதி.

Friday, October 24, 2008

பாதுகாப்பு செயலாளர் இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகவில்லை,அவர் சார்பில் சட்டதரணி ஆஜர்

பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷவை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டது. எனினும் பாதுகாபு செயலாளர் இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகவில்லை அவரது சார்பில் சட்டதரணி இந்துனில் பண்டார மற்றும் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் டயிள்யூ எ. கனியபெரும ஆகியோர் ஆஜரானார்கள்.

ஐக்கிய தேசிய கட்சியின் நிவாரண மற்றும் மனித உரிமைகள் தொடர்பான உதவி செயலாளரும் எம்.பியுமான டாக்டர் ஜெயலத் ஜெயவர்தன மனித உரிமைகள் ஆணைக்குழுவில் செய்த முறைப்பாட்டுக்கமையவே பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷவிற்கு இந்த நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.டாக்டர் ஜெயலத் ஜயவர்தன இன்றைய தினம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன் ஆஜரானார்.இதனையடுத்து அவர் மேலும் தெரிவிக்கையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அனுப்பட்ட நோட்டீஸ் தனக்கு கிடைத்துள்ளது எனினும் பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷவிற்கு கிடைக்கவில்லை என தெரிவித்திருப்பது தமக்கு அதிர்ச்சி அளித்துள்ளதாக டாக்டர் ஜெயலத் ஜெயவர்தன தெரிவித்தார்.

அத்துடன் இது மனித உரிமையுடன் தொடர்புடையது என்பதால் இம் முறைப்பாடு தொடர்பில் குழு ஆணைக்ழுவும் ஈடுப்பட வேண்டுமென ஓய்வு பெற்ற சட்டதரணி எதிரிசிங்கவிடம் தாம் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கொட்டும் மழை‌யி‌ல் மனித‌ச்சங்கிலி: கருணா‌நி‌தி துவ‌‌க்‌கி வை‌த்தா‌ர்!








இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தியும், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும் அனைத்து‌க்கட்சிகள் சார்பில் மாபெரும் மனித சங்கிலி அணிவகுப்பு இன்று ‌பி‌ற்பக‌ல் கொ‌ட்டு‌ம் மழை‌யி‌ல் நடைபெ‌ற்றது. செ‌ன்னை மா‌வ‌ட்ட ஆ‌‌ட்‌சி‌ய‌ர் அலுவலக‌ம் அரு‌கி‌ல் முதலமைச்சர் கருணாநிதி அ‌ணிவகு‌ப்பை தொடங்கி வை‌த்தா‌ர்.

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் கொலை செய்யப்படுவதை கண்டித்தும், இலங்கையில் அமைதி ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வற்புறுத்தியும், அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வற்புறுத்தியும் சென்னையில் அ‌க்டோப‌ர் 21ஆ‌‌ம் தே‌தி மனிதச் சங்கிலி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட இந்த ம‌னித‌ச்ச‌ங்‌கி‌லி அணிவகுப்பு இன்று பிற்பகல் 3 மணி‌க்கு தொட‌ங்‌கியது. இ‌ந்த ம‌னித‌ச்ச‌ங்‌கி‌லி அ‌ணிவகு‌ப்பு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

மனித சங்கிலி அணிவகுப்பை தொட‌ங்‌கி வை‌த்த முதலமைச்சர் கருணாநிதி, திறந்த `ஜீப்' மூலம் மனித சங்கிலி நடைபெறும் இடங்களை சென்று பார்வையி‌ட்டா‌ர்.

மாவட்ட ஆ‌ட்‌‌சிய‌ர் அலுவலகம் முதல் அண்ணா சிலை வரை, வடசென்னையை சேர்ந்தவர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள், வழ‌க்க‌றிஞ‌ர்களுட‌ன் அமைச்சர் ஆற்காடு வீராசாமி கலந்துகொ‌ண்டு‌ள்ளா‌ர்.

அண்ணாசிலை முதல் கிண்டி வரை, மாணவர்கள் மற்றும் பா.ம.க.வினர் அ‌ணிவகு‌ப்‌பி‌ல் ப‌ங்கே‌ற்று‌ள்ளன‌ர். அவர்களுடன் அமைச்சர்கள் துரைமுருகன், க.பொன்முடி ஆகியோர் கலந்துகொ‌ண்டு‌ள்ளன‌ர்.

தேனாம்பேட்டையில் இருந்து கிண்டி மேம்பாலம் வரை ஜனநாயக முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜெகத்ரட்சகன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் கலந்துகொ‌ண்டு‌ள்ளன‌ர்.

கிண்டி முதல் தாம்பரம் வரை, திரைப்பட துறையினர் மற்றும் தென்சென்னையை சேர்ந்தவர்களுடன் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ப‌ங்கே‌ற்று‌ள்ளா‌ர்.

தாம்பரம் முதல் சிவானந்த குருகுலம் வரை, காஞ்‌சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தினருடன் ஆலந்தூர் பாரதி உ‌ள்பட ப‌ல்வேறு மு‌க்‌கிய ‌பிரமுக‌ர்க‌ள் கல‌ந்து கொ‌ண்டு‌ள்ளன‌ர்.

சிவானந்த குருகுலம் முதல் செங்கல்பட்டு வரை வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுடன் அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், எ.வ.வேலு ஆகியோரு‌ம், செங்கல்பட்டு முதல் பிறமாவட்டங்களை சேர்ந்தவர்களுடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி ஆகியோரு‌ம் ப‌ங்கே‌ற்று‌‌ள்ளன‌ர்.

இந்த மனித‌ச்சங்கிலி அணிவகுப்‌பி‌ல் பல்வேறு கட்சிகளும், அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் உள்பட பல்வேறு சங்கங்களும் கலந்துகொ‌ண்டு‌ள்ளன‌ர்

கொழும்பு செல்கிறார் யசூசி அகாசி?



சிறிலங்காவிற்கான ஜப்பான் நாட்டின் சமாதானத் தூதுவர் யசூசி அகாசி மிக விரைவில் கொழும்புக்கு வருகை தரவுள்ளதாக இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமகால அரசியல் மற்றும் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக சிறிலங்கா அரசின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்காக கொழும்புக்கு செல்லவுள்ள தூதுவர் யசூசி அகாசி, வன்னிப்பெரு நிலப்பரப்பில் இடம்பெயர்ந்த மக்களின் நிலைமைகள் குறித்து அறிந்து கொள்வார் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கபபடுகின்றது.

ஜப்பான் தூதரகத்தின் வழமையான நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே தூதுவர் யசூசி அகாசியின் கொழும்புக்கான பயணம் இடம்பெறுவதாகவும் இராஜதந்திர தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

அதேவேளை, தூதுவர் யசூசி அகாசியின் கொழும்பு பயணம் தொடர்பாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு எதுவும் தெரிவிக்கவில்லை. அத்துடன் கொழும்பில் உள்ள ஜப்பான் தூதரகமும் அதிகாரபூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இனத்துரோகிகளின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்காதீர்கள்: விடுதலைப் புலிகள் வேண்டுகோள்



மகிந்தவின் பேரினவாத அரசு போடும் நாடகங்களை எமது மக்களை வைத்து அரங்கேற்றி உலகிற்கு தமிழரின் உரிமைப் போராட்டத்தை அர்த்தமற்றதாக்கும் வகையில் இனத்துரோகிகள் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறை இன்று வெள்ளிக்கிழமை "மட்டக்களப்பு வாழ் தமிழ் பேசும் உறவுகளுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!" எனும் தலைப்பில் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ் மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் தர்மப் போர் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கும் இந்த வேளையில் இந்தியாவில் வாழும் எமது தொப்புள்கொடி உறவுகளான எமது மக்கள் ஓரணியாக அணிதிரண்டு இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு ஓர் விடிவு கிடைக்க வேண்டி இந்திய அரசுக்கு முன்னால் பல போராட்டங்களை நடாத்தி வரும் இந்த சந்தர்ப்பத்தில் உலகின் பல பாகங்களிலும் வாழும் எமது உறவுகளும் தாயக மண்ணின் விடிவுக்காக தொடர்ந்தும் குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்த வேளையில், எமது மண்ணில் அதற்கு எதிர்மாறான கருத்துக்களையும் செயற்பாடுகளையும் சிங்களப் பேரினவாத அரசின் கைப்பொம்மைகளாக செயற்படும் இனத்துரோகிகள் மேற்கொண்டு வருகின்றார்கள். அதன் ஒரு கட்டமாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (26.10.08) மட்டக்களப்பு பொது விளையாட்டு மைதானத்தில் ஆர்ப்பாட்டப் பேரணி நடாத்த திட்டமிட்டிருக்கின்றனர். இந்த செய்தியினை நீங்கள் நன்கறிவீர்கள்.

மகிந்தவின் பேரினவாத அரசு போடும் நாடகங்களை எமது மக்களை வைத்து அரங்கேற்றி உலகிற்கு தமிழரின் உரிமைப் போராட்டத்தை அர்த்தமற்றதாக்க இந்த இனத்துரோகிகள் முயற்சி செய்கின்றனர்.

ஆகவே, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பங்களிப்புச் செய்து வரலாற்றுத் தவறினை இழைக்க வேண்டாம் என உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவர் ஸ்டோரி -குமுதம் ரிப்போட்டர்

23.10.08

லங்கை வன்னிப்பகுதியில் இதுநாள் வரை என்ன நடக்கிறதென்றே சரிவரத் தெரியாத நிலையில், இருட்டைக் கிழித்துக் கொண்டு வரும் மின்னல் கீற்றாக வெளியே வந்திருக்கிறது ஒரு சி.டி.

வன்னிப் போர்க்களத்தில் சிக்கி தமிழ்மக்கள் அகதிகளாகப் படும்பாட்டை விளக்கும் அந்த சி.டி., கடல் கடந்து தமிழகக் கரைக்கு வந்து சேர்ந்திருக்கிறது. அந்த சி.டி. `சீறும் தலைவர்' ஒருவரிடம் சிக்க, அவர் கடந்த 13-ம்தேதியன்று முதல்வர் கலைஞரை நேரில் சந்தித்து, அந்த சி.டி.யைக் கொடுத்திருக்கிறார். அடுத்தநாள் (14-ம்தேதிதான்) இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக அரசு நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டம் என்ற நிலையில் அந்த சி.டி.யை வீட்டில் போட்டுப் பார்த்திருக்கிறார் கலைஞர். கூடவே அவரது குடும்பத்தாரும்.

முப்பத்திரண்டு நிமிடங்கள் ஓடக் கூடிய அக் குறுந்தகடு முடிவதற்கு முன்பாக கலைஞரின் முகத்தில் பலவித மாற்றங்கள். இடையிடையே கண்ணாடியைக் கழற்றி கண்களைத் துடைத்தபடி இருந்திருக்கிறார் அவர். சி.டி. ஓடி முடிந்த பின்னர், கண்கள் குளமான நிலையில் நீண்டநேரம் எதுவும் பேசாமல் இருந்திருக்கிறார். அவரை தொந்தரவு செய்யும் துணிவு யாருக்கும் வரவில்லை.

``இனி ஆட்சியென்ன வேண்டிக் கிடக்கு?'' என்று புலம்பியிருக்கிறார் கலைஞர். அதன் வெளிப்பாடுதான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், `இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டுவர மத்திய அரசுக்கு விதிக்கப்பட்ட இரண்டுவார கெடுவும், தவறினால் தமிழக எம்.பி.க்கள் அத்தனை பேரும் கூண்டோடு ராஜினாமா செய்யும் முடிவும்.'

கலைஞரை ஆட்டி அசைத்துவிட்ட அந்தக் குறுந்தகடு, தமிழகத்தின் அனைத்து அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பட முக்கியஸ்தர்களுக்குப் போய்ச் சேர இருக்கிறதாம். கலைஞரை மனம் குலைய வைத்த அந்தக் குறுந்தகட்டில் அப்படி என்னதான் இருந்தது என்று நாம் ஆராய முனைந்தோம். நீண்ட முயற்சிக்குப் பின் கிடைத்த அந்த சி.டி.யை லேப் டாப்பில் சுழல விட்டோம்....

வன்னி நில வான்பரப்பு. இலங்கை விமானப்படையின் `கிபீர்' போர்விமானம் ஒன்று செங்குத்தாய் மேலே எழுகிறது. அதிலிருந்து மூன்று குண்டுகள் மண்ணை முத்தமிட விரைகின்றன. அதைப் பார்த்து பதறியபடி ஓடும் தமிழ் மக்கள் பதுங்கு குழிகளில் ஓடிப்போய் விழுகிறார்கள்.

இப்போது குண்டுகள் வெடித்து வானில் செம்மண் புழுதிப்படலம். அங்கங்கே அலறலும் கதறலுமான சத்தங்கள். அந்தப் பகுதி முழுக்க பற்றி எரிந்தபடி இருக்க, வீடுகள் பல தரைமட்டமாகிக் கிடக்கின்றன. பதுங்கு குழி ஒன்றில் வெள்ளை முயல்கள் போல பதுங்கிக்கிடந்த பள்ளிச்சிறுமிகள் சிலர் வெளியே வருகிறார்கள். ஒரு சிறுமி பித்துப் பிடித்தவள் போல வெளியே வர மறுத்துக் கதறுகிறாள். அவளை ஆசுவாசப்படுத்தி அழைத்து வருகிறார்கள் தோழிகள்.

இதனிடையே குண்டுவீச்சு நடந்த இடம் முழுக்க சடலங்கள். பிணக்குவியல். ரத்தச் சகதியில் சிதைந்து கிடக்கிறார்கள் அப்பாவிப் பொதுமக்கள். உயிர் பிழைத்தவர்கள் ஓடிவந்து இறந்த உடல்களை ஏதோ விறகுக்கட்டைகளை ஏற்றுவதைப் போல ஒரு மினி லாரியில் ஏற்றுகிறார்கள். நடுத்தர வயதுக்காரர் ஒருவர் தேகம் முழுக்க ரத்தக்குளியலாய்‌க் கிடக்க, `தண்ணீர், தண்ணீர்' என்று கதறுகிறார். பார்க்கும் நம் மனம் உள்ளுக்குள் `ஓ'வென கதறுகிறது. வார்த்தைகள் எழ மறுக்கின்றன. கண்கள் கண்ணீரில் மூழ்குகின்றன.

அடுத்ததாக ஒரு மருத்துவமனைக் காட்சி. ஸ்ட்ரெச்சர்களில் ஒவ்வொன்றாக சடலங்களைத் தூக்கிச் செல்கிறார்கள். மருத்துவ வளாகம் முழுக்க மக்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு `ஐயோ' என்று கதறுகிறார்கள்.

ஒரே படுக்கையில் மூன்று குழந்தைகள் ரத்தம் தோய்ந்து கிடக்கிறார்கள். ஒரு குழந்தையின் ரத்தம் தோய்ந்த சட்டையைக் கழற்ற முடியாமல் கிழித்து எடுக்கிறார்கள். `இந்த குண்டடிக்காகவா பிறவி எடுத்தோம்?' என்பது மாதிரி பிரமை பிடித்த மாதிரி இருக்கின்றன அந்தக் குழந்தைகள். ``இங்கட மருந்து மாத்திரை கூட இல்லையே. டாக்டர்கள் வசதியும் இல்லையே'' என்று அருகில் கதறியபடி இருக்கிறார் ஒரு தாய்.

மற்றொரு காட்சி. மரணத்தை எதிர்நோக்கியபடி படுக்கையில் படுத்திருக்கும் ஒரு சிறுவன் சிரித்தபடி கையை அசைக்கிறான். `என்னடா உங்கள் போர் தர்மம்?' என்று கேட்பது போல இருக்கிறது அவனது பார்வை.

அதன்பின் வேறொரு காட்சி. தொடரும் சிங்கள குண்டுவீச்சுகளால் டிரக் வண்டிகளில் கூட்டம் கூட்டமாக கிளிநொச்சியை நோக்கி நகரும் தமிழ் மக்கள், வாகனத்தில் மூட்டை முடிச்சுகளுடன் அவர்களும் `ஒரு பொருளாக` பயணிக்கிறார்கள். அவர்களது வளர்ப்பு நாய்கள் ஒரு வண்டியில் வருகின்றன. அதற்குக் கூட வசதியில்லாத மற்ற நாய்கள் எஜமான விசுவாசத்தில் வாகனங்களைப் பின்தொடர்ந்து ஓடிவருகின்றன.

வழியில் ஒருவரது டிரக் வண்டி (டயர்கள் பஞ்சர் போலும்) இரண்டு சக்கரங்களும் கழற்றப்பட்டு அப்படியே ரோட்டில் நிற்கிறது. அதில் வந்தவர்கள் பயணக் களைப்பால் மரநிழலில் படுத்துறங்க, அந்த சாலையில் அகதிகளின் வாகன வரிசை அணிஅணியாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

அடுத்த காட்சி. காடு, கழனி, சாலையோரங்களில் அகதி மக்கள் தொண்டுநிறுவனங்கள் தந்த தென்னை ஓலைக்கீற்றுகளால் குருவிக்கூடுகளைப் போல சிறுசிறு வீடுகளைக் கட்டும் முனைப்பில் இருக்கிறார்கள். அதற்கும் கூட வழியில்லாதவர்கள் துணிகளால் கூடாரம் அமைக்கிறார்கள். இடிந்து சிதறிக் கிடக்கும் வீடுகளிலிருந்து அட்டை, தகடுகளை எடுத்து வந்தும் `கூடு' கட்டுகிறார்கள். நேற்று வரை மாளிகை, மாடி வீடுகளில் தூங்கிய குழந்தைகள் இன்று மரங்களில் கட்டிய தூளிகளில் உறங்குகிறார்கள்.

இன்னொரு காட்சி. பன்னாட்டுத் தொண்டு நிறுவன அதிகாரி ஒருவரைச் சூழ்ந்துகொண்டு கதறுகிறார்கள் தமிழ் அகதிகள். அவர்களை வெளியேறச் சொல்லிவிட்டதல்லவா சிங்கள அரசு? இனி அடுத்தவேளை உணவுக்கு என்ன செய்வோம்? என்ற கவலை, பதற்றம் தமிழ் அகதிகளுக்கு.

``கவலைப்படாதீர்கள். நாங்கள் மீண்டும் வருவோம். உதவிகள் செய்வோம்'' என்கிறார் அந்த வெள்ளை அதிகாரி. அடுத்த காட்சி. உணவுப் பொருள் ஏற்றிவந்த லாரிகள் வரிசையாக நிற்கின்றன. தடுப்பணையைத் தாண்டி வரும் அதிகாரியைப் பார்த்து அகதிகள் ஓவென அலறியபடி கையெடுத்துக் கும்பிடுகிறார்கள். பிறிதொரு காட்சியில் யூனிசெஃப் தொண்டு நிறுவன அலுவலக வாசலில் யாராவது வந்து உதவ மாட்டார்களா? என்று காத்துக் கிடக்கிறார்கள் அகதிகள். ஒருவேளை உணவுக்காவது வழி பிறக்காதா என்ற கவலை அவர்களுக்கு. அந்தக் காத்திருப்பில் காலம்தான் கரைகிறது. கடைசி வரை யாரும் வந்தபாடில்லை.

இந்தக் குறுந்தகட்டில் இடையிடையே அகதிகள் பேசுகிறார்கள். ``ராணுவம் குண்டுவீச்சு நடத்துற தெல்லாம் எங்கட மேல்தான். ஏற்கெனவே யாழில் இருந்து வன்னிக்கு அகதியா வந்து நின்ன நாங்கள் இப்போ கிளிநொச்சிக்கு வெளிக்கிட்டுப் போறோம். இலங்கை அரசை நம்பி ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குப் போக முடியாது. போனால் சித்திரவதைப் படுவதோடு அங்கே போய் அடிமையாய்த்தான் நிற்கணும். அங்கே ஒட்டுக்குழு (கருணாபிரிவு) போராளிகள் எங்கட பிள்ளைகளை துப்பாக்கி முனையில் கடத்திப் போய்விடுவினம்'' என்கிறார்கள் அந்த மக்கள்.

வன்னிப்பகுதிக்குள் பள்ளிக்கூட வேன் ஒன்று சின்னாபின்னமாகிக் கிடக்கிறது. உபயம் சிங்கள விமானக் குண்டுவீச்சுதான். அந்த வேனுக்குள் உருக்குலைந்து கிடக்கும் பள்ளிச்சிறார்களை சிலர் அள்ளியெடுத்தபடி ஓடிவருகிறார்கள். இறந்து விட்ட சிறுமிகளைக் கீழே கிடத்திவிட்டு குற்றுயிரும், குலையுயிருமாகக் கிடப்பவர்களைத் தூக்கிக்கொண்டு ஓடுகிறார்கள். யாருக்கும் கதறி அழக்கூட நேரமில்லை. இந்த அவலங்களைப் பார்க்கும் நம் கண்கள் குளமாகிப் போகின்றன. இதயத்தின் ஒரு மூலையில் `ஓ'வென்ற அழுகுரல் எதிரொலித்தபடியே இருக்கிறது.

காட்சிகள் இருளாகி மறைகின்றன. `உலகத் தமிழினமே, எங்களுக்காகவும் பேசுங்களேன்' என்ற டைட்டில் விழுந்து நம்மை உலுக்கிப் போடுகிறது.

``எம் தாய்த் தமிழ் சொந்தங்களே. உங்கள் கைக் கெட்டும் தூரத்தில் அகதிகளாக நாங்கள். கைநீட்டும் தூரத்தில்தானே நிற்கிறோம். வாரி அணைத்துக் கொண்டால் போதுமே. ஓர் ஆதரவுக்குரல் எழுப்பினால் போதுமே. `இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஓர் இன்னல் என்றால் தாய்த் தமிழகத்து உறவுகள் நான்குகோடி மக்களும் ஓடிவந்து நிற்போம்' என்று பேரறிஞர் அண்ணா சொன்னாரே'' என்ற குரல் பதிவுகள் நம் நெற்றிப் பொட்டில் சம்மட்டியாக விழுகின்றன.

கடைசியாக முடியும்போது, `எம் தமிழினமே! தான் ஆடாவிட்டாலும், தம் சதை ஆட...' என்ற டைட்டிலோடு நிலைகுத்தி நின்று முடிகிறது. அலை அலையாய் அதிர்ச்சிகள் நம் நெஞ்சுக்குள் மோதிய படி இருக்கிறது நீண்ட நேரமாய்..

தமிழக முதல்வர் கலைஞர், இந்த வயதிலும் இப்படியொரு காட்சியைப் பார்ப்பதற்கு என்ன மன உறுதியைப் பெற்றிருந்தாரோ?
ஸீ

ஸீ பா. ஏகலைவன்

விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவராக இருப்பவர் கேனல் பானு. புலிகளுக்காகப் பல களங்களைக் கண்டு, வெற்றிகளைக் குவித்தவர்.

இலங்கை ராணுவம், புலிகளின் அரசியல் தலைநகரான கிளிநொச்சி-யைப் பிடிக்க இப்போது இடையூறாக நின்று கொண்டிருப்பவர் தளபதி பானு. ஈழப்போர் முனையில் இருந்த அவரை மிகுந்த சிரமத்திற்குப் பின் நாம் பேட்டி கண்டோம். தமிழக இதழ் ஒன்றுக்கு அவர் அளிக்கும் முதல் பேட்டி இதுவே.

இலங்கைப் போரில் புலிகள் பின்-வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மையா?

``நாங்கள் கூறினால் நம்பவா போகிறீர்கள்? பன்னாட்டு ஊடகவிய-லாளர்கள் எல்லாம் இங்கே வந்து பார்க்கட்டுமே. பார்த்தால் உண்மை தெரியும். இன்று வரை இலங்கை ராணுவம் எங்கள்மேல் போர் தொடுக்கவில்லை. அப்பாவி தமிழ்மக்கள் மீதுதான் தாக்குதல் நடாத்துகிறார்கள். சில இடங்களில் நாங்கள் தடுப்பு நடவடிக்கையில் இறங்குகிறோம். அவர்கள் பின்வாங்கி ஓடுகிறார்கள். இங்கே பாரிய (பெரிய) யுத்தம் நடப்பதாகக் கூறும் அவர்கள் வரைபடத்தை வைத்து அதை உறுதி செய்யட்டுமே.!''

தமிழ் மக்களை தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருமாறு இலங்கை அரசு அழைக்கிறதே? அதை தமிழ் மக்கள் ஏற்கிறார்களா?

``அப்படிப் போகத் துணியாமல்தான் அவர்கள் இங்கே அகதிகளாக இருக்கிறார்கள். ஏற்கெனவே மட்டக்களப்பு, அம்பாறை, திரிகோணமலை பகுதிகளில் ராணுவத்தை நம்பிச் சென்றவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியாதவர்களா நம் மக்கள்? அங்கே ராணுவச் சித்திரவதை தொடர்கிறது. ஒட்டுப்படைகள் (ராணுவத்துக்கு ஆதரவாக இயங்கும் தமிழ்க்குழுக்கள்) கையில் துவக்குகளோடு ஆள் கடத்தல், அழித்தொழிப்பு வேலைகளை ராணுவத்துடன் சேர்ந்து செய்கிறார்கள்.

அதனால்தான் வீடின்றி, உணவு, மருந்து கிடைக்காத நிலையிலும் தமிழ் மக்கள் கிளிநொச்சி நோக்கி நகர்கிறார்கள். அந்த மூன்றே முக்கால் லட்சம் மக்களும் யார்? 22 ஆயிரம் போராளிகளைப் பலி கொடுத்துள்ள குடும்பத்தினர்தானே? அதில் இருப்பது என் தாய், தந்தை, பிள்ளை, மாமன், மைத்துனன் தானே? அவர்கள் எப்படி அறுத்துக்கொண்டு போவார்கள்? அதனால்தான் இவ்வளவு இன்னல்களுக்கு மத்தியிலும் அவர்கள் இங்கேயே நிற்கிறார்கள்.''

`பிரபாகரன் சரணடைய வேண்டும். தன்னையும் இயக்கத்தவர்களையும் அவர் காப்பாற்றிக் கொள்ள இதுதான் கடைசி வாய்ப்பு' என்று மகிந்த ராஜபக்சே பேசியிருக்கிறாரே?

``இதைக் கேட்டு நாங்களும், எங்கட மக்களும் மட்டுமல்ல. சிங்கள ராணுவமே கூட சிரித்துக் கதைக்கிறது. ஒவ்வொரு அதிபருமே இப்படித்தான். பதவிக்கு வந்த மூன்றாண்டுகளுக்குள் பாரிய யுத்தம் ஒன்றை நடத்துவார்கள். அடிவாங்கி ஓடுவார்கள். தேர்தல் நெருங்கினால் `சமரசப் பேச்சு வார்த்தை, சமரசத் தீர்வு' என்பார்கள். தேர்தலில் வென்றால் மீண்டும் மூன்றாண்டுகளுக்கு சண்டை பிடிப்பார்கள். வாக்களித்த மக்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டுமே, அதற்காகத்தான் `இதோ நெருங்கிட்டோம். பிடிச்சிட்டோம். சரணடைங்க' என்கிறார்கள்.''

புலிகளை முற்றாக அழித்தொழிக்காமல் ஓயப் போவதில்லை. புலிகளின் நாட்கள் எண்ணப்-படுகின்றன என்கிறார்களே சிலர்?

``நாங்களே நினைத்தாலும் இனி இந்த இயக்கத்தை அழிக்க முடியாது. `சரி போதும்' என்று நாங்களே முடிவெடுத்தாலும் இனிமேல் இந்த இயக்கம் இலக்கை அடையாமல் ஓயாது. கரும்புலிகளின் எண்ணிக்கை நாளாந்தம் கூடுமே தவிர குறையாது. எமது இயக்கத்தின் பலம் ஆயுதமல்ல. மனஉறுதியும், உலகம் முழுவதும் வியாபித்துள்ள எங்கள் தமிழ் உறவுகளும்தான். அதனால் ராஜபக்சே அப்படிக் கதைக்கிறார் என்றால், அவர் கடைசிவரை கதைத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.''

அமெரிக்கா, சீனா, கொரியா, இந்தியா போன்ற நாடுகளிடம் இருந்து பெருமளவில் இலங்கை அரசு ஆயுதம் வாங்கிக் குவிக்கிறதே? அதைச் சமாளிக்கும் அளவுக்கு உங்களிடம் ஆயுத பலம் இருக்கிறதா?

(சிரிக்கிறார்) ``அதுபற்றி எங்களுக்கு என்ன கவலை? அவர்கள்தான் பிரேமதாசா காலத்திலிருந்தே வெளிநாட்டில் இருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்கிறார்களே? அவர்கள் கஷ்டப்பட்டு வாங்கி பாதுகாப்பாகக் கொண்டு வந்து கடைசியில் எங்கட காலடியில் போட்டுவிட்டுத்தானே ஓடுவார்கள்? எங்களுக்கு எப்போதும் ஆயுதம் வாங்க வேண்டிய அவசியம் வந்ததே இல்லை. அவர்களது ஆயுதத்தைப் பிடுங்கித்தான் அவர்களை அடிக்கிறோம்.

ஆனையிறவு சண்டையில் அவர்களிடம் இருந்து 152 மி.மீ. ஆட்லரி பீரங்கியைப் பிடுங்கினோம். பிறகு 122 மி.மீ. பீரங்கி. அவற்றை வைத்துத்தான் அவர்களை அடிக்கிறோம். ஒவ்வொரு பீரங்கிக்கும் இதுவரை இரண்டாயிரம் பேர்வரை மடிந்திருப்பான்கள். இப்படிப் பறித்த ஆயுதம் நிறைய இருக்கிறது. வரட்டும் பார்க்கலாம்.''

தடுப்பு நடவடிக்கை முடிந்து எப்போது தான் நீங்கள் சண்டை பிடிப்பீர்கள்?

``சிங்கள ராணுவத்தின் கை ஓங்கி விட்டது என்பது பொய்ப்பிரசாரம். நாங்கள் தகுந்த சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கிறோம். எங்கட தரப்பில் ஆயிரம் குண்டுகள் செலவானால் அவர்களிடமிருந்த பத்தாயிரம் குண்டுகளை நாங்கள் பறிக்க வேண்டும்.

இப்போது மழைக்காலத்துக்காகக் காத்திருக்கிறோம். பலத்த மழையில் அவர்களை அடித்தால்தான் சரிப்படும். தப்பி ஓடமுடியாமல் தண்ணீரில் விழுந்து அவர்கள் சாக வேணும். அதற்காகத்தான் காத்திருக்கிறோம். எவ்வளவு மழை வெள்ளம் எண்டாலும் நாங்கள் களத்தில் நிற்போம். எங்கள் பயிற்சி அப்படி.''

கடந்த ஒரு மாதத்தில் `கொத்துக் கொத்தாகப் புலிகள் பலி' என்ற செய்திகள்....?

``உண்மை ராஜபக்சேவுக்கே தெரியும். எங்கட தரப்பு வீரச்சாவுகளை நாங்கள் மறைக்க மாட்டோம். அவர்கள் கூறும் கணக்குப்படி பார்த்தால் எங்கள் ஒட்டுமொத்த எண்ணிக்கையையே தாண்டிவிடும் போலிருக்கிறது. ம். வேடிக்கைதான்....

Twengle Twengle little star