Monday, December 29, 2008

கூழா முறிப்பு பகுதியில் இன்று கடும் மோதல்

ஒட்டுசுட்டானுக்கும் ,முள்ளியவளைக்கும் இடையில் உள்ள காடுகளினூடாக கூழா முறிப்பு பகுதிக்கு ஊடுறுவிய படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் கடும் மோதல் நடைபெற்று வருவதாக வன்னித்தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தொடரும்

சிறிலங்கா படையினரின் 17 உடலங்களும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிப்பு



முல்லைத்தீவு நோக்கிய சிறிலங்கா படையினரின் முன்நகர்வுக்கு எதிரான தமிழீழ விடுதலைப் புலிகளின் முறியடிப்புத் தாக்குதலின் போது கைப்பற்றப்பட்ட படையினரின் 17 உடலங்களும் இன்று அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பில் இன்று திங்கட்கிழமை காலை 10:00 மணியளவில் இக்கையளிப்பு நிகழ்வு நடைபெற்றது.

விடுதலைப் புலிகளின் அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான செயலகப் பணிப்பாளர் மு.பாவரசனினால் செஞ்சிலுவைச் சங்கத்தின் வன்னிக்கான வதிவிடப் பிரதிநிதி யூலியனிடம் படையினரின் 17 உடலங்களும் கையளிக்கப்பட்டன.

முல்லைத்தீவு நோக்கி கடந்த சனிக்கிழமை (27.12.08) சிறிலங்கா படையினர் மேற்கொண்ட இருமுனை முன்நகர்வுகள் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டன. இதில் 68 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 75-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதுடன் படையினரின் 17 உடலங்களும் படையப் பொருட்களும் விடுதலைப் புலிககளால் கைப்பற்றப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.





புதிய போரியல் வியூகத்திற்குள் நுழையப்போகும் புதிய வருடம்



உக்கிரமான போர் எழுச்சி கொண்ட 2008 ஆம் ஆண்டு விடைபெற்று செல்வதற்கு இன்னமும் மூன்று தினங்களே உள்ளன. இந்த வருடத்தில் இலங்கையில் பல்லாயிரம் உயிர்கள் மோதல்களிலும், அரசியல் வன்முறைகளிலும், இயற்கை அனர்த்தங்களினாலும் இழக்கப்பட்டுள்ளன. 2006ஆம் ஆண்டு போர் உக்கிரம் அடைந்த போதும் கடந்த மூன்று வருடங்களில் 2008 ஆம் ஆண்டே மிகவும் கொடூரம் நிறைந்த ஆண்டாக கணிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு விடைபெற்று செல்கின்றபோதும் அது போரை அடுத்த வருடத்திற்கு விட்டுச் செல்கின்றது என்பதை மறுக்க முடியாது. வன்னிப் பகுதியின் முக்கிய நகரங்களான கிளிநொச்சியை அல்லது முல்லைத்தீவை இந்த வருடத்தின் முடிவுக்குள் கைப்பற்றிவிட வேண்டும் என்ற அரசின் திட்டம் அவர்களின் எதிர்பார்ப்பை இன்னும் சில தினங்களில் நிறைவேற்றுமா? என்பது ஒருபுறம் இருக்க அது படைத்தரப்பை பாரிய நெருக்கடிக்குள் தள்ளிவிட்டுள்ளது.

அரசின் இந்த திட்டம் வன்னியில் உள்ள பொதுமக்களுக்கும் பாரிய மனித அவலங்களை ஏற்படுத்தியுள்ளது. மருந்து, உணவு மற்றும் அத்தியாவசிய தேவைப்பொருட்கள் போன்றவற்றின் விநியோகத்தை அரசு மட்டுப்படுத்தி யுள்ளதுடன், அங்கு வான் தாக்குதல்களையும், எறிகணை மற்றும் உந்துகணை வீச்சுக்களையும் மிக அதிகளவில் மேற்கொண்டு வருகின்றது. டிசம்பர் 6 ஆம் நாளில் இருந்து 25 ஆம் நாள் வரையிலுமான 19 நாட்களில் 60க்கும் மேற்பட்ட வான் தாக்குதல்களை இலங்கை வான்படை வன்னிப் பகுதியில் மேற்கொண்டுள்ளது.

இந்த தாக்குதல்களில் வான்படை பரசூட் மூலம் பாரிய குண்டுகளை வீசி வருவதனால் பொதுமக்கள் பெரும் அழிவுகளை சந்தித்து வருகின்றனர். இந்த குண்டுகள் தரையில் இருந்து 50 அடி உயரத்தில் வானில் வெடிப்பதனால் குண்டுச் சிதறல்கள் தரையில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றன.

இதனிடையே கடந்த வாரங்களில் வன்னியில் நடைபெற்ற சமர்களில் படைத்தரப்பு அதிக சேதங்களை சந்தித் துள்ளது. கடந்த 16 ஆம் நாள் நடைபெற்ற சமரினைத் தொடர்ந்து 20 ஆம் நாள் அன்று இரணைமடு பகுதியில் முன்நகர்ந்திருந்த இராணுவத்தின் 57- 4 ஆவது பிரிகேட் படையணியின் முன்னணி பாதுகாப்பு அரண்கள் மீது விடுதலைப் புலிகள் வலிந்த தாக்குதல் ஒன்றை நிகழ்த்தியிருந்தனர்.

இந்த மோதல்களில் இராணுவத்தினரின் இரண்டு கி.மீ நீளமான முன்னணி பாதுகாப்பு நிலைகள் கைப்பற்றப்பட்டதாகவும், 60 ற்கு மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 150 பேர் வரையில் காயமடைந்ததாகவும், இராணுவத்தினரின் 15 சடலங்களையும் பெருமளவான ஆயுத தளபாடங்களையும் தாம் கைப்பற்றியுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்தனர்.

எனினும் இந்த மோதல்களில் தமது தரப்பில் 30 படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், பெருமளவானோர் காய மடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள படைத்தரப்பு அரை கி.மீ தூரத்திற்கு படைத்தரப்பு பின்நகர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மோதல் நடைபெறும் பகுதிகளுக்கு ஊடகவியலாளர்கள் செல்ல முடியாது என்பதனால் களத்தின் உண்மையான நிலைமைகள் அதிகம் வெளித்தெரிவதில்லை.

எனினும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் இலத்திரனியல் ஊடகங்கள் ஏற்படுத்திவரும் மாற்றங்கள் அதிகம். அதன் அதீத வளர்ச்சி காரணமாக போர் தொடர்பான முழுத் தகவல்களையும் எந்த ஒரு நாடும் இலகுவாக மறைத்து விட முடியாது. இந்த வகையில் கடந்த 16 ஆம் நாள் கிளாலி களமுனையில் நடைபெற்ற சமர் தொடர்பாக மேலும் பல தகவல்கள் வெளிவந்துள்ளன. அன்றைய நடவடிக்கையின் போது படைத்தரப்பு நான்கு டிவிசன்களை பயன்படுத்த முனைந்தபோதும் களநிலைமையின் பாதகமான நிலைமையை முன்கூட்டியே அறிந்து கொண்ட 55ஆவது படையணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பிரசன்னா சில்வா ஆரம்பத்திலேயே தனது நடவடிக்கைகளை நிறுத்தியிருந்தார்.

எனினும் கிளாலி பகுதியில் நகர்ந்த 53 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் கமால் குணரட்னா நடவடிக்கையை தொடரவே விரும்பினார். இந்த சமரின்போது 53 ஆவது படையணி கடுமையான இழப்புக்களை சந்தித்ததுடன், அதன் சிங்க றெஜிமென்டை சேர்ந்த படைச் சிப்பாய் ஒருவர் உயிருடன் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளார்.

அனுராதபுரத்தை சேர்ந்த ஆர். ஏ நிசான் ரணசிங்கா (22) என்ற படைச் சிப்பாய் காலை 6.30 மணிக்கு காயமடைந்த போதும் அவரை கைவிட்டு விட்டு அவருடன் முன் நகர்ந்த படைஅணிகள் தளம் திரும்பிவிட்டன. மாலை 7.00 மணியளவில் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த விடுதலைப் புலிகளின் அணி ஒன்று இறந்த படையினரின் சடலங்களின் மத்தியில் படைச் சிப்பாய் ஒருவர் மூச்சுவிடுவதை அவதானித்து முதலுதவிகளை வழங்கிய பின்னர் அவரை களமுனை வைத்தியசாலைக்கு அவசரமாக அனுப்பியது. அங்கு அவருக்கு தேவையான அவசர சிகிச்சைகள் வழங்கப்பட்டபோது தனக்கு குடிக்க நீர் தருமாறு ரணசிங்கா கேட்டுள்ளார்.

அதிகளவான குருதி வெளியேற்றத்தினால் பாதிக்கப்பட்ட அவருக்கு மேலதிக சிசிச்சைகள் வழங்கும் பொருட்டு விடுதலைப் புலிகளின் மருத்துவ பிரிவு அவரை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்திருந்தது. அங்கு ஊடகவியலாளர்களிடம் பேசும்போது ரணசிங்கா தெரிவித்த கருத்துக்கள் பல ஆச்சரியங்களை ஏற்படுத்தியிருந்தன. நவம்பர் 25 ஆம் நாள் மூன்று மாதகால அடிப்படை பயிற்சிகளை நிறைவு செய்த ரணசிங்கா உடனடியாகவே யாழ்.குடாநாட்டுக்கு அனுப்பப்பட்டிருந்தார். பின்னர் மிகவும் உக்கிரமான களமுனைகளில் ஒன்று என கணிக்கப்படும் கிளாலி களமுனைக்கு டிசம்பர் 9 ஆம் நாள் அனுப்பப்பட்டதுடன், 16 ஆம் நாள் மேற்கொள்ளப்பட்ட பாரிய படை நகர்விலும் பயன்படுத்தப்பட்டிருந்தார்.

புதிதாக சேர்க்கப்பட்ட படையினர் மிகவும் குறுகிய காலப் பயிற்சியுடன் களமுனைகளில் பயன்படுத்தப்படுவது படைத்தரப்பின் பலவீனமாகவே கருதப்படுவதுடன் அது பல கேள்விகளையும் தோற்றுவித்துள்ளது. இராணுவம் படை பலத்தை தக்கவைப்பதில் நெருக்கடிகளை எதிர் நோக்குகின்றதா? களமுனைகளில் இழக்கப்படும் அனுபவம் மிக்க படையினரின் வெற்றிடங்களை புதிய அனுபவமற்ற படையினரைக்கொண்டு படைத்தரப்பு நிரப்பி வருகின்றதா? என்ற கேள்விகளுடன் வலிமை மிக்க படையணிகளாக கருதப்பட்டு வந்த 53, 55, 57 மற்றும் 58 ஆவது படையணிகளின் வலிமைகள் தொடர்பாகவும் பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன. அதாவது இந்த படையணிகள் அனுபவமுள்ள படையினரை இழந்து வலிமை குன்றியுள்ளதாக காணப்படுவதாகவே கருத்துக்கள் தோன்றியுள்ளன.

நடைபெற்று வரும் மோதல்களில் அதிகளவான படையினர் காயமடைந்தும் இறந்தும் களமுனைகளில் இருந்து அகற்றப்படுவதுடன், பெருமளவான படையினர் தப்பி ஓடி வருவதனாலும் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை தக்கவைப்பதில் படைத்தரப்பு பாரிய நெருக்கடிகளை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வன்னியில் உள்ள படையினரின் நிலைகளை தக்கவைக்கும் பொருட்டு கிழக்கில் இருந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட படையினர் வன்னி நோக்கி நகர்த்தப்பட்டுள்ளதுடன், பெண் இராணுவத்தினரும் வன்னி களமுனைகளுக்கு நகர்த்தப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே கிளிநொச்சி நோக்கி மீண்டும் ஒரு பாரிய நகர்வை கடந்த திங்கட்கிழமை (22) அதிகாலை 5.30 மணி யளவில் இராணுவத்தின் 58 மற்றும் 57 ஆவது படையணிகள் இணைந்து மேற்கொண்டிருந்தன. ஐந்து முனைகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த நகர்வுகளில் உருத்திரபுரம் மற்றும் இரணைமடு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நகர்வுகள் முறியடிக்கப்பட்டுவிட்டதாகவும் ஏனைய மூன்று முனைகளில் தொடர்ந்து சமர் நடைபெற்று வருவதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் போது 100 ற்கு மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், 250 ற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இந்த மோதல்களில் வான்படையினரின் எம்.ஐ 24 ரக தாக்குதல் உலங்குவானூர்திகளும் பங்குபற்றியிருந்தன. எனினும் குஞ்சுப்பரந்தன் பகுதியில் முன்நகர்வில் ஈடு பட்டுவரும் 58 - 2 ஆவது பிரிகேட் படையினருடனான மோதல்கள் பல நாட்களாக தொடர்வதாக வன்னி தகவல்கள் தெரிவித்துள்ளன.

பரந்தன் பூநகரி நெடுஞ்சாலையை ஊடறுத்து விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்டுள்ள மண் அணைகளை கைப்பற்றும் நோக்கத்துடன் இராணுவம் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஆறு கி.மீ நீளமான இந்த மண் அணை பாதுகாப்பு முன்னரங்கில் 300 மீற்றர் பகுதியை கைப்பற்றியுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ள போதும் அதனை சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை.

குஞ்சுப்பரந்தன் மற்றும் நீவில் பகுதிகளில் 21 ஆம் நாள் வரையிலுமான 10 நாட்கள் நடைபெற்ற மோதல்களில் 200 க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 53 பேர் காணாமல் போயுள்ளதாகவும் கொழும்பில் இருந்து வெளிவரும் பாதுகாப்பு இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. பரந்தன் பகுதியில் உள்ள "எல்" வடிவ மண் அணையை உடைக்கும் முயற்சிகளை படைத்தரப்பு மேற்கொண்ட போதே இந்த மோதல்கள் ஏற்பட்டிருந்தன. சில பகுதிகளில் மண் அணைகளின் உயரம் 20 அடிகளாக உள்ளன. அங்கு விடுதலைப்புலிகள் கனரக இயந்திர துப்பாக்கிகளை நிறுவியுள்ளனர், மண் அணைகளுக்கு முன்பாக அகழிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் அவை நீரால் நிரம்பியுள்ளன.

மண் அணைகளுக்கும் அகழிகளுக்கும் இடையில் பொறிவெடி மற்றும் மிதி வெடி அபாயங்களும் உண்டு. செங்குத்தாக மேல் உயரும் மண் அணைகளை தாண்டுவது கடினமானது. மண் அணைகளை படையினர் அண்மிக்கும் வரை காத்திருக்கும் விடுதலைப் புலிகள் கனரக துப்பாக்கிகள், பி.கே எல்.எம்.ஜி என்பன கொண்டு மூர்க்கமாக தாக்கி வருவதாக படைத்தரப்பில் இருந்து வெளிவந்த தகவல் ஒன்று தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த வார மோதல்களில் விடுதலைப் புலிகள் பெருமளவிலான பீரங்கி எறிகணைகளை பயன்படுத்தியுள்ளதாகவும், அவர்களுக்கான ஆயுத வினியோகம் சீராக இருப்பதாகவும் படைத்தரப்பின் புலனாய்வு பிரிவு தகவல் வெளியிட்டுள்ள நிலையில் 40 மீற்றர் நீளமான றோலர் படகு ஒன்றை முல்லைத்தீவில் இருந்து 70 கடல் மைல் தொலைவில் தாம் தாக்கி அழித்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால் தாக்குதல் சம்பவம் நடந்தபோது அந்த கப்பலில் இருந்த ஆயுத தளபாடங்கள் இறக்கப்பட்டு விட்டதாக பிறிதொரு தகவல் தெரிவித்துள்ளது.

உக்ரேனில் இருந்து 122 மி.மீ, 130 மி.மீ, 152 மி.மீ பீரங்கிகள், 81 மி.மீ மற்றும் 120 மி.மீ மோட்டார்கள், கனரக இயந்திர துப்பாக்கிகளுக்கான வெடிபொருட்கள், சிறிய ஆயுதங்கள் மற்றும் 60 மற்றும் 70 குதிரைவலு கொண்ட வெளி இணைப்பு இயந்திரங்கள் போன்றவற்றை கொள்வனவு செய்த விடுதலைப் புலிகள் அவற்றை பாரிய கப்பல் ஒன்றின் மூலம் முல்லைத்தீவை அண்டிய அனைத்துலக கடற்பரப்பிற்கு கொண்டு வந்ததாகவும், இலங்கை நோக்கிய பயணத்தின் போது கப்பல் பல தடவைகள் கொடிகளையும், பெயரையும் மாற்றிக் கொண்டதாகவும் வெளிநாட்டு உளவு அமைப்பு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

முதலில் விடுதலைப் புலிகள் அன்ரனோவ் - 12 ரக சரக்கு விமானம் ஒன்றை வாடகைக்கு அமர்த்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர் எனவும் எனினும் அது கைகூடாததனால் அவர்கள் கப்பல் ஒன்றை வாடகைக்கு பெற்றுக் கொண்டனர். அல்லது அது அவர்களின் சொந்த கப்பலாக கூட இருக்கலாம் எனவும் அவை மேலும் தெரிவித்துள்ளன.

கப்பல் முல்லைத்தீவுக்கு அண்மையான அனைத்துலக கடற்பரப்பை அடைந்து நங்கூரம் பாய்ச்சி நின்றதும், அதில் இருந்த பொருட்கள் 40 மீற்றர் நீளமான ரோலர்களிலும், சிறிய விசைப்படகுகளிலும் இறக்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் வெளிநாட்டு உளவு நிறுவனம் ஒன்று இலங்கைக்கு தகவல்களை வழங்கியிருந்தது. இலங்கை கடற்படையினரும், வான்படையினரும் மேற்கொண்ட இணைந்த தேடுதல் நடவடிக்கையின்போது றோலர் கண்டறியப்பட்டது. ஆனால் பிரதான ஆயுதக்கப்பலை கடற்படை யினரால் கண்டறிய முடியவில்லை. அது தவறவிடப்பட்டது அரசுக்கு பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்து படைத்தரப்பு விடுதலைப் புலிகளின் பலம் தொடர்பாக பல தவறான கணிப்புக்களை வெளியிட்டு வந்ததுடன், படையினரின் முன்நகர்வு தொடர்பான வலிமையான பிரசாரங்களையும் தென்னிலங்கையில் மேற்கொண்டு வந்திருந்தது. ஆனால் வருடத்தின் இறுதிப் பகுதியில் களத்தில் ஏற்பட்டுவரும் மாற்றங்களும், விடுதலைப் புலிகளின் வினியோக வழிகள் தொடர்பான தகவல்களும் அரசுக்கு சாதகமானதல்ல.

அடுத்த வருடம் தொடரப்போகும் போர் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற போரைப்போல இருக்கப் போவதில்லை. 2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பித்த "வன்னி படை நடவடிக்கை' அடுத்த ஆண்டுக்கும் தொடரப் போகின்றது என்றபோதும், வலிந்த தாக்குதல்களில் படைத்தரப்பு களைப்படைந்துள்ளதாகவே தோன்றுகின்றது.

தொடர்ந்து படை நடவடிக்கை ஏற்படுத்தி வரும் களைப்பும், சலிப்பும் ஒருபுறம் இருக்க தொடர்ச்சியான இழப்புக்களும் இராணுவத்தின் போரிடும் வலுவை கணிசமான அளவு குறைத்துவிட்டதாகவே வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு மாதமும் 3,000 பேரை படையில் சேர்க்க முடியும் என படைத்தரப்பு மார்தட்டி வருகின்றபோதும், அனுபவமும், சிறந்த பயிற்சியும் கொண்ட படையினருக்கும், புதிதாக களமுனையை காணப்போகும் படையினருக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் உண்டு. இதனை யாரும் மறுக்க முடியாது.

விடுதலைப் புலிகளை பொறுத்தவரையில் இரணைமடு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வலிந்த சமரானது அவர்கள் வருங்காலத்தில் தாக்குதல் சமர்களையும், வலிந்த சமர்களையும் தீவிரப்படுத்தப் போவதை கட்டியம் கூறியுள்ளதுடன் அதற்கான படை பலம் அவர்களிடம் உண்டு என்பதும் படைத்தரப்புக்கு கசப்பான செய்தி.

இந்த வருடத்தின் இறுதியில் உக்கிரம் பெற்றுள்ள கள முனைகளும், தென்னிலங்கையின் கிராமங்களுக்கு கொண்டு செல்லப்படும் அதிகளவான படையினரின் சடலங்களும், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் அதிகளவான காயமடைந்த படையினரும் கூறும் செய்தி ஒன்று தான் அதாவது தற்போதைய படை நடவடிக்கை 1997 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட "வெற்றி நிச்சயம்' படை நட வடிக்கையை விட மோசமானதொரு நிலையை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து வருவது என்பது தான் அந்த செய்தி.

வேல்ஸிலிருந்து அருஷ்

த.ம.வி.பு. (கருணா குழு) வினரின் ஆயுதங்கள் களையப்படவுள்ளன



கருணா தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைக் களைவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பான நடவடிக்கைகள் அடுத்த வாரத்தில் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருணா அணியினருக்கும், பிள்ளையான் அணியினருக்கும் இடையில் இடம்பெற்று வரும் மோதல்களும் இந்த முனைப்புகளுக்கான காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில் ஆயுதக் களைவின் பின்னர் கருணா மற்றும் பிள்ளையான் அணியினரை படையிலும் பொலிஸிலும் சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் பெருமளவு ஆயுதங்களை தருவித்துள்ளனர்: லக்பிம



தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் ஆயுதங்களைத் தருவித்து வருவதாக லக்பிம செய்தித்தாள் தமது பாதுகாப்புக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் புலனாய்வுத் தரப்புகளின் எச்சரிக்கையின்படி இந்தோனேசியாவில் எறிகணைகள்,மோட்டர்கள் மற்றும் விமான எரிபொருட்களை கப்பல் ஒன்று ஏற்றிக் கொண்டிருப்பதாகவும், அக்கப்பல் இலங்கையை நோக்கிச் செல்வதாகவும் அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கடந்த 19 ஆம் திகதி இலங்கையின் ஆளில்லா விமானங்கள், முல்லைத்தீவுக்கு அப்பால் தமிழீழ விடுதலைப் புலிகளின் கப்பல்கள் நிற்பதைக் கண்டுள்ளன. இதனையடுத்து தமிழீழ விடுதலைப் புலிகள் முல்லைத்தீவு பகுதியில் ஆயுதங்களை இறக்கிக் கொண்டிருப்பதையும் அவை அவதானித்துள்ளன.

எனினும் காலநிலை சீர்கேட்டினால் அவற்றின் மீது தாக்குதல்களை நடத்த முடியவில்லை என இலங்கைப் படையினர் குறிப்பிட்டுள்ளதாக லக்பிம தெரிவித்துள்ளது.

இதேவேளை மேலும் பல கப்பல்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை எடுத்து வரலாம் என்ற எதிர்பார்ப்பின் பேரில் முல்லைத்தீவு கடற்பரப்பில் படையினர் தொடர்ந்தும் விழிப்பாக வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவை நோக்கிய படையினரின் முன்நகர்வு முறியடிப்பு: 65 படையினர் பலி; 120 பேர் காயம்; 17 உடலங்கள் மீட்பு




முல்லைத்தீவு அளம்பில் பகுதியிலிருந்து முல்லைத்தீவு நோக்கிய சிறிலங்கா படையினரின் பாரிய முன்நகர்வு நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் நேற்று முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 65 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 120 பேர் காயமடைந்துள்ளனர். படையினரின் 17 உடலங்களும் படையப் பொருட்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

அளம்மில் பகுதியில் இருந்து சிறிலங்கா படையினர் முல்லைத்தீவை நோக்கி நேற்று சனிக்கிழமை அதிகாலை 5:30 நிமிடமளவில் ஆட்லறி மற்றும் பல்குழல் வெடிகணை மற்றும் கனரக போர்க் கருவிகளின் சூட்டாதரவுடன் பாரிய முன்நகர்வினை மேற்கொண்டனர்.

இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த்தாக்குதலை நடத்தி பிற்பகல் 1:00 மணியளவில் படையினரின் முன்நகர்வினை முறியடித்தனர்.

இதில் சிறிலங்கா படையினர் 50 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 90 பேர் காயமடைந்துள்ளனர். படையினரின் 16 உடலங்களும் படையப் பொருட்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட ஆயுத விவரம்:

  • ஏகே எல்.எம்.ஜி - 08
  • ரி-81 ரக எல்.எம்.ஜி - 01
  • ஆர்.பி.ஜி - 04
  • கவச எதிர்ப்பு எறிகணை செலுத்தி - 02
  • ரி-56-2 ரக துப்பாக்கிகள் - 08
  • ரி-56 ரக துப்பாக்கிகள் - 02

உள்ளிட்ட பெருமளவிலான படையப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், முல்லைத்தீவில் உள்ள உடுப்புக்குளம் பகுதியில் நேற்று காலை 9:30 நிமிடமளவில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வுத் தாக்குதலை பிற்பகல் 12:30 நிமிடமளவில் விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர்.

இதில் சிறிலங்கா படையினர் 15 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 30பேர் காயமடைந்துள்ளனர். படைத்தரப்பைச் சேர்ந்தவரின் உடலம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்தனர்.

வத்தளையில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்: 7 படையினரும் ஒரு பொதுமகனும் பலி




கொழும்பின் புறநகர்ப் பகுதியான வத்தளை புனித அன்னம்மாள் தேவாலய வீதியில் இன்று காலை 8.45 மணியளவில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இக்குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் 5பேர் ஸ்தலத்தில் பலியாகியிருந்தனர். ஆனால் தற்போது பலியானோர் தொகை 8 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இத்தாக்குதலில் 17 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 6 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும், 11 பேர் ராகம வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

காயமடைநதவர்களில் 10 பேர் படையினர் எனவும் மிகுதி பொதுமக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்'ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒரு பொதுமகனும், சிவில் பாதுகாப்பு படைப் பிரிவைச் சேர்ந்த இருவரும் பலியாகியுள்ளனர் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

வத்தளை அன்னம்மாள் தேவாலய வளவில் அமைந்துள்ள சந்தைப்பகுதி மினி இராணுவ முகாம் அருகே உள்ள சோதனைச்சாவடியில் பாதுகாப்பு படையினர் சந்தேகநபரை நிறுத்தி சோதனையிட முற்பட்டபோது தற்கொலை குண்டுதாரி குண்டினை வெடிக்க வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இத்தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tamilwin
தேவாலய வீதியில் இராணுவ வீரர் விரையும் காட்சி

Tamilwin
தேவாலய முன் வாசலினால் சிவிலில் அதிகாரிகள் உள்ருழையும் காட்சி

Tamilwin
ராகம வைத்தியசாலையில் வயோதிபர் ஒருவர் காயமடைந்த நிலையில் கொண்டு செல்லப்படும் காட்சி

Tamilwin

Tamilwin

Tamilwin

Tamilwin

Tamilwin

Tamilwin

Tamilwin

Monday, December 22, 2008

இரணைமடுவிலிருந்து சிறிலங்கா படையினர் பின்வாங்கினர்: பாதுகாப்பு இணையத்தளம்



கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடு பகுதியில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் தனது நிலைகளில் இருந்து சிறிலங்கா படை பின்நகர்ந்துள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் பாதுகாப்பு இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இரணைமடு பகுதியில் நிலைகொண்டிருந்த படையினர் மீது கடந்த சனிக்கிழமை (20.12.08) பாரிய வலிந்த தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்தினர். இரணைமடுவின் வடக்கு பகுதியில் தாக்குதல் தொடங்கப்பட்டது.

விடுதலைப் புலிகளின் உக்கிர தாக்குதலை தொடர்ந்து படையினர் தமது நிலைகளை கைவிட்டு பின்வாங்கியுள்ளது. படையினர் அரை கிலோ மீற்றர் தூரம் பின்நகர்ந்துள்ளதாகவும் இந்த மோதலில் 30-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டதாகவும் படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த தாக்குதலில் விடுதலைப் புலிகள் தமது சிறப்பு அணிகளை பயன்படுத்தியிருந்ததாகவும், அவர்கள் குண்டு துளைக்காத கவசங்களையும், தலைக்கசவங்களையும் அணிந்திருந்ததாகவும் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரணைமடு பகுதியில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு கிலோ மீற்றர் நீளமான படையினரின் நிலைகளை அவர்கள் கைப்பற்றியிருந்ததுடன் இதில் 60-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டும், 150-க்கும் அதிகமானோர் காயமடைந்திருந்ததுடன் 15 உடலங்களையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றியிருந்ததும் குறிப்பிடத்தக்கது

கிளிநொச்சியை நோக்கிய சிறிலங்கா படையினரின் 5 முனை முன்நகர்வுகளில் 2 முனை முறியடிப்பு: 100 படையினர் பலி; 250 பேர் படுகாயம்



கிளிநொச்சியை நோக்கி ஐந்து முனைகளில் சிறிலங்கா படையினர் இன்று மேற்கொண்ட முன்நகர்வுகளுக்கு எதிரான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் இரண்டு முனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. மூன்று முனைகளில் முறியடிப்பு தாக்குதல்கள் தொடர்கின்றன. இதில் இதுவரை 100 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 250-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

கிளிநொச்சியை வல்வளைப்புச் செய்யும் நோக்கில் அதன் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகள் ஊடாக மூன்று முனைகளிலும்

குஞ்சுப்பரந்தன் பகுதியில் இரண்டு முனைகளிலும் இன்று திங்கட்கிழமை காலை 5:00 மணிக்கு செறிவான அட்லெறி, பல்குழல் வெடிகணை மற்றும் கனரக பீரங்கிகளின் கடும் சூட்டாதரவுடகளுடன் முன்நகர்வுத் தாக்குதலை சிறிலங்கா படையினரின் 57, 58 ஆம் டிவிசன்களின் படையினர் மேற்கொண்டனர்.

இம்முன்நகர்வு தாக்குதல்களுக்கு எதிராக தீவிர முறியடிப்புத் தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்தி வருகின்றனர்.

கிளிநொச்சிக்கு தெற்காக இரணைமடுப் பகுதி நோக்கி சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வு ஏற்கனவே முறியடிக்கப்பட்டு விட்டது.

கிளிநொச்சிக்கு மேற்கில் உருத்திரபுரம் பகுதி ஊடாக படையினர் மேற்கொண்ட முன்நகர்வும் முறியடிக்கப்பட்டு விட்டது.

மேலும் மூன்று முனைகளில் படையினரின் நகர்வுகளை முறியடிக்கும் தாக்குதல்கள் விடுதலைப் புலிகளால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இன்றைய முறியடிப்புத் தாக்குதல்களில் படையினர் தரப்பில் இதுவரை 100 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 250-க்கும் அதிகமான காயமடைந்துள்ளனர்.

கொல்லப்பட்ட படையினரின் உடலங்களும் படையப் பொருட்களும் களமுனையில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் உயிருக்கு போராடி வருகிறார்


சர்வதேச பாப் பாடகரான மைக்கேல் ஜாக்சன், ரத்தக்கசிவு நோய் காரணமாக உயிருக்குப் போராடி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பாப் பாடகரான மைக்கேல் ஜாக்சன், மூச்சுக்குழாய் பாதிப்பு மற்றும் ரத்தக்கசிவு நோய் காரணமாக, அமெரிக்க மற்றும் இங்கிலாந்து மருந்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார். எனினும், அவரது உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில், தனது இளமைக் காலத்தில் மைக்கேல் ஜாக்சன், பலதடவைகள் முகமாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டதாகவும், இதன் காரணமாக, அவருக்கு உடல்நலக்கோளாறுகள் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளனர். இதனால், மூச்சுக்குழாய் கோளாறு, ரத்தக்கசிவு போன்ற நோய்கள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருப்பதாகவும், தற்போது, ஜாக்சன் பேசும் சக்தியை இழந்துவிட்டதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், அவரது வலது கண்ணில் 95 சதவீதம் பார்வை போய்விட்டதாகவும், அவரைக் காப்பாற்ற போராடி வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனிடையே, ஜாக்சனின் சகோதரர் ஜெர்மைன் கூறுகையில், ஜாக்சன் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்று கூறியுள்ளார். பாப் இசை உலகில், தனக்கென்று தனி இடத்தைப் பிடித்த ஜாக்சன் உயிருக்கு போராடி வரும் செய்தி, அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Sunday, December 21, 2008

புலிகளின் செயற்பாடுகள் குறித்து விசாரணை நடத்தும் பொறுப்பு இந்திய தேசிய புலனாய்வு முகவர் நிறுவனத்திற்கு


தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து விசாரணை நடத்தும் பொறுப்பு இந்திய தேசிய புலனாய்வு முகவர் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை காலமும் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து இந்தியப் பொலிஸாரே விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்த புதிய தேசிய புலனாய்வு முகவர் நிறுவனம் அமெரிக்காவின் எவ்.பி.ஐ. புலனாய்வு நிறுவனத்திற்கு இணையான அதிகாரங்களை உடையதெனத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்களை 180 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ளக் கூடிய அதிகாரம் இந்திய தேசியப் புலனாய்வு முகவர் நிறுவனத்திற்கு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வறிய சிங்கள இளைஞர்களை ஏமாற்றி படைக்கு ஆட்சேர்ப்பு - புலிகளால் மீட்கப்பட்ட சிப்பாய் தெரிவிப்பு



சிறிலங்கா படைத்தரப்பு வறிய சிங்கள இளைஞர்களை ஏமாற்றி படைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதாக விடுதலைப் புலிகளிடம் உயிருடன் பிடிபட்டுள்ள சிங்கள இராணுவச் சிப்பாய் தெரிவித்துள்ளார். கடந்த 13ம் திகதி விடுதலைப் புலிகளின் தாக்குதலில் காயமடைந்த நிலையில் பிடிபட்ட நிசாங்க றணசிங்க வயது 22 என்ற இந்த இராணுவச் சிப்பாயே இதனைத் தெரிவித்தார்.

இவர் கிளிநொச்சி பொதுமருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று மாலை ஊடகவியலாளர்கள் அவரைச் சந்தித்து உரையாடினர். தனது சொந்த ஊர் அனுராதபுர மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணேவ எனவும் 7ம் ஆண்டுவரை கல்வி கற்றதாகவும் தான் சிங்கறெஜிமென் 53வது படைப்பிரிவைச் சேர்ந்தவரென்றும் கடந்த ஜீலை மாதம் படையில் சேர்க்கப்பட்டபோது தான் சண்டைக்கு அனுப்பப்படமாட்டேன் எனவும் இராணுவம் பிடித்த இடத்தில் இருந்து கடமைபுரிவதுதான் வேலை எனவும் தனக்கு வாக்குறுதியளிக்கப்பட்டதாகவும் கூறினார்.

ஆனால் டிசெம்பர் 9 ஆம் திகதி முகமாலைக்கு கொண்டுவரப்பட்டு சண்டையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் டிசெம்பர் 13 ஆம் திகதி காயமடைந்தபோது தன்னோடு நின்ற சிப்பாய்கள் தன்னைக் கைவிட்டுவிட்டு ஓடிவிட்டதாகவும் 13 மணிநேரம் அதே இடத்தில் கிடந்த நிலையில் மூன்று விடுதலைப் புலிகள் வந்து தன்னை மீட்டதாகவும் கூறினார்.

வறுமை காரணமாகவே தான் படையில் சேர்ந்ததாகவும் ஆனால் படைத்தரப்பு அளித்த வாக்குறுதியை மீறி தன்னைச் சண்டையில் ஈடுபடுத்தியதாகவும் அவர் மேலும் கூறினார். படையில் சேர்க்கப்பட்ட தன்னைப் போன்ற இளைஞர்கள் இதனை உணர்ந்துகொள்ள வேண்டுமெனவும் இனிமேல் படைத்தரப்பின் இவ்வாறான வாக்குறுதிகளை நம்பி படையில் சேரக்கூடாதெனவும் அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சி நகரிலுள்ள பொது மருத்துவமனையில் இவருக்கு சிகிச்சைசயளிக்கப்பட்டுக் கொண்டிருந்து வேளையிலும் அதனை அண்டிய பிரதேசங்களில் விமானத் தாக்குதல்களும், எறிகணைத் தாக்குதல்கள் கிளிநொச்சி மருத்துவமனைக் கட்டிடங்கள் அதிர்ந்தவண்ணம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டுள்ள "மோட்டார் பருவமழை" தாக்குதல்: இக்பால் அத்தாஸ்



இலங்கை அரசாங்கம் தெரிவித்து வந்ததைப்போன்று 2008 ஆம் ஆண்டுக்குள் கிளிநொச்சியையும் முல்லைத்தீவையும் கைப்பற்றமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே 2009 ஆம் ஆண்டிலும் யுத்தம் தொடரப்போவதாக போரியல் ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார்.

படைத்தரப்பு கடந்த வருடம் 32 ஆயிரம் பேரை படைகளில் இணைத்துக் கொண்டனர். இந்த வருடத்துக்குள் 38 ஆயிரம் பேரை படைகளில் சேர்த்துக் கொண்டனர். படைத்தரப்பு தொடர்ந்தும் பெற்றுவந்த யுத்த வெற்றிகளுக்கு மத்தியிலேயே இந்த ஆட்சேர்ப்புகள் இடம்பெற்று வந்தன.

இந்தநிலையில் இராணுவத்தினர் விசேட படை 5 என்ற பிரிவை தற்போது உருவாக்கி வருகின்றனர். அத்துடன் இராணுவ கொமாண்டோ பிரிவுகளையும் உருவாக்கும் திட்டத்தை படையினர் மேற்கொண்டு வருவதாக இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் இடம்பெயர்ந்துள்ள மக்களை நேரடியாக சந்தித்து தமிழ் மக்களை காப்பதற்கான இறுதி யுத்தத்தில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும், கிளிநொச்சியையும், முல்லைத்தீவையும் படைத்தரப்பின் கைகளுக்கு செல்வதை தாம் இறுதிவரை தடுக்கப்போவதாக அவர்கள் தெரிவித்துள்ளதாக இக்பால் அத்தாஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் நேற்று முறிகண்டி - இரணைமடுப் பகுதியி;ல் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பாரிய மோதலில் இரண்டு தரப்பிலும் அதிகளவு இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதன்போது தமிழீழ விடுதலைப் புலிகள் படையினர் மீது மேற்கொண்ட மோட்டார் தாக்குதலை இக்பால் அத்தாஸ், "மோட்டார் பருவமழை" என வர்ணித்துள்ளார்.

இந்த சம்பவம் தமிழீழ விடுதலைப் புலிகளின் இன்னமும் போதியளவு ஆயுதங்கள் கையிருப்பில் இருப்பதையே உணர்த்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா படையினரால் வல்வளைக்கப்பட்ட 2 கிலோ மீற்றர் முன்னரண் விடுதலைப் புலிகளால் மீட்பு: 60 படையினர் பலி; 150 பேர் காயம்; 15 உடலங்கள் மீட்பு



கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடு பகுதியில் சிறிலங்கா படையினர் வல்வளைத்த 2 கிலோ மீற்றர் முன்னரண் பகுதி தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலின் மூலம் மீட்கப்பட்டுள்ளது. இதில் 60 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 150 பேர் காயமடைந்துள்ளனர். படையினரின் 15 உடலங்கள் உட்பட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.


இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

முறிகண்டியில் உள்ள இரணைமடு பகுதியில் இன்று சனிக்கிழமை காலை 6:30 நிமிடம் தொடக்கம் முற்பகல் 11:30 நிமிடம் வரை விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதல் மூலம் இந்த முன்னரண் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை (16.12.08) சிறிலங்கா படையினரால் வல்வளைக்கப்பட்ட முன்னரணே விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டது.


[படம்: விடுதலைப் புலிகள்]


[படம்: விடுதலைப் புலிகள்]


[படம்: விடுதலைப் புலிகள்]

விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலினால் படையினர் பலத்த இழப்புக்களுடன் அவர்கள் கைப்பற்றியிருந்த அரண் பகுதியை கைவிட்டு ஓடினர்.

இதன் பின்னர் அந்த இரண்டு கிலோ மீற்றர் நீளமான முன்னரண் பகுதி விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டது.

இதில் சிறிலங்கா படைத்தரப்பில் 60 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 150-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். படையினரின் 15 உடலங்கள் உட்பட பெருமளவிலான படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.


[படம்: விடுதலைப் புலிகள்]


[படம்: விடுதலைப் புலிகள்]

விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்கும் இடைப்பட்ட களமுனையில் மேலும் பல படையினரின் உடலங்களும் படையப் பொருட்களும் சிதறிக் கிடக்க காணப்படுகின்றன.

இந்த அதிரடித் தாக்குதலின் போது படையினருக்கு ஒத்துழைப்பாக வான்படையின் வானூர்திகள் செறிவான தாக்குதலை நடத்தின என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கடந்த செவ்வாய்க்கிழமையும் புதன்கிழமையும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட 38 உடலங்கள் இரண்டு கட்டங்களாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன. இன்று எடுக்கப்பட்ட 15 உடலங்களும் நாளை கையளிக்கப்படும் என வன்னி தகவல்கள் தெரிவித்துள்ளன.

வன்னியில் 60 படையினர் பலி, 150 பேர் படுகாயம் - 15 உடலங்களும் ஆயுதங்களும் புலிகள் வசம்


வன்னிக் களமுனைகளில் முன்னேறிய சிறிலங்காப் படையினருக்கு எதிராக இன்று விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 60 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 150ற்கும் மேற்பட்ட படையினர் படுகாயப்படுத்தப்பட்டுள்ளதாக களமுனைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
முறுகண்டி - இருணைமடுப் பகுதிகளில் முன்னேறி நிலைகொண்டிருந்த படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் படையினருக்கு மீண்டும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்போது 15 படையினரின் உடலங்களும் ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். அத்துடன் படையினர் முன்னைய நிலைகளில் இருந்து 2 கிலோ மீற்றர் பின் தள்ளப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
படையினரின் இந்தத் தாக்குதலுக்கு ஆதரவாக சிறீலங்கா வான் படையினரும், ஆட்டிலெறிப் படையினரும் ஒத்துழைப்புக்களை வழங்கியிரந்தபோதும் படையினர் பெரும் இழப்புக்களை சந்தித்துள்ளதாகவும், கடந்த இரண்டு வாரங்களுக்குள் படையினருக்கு ஏற்பட்டுள்ள மூன்றாவது பெரும் இழப்பு இதுவெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

வட போர்முனைப் போராளிகளுடன் பொதுமக்கள் சந்திப்பு

வட போர்முனைப் போராளிகளுக்கு கண்டாவளை கோட்ட தொழிற் சங்கங்களின் இணையம் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் இணைந்து உணவுப் பொருட்களை வழங்கியுள்ளனர்.
இந்நிகழ்வு கண்டாவளை கோட்ட போர் எழுச்சிக்குழு செயலாளர் சூரியப்பிரகாஸ் தலைமையில் நடைபெற்றது.
இதில் கருத்துரைகளை வட போர்முனைத் தளபதிகளில் ஒருவரான பெரியதம்பி, பொறுப்பாளர்களில் ஒருவரான மோகன் இரண்டு மாவீரர்களின் தந்தை சிறீதரன் ஆகியோர் நிகழ்த்த, சிறப்புரையினை கண்டாவைள கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சீராளன் நிகழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து, கண்டாவளை கோட்ட தொழிற்சங்க இணையம், மாதர் சங்கப் பிரதிநிதிகள், போர் எழுச்சிக் குழு, மாவீரர் செயற்பாட்டுக்குழு மற்றும் வணிகர்கள் உள்ளிட்டோரால் களமுனைப் போராளிகளுக்கு என கொண்டு செல்லப்பட்ட சமைத்த உணவும் உலருணவுப் பொருட்களும் வழங்கப்பட்டன.
[படம்: புதினம்][படம்: புதினம்][படம்: புதினம்]
தொடர்ந்து, போராளிகளுடன் மக்கள் கலந்துரையாடினர்.
"போர்க் களங்களுக்கு மக்கள் தேடி வந்து உணவுப் பொருட்களை வழங்கி போராளிகளுடன் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வது மிகுந்த மகிழ்வைத் தருகின்றது” என வட போர்முனைப் பொறுப்பாளர்களில் ஒருவரான பெரியதம்பி தெரிவித்துள்ளார்.
"இடம்பெயர்ந்த நிலையிலும் மக்கள் களமுனைப் போராளிகளுக்கு உற்சாகமூட்டுகின்ற வகையில் வருவது எழுச்சியை தருகின்றது" என பொறுப்பாளர்களில் ஒருவரான மோகன் தெரிவித்தார்.
[படம்: புதினம்][படம்: புதினம்]

சிறிலங்கா படையினரின் இழப்புக்களை குறைப்பது எவ்வாறு?: பாதுகாப்புச் சபையில் ஆராய்வு


கிளிநொச்சி மற்றும் கிளாலி களமுனைகளில் சிறிலங்கா படைத்தரப்பு இந்த வாரம் சந்தித்த பாரிய இழப்புக்களை தொடர்ந்து படையினரின் இழப்புக்களை குறைப்பது எவ்வாறு என்பது தொடர்பாக பாதுகாப்புச் சபை கூடி ஆராய்ந்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
இந்த வார தொடக்கத்தில் கிளிநொச்சி மற்றும் கிளாலி களமுனைகள் உட்பட பல களமுனைகளில் இராணுவம் சம நேரத்தில் மேற்கொண்ட நகர்வுகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் படைத்தரப்பு அதிக இழப்புக்களை சந்தித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தலைமையில் கொழும்பில் கடந்த புதன்கிழமை அவசரமாக பாதுகாப்புச் சபை கூட்டப்பட்டது.
முப்படை தளபதிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பங்குபற்றிய இந்த மாநாட்டில் களமுனைகளில் படையினரின் இழப்புக்களை குறைப்பது எவ்வாறு என்பது தொடர்பாக மிகவும் தீவிரமாக ஆராயப்பட்டுள்ளது.
அதனை மேற்கொள்வதற்கு இராணுவ நடவடிக்கைகளின் இணைந்த நடவடிக்கை அவசியம் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக படைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முல்லைத்தீவில் பரா வெளிச்சக் குண்டுகளை வீசி சிறிலங்கா வான்படை குண்டுத் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் இருவர் காயம்


முல்லைத்தீவு கரையோரப் பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மற்றும் வாடிகள் மீது சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவு கரையோரப் பகுதி மீது இன்று சனிக்கிழமை காலை 5:00 மணிக்கும் பின்னர் 5:35 நிமிடத்துக்குமாக இரு தடவைகள் வந்த சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் பரா வெளிச்சக் குண்டுகளை வீசி குண்டுத் தாக்குதலை நடத்தின.
இத்தாக்குதலில் கரையோரப் பகுதி மீன் வாடிகள் இரண்டும் படகுகள் இரண்டும் எரிந்து நாசமாகியுள்ளன. சங்கர் மற்றும் சுதர்சன் ஆகியோரின் மீன் வாடிகளே தாக்குதலுக்கு இலக்காகி எரிந்து நாசமாகின.
பொதுமக்களின் வீடுகள் இரண்டும் சேதமாகியுள்ளன. யோகநாதன் மற்றும் கமலேந்திரன் ஆகியோரின் வீடுகளே தாக்குதலுக்கு இலக்காகி சேதமடைந்தன.
இதேவேளை, மீண்டும் இன்று காலை 7:15 நிமிடத்துக்கும் காலை 8:00 மணிக்குமாக இரு தடவைகள் சிறிலங்கா வான்படை குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது.
இதில் ஏற்பட்ட சேதவிபரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

மழையாய் பொழிந்த எறிகணைகளுடன் அலை அலையாய் தாக்கிய புலிகள்: சிறிலங்கா ஊடகங்கள் பிரமிப்பு


கிளிநொச்சி மற்றும் கிளாலி களமுனைகளில் சிறிலங்கா படையினர் நடத்திய வல்வளைப்பு நடவடிக்கைகளை புலிகள் எதிர்கொண்டு தாக்குதல் நடத்தியதை சிறிலங்காவின் கொழும்பு ஊடகங்கள் மிகப் பிரம்மிப்புடன் செய்தியாக வெளியிட்டுள்ளன.
"லக்பிம" வார ஏட்டில் வெளியான பாதுகாப்பு பத்தியில் இடம்பெற்றுள்ளதாவது:
சிறிலங்கா படையின் 53 மற்றும் 55 ஆவது படையணிகள் மிக உக்கிர மோதல்களை கடந்த வாரம் சந்தித்துள்ளன. பாதகமாக காலநிலையும், சதுப்பு நிலங்களும் காயமடைந்த படையினரை அகற்றுவதில் பாரிய நெருக்கடிகளை அவர்களுக்கு ஏற்படுத்தியிருந்தன.
கிளாலி - முகமாலை களமுனைகளில் உள்ள விடுதலைப் புலிகளின் பலம் தொடர்பாக படையினர் தவறான கணிப்பை கொண்டிருந்தனர். ஆனால் அங்கு விடுதலைப் புலிகளின் பலம் அதிகம். இரு படையணிகளும் அதிக இழப்புக்களை சந்தித்த பின்னர் பின்வாங்கியுள்ளன.
55 ஆவது படையணி ஏ-9 நெடுஞ்சாலை வழியாகவும், 53 ஆவது படையணி அதற்கு கிழக்குப் புறமாகவும் நகர்வுகளை மேற்கொண்டிருந்தன. படையினர் தமது ஆயுதங்களுடன் பனை மரக்குற்றிகளையும், மணல் சாக்குகளையும் மேலதிகமாக தமது தோள்களில் காவிச் சென்றனர். இது உடனடியாக காப்பரன்களை அமைப்பதற்கு உதவும்.
விடுதலைப் புலிகளின் முன்னணி அரண்களின் அமைவுப் புள்ளிகள் அவர்களின் மோட்டார் அணிகளுக்கு நன்கு பரீட்சயமானது என்பதனால் படையினர் புதிய காப்பரன்களை அமைக்க வேண்டிய தேவை இருந்தது.
இதனிடையே, 55 ஆவது படையணியின் கட்டளை தளபதி பிரிகேடியர் பிரசன்னா சில்வா தனது களமுனை அதிகாரிகளை முன்னணி அரண்களுக்கு சென்று விடுதலைப் புலிகளின் காப்பரண்களின் பலம் தொடர்பாக கண்காணிக்குமாறு பணித்திருந்தார். பிரசன்ன சில்வா முன்னர் சிறப்பு படையணியின் கட்டளைத் தளபதியாக பணியாற்றியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்பார்த்ததை விட அதிகளவான விடுதலைப் புலிகள் அங்கு பிரசன்னமாகி இருந்ததை களமுனை அதிகாரிகள் அவதானித்துள்ளனர். சதுப்பு நிலங்களின் ஊடாக காயமடையும் படையினரை அகற்றுவது கடினம் என்பதையும் அவர்கள் உணர்ந்திருந்தனர். பகல் வேளையில் வெளியான பிரதேசத்தின் ஊடாக காயமடைந்த படையினரை அகற்றுவது மேலும் கடினமானது.
தொடக்க மோதல்களில் 55 ஆவது படையணியைச் சேர்ந்த நான்கு படையினர் காயமடைந்ததுடன் அதில் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார்.
எனவே, நடவடிக்கையை தொடர்வதை 55 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி விரும்பவில்லை. அவர்கள் தமது முன்னைய நிலைகளுக்கு திரும்பிவிட்டனர்.
ஆனால், 53 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் கமல் குணரட்ன நடவடிக்கையை தொடர்வதில் தீவிரமாக இருந்தார். கடுமையான சமர் மூண்டது. இழப்புக்கள் அதிகமாவதை அவதானித்த படையினர் பின்னர் பின்வாங்க முடிவு செய்தனர்.
வெளியான பிரதேசங்களின் ஊடாக பின்வாங்கிய போதே அதிக இழப்புக்களை படையினர் சந்தித்ததாக சில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்த படையினரை காப்பாற்ற முனைந்த சமயம் பல படையினர் கொல்லப்பட்டனர். இந்த சமரில் 26 படையினர் கொல்லப்பட்டதுடன், 89 படையினர் காயமடைந்திருந்தனர்.
அதேசமயம், காலை 6:00 மணியளவில் 57 மற்றும் 58 ஆவது படையணிகள் கிளிநொச்சி நோக்கிய நகர்வை ஆரம்பித்தன. விடுதலைப் புலிகளின் 12 கி.மீ நீளமான "எல்" வடிவ காப்பரணை கைப்பற்றுவதே அவர்களின் முதன்மையான நோக்கம்.
விடுதலைப் புலிகள் உக்கிரமான எதிர்த்தாக்குதலை நடத்தினர். சதுப்பு நிலங்களின் ஊடாக நகர்வது கடினம் என உணர்ந்த 58 ஆவது படையணி தனது நடவடிக்கையை கைவிட்டது.
எனினும் 57 ஆவது படையணி நடவடிக்கையை தொடர்ந்தது.
57 ஆவது படையணியின் மூன்று பிரிகேட்டுக்கள் இந்த நடவடிக்கையில் பங்குபற்றியிருந்தன. அடம்பனில் இருந்து 57-1 பிரிகேட் நகர்வை மேற்கொண்ட போது விடுதலைப் புலிகளின் எறிகணை தாக்குதல்கள் உக்கிரமாக இருந்தது. இராணுவம் வான்படையினரை உதவிக்கு அழைத்தது.
57-2 பிரிகேட் இரணைமடு பகுதியால் நகர்வை மேற்கொண்டது. 57-4 ஆவது பிரிகேட் இரணைமடுகுளம் பகுதி ஊடாக நகர்ந்தது.
விடுதலைப் புலிகள் அலை அலையாக வந்து தாக்கினார்கள். 12 ஆவது சிங்க றெஜிமென்ட அதிக சேதங்களை சந்தித்தது. இழப்புக்கள் அதிகமாவதை அவதானித்த படையினர் பின்வாங்க முடிவு செய்தனர்.
இதன் போது 17 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 15 பேர் காணாமல் போயினர்.
இந்த சமரின் போது கோப்ரல் நமால் உடுவத்தையும் அவரது குழுவினரும் சிறப்பாக செயற்பட்டிருந்தனர். உடனடியாக அவர் சார்ஜனாக பதவி உயர்த்தப்பட்டிருந்தார். ஆனால் அவர் பின்னர் நடைபெற்ற சமரில் கொல்லப்பட்டு விட்டார்.
உக்கிரமான எதிர்ச்சமரை தொடர்ந்து 57-2 ஆவது பிரிகேட் தமது நிலைகளில் இருந்து பின்வாங்கியது. விடுதலைப் புலிகள் இந்த பகுதியில் மூர்க்கமாக தாக்குதலை நடத்தி வருகின்றனர். சில இடங்களில் இருந்து படையினரை பின்வாங்கவும் செய்துள்ளனர்.
காலநிலையும் படையினருக்கு சாதகமானது அல்ல. இறுதியான தகவல்களின் படி 80 படையினர் கொல்லப்பட்டதுடன், 250-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். விடுதலைப் புலிகள் படையினரின் 36 உடலங்களை கைப்பற்றியிருந்தனர். கொல்லப்பட்ட படையினரை அகற்றுவதில் படையினர் அதிக சிரமங்களை சந்தித்திருந்தனர்.
இதனிடையே, முல்லைத்தீவை தனிமைப்படுத்துவதே படையினரின் நோக்கம் என படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இது எவ்வாறு சாத்தியமானது என்பது எதிர்வரும் மாதங்களில் தெரிந்துவிடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சண்டே ரைம்ஸ் வார ஏட்டில் எழுதப்பட்டுள்ளதாவது:
7 ஆயிரம் சிறிலங்கா படையினர் கடந்த செவ்வாய்கிழமை மேற்கொண்ட படை நடவடிக்கை நான்காவது ஈழப்போரில் மிகப்பெரும் எதிர்த்தாக்குதலை சந்தித்துள்ளது.
இந்த நடவடிக்கையில் படைத்தரப்பு மிகவும் அதிகளவு சூட்டுவலுவை பயன்படுத்தியிருந்தது. கிளிநொச்சியை கைப்பற்றுவது தான் படையினரின் பிரதான நோக்கம்.
ஐந்து முனைகளில் உக்கிர மோதல்கள் நடைபெற்றுள்ள போதும் உடகவியலாளர்கள் களமுனைகளுக்கு செல்ல முடியாததால் இழப்புக்கள் தொடர்பான உண்மையான தகவல்களை பெறமுடியாதுள்ளது.
படை வட்டாரங்களில் இருந்து தகவல்களை பெறுவதும் முன்னர் போன்று இலகுவானதல்ல. கடந்த வாரங்களாக படைத்துறை மற்றும் பாதுகாப்பு உயர் வட்டாரங்களில் கிளிநொச்சியை கைப்பற்றுவதற்கான படை நடவடிக்கை தொடர்பான பேச்சுக்களே அதிகம் இருந்தன.
இந்த நடவடிக்கை தொடர்பான கவனம் சிறிலங்காவில் மட்டுமல்லாது முழு உலகிலும் ஏற்பட்டிருந்தது. கிளிநொச்சி விரைவில் கைப்பற்றப்படலாம் எனவும் அது தொடர்பான தகவல்களை சேகரிக்கும் நோக்கத்துடன் வந்திருந்த வெளிநாட்டு ஊடகவியலாளர்களை சந்தித்த போது, அவர்கள் கிளிநொச்சி சில நாட்களில் வீழ்ந்து விடும் என நம்பியிருந்தனர். தற்போது அவர்களில் பலர் தமது நாடுகளுக்கு திரும்பி சென்றுவிட்டனர்.
கடந்த செவ்வாய்கிழமை அதிகாலை 53 மற்றும் 55 ஆவது படையணிகள் முகமாலை களமுனையில் நகர்வை தொடங்கியிருந்தன.
53 ஆவது படையணி கிளாலி நோக்கியும், 55 ஆவது படையணி முகமாலை நோக்கியும் நகர்வை மேற்கொண்டிருந்தன.
பரந்தன் - பூநகரி வீதியில் விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்டிருந்த "எல்" வடிவ மண் அரணை கைப்பற்றும் நேக்கத்துடன் 58 ஆவது படையணி நகர்வை தொடங்கியிருந்தது. அங்கு கடுமையான மோதல்கள் தொடங்கின.
57 ஆவது படையணி கிளிநொச்சி நோக்கிய நகர்வில் ஈடுபட்டிருந்த போது அடம்பன் பகுதியில் உக்கிர மோதல்கள் ஆரம்பித்திருந்தன. கடும் மழை அந்த பிரதேசத்தை சேறும் சகதியுமாக மாற்றியிருந்தது.
இந்த பகுதியில் தான் அதிகளவான படையினர் காணாமல் போயிருந்தனர். எத்தனை பேர் காணாமல் போயுள்ளனர் என்பது தொடர்பான தகவல்களை சில காரணங்களால் அறிய முடியாவில்லை.
வன்னிக்கு மேற்குப் புறமாக புதன்கிழமையே அதிக மோதல்கள் இடம்பெற்றிருந்தன.
திருமுறிகண்டி மற்றும் இரணைமடு பகுதிகளில் கடுமையான மோதல்கள் இடம்பெற்றிருந்தன. இந்த மோதல்களில் இரு தரப்பும் கடும் இழப்புக்களை சந்தித்துள்ளன. படையினர் தமது முன்னரங்க நிலைகளை மாற்றி அமைத்துள்ளனர்.
விடுதலைப் புலிகள் அலை அலையாக வந்து தாக்கியதாகவும், சில இடங்களில் மிக அருகாமையில் நேரடி மோதல்கள் நடைபெற்றதாகவும், விடுதலைப் புலிகள் மோட்டார் எறிகணைகளை மழை போல பயன்படுத்தியதாகவும் தனது பெயரை குறிப்பிடாத படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனவே, விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக தமது ஆயுத விநியோகத்தை பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக பீரங்கி குண்டுகளையும், மோட்டார் எறிகணைகளையும், ஏனைய ஆயுதங்களையும் தருவித்து வருவதாக படையினரின் புலனாய்வுதுறை தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடு ஒன்றுடன் ஆயுத கொள்வனவு தொடர்பாக அவர்கள் அண்மையில் பேச்சுக்களையும் நடத்தியுள்ளதாக அவை மேலும் தெரிவித்துள்ளன.
இராணுவம் கடந்த மாதம் மேற்கொண்ட நகர்வுகளின் போது, ஒரு நகர்வில் கிளிநொச்சியை கைப்பற்றி விடுவார்கள் என பலர் நம்பினார்கள்.
கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற சமரில் மூன்று முக்கிய படையணிகள் பங்குபற்றியிருந்தன. அவர்களின் ஒரே நோக்கம் கிளிநொச்சி நோக்கியதே.
செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட பெரும் தோல்வியானது முல்லைத்தீவு அல்லது கிளிநொச்சி நோக்கிய நகர்வுகள் இந்த வருடத்திற்குள் நிறைவுபெறும் என்ற நம்பிக்கையை தகர்த்துள்ளது. எனவே நாலாவது ஈழப்போர் 2009 ஆம் ஆண்டிற்கும் தொடரப்போகின்றது என அந்த ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, December 19, 2008

புலி ஆதரவு பேச்சு: இயக்குனர் சீமான் கைது

Seeman
சென்னை & திண்டுக்கல்: விடுதலைப் புலிகளை ஆதரித்தும், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை தாக்கியும் பேசிய இயக்குனர் சீமான், காங்கிரஸ் கட்சியின் நெருக்குதலையடுத்து இன்று மீண்டும் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்லை அடுத்த தேவதானப்பட்டியில் சூட்டிங் ஸ்பாட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.

இலங்கை பிரச்சனை தொடர்பாக ராமேஸ்வரத்தில் நடந்த திரைப்பட கலைஞர்கள் பொதுக் கூட்டத்தில் ஆவேசமாக பேசிய இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இயக்குனர் சீமான் அண்மையில் ஈரோட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை ஆதரித்தும், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை தாக்கியும் அவர் பேசினார்.



இந்த மண்ணில் (தமிழகத்தில்) இன்னொரு பிரபாகரன் பிறக்கும் வரை தமிழினம் மீளாது என்று அவர் ஆவேசமாக பேசினார்.

இதையடுத்து சீமானை கைது செய்ய வேண்டும் என காங்கிரசார் போராட்டத்தில் குதித்தனர்.

'குண்டாஸ்'-தங்கபாலு கோரிக்கை:

சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு கோரினார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில்,

ராஜீவ் காந்தி இலங்கை தமிழர்களை அழிக்க அமைதிப் படையை அனுப்பியதாகக் கூறி இந்திய நாட்டையும், அமைதிப் படையையும் கொச்சைப்படுத்தி பேசுவதும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசுவதும், ராஜீவ் காந்தியின் படுகொலையில் முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பிரபாகரனை தமிழர் தலைவர் என்று புகழ்பாடுவதும் இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது மட்டுமல்ல பயங்கரவாதத்தை ஆதரித்து பேசுகிற தேசவிரோத குற்றமும் ஆகும்.

இலங்கையில் தமிழர்கள் சமமான வாழ்வுரிமை பெற வேண்டும் என்பதற்காக, அவர்களது மீட்சிக்காக, வாழ்வு மேம்பாட்டிற்காக உரிய நடவடிக்கைகளை உணர்வோடு மேற்கொண்ட ராஜீவ் காந்தி, சிங்கள வெறியரால் தாக்கப்பட்டதும், அதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் என்ற வெடிகுண்டு இயக்கத்தால் படுகொலை செய்யப்பட்ட கொடிய நிகழ்ச்சியையும் கொச்சைப்படுத்தி பேசுகிற யாரும் உண்மையான தமிழனாக இருக்க மாட்டார்கள்.

இந் நிலையில் ஈரோட்டில் சினிமா இயக்குநர் சீமானும், மற்றும் அவரோடு சிலரும் பேசிய பேச்சுகள் தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்கும் செயலாகவும், சட்டவிரோதமானதும் ஆகும். அவர்கள் பேசி 72 மணி நேரம் ஆனதற்குப் பிறகும் இத்தகைய வன்முறைப் பேச்சுக்களை கேட்டுக் கொண்டு அவர்கள் மீது தமிழக போலீஸ் துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?. யாரை திருப்திபடுத்துவதற்காக?.

இந்த செய்திகள் முதல்வர் கருணாநிதியின் பார்வைக்கு வந்துள்ளதா?. அல்லது மறைக்கப்பட்டுள்ளதா?.

ஏற்கனவே ராமேஸ்வரம் கூட்டத்தில் ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி ஆகிய தலைவர்களின் படுகொலையை நியாயப்படுத்தி பேசிய இவர்கள் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டபோது தமிழக போலீஸ் துறை சார்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காததைத் தொடர்ந்து இன்றைக்கு அதே பேர்வழிகள் அதேபோன்ற தேசவிரோத பேச்சுக்களை பேசி வருகிறார்கள்.

இவ்வாறு அன்றாடம் காங்கிரஸ் பேரியக்கத்தையும், இந்திய திருநாட்டையும், ராஜீவ் காந்தியையும் கொச்சைப்படுத்தி பேசிவரும் பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன். ராஜீவ் காந்தியையும், இந்திரா காந்தியையும் அவர்களது வழியில் இன்றைக்கு சோனியா காந்தியும் தான் இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமைக்காக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருபவர்கள்.

இவைகளுக்குப் பிறகும் தேசவிரோத, மக்கள் விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் சீமான் போன்றவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியை கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

படப்பிடிப்பில் வைத்து கைது:

இந் நிலையில், திண்டுக்கல் அருகே தேவதானப்பட்டியில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த சீமானை, ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் இன்று கைது செய்து அழைத்துச் சென்றனர்.

Thursday, December 18, 2008

உயிரை வேலியாக வைத்து போராளிகள் போரிடுகின்றனர்


நிலங்களை விழுங்கிக்கொண்டு படைகள் நகரலாம். ஆனால் உயிரை வேலியாக வைத்து உங்கள் பிள்ளைகளான போராளிகள் போராடியிருக்கிறார்கள். போராடிக்கொண்டு வருகின்றார்கள்.இவ்வாறு, புதுக்குடியிருப்புக் கோட்டத்தில் இரணைப்பாலை வட்டத்தில் கடந்த 15ம் திகதி மாவீரர், போராளி குடும்பங்களுடனான சிறப்புக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போது புதுக்குடியிருப்புக்கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் ச.இளம்பருதி தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசும்போது, எத்தகைய இடர்கள் வந்தாலும் நம்பிக்கை இழக்காத மக்களால் நீங்கள் இருக்கவேண்டும். எதிரியின் படைக்கட்டமைப்புக்கள் உடைக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் எதிரிப்படைகள் எமது இலக்குகள் சிக்குண்டு அழியப்போகின்றார்கள். இதுதான் உண்மை. எமது மக்கள் தாக்குப்பிடித்துள்ளனர். அதனால் பெருமைக்குரிய மக்களாக எமது மக்களே இருக்கப்போகின்றார்களென அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வானது இரணைப்பாலை வட்ட அரசியல்துறைப்பொறுப்பாளர் து.செம்பருதி தலைமையில் இடம்பெற்றது. இதில் கருத்துரையை புதுக்குடியிருப்பு கோட்ட தேசிய போரெழுச்சிக்குழு பொறுப்பாளர் திருமாறன் ஆற்றினார். இரணைப்பாலை வட்ட சிறப்புவேலைத்திட்டப் பொறுப்பாளர் நிலவனும் இதில் கலந்துகொண்டார்.

விழுப்புண்ணடைந்த போராளிகளுக்கு உலருணவுப் பொருட்கள் வழங்கல்



சிங்களப் படைகளின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்த்துப் போரிட்டு எதிரிக்கு இழப்புகளைக் கொடுத்துவரும் விழுப்புண்ணடைந்த போராளிகளுக்காக உலருணவு வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

கண்டாவளைக் கோட்ட ஆசிரியர் சமூகம், தருமபுரம் வர்த்தகர் சங்கம் கோட்ட போரெழுச்சிக்குழு கண்டாவளை புளியம்பொக்கணை கிராமங்களின் மக்கள் கூட்டுறவுப் பகுதியினர் ஆகியோர் இணைந்து இவ் உலருணவுப் பொருட்களை வழங்கியுள்ளனர்.

இவர்கள் வன்னிமேற்கு, வடபோர்முனை ஆகியவற்றில் களப்பணிலீடுபடும் மக்களுக்குமான உலருணவுப்பொருட்களை வழங்கினர் இந்நிகழ்வுகள் நேற்றுப் பிற்பகல் கண்டாவளைக் கோட்ட அரசியல்துறைப்பொறுப்பாளர் சி.சீராளனின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்றது.

கிளிநொச்சி சமரில் படையினரின் மேலதிக இழப்புக்களை நிரூபித்த புலிகள்: இந்திய றோ முன்னாள் செயலாளர் பி.இராமன்



கிளிநொச்சி சமர்க்களம் தொடர்பாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ள தகவல்களை விட புலிகள் தெரிவித்திருக்கும் தகவல்கள் உண்மையாக இருப்பதாகத் தெரிகிறது என்று இந்திய றோவின் முன்னாள் செயலாளர் பி. இராமன் கூறியுள்ளார்.

கிளிநொச்சி சமர்க்களம் தொடர்பாக அவர் எழுதியுள்ள கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள்:

புத்தாண்டுக்கு முன்னர் கிளிநொச்சியைக் கைப்பற்றுவோம் என்ற சிறிலங்கா படைத் தளபதி பொன்சேகாவின் உறுதிமொழியை நம்பி புதிதாக படையணிகளில் சேர்க்கப்பட்ட சிங்கள இளைஞர்கள் மரணத்தை முத்தமிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

(1940-களில் நடைபெற்ற) கொரிய போரிலும் கூட இதே போன்றதொரு உறுதியை ஜெனரல் டக்ளஸ் மாக் ஆர்தர் கூறியிருந்தார். தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்கப் படைகள் போரில் வடகொரியா மற்றும் சீனப் படைகளுக்கு எதிராக போரிட்டு வந்தன. அப்போது "நத்தார் நாளுக்கு முன்னதாக போரை முடித்து வீடுகளுக்குத் திரும்புவோம்" என்று மாக் ஆர்தர் உறுதிமொழி அளித்திருந்தார்.

"நத்தார் நாள்" வந்தது..சென்றது... ஆனால் வடகொரியர்களும் சீனர்களும் மிகக் கடுமையாகப் போராடினர்.

மீண்டும் மாக் ஆர்தர் அதேபோன்ற உறுதிமொழியைத் தர "எந்த ஆண்டு நத்தார் நாளில் வீட்டுக்குத் திரும்புவது?" என்ற விரக்தியான கேள்வி எழுந்தது. அந்த போர்க் களத்தில் இருதரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

இந்த வாரத்தின் தொடக்கத்தில் கிளிநொச்சி புறநகர்ப் பகுதிகளில் கடுமையான மோதல்கள் நடைபெற்று வருகின்றன.

சிறிலங்கா படைத்தரப்புக்கும் புலிகளுக்கும் குறிப்பிடத்தக்க இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. போர்க் களங்களில் ஒவ்வொரு தரப்பும் இழப்புக்களை குறைத்துக் கூறுவது உண்டுதான். ஆனால் சிறிலங்கா படைத்தரப்பு வெளிப்படுத்துவதைவிட புலிகள் கூறுவது உண்மைக்கு நெருக்கமானதாக உள்ளது.

சிறிலங்கா படைத்தரப்பினர் 170 பேரை கொன்றுவிட்டதாக புலிகள் தெரிவித்திருந்தனர்.

படைத்தரப்போ 25 பேரை மட்டுமே இழந்திருந்ததாக கூறியது.

ஆனால் விடுதலைப் புலிகளோ கொல்லப்பட்ட 36 படையினரின் படங்களை வெளியிட்டு மேலதிக இழப்புக்களை படைத்தரப்புக்கு ஏற்படுத்தியதை நிரூபித்திருக்கின்றனர்.

இருதரப்பிலும் கடுமையான போர் நடந்து இளையோர் பலர் உயிரிழந்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளைவிட சிறிலங்கா தரப்பு பெரும் எண்ணிக்கையிலான படையப் பொருட்களை இழந்திருக்கின்றன. புலிகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் அந்த படையப் பொருட்கள் அவர்களின் கைகளுக்குச் சென்றுள்ளது.

பாரிய ஒரு இலக்குடன் நன்கு பயிற்றுவிக்கப்பட்டவர்களாக புலிகள் போர்க்களத்தில் நின்றனர். சிறிலங்கா படைத்தரப்பிடமிருந்து படையப் பொருட்களை அவர்கள் கைப்பற்றினாலும் ஆயுதப் பற்றாக்குறை உள்ளது.

சிறிலங்கா படையினரின் வான் தாக்குதல்களுக்கு பதிலடியான வான் தாக்குதல்களை புலிகள் நடத்தவில்லை.

சீனா மற்றும் ஈரான் நிதியுதவியுடன் ஆயுதங்களை சிறிலங்கா பெரும் எண்ணிக்கையில் குவித்தது. ஆனால் புலிகளை ஒப்பிடுகையில் படையினர் நன்கு பயிற்றுவிக்கப்படவில்லை.

போரை எதிர்பார்த்து பல வாரங்களுக்கு முன்னரே புலிகள் கிளிநொச்சி அலுவலகங்களை விட்டு வெளியேறிவிட்டனர். கிளிநொச்சியில் இப்போது எதுவும் இல்லை. ஆனால் சிறிலங்கா படையினருக்கு மரண முற்றுகைக் களமாக அது உள்ளது. எது மரண முற்றுகைக் களம் என்பது புலிகளுக்கு தெரியும். சிறிலங்கா படைத்தரப்புக்கு தெரியாது. இதுவே புலிகளுக்கு சாதகமானதாக உள்ளது என்று அதில் பி.இராமன் தெரிவித்துள்ளார்.

கழுத்து வெட்டப்பட்ட இரண்டு படை சிப்பாய்களின் சடலம் மீட்பு.


யாழ்ப்பாணம் நாவில்ல பகுதியில் கரையோர பாதுகாப்பு பணியில் இருந்த படையினர் இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளனர்.

இன்று காலையில் இந்த இரு சடலமும் மீட்க்கப்பட்டுள்ளது. இவர்கள் யாரால் வெட்டப்பட்டார்கள் என்பது குறித்த தகவல்கள் எதுவும் இதுவரையில் தெரியவரவில்லை.

இதேவேளை நேற்றைய தினம் பெய்த கடும் மழையால் வடமராட்சி கொட்டோடை அம்மன் கடற்கரைப் பகுதியில் படையினரால் அமைக்கப்பட்டிருந்த படைப் காவலரண்கள் பல கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. கரையோரப் பகுதிகளில் காவலரண்களை அமைப்பதில் பெரும் சிரமங்களை படையினர் எதிர்கொள்வதாவும் தெரிவிக்கப்படுகின்றது.

படையினரின் 25 உடலங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளினால் ஐ.சி.ஆர்.சியிடம் கையளிப்பு


கிளிநொச்சியில் வைத்து சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் சிறிலங்கா படையினரின் 25 உடலங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளினால் கையளிக்கப்பட்டது.

இன்று வியாழக்கிழமை புதுக்குடியிருப்பில் வைத்து சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் வன்னிக்கான வதிவிட பிரதிநிதி யூலியனிடம் புதுக்குடியிருப்பு கோட்ட அரசியல்துறை பொறுப்பாளர் இளம்பரிதியினால் கையளிக்கப்பட்டது.

இன்னுமொரு படையினரின் உடலங்கள் தொகுதி நாளை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இளம்பரிதி மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ் குடாநாட்டில் பெரும்பாலானவர்கள் அழுத்தத்தின் மத்தியிலேயே பணியாற்றுகின்றனர்! அரச அதிபர்


குடாநாட்டில் மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் உட்பட அனைவரும் அழுத்தத்தின் மத்தியிலேயே பணியாற்றி வருவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஷ் தெரிவித்தார்.

யாழ் குடாநாட்டில் பெரும்பாலானவர்கள் அழுத்தத்தின் மத்தியிலேயே பணியாற்றி வருகின்றனர். இலங்கையில் மாத்திரமன்றி உலகில் பெரும்பாலான நாடுகளில் ஆளும் மத்திய அரசாங்கத்தின் கட்டளைப்படியே அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் காரணமாக பெரும்பாலான நாடுகளிலுள்ள சிறுபான்மை இனத்தவர்கள் ஒடுக்கப்படுகின்றனர்

இன்று வியாழக்கிழமை யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் மனித உரிமைகள் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அரசாங்க அதிபர் இவ்வாறு கூறினார்.

யாழ் குடாநாட்டில் காணப்படும் மோசமான நிலையிலும் மனித உரிமைகளைக் கண்காணிக்கும் நோக்கில் பணியாற்றிவருவது பாராட்டத்தக்கது எனவும் அவர் கூறினார்.

மனித உரிமைகள் பற்றிய விளிப்புணர்வு பாடசாலைகள் மட்டத்திலிருந்து ஏற்படுத்தப்பட்டு அதனைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது அவசியம் என அவர் கூறினார்.

வன்னி களமுனைப் படங்களால் சிறீலங்கா மக்கள் மத்தியில் பெரும் குழப்பம்

கிளிநொச்சி சமரின் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் வெளியிட்டுள்ள படங்கள் மற்றும் செய்திகள் சிறீலங்காவின் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக, கொழும்புச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

சிறீலங்கா படையினர் கிளிநொச்சி நோக்கி 5 கிலோமீற்றர் முன்னேறியுள்ளதாகவும், விடுதலைப்புலிகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் 120 போராளிகள் உயிரிழந்தும் 250 பேருக்கு மேல் காயமடைந்துள்ளதாகவும் சிறீலங்காவின் ஊடகங்கள் முன்னர் தகவல் வெளியிட்டிருந்தன.

ஆனால் விடுதலைப்புலிகள் வெளியிட்ட உடலங்கள், மற்றும் சிறுவர் படையணி பற்றிய படங்கள் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை. கடந்த வாரம் சிறீலங்காவின் தரைப்படைத் தளபதி வெளியிட்ட கருத்தும். சிறீலங்கா மக்கள் மத்தியில் கடும் அதிருப்பதியையும் ஏற்படுத்தியுள்ளது.

விடுதலைப் புலிகளில் 12,500 போராளிகளை தாம் கொன்றுள்ளதாகவும். இன்னும் 1.500 பேர் மட்டுமே போராடும் வலுவுடன் உள்ளதாகவும் கரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.

அது பற்றி எமக்கு கருத்து தெரிவித்த சிறீலங்காவின் பிரபல அரசியல் கட்சியின் அங்கத்தவர் ஒருவர், சரத் பொன்சேகாவின் கருத்துபடி நேற்றைய இழப்புகளின் பின்னர் விடுதலைப் புலிகளில் வெறும் 1000 பேரே இருக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், நாகர்கோவில் கிளாலி மற்றும் பூநகரி முதல் மணலாறுவரை பல கிலோ மீற்றருக்கு மேல் இருக்கும் இடத்தினைக் காப்பதற்குக்கூட விடுதலைப் புலிகளுக்கு பேராளிகள் போதாத நிலையில். எவ்வாறு அவர்கள் இவ்வாறான தாக்குதலை நடத்த முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

பகுத்தறிவு அற்ற பேரினவாதச் சிந்தனையுடன் சிங்கள மக்களை வைத்திருப்பதில் சிறீலங்கா அரசு வெற்றிபெற்று வருவதாகவும். அவர்களது பரப்புரை சிங்கள மக்கள் மத்தியில் வெற்றிபெறுகின்ற போதிலும். மேற்குலகில் தோல்விகண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நன்றி : இன்போதமிழ்

கிளாலி மோதலில் சிறீலங்கா படைகளின் கவச ஊர்திகளுக்கும் சேதம்

யாழ் கிளாலியில் இடம்பெற்ற நேற்றைய சமரில் சிறீலங்கா படைகளின் கவச ஊர்திகள் சிலவும் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சேதடைந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

சேதமடைந்த ஊர்திகளை மீட்ட சிறீலங்கா படையினர், அவற்றை காவு பார ஊர்தியில் இழுத்து சென்றதை நேரில் பார்த்திருப்பதாக, ஐரோப்பிய தொலைக்காட்சியின் தென்மராட்சி செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

நேற்று புதன்கிழமை அதிகாலை இவ்வாறு இரண்டு பார ஊர்திகளில் சிறீலங்கா படையினர் சேதமடைந்த கவச ஊர்திகளைக் கொண்டு சென்றதாக அவர் தெரிவித்தார்.

ஆனால் சிறீலங்கா படையினர் கிளாலியில் இடம்பெற்ற மோதல் பற்றி இதுவரை தெளிவான தகவல் எதையும் தெரிவிக்கவில்லை என்பதுடன், கிளாலியில் முன்னகர்ந்து தாக்கிய படையினர் காலையிலேயே தமது தளம் திரும்பியிருப்பதாக மட்டும் சிறீலங்கா படைத்துறைப் பேச்சாளர் தெரிவித்தார்.

நன்றி இன்போதமிழ்

நாங்கள் கடைசிப் போர் மறிப்புச் சமருக்குள் நிற்கின்றோம் இம்ரான் பாண்டியன் படையணியின் சிறப்புத் தளபதி வேலவன்.


எதிரியின் முன்னணிப் படைகள் அழிக்கப்பட்ட நிலையிலே முன்னணிப் படையினர் கடைசிப் படைகளைக்கொண்டு போரை நடாத்துகின்ற கட்டத்திற்கு எதிரி தள்ளப்பட்டுள்ளான் என இம்ரான் பாண்டியன் படையணியின் சிறப்புத் தளபதி வேலவன் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் கிளிநொச்சியில் சிறிலங்காப் படைகளுக்கு எதிராக உக்கிரமான தாக்குதலை நடாத்தி பேரிழப்பைக் கொடுத்த போராளிகளுக்கு கண்டாவளை, விசுவமடுக் கோட்ட மக்களால் உலருணவு வழங்கும் நிகழ்வு நேற்று கிளிநொச்சி களமுனையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், உண்மையில் நாம் விடுதலைப் போராட்டத்தில் நெருக்கடியானதொரு சூழ்நிலையில் நிற்கின்றோம். இப்படியிருந்தும் நீங்கள் கிளிநொச்சி கட்டளைப் பணியகப் போராளிகளுக்கு உலர்உணவுகளைக் கொண்டுவந்து தந்திருப்பது மிகவும் மகிழ்ச்சிதரக்கூடிய விடயம். நாங்கள் உங்களைச் சந்தித்துக் கதைக்கவேண்டுமென்ற காரணம் நீங்கள் கஸ்டத்தின் மத்தியில் வந்திருப்பது மட்டுமல்லாது, போர்ரீதியாக நிலைமை, இராணுவரீதியான யாதார்த்தநிலை என்பவை தொடர்பாக உங்களுக்குச் சொல்லவேண்டும் என்பதே மிகவும் முக்கியமானது.

அந்த விடயங்களைப் பொறுத்தவரையில் நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். கட்டம் கட்டமானது பாதுகாப்பு நிலைச் சமர்களுக்குள் பிரதேசங்கள் விடுபட்டிருக்கின்றன. இந்தச் சமர்களால் தற்பொழுது நாங்கள் கடைசிப் போர் மறிப்புச் சமருக்குள் நிற்கின்றோம். அதேநேரம் இராணுவத்தின் நிலைமையும் ஒரு இறுதிக்கட்டமான நிலைமைக்குள் நிற்கின்றது. இறுதிக்கட்டமான நிலைமை என்பது நேற்று நடந்த சண்டையாக இருக்கலாம். அல்லது குறிக்கப்பட்ட நாட்களுக்கு முன்நடந்த சண்டைகளாக இருக்கலாம். அந்தச் சண்டைகள் எதிர்வுகூறி நிற்கின்றன.

விடுதலைப் போராட்டம் என்பது பின்னடைவுகளைச் சந்திப்பது அல்லது முன்னோக்கிச் செல்வது என்பது வரலாறு, அது உலக நாடுகளில் நடந்த அனைத்து விடுதலைப் போராட்டங்களில் வரலாறும் அப்படித்தான் இருக்கின்றது. யதார்த்தரீதியாக நாம் ஒரு கட்டநிலையில் இருக்கும்போது எதிரி இன்னொரு கட்டத்தில் இருப்பான். அதேநேரம் வெற்றி, தோல்வி என்பது மாறுபட்ட நிலையில் இருக்கும். ஆனால் இன்றைக்கு முழுமையாக எதிரியை வெல்லக்கூடிய நிலையில்தான் நாம் இருக்கின்றோம்.

ஆனால் எதிரியைப் பொறுத்தவரையில் முன்னணிப் படைகள் அழிக்கப்பட்ட நிலையில் முன்னணிப் படைகளின் கடைசிப் படைகளை வைத்து ஒருபோரைச் செய்கின்ற தீவிரமான கட்டத்திற்கு எதிரி தள்ளப்பட்டுள்ளான். அந்த ஒரு நெருக்கடியான கட்டத்தில் எதிரியின் நிலை இருக்கும்போது இனித்தான் விழிப்பாக முழுவீச்சாக நாங்கள் எல்லோரும் போராட்டத்திற்குள் முழுமையாக ஈடுபடவேண்டிய சூழலில் இருக்கின்றோம். இதில் நாங்கள் இரண்டு செய்திகளைச் சொல்லவேண்டும். ஒன்று எமது மக்களுக்கு எங்களுடைய விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தவரையில் ஒரு தமிழன் உள்ளவரை சண்டையென்பது நடக்கும்.

அதேநேரம் சிறிலங்கா இராணுவத்திற்கு ஒருசெய்தியைச் சொல்லவேண்டும். என்னவென்றால் மகிந்த அரசினதோ, அல்லது சரத் பொன்சேகாவினதோ இராணுவ ஆட்சிக்காலம் குறிக்கப்பட்ட காலத்தில் இல்லாமல் போகலாம். ஆனால் 35 வருடமாக சிறிலங்கா இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் நேரடியான சண்டைகள் மூலம் தொடர்புகள் இருக்கின்றன. அது எப்பவும் நிற்கப் போவதில்லை. அது தமிழன் இருக்குவரை சிறிலங்கா இராணுவத்திற்கும் எங்களுக்கும் யுத்தம் என்பது இருக்கும்.

இந்தக் காலத்தில் இராணுவம் எவ்வளவு பிரதேசங்களை வல்வளைப்புக்குள் ஏற்படுத்தினாலும் சரி இப்ப ஆடிக்கொண்டிருக்கின்ற அரச இயந்திரம் அல்லது இராணுவத்தில் ஏதேனும் மாற்றங்கள் வந்தாலும் சரி சிறிலங்கா இராணுவத்தின் கீழ் மட்டத்திலுள்ள போர் என்பது நீண்டகாலமாக இருக்கின்றது. இது விடுதலைப் போராட்டத்தில் சர்வசாதாரணமான நிகழ்வு. அந்த நிகழ்வு மாறுபட்டு நடக்கும் இன்று எங்களுடைய காலமாக இருக்கும் அல்லது இராணுவத்தின் காலமாக இருக்கும்.

அதாவது ஏற்றத்தாழ்வாக மாறி, மாறி நடக்கின்ற ஒரு நிலைமைதான் இந்தப் போரியல் என்பது. இந்தப் போரையும் அப்படித்தான் பார்க்கிறோம். இன்றைக்கு எங்கள் குறிக்கப்பட்ட இடங்கள் விடுபட்டிருக்கின்றன. அது யதார்த்தமான உண்மை. ஆனால் இன்றைக்கு முற்றுமுழுதாக நாங்கள் முன்னணிப் படைகளை அழித்து வருகின்றோம். நேற்று நடந்த சண்டையில் சிறிலங்காப் படையினரின் 57வது டிவிசனில் முற்றுமுழுதாக இரண்டு பிரிகேட் பங்குபற்றியது. இவர்கள் இரண்டு பிரதான உடைப்புக்களை ஏற்படுத்தி கிளிநொச்சியின் குறிக்கப்பட்ட பிரதேசங்களைப் பிடிப்பதற்கு பெரியளவில் நகர்வைச் செய்தனர்.

ஆனால் இன்றைக்கு அப்பிரதேசங்களைப் பிடித்து வைத்திருக்க முடியாத அளவிற்கு முறியடிப்புச் சமரை நாம் செய்துள்ளோம் இதில் படையினரின் சடலங்கள், ஆயுதங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. இதில் சண்டை மாற்றம் அடைந்துள்ளது. முற்றுமுழுதாக கிளிநொச்சியைப் பாதுகாப்பதற்கு அதியுச்சமான சண்டை நடந்து கொண்டிருக்கின்றது.

அவற்றோடு உங்களில் இருந்து வருகின்ற எல்லைப்படை மக்கள் படையினர் போராளிகளோடு முழுமையாக ஈடுபட்டு வருகின்றார்கள். அதாவது போராளிகள் நேரடியாக நின்று சண்டை பிடிக்கின்ற இராணுவத்தின் துப்பாக்கி ரவைகள், எறிகணைகள் மத்தியில் நின்று நேரடியாக மக்கள் படையினர் வேலைகளைச் செய்கின்றனர் நாங்கள் நின்று சண்டைகள் பிடிக்கின்ற காப்பரண்கள் மக்கள் படையால செய்து தரப்பட்டவைதான்.

அதனால்தான் நல்ல சண்டையைச் செய்யக்கூடிய மாதிரி இருக்கின்றது. இந்தப் போராட்டத்தைப் பொறுத்தவரையில் இதை நீங்கள் தோல்வியான கட்டம் என்று நினைக்கக்கூடாது. கிளிநொச்சியைப் பொறுத்தவரையில் நேற்று எடுத்த முன்னகர்வும் குஞ்சுப்பரந்தன் ஊடாக எடுத்தநகர்வும்தான் பெரிய முன்னகரிவுகள். இதனை முற்றுமுழுதாக முறியடித்து விட்டோம்.

இன்றைக்கு சண்டை பிடிக்கின்ற படையினர் தாங்கள் கேட்கின்ற எறிகணைகளை அடித்துக் கொடுக்கக் கூடிய அளவில் படையினரின் பீரங்கிப்படைகள் இல்லை. அவர்களும் கடைசிக் கட்டத்தில்தான் இருக்கின்றார்கள். மக்களைப் பொறுத்தவரையில் நீங்கள் தெளிவாக இருக்கவேண்டும். இனி எப்படி மாற்றங்களை உருவாக்கலாம் என்பதைப் புரிந்திருக்க வேண்டும்.

இந்த விடுதலைப் போராட்டம் என்ன இலட்சியத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அது கட்டாயம் நிறைவேறும். அது நிறைவேறும் என்பதில் எல்லோரும் உறுதியாக இருக்கின்றோம் அதில் நீங்களும் பக்கபலமாக உறுதியாக இருந்து களச்செயற்பாட்டில் ஈடுபட்டு எங்களுடைய வெற்றிக்காக இன்னும் உழைக்கவேண்டும். இவ்வாறு சிறப்புத் தளபதி வேலவன் அவர்கள் தனதுரையில் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் சிறிலங்கா படையினரின் தாக்குதல் முறியடிப்பு: புதுமுறிப்பில் 12 உடலங்களும் படையப் பொருட்களும் மீட்பு



கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள புதுமுறிப்பு பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட இன்னுமொரு முன்நகர்வு முயற்சியும் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் படையினரின் 12 உடலங்களும் பெருமளவு படையப் பொருட்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

புதுமுறிப்பு பகுதியில் இன்று புதன்கிழமை காலை சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல் முறியடிக்கப்பட்டது.

இதன் போது படையினரின் 12 உடலங்களும் பெருமளவு படையப் பொருட்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஆயுத விவரம் வருமாறு:

ஆர்.பி.டி எல்.எம்.ஜி - 02

பி. கே எல்.எம்.ஜி - 02

ஆர். பி. ஜி - 07

பி. ஏ 35 - 01

சி. டி 70 - 01

ஏகே ரவைகள் - 37,000

ஏகே ரவை இணைப்பிகள் - 1,230

பிகே இணைப்பிகளுடன் ரவைகளுடன் - 12,000

ஆர்.பி.ஜி எறிகணைகள் - 49

ஆர்.பி.ஜி புறப்ளர்கள் - 37

கைக்;குண்டுகள் - 132

மற்றும் படையப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நேற்று செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி மற்றும் கிளாலி களங்களில் ஐந்து முனைகளில் முன்னேறிய படையினரை விடுதலைப் புலிகள் முறியடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு நாள் மோதல்களில் மொத்தமாக சிறிலங்கா படைத்தரப்பில் 165 போ் கொல்லப்பட்டுள்ளதுடன் 375 பேர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்ட படையினரின் 38 உடலங்களையும் பெருமளவு படையப் பொருட்களையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர்.

வாகரையில் சிறிலங்கா படையினரின் காவலரண் மீது கைக்குண்டுத் தாக்குதல்: இருவர் பலி



மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வாகரை பகுதியில் சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கைக்குண்டுத் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

வாகரை பகுதியில் உள்ள தட்டுமுனையில் நேற்று புதன்கிழமை சிறிலங்கா படையினரின் காவலரண் மீது விடுதலைப் புலிகள் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தினர்.

இதில் படைத்தரப்பைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் காயமடைந்தனர் என விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்தனர்.

படையினர் 170 பேர் பலி, 400 பேர் காயம், 36 உடலங்கள் விடுதலைப் புலிகளால் மீட்பு - AP


வன்னியில் ஒரு நாள் இடம்பெற்ற மோதலில் மட்டும் சிறீலங்கா படையினர் 170 பேர் பலியானதுடன்,400 பேர் வரையில் காயமடைந்திருப்பதாகவும்,36 உடலங்கள் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளதாகவும் AP (Associated Press) செய்திச் சேவை அறிவித்துள்ளது.

AP யின் செய்தியை மேற்குலகின் பல ஊடகங்கள் இன்று காலை முதல் வெளியிட்டு வருவதால், சிறீலங்கா அரசின் பரப்புரையில் பாரிய இடி விழுந்துள்ளதாக வர்ணிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி களமுனையில் மட்டும் 130 படையினர் கொல்லப்பட்டிருப்பதாக விடுதலைப் புலிகள் தகவல் வெளியிட்டிருந்தனர். இதற்கு முன்னர் கிளாலியில் 40 படையினர் கொல்லப்பட்டிருந்தனர். இந்த இரு இடங்களிலும் முறையே 300 மற்றும் 120 வரையிலான படையினர் காயமடைந்திருந்தனர்.

படையினர் கூறும் தகவல்களை வழமையாக முதலில் வெளியிட்டுவரும் மேற்குலக ஊடகங்கள் இம்முறை விடுதலைப் புலிகள் தரப்பு செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, அதன் பின்னர் அரச தரப்பு கூறும் தகவல்களை வெளியிட்டு வருகின்றன.

கிளிநொச்சி மோதலில் விடுதலைப் புலிகள் தரப்பில் 120 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், தமது தரப்பில் 25 படையினர் பலியாகி இருப்பதாகவும் அரச தரப்பினர் நேற்று அறிவித்திருந்தனர்.

விடுதலைப் புலிகள் 10 உடலங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகக் கூறப்பட்ட பின்னர் மேலும் 10 படையினர் காணாமல் போயிருப்பதாகவும் படைத்தரப்பு கூறியது.

படையினரது 10 உடலங்கள் முன்னரும், பின்னர் 8 உடலங்களும், அதனைத் தொடர்ந்து இன்று புதன்கிழமை காலை 10 உடலங்களுமாக மொத்தம் 28 உடலங்கள் கிளிநொச்சியில் மட்டும் கைப்பற்றப்பட்டிருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தமது தரப்பில் கொல்லப்பட்ட படையினரது எண்ணிக்கை 5 முதல் 10 ஆக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக, சிறீலங்கா படைத்துறைப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளால் 36 உடலங்கள் கைப்பற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், தமது இழப்பு எண்ணிக்கையை அதிகரிக்கும் நிலைக்கு படையினர் தள்ளப்பட்டுள்ளனர்.

வழமையாக விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட உடலங்களின் எண்ணிக்கையை வைத்து, தமது இழப்பு விபரத்தை படையினர் வெளியிட்டு வந்த நிலையில், விடுதலைப் புலிகள் தாம் கைப்பற்றிய உடலங்கள் பற்றிய விபரங்களை மூன்று தடவைகள் வெளியிட்டதன்மூலம் படையினரது மூடிமறைப்பு விளையாட்டிற்கு விடுதலைப் புலிகள் ஆப்பு வைத்துள்ளனர்.

இதேவேளை, AFP, BBC, CNN, அல்ஜசீரா, போன்ற ஊடகங்கள் கிளாலி இழப்பினைத் தவிர்த்து, கிளிநொச்சியில் 140 படையினர் கொல்லப்பட்டதையும், 300 வரையிலான படையினர் காயமடைந்திருப்பதையும் செய்தியாக வெளியிட்டிருப்பதுடன், இதேபோன்று உலகின் முன்னனணி ஊடகங்கள் அனைத்தும் செய்தி வெளியிட்டு வருகின்றன.

Wednesday, December 17, 2008

வட்டக்கச்சியில் மக்கள் குடியிருப்புகள் மீது விமானத்தாக்குதல்கள்: ஒரு வயது குழந்தை உட்பட 6பேர் காயம்



கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சி, கட்சன் வீதிப் பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா விமானப்படையின் வைற்றர் ஜெற் விமானங்கள் இரு தடவைகள் தாக்குதல்கள் நடாத்தியதில் ஒரு வயது குழந்தை, இரண்டு சிறுவர்கள் உட்பட 6 அப்பாவி பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

இத்தாக்குதல்கள் இன்று புதன்கிழமை காலை 7.30 மணிக்கும், மு.பகல் 10 மணிக்கும் இரு தடவைகள் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த இரண்டு சிறுவர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் சிந்துஜா வயது 8, மற்றையவர் நிருஷன் வயது 10. இவர்கள் இருவரும் வட்டக்கச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று கிளிநொச்சியிலும், கிளாலி களமுனைகளிலும் புலிகளிடம் இப்படி படுதோல்வி அடைந்த சிங்கள இராணுவம் அப்பாவி மக்கள் மீது தனது கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.வட்டகச்சி பகுதியில் வீடுகளை இழந்த பொதுமக்கள் வசித்து வந்த குடிசைகள் மீது இன்று காலை முதல் இரண்டு தடவைகள் இராணுவ விமானங்கள் குண்டு மழை பொழிந்துள்ளன.

அத்துடன் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் செறிவாக வாழ்கின்ற வட்டக்கச்சி, ஒட்டுசுட்டான், முள்ளியவளை பகுதிகளை இலக்குவைத்து சிறிலங்கா இராணுவத்தினர் ஆட்டிலறி எறிகணைத் தாக்குதலை நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிறிலங்காப் படையில் சிறுவர் இராணுவம்



சிறிலங்காப் படையில் சிறுவர் இராணுவமாக பயன்படுத்தப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. நேற்றை தாக்குதலில் கொல்லப்பட்ட படையினரில் 32 உடலங்கள் விடுதலைப் புலிகளால் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒருவர் சிறுவராக இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிள் சிறுவர்களை படையில் இணைத்து வருவதாக சிறிலங்கா சர்வதேச ரீதியில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் நிலையில் சிறுவர் படையணி சிறிலங்கா இராணுவத்தில் இருப்பது அம்பலமாகியுள்ளது.

கிளிநொச்சி நோக்கிய பாரிய நான்கு முனை நகர்வு முறியடிப்பு - 140 படையினர் பலி, 370 பேர் படுகாயம்;, 32 உடலங்கள் உட்பட ஆயுதங்கள் புலிகள் வசம்

கிளிநொச்சியை ஆக்கிரமிக்கும் நோக்குடன் சிறிலங்கா மேற்கொண்ட இன்னொரு முயற்சியும் விடுதலைப் புலிகளால் இன்று முறியடிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் முன்னேற முனைந்து ஏராளமான படையினரைப் பறிகொடுத்து பெரும் இழப்புக்களைச் சந்தித்த சிறிலங்கா, இன்று கிளிநொச்சி நோக்கி நான்கு முனைகளின் ஊடாக மேற்கொண்ட முன்நகர்வும் கிளாலியில் இருந்து மேற்கொண்ட முன்நகர்வும் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 140ற்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 370ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். 18 உடலங்களும், பெருமளவு ஆயுத தளவாடங்களும் புலிகள் வசமாகியுள்ளன.

இராணுவத்தினர் முன்னேற முனைந்த பகுதிகளில் புதன்கிமை காலை விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது மேலும் ஆறு உடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது, குஞ்சுப்பரந்தனில் இருந்து கிளிநொச்சி நோக்கியும் முறிகண்டியில் இருந்து இரணைமடு நோக்கியும் புலிக்குளத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கியும் மலையாளபுரத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கியுமாக நான்கு முனைகளில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.00 மணியளவில் சிறிலங்கா படையினர் முன்நகர்வுகளை மேற்கொண்டனர்.

செறிவான பல்குழல் வெடிகணை, ஆட்லெறி எறிகணை மற்றும் கனரக போர்க்கலங்களின் சூட்டாதரவுடன் முன்நகர்வுகளை மேற்கொண்ட சிறிலங்கா படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த்தாக்குதலை நடத்தி முன்நகர்வுகளை முறியடித்தனர். இதில் 100-க்கும் அதிகமான சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டனர். 250-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். படையினரின் 10 உடலங்கள் உட்பட பெருமளவிலான ஆயுத தளவாடங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக என்று விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் தெரிவித்துள்ளனர். இதன்போது 2 ஏ.கே.எல்.எம்.ஜி ரக துப்பாக்கிகளும், ஒரு பி.கே.எல்.எம்.ஜி ரக துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ள ஆயுத தளவாடங்கள் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று கிளாலியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட முன்நகர்வினை முறியடித்த விடுதலைப் புலிகள் 40ற்கும் அதிகமான சிறிலங்கா படையினர் கொன்று 120க்கும் அதிகமானோரை காயப்படுத்தி படையினரின் 8 உடலங்கள் உட்பட படையப் பொருட்களை கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் ஆரம்பித்த முன்னகர்வு முயற்சி காலை 10.30 மணிவரை சுமார் ஒன்பது மணிநேரங்கள் கிளாலியில் நீடித்ததாக விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா படைகளின் 53வது டிவிசன் கொமாண்டோ படையணியின் எயார் மொபைல் பிரிகேட் கொமாண்டோ படையணியே முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்ட போதிலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் கடுமையான தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாது பின்வாங்கியுள்ளது.

முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்ட படையினருக்கு பின்தள பீரங்கி, பல்குழல் சூட்டாதரவு வழங்கப்பட்டதுடன், டாங்கிகளும் முன்னேறும் படையினருடன் களமிறக்கப்பட்டிருந்தன.

இந்த முன்னகர்வு முறியடிப்பின்போது சிறீலங்கா படையினரின் சடலங்கள் உட்பட பெருமளவு ஆயுதங்களும் மீட்கப்பட்டிருப்பதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

யாழ். குடாநாட்டில் அடுத்து வரும் சில தினங்களில் விடுதலைப் புலிகளின் வசமுள்ள முகமாலை மற்றும் கிளாலி முன்னரங்க பாதுகாப்பு நிலைகளை இராணுவத்தினர் கைப்பற்றி விடுவார்களென யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் டி.ஏ.சந்திரசிறி தெரிவித்திருந்த நிலையில் இன்று இந்த தாக்குதல் தொடங்கப்பட்டிருந்தது.

யாழ்ப்பாண இராணுவ தலைமையகத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனக் கூறியிருந்தார்.