Monday, February 2, 2009

புலிகளின் அடுத்த மூவ்

அமெரிக்க ஆயுதம்...

போர் தரும் வேதனையைவிட, 'தங்கள் தகப்பன் நாடான இந்தியா தங்களை ஆதரிக்கவில்லை!' என்கிற வேதனைதான் ஈழத்தமிழர்களை வாட்டி யெடுக்கிறது. இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் பிரணாப் முகர்ஜியின் பயணமும் 'வந்தார்... சென்றார்' என்கிற ரீதியில் ஒரு சம்பிரதாயமாக நடந்து முடியவே, இறுதி நம்பிக்கையையும் இழந்து தவிக்கின்றன தமிழ் உறவுகள்.

காவுகொண்ட கறுப்புத் திங்கள்!

'முல்லைத்தீவு நகரைப் பிடித்துவிட்டோம்!' என்று கடந்த 25-ம் தேதி இலங்கை ராணுவம் அறிவித்திருந்த வேளையில், விசுவமேடு சந்தி பகுதியில் தங்களுடைய கடைசி பீரங்கித் தளத்தின் மூலமாகக் கடுமையான எதிர்த்தாக்குதலைக்


கொடுத்துக்கொண்டிருந்தனர் புலிகள். இந்த நேரத்தில், 'புலிகளின் சிறப்புத் தற்கொலைப் படையணி, சாதாரண மக்களாக மாறி ராணுவ இலக்கு களின் மீது கடுமையான தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்போகிறார்கள்!' என்றொரு வதந்தி ராணுவத்தின் உளவுப்பிரிவுக்கு வர... அதுவே, பொதுமக்களுக்கு எமனாக அமைந்துவிட்டது.

உடனே தமிழ் மக்களின் மீது அரக்கத்தனமான தாக்கு தலில் இறங்கிவிட்டது ராணுவம். 'மக்கள் பாதுகாப்பு வளையங்களாக' அறிவிக்கப்பட்டிருந்த புதுக்குடியிருப்பு, விசுவமேடு, உடையார்கட்டு, வன்னிபுலம் போன்ற பகுதிகளின் மீது கண்மூடித்தனமான பீரங்கித் தாக்குதல் நடத்தப்பட்டது. மக்கள் பாது காப்பு வளையங்களில் கூட்டம் கூட்டமாக சொந்தபந்தங்களுடன் தங்கியிருந்த அப்பாவி மக்கள் மீது நாலாபுறத்திலிருந்தும் கிளஸ்டர் குண்டுகளும் ஷெல் வீச்சுக்களும் தொடர்ந் திருக்கின்றன. காலை 9.40-க்குத் தொடங்கி 10.30 வரைக்கும் நடந்த இந்தக் கோரத் தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் பலியாக, மூவாயிரத்துக்கும் அதிகமானவர்கள் படுகாயத்துடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். மருந்துப் பொருட்களை ஏற்றிவந்த ஐ.நா. குழு ஒன்றும் இந்தத் தாக்குதலில் மாட்டிக்கொண்டது. அந்தக் குழு கொழும் பிலுள்ள ஐ.நா. பிரதிநிதி நீல் புஹ்னுக்குத் தகவல் தந்திருக்கிறது. அதற்குள் தாக்குதல் பற்றிய விவரங்கள் கசிந்துவிடக் கூடாது என்பதற்காக, கொழும்பு நகரம் முழுவதும் தகவல் தொடர்பைத் துண்டித்தது அரசு. இதன்பிறகு நீல் புஹ்ன் இந்தத் தகவலை ஐ.நா-வுக்குத் தெரியப்படுத்த, ஐ.நா-வின் செயலாளர் பான் கி மூனிடம் இருந்து கடுமையான கண்டன அறிக்கை வந்திருக்கிறது. அதோடு பிரிட்டன், நார்வே, அமெரிக்கா போன்ற நாடுகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டன. இதைத் தொடர்ந்துதான் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அழைத்தார் அதிபர் மகிந்த ராஜபக்ஷே!

பிரணாப் பயணம்... தமிழர்கள் ஏமாற்றம்!

கடந்த 27-ம் தேதி இலங்கை சென்ற பிரணாப், உடனடியாக அதிபர் மகிந்தாவை சந்தித்தார். ராணுவ தளபதி சரத் ஃபொன்சேகா, பிரணாப்பிடம் போர் நிலவரம் குறித்து விளக்கியிருக்கிறார். இலங்கையிலிருந்து அவர் கிளம்புவதற்கு முன், 'இலங்கையில் ராணுவ நடவடிக்கைகள்தான் இயல்பு நிலை திரும்ப உதவும். இந்தியா-இலங்கை உறவுகள் மேம்பட்டிருக்கிறது!' என்று சொல்ல... அது தமிழர்கள் மத்தியில் கோபத்தைக் கிளப்பி யிருக்கிறது.

இதுபற்றி தமிழ் எம்.பி-க்கள் சிலரிடம் பேசினோம். ''இந்தியா தலையிட்டால்தான் பிரச்னை தீரும். இலங்கையில் பிரச்னை தீவிர மானதும் தமிழக முதல்வர் கலைஞர் அதுக்காக அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைப்பதில் வேகம் காட்டினார். ஆனால், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதில் காட்டலை. அப்படி அவர் அழுத்தம் கொடுத்திருந்தா, என்னிக்கோ பிரணாப் வந்திருப்பார். அதே மாதிரி பிப்ரவரி 3-ம் தேதி தி.மு.க. செயற்குழுவைக் கூட்டி இலங்கைப் பிரச்னையில் அடுத்த கட்டம் குறித்து முடிவெடுக்கப்போறதா சொல்லியிருக்கார் கலைஞர். இந்த நிலைமையில, முதல்வருக்கு எந்தச் சிக்கலும் ஏற்படாதவாறு இலங்கைக்கு வந்திருக்கார் பிரணாப். இங்கே அவர், தமிழ்ப் பிரதிநிதி கள் யாரையும் சந்திக்கலை. இலங்கையில் தமிழர்களுக்கு எதிரா நடக்கும் விஷயங்களை அவரிடம் சொல்ல நினைத்திருந்தோம். ஆனா, அவர் யாரையும் சந்திக்கலை. இப்படியரு நிலைப்பாட்டில், பிரணாப் இலங்கைக்கு வராமலேயே இருந்திருக்கலாம்!'' என்கிறார்கள் கொதிப்புடன்.

செம்மணி புதைகுழிகளும் சிங்கள அட்டூழியமும்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி-க்கள் நம்மிடம், ''1995-ம் ஆண்டு புலிகளிடமிருந்து யாழ்ப்பாணம் நகரை ராணுவம் கைப்பற்றியபோது, அங்கிருந்த நலன்புரி நிலையங்களில் தஞ்சமடைந்த மக்களில் 600 பேரை கொன்று செம்மணியில் புதைத்தது. இந்த கொடூரத்துக்குப் பின்புலமாக இருந்தவர் சரத் ஃபொன்சேகா. அந்த பயங்கரத்தைத் திரும்பவும் நடத்துகிறார் அவர். ராணுவத்தின் தொடர்ச்சியான எரிகணை மற்றும் வான்கணைத் தாக்குதல்களுக்கு பயந்து வரும் மக்கள், வவுனியாவில் அரசாங்கம் அமைத்திருக்கற மக்கள் நலன்புரி நிலையங்களில்தான் தங்கறாங்க. அப்படித் தங்குபவர்களில் ஆண்களைத் தனியே அழைச்சுக்கிட்டுப் போய் சித்ரவதை பண்ணிக் கொல்றாங்க. பெண்களை விசாரணைங்கிற பெயரில் பலாத்காரம் செஞ்சு சின்னாபின்னப்படுத்தி கொன்னுடுறாங்க. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இப்படி 25 இளைஞர்களும் 27 பெண்களும் கொல்லப்பட்டிருக்காங்க. கொழும்பின் மையப் பகுதியான புரக்கோட்டை முழுவதும் தமிழ் தொழிலதிபர்கள்தான் ஆதிக்கம் செலுத்தறாங்க. இதை ஒழிக்கறதுக்காக புரக்கோட்டை பகுதியை அரசாங் கமே எடுக்கப் பார்க்குது. இங்கே சிங்களர்களை குடியேத்தி, தமிழ் தொழிலதிபர்களை ஒழிக்கணும்னு நினைக்குது. இதுதவிர, போர் நடந்தப்ப கிழக்குப் பகுதியில் இருந்த தமிழர்களில் பலர், அகதிகளா இந்தியாவுக்குப் போய்ட்டாங்க. இன்னும் சிலர் வடபகுதிகளில் குடியேறிட்டாங்க. அதனால, கிழக்குப் பகுதியில நிறைய இடங்கள் காலியா இருக்கு. இப்போ இந்த இடங்களில் சிங்களர்களைக் குடியேத்துறாங்க. அதிபர் மகிந்தாவோட சொந்த ஊரான அம்பலாந்தொடை, காலே, திசமார, தங்கால, மாத்தலே, கழுத்தர போன்ற பகுதிகள்ல இருக்கற சிங்களர்களுக்குப் பத்து ஏக்கர் நிலத்தை இலவசமா கொடுத்து கிழக்குப் பகுதியில குடியமர்த்தறாங்க. இதனால

தமிழர்களோட நிலம் பறிபோகுது. என்னிக்காவது எங்க மக்கள் திரும்பி வந்தா, நிக்க இடமிருக்காது. வடக்கைக் கைப்பற்றிய பிறகும் இதே மாதிரியான நடவடிக்கைகளைத்தான் மேற்கொள்வாங்கன்னு பிரணாப்கிட்ட விளக்க நினைச்சோம். முடியலை!'' என்றவர்கள் தொடர்ந்து...

ஏனிந்த மௌனம்..?

''முல்லைத்தீவு மாவட்டம் என்பதே ஒட்டுமொத்தமாக புதுக்குடியிருப்பு, விசுவமேடு, தர்மபுரம், ருத்ரபுரம் உள்பட பத்து கிராமங்களை உள்ளடக்கியதுதான். தற்போது புதுக் குடியிருப்பு என்ற ஒற்றைக் கிராமத்தில்தான் தமிழர்கள் முடக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த சமயத்திலும்கூட புலிகள் பெரியளவில் எதிர்ப்புத் தாக்குதல் நடத்தாதது, புலிகள் ஆதரவாளர்களுக்கே குழப்பமாக இருக்கிறது.

'புலிகளிடம் வெறும் 1,500 பேர்தான் இருக்கிறார்கள், அதனால்தான் அவர்களால் ராணுவத்தை எதிர்க்க முடியவில்லை!' என்கிறார் கருணா. அமைதிப் பேச்சு வார்த்தையின்போது 31,000 பேர் புலிகள் இயக்கத்தில் இருந் ததாகவும், அடுத்தடுத்த சில வருடங்களில் போரால் 5,000 பேர் இறந்துவிட்டதாகவும், கிழக்குப் பகுதி பிரிவின்போது 6,800 பேர் தன்னுடன் வந்துவிட்டதாகவும் அவர் சொல்கிறார். அப்படிப் பார்த்தாலும் சுமார் 19,000 பேர் மீதி இருக்கவேண்டுமே? எங்கள் கணக்குப்படி புலிகளிடம் தற்போது பயிற்சி பெற்ற 20,000 பேர் இருக்கிறார்கள். ஆனால், இவர்களை வழிநடத்த சரியான தளபதிகள் இல்லை. பல போர்முனைகளை வெற்றிகரமாக நின்று நடத்திய பிரிகேடியர் பால்ராஜின் மறைவு, புலிகளுக்குப் பெரும் இழப்பு. இருக்கிற ஒன்றிரண்டு நல்ல தளபதிகளையும் இழந்துடக் கூடாதுன்னு நினைக்கிறார் பிரபாகரன். தற்போது புதுக்குடியிருப்பில் முடங்கியிருந்தாலும், திறமை வாய்ந்த லெப்டினென்ட் கர்னல் பானுவின் தலைமையில் போர் முனையில் எதிர்ப்புத் தாக்குதலை ஆரம்பிக்கப் போறாங்க. அதுவுமில்லாமல் ஓயாத அலைகள்-1, ஓயாத அலைகள்-2 உள்ளிட்ட பல முக்கியமான சமர்களை நடத்தியது சார்லஸ் ஆண்டனியின் 'எலைட் ஃபோர்ஸ்'தான். இது எப்போது வேண்டுமானாலும் தற்கொலைப்படையா மாறுகிற நிலையில் இருக்கு. 300 பேர் இருக்கற இந்த ஸ்பெஷல் எலைட் ஃபோர்ஸை இதுவரைக்கும் களத்துக்குக் கொண்டு வரலை. அதேமாதிரி மாலதி படையணி, தலைவர் பிரபாகரனோட வலது கை மாதிரி. 300 பேர் இருக்கற இந்தப் படையணியையும் இதுவரைக்கும் களமிறக்கலை. இதுதவிர, கர்னல் சூசை தலைமையிலான சிறப்பு கடற்கரும்புலிகள் அணி எப்படிப்பட்ட தாக்குதல்களையும் சமாளிக்கும் திறன் படைத்த முன்னகர்வு அணி. ஊருடுவித் தாக்குவதில் ஆண்டனி படையணி கில்லாடி. இப்படி தன்னோட நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கற பத்துக்கும் அதிகமான சிறப்புப் படையணிகளைத் தலைவர் பிரபாகரன் இதுவரைக்கும் களத்துக்கே கொண்டுவராதது ஏன்னு புரியலை. தலைவரோட பையன் தலைமையில இருக்கற விமானப் படையையும் களத்தில் இறக்காததுக்கும் காரணம் புரியலை!'' என்கிறார்கள்

புலிகளின் அமெரிக்க ஆயுதம்...

நான்காம் கட்ட ஈழப்போரின் இறுதிக்கட்டமாக வர்ணிக்கப் படும் இந்தப் போரில் ஒரு முக்கியக் காரணத்துக்காக புலிகள் காத்திருப்பதாகச் சொல்கிறார்கள், அவர்களுடைய ஆதர வாளர்கள்.

''இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஜப்பான் போன்ற பல நாடுகள் செய்த ராணுவ உதவிதான் இந்தப் போரில் இலங்கை ராணுவத்தை வேகமா செயல்பட வச்சுருக்கு.இதனால ஆசியாவில் அமெரிக்காவுக்கு எதிரான ஒரு வலு வான கூட்டணி அமைஞ்சுருக்கற மாதிரியான தோற்றம் ஏற்பட்டிருக்கு. இதை அமெரிக்கா விரும்பலை. புலிகள் ஆதரவு மனப்பான்மை உள்ள ஹிலாரி கிளின்ட்டன் இப்போ அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சராகி இருக்காங்க. வரும் பிப். 4-ல் லண்டன், அமெரிக்கா, கனடாவில் இருக்கற சில முக்கிய தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் ஹிலாரியை சந்திக்கப் போறாங்க. தெற்காசியாவில் அமெரிக்காவுக்கு எதிரா சீனா அமைக்கும் கூட்டணி பற்றியும், அதில் இலங்கையின் பங்கு பற்றியும் அவரிடம் விவரிப்பாங்க. அமெரிக்காவை கன்வின்ஸ் செய்துட்டா போதும்... அதுக்குப் பிறகு சி.ஐ.ஏ., எஃப்.பி.ஐ. மூலமா புலிகளுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வாங்க. அதுக்குப் பிறகு புலிகளோட தாக்குதல் வீரியமாகும். சிங்கள ராணுவத்தோட கொலைவெறியில் தொய்வு வந்துடும். தமிழ்நாட்டுத் தலைவர்கள் சிலரும் இந்த நடவடிக்கைக்கு உதவி பண்றாங்க. இதுக்காக சி.ஐ.ஏ-வின் தெற்காசியப் பிரதிநிதி சார்லஸை சமீபத்தில் சென்னையில் வைத்து விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமா வளவன் சந்தித்திருப்பதாகவும் தகவல். பிப். 4-ல் ஹிலாரியின் சந்திப்புக்குப் பிறகு அமெரிக்காவின் உதவியைப் பொறுத்துதான் புலிகளின் அடுத்தகட்ட மூவ் இருக்கும்...'' என்கிறார்கள்.

எங்கே பிரபாகரன்?

'பிரபாகரன் எங்கும் தப்பியோட முடியாதபடி பாதுகாப்பு அரண்களை அமைத்திருக்கிறோம். அவர் எங்கள் கையில் மாட்டுவது உறுதி!' என்கிறார் ராணுவ தளபதி சரத் ஃபொன் சேகா.

ஆனால் புலிகளின் ஆதரவாளர்களோ, ''தலைவர் முல்லைத் தீவில் எங்களுடன்தான் இருக்கிறார். ஏற்கெனவே இதுபோல் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டபோதெல்லாம், 'நான் எதிரி களிடம் சிக்கும் நிலை ஏற்பட்டால், சயனைட் சாப்பிட்டு மரணமடைய விரும்பவில்லை. அதனால் நீங்களே என்னை நெஞ்சில் சுட்டு, வீர மரணமடைய வைக்கவேண்டும்!' என்று தலைவர் கூறியிருக்கிறார். இப்போதும் அதைத்தான் விரும்பு வார். ஆனால், தலைவரின் மகன் சார்லஸ் ஆண்டனி, தலை வரை முல்லைத்தீவிலிருந்து அழைத்துச் செல்ல விரும்புகிறார். ஆப்பிரிக்கக் கண்டத்தில் எத்தியோப்பியாவுக்குப் பக்கத்திலுள்ள ஒரு குட்டி நாடு எரித்ரியா. இந்த நாட்டில் புலிகள் இயக் கத்தை முழுமையாக ஆதரிக்கிறார்கள். ஏற்கெனவே ஐ.நா. சபையில்கூட புலிகளுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்தது இந்த நாடு. அதனால், தங்களிடமுள்ள ரஷ்யத் தயாரிப்பான அதிவிரைவு குட்டி நீர்மூழ்கிக் கப்பல் மூலமாக அவரை அங்கே அழைத்துச்செல்ல நினைக்கிறார் சார்லஸ். தலைவரின் மனநிலைதான் புரியவில்லை!'' என்கிறார்கள்.

No comments:

Post a Comment