Wednesday, February 11, 2009

பிரபாகரனுக்கு கண்டம் ஏதும் இல்லை!










தமிழ் வார இதழ் ஒன்றில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு ஜனவரி 22ஆம் தேதி அவருடைய வாழ்க்கையில் மிகப் பெரிய கண்டம் உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இது உலகத் தமிழர்களிடையே பதற்றத்தையும், பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறியுள்ளது.

ஜோதிடப்படி அவருக்கு உண்மையாகவே இன்று (ஜனவரி 22) கண்டம் உள்ளதா? என்ன அடிப்பையில் உள்ளது என்பதை விளக்கிக் கூறுங்களேன்?

பதில்: அவருடைய (புலிகள் தலைவர் பிரபாகரன்) ஜாதகத்தைப் பார்க்கும் போது ராசி, கிரக அமைப்புகள் சற்று வலுவாகவே உள்ளது. ராசிநாதன் செவ்வாய் கடந்த இரண்டே முக்கால் மாதமாக (அக்டோபர் பிற்பகுதியில் இருந்து) கொஞ்சம் வலுவிழந்து காணப்படுகிறார்.

ஆனால் அதே செவ்வாய் வரும் ஜனவரி 27ஆம் தேதி உச்சமடைகிறார். இது அவருக்கு மிகப் பெரிய பலத்தை அளிக்கும். பொதுவாகவே விருச்சிக ராசி, அனுஷம் நட்சத்திரத்திற்கு ராசிக்கு 3ஆம் இடத்தில் செவ்வாய் உச்சமடைவது மிகச் சிறப்பான பலன்களை கொடுக்கும்.

அதே நேரத்தில் தற்போது விடுதலைப்புலிகள் பின்வாங்குவது ஏன் என்று பார்த்தால் அதற்கு பல காரணங்கள் உள்ளது. ஏனென்றால் நவாம்சத்தைப் பொறுத்த வரை இவரது லக்னம் கடகம். இதற்கான குறியீடு நண்டு ஆகும். பொதுவாகவே நண்டு பதுங்கும். அதற்கடுத்து வேகமாக வெளிப்படும்.

நண்டைப் பொறுத்தவரை பாதுகாப்பு அரண் ஏற்படுத்திக் கொண்டு அதன் பின்னர் பாய்ந்து தாக்கக் கூடிய குணத்தை உடையது. எனவேதான், அவர் பின்வாங்குகிறார் என்று கூறுவதை ஜாதக அமைப்பின்படி தோல்வியாக கருத முடியாது. அடுத்தடுத்த கட்டங்களில் அவர் ஆவேசமாக வெளிப்படுவதற்காக எடுத்துக் கொள்ளும் காலம் என்று கருதலாம். ஏனென்றால் அவரது ஜாதகத்தில் உள்ள கோள்களின் அமைப்பும் அதனைத்தான் உணர்த்துகின்றன.

நவாம்சத்தில் கடகமாக இருப்பதாலும், ராசியில் விருச்சிகமாக இருப்பதாலும், ஜோதிடப்படி இவரிடம் வேகம்+விவேகம் நிறைந்திருக்கும். ஜனவரி 27ஆம் தேதி முதல் பிரபாகரனுக்கு பெரிய முன்னேற்றங்கள் ஏற்படும்.

பொதுவாக விருச்சிக ராசிக்காரர்கள் தாங்கள் எடுத்த முடிவில் இருந்து பின்வாங்க மாட்டார்கள். இலங்கை அதிபர் ராஜபக்சவும் ஜனன ஜாதகப்படி விருச்சிக ராசி, அனுஷம் நட்சத்திரம் என்றாலும், நவாம்சத்தைப் கருத்தில் கொள்ளும் போது இவர் பிரபாரகரனிடம் இருந்து வேறுபடுகிறார்.

நவாம்சத்தில் கடகமாக இருப்பதாலும், ராசியில் விருச்சிகமாக இருப்பதாலும் பிரபாகரனுக்கு உறுதியாக வெற்றி கிடைக்கும். ஆனால் காலம் கடந்து, கடுமையாக போராடிய பின்னர் கிடைக்கும். ஆனால் அந்த வெற்றி சரித்திரத்தில் இடம்பெறக் கூடிய மிகப்பெரிய அளவில் இருக்கும்.

நவாம்சத்தைப் பொறுத்தவரை தற்போதைய அதிபர் ராஜபக்சவை விட, இவருடையது சிறப்பாக இருப்பதால் ஜனவரி 27இல் இருந்து சிறப்பு பலன்களை எதிர்பார்க்கலாம். நல்ல மாற்றங்கள் உண்டாகும். பாதிப்புகள் இருக்காது.

பொதுவாக நவாம்சத்தில் கடகம் வந்தாலே அவர்களுக்கு ஊடகங்களின் ஆதரவு கிடைக்காது. ஏனென்றால் சந்திரனின் லக்னம் கடகம். ஊடகங்களுக்கு உரிய கிரகம் புதன். ஆனால் சந்திரனும், புதனும் பகைக்கோள்கள். எனவே அவருக்கு ஊடகங்களின் (நாளிதழ், வாரஇதழ், தொலைக்காட்சி, மாதஇதழ்) ஆதரவு கிடைக்காது. வேண்டுமானால் அவதூறு பரப்பலாம்.
என்றாலும் இதுபோன்றவற்றையும் தாண்டி நிஜமாகவே வெற்றி பெறக் கூடிய வலிமையான கிரக அமைப்புகள் அவருக்கு உள்ளது.

கடந்த அக்டோபரில் இருந்து வலுவிழந்து காணப்பட்ட செவ்வாய், நடுவில் ஆட்சி பெற்றது. ஆனால் அப்போதெல்லாம் சிறப்பான பலன்கள் கிடைக்கவில்லை. ஆனால் தற்போது செவ்வாய் உச்சமடைவதை ஜோதிட ரீதியாக பெரிய பலமாக கருத வேண்டும். இதனால் இலங்கையில் நிறைய மாற்றங்கள் உண்டாகும். சிறிலங்க படையினரை தடுத்து நிறுத்துதல், அவர்களுக்கு பதிலடி கொடுத்தல் போன்ற நடவடிக்கைகளும் இனி நடைபெறும்.

இந்தியாவின் ஆதரவு கிடைக்கும்!

கேள்வி: கடக ராசி பற்றி விவாதித்ததால் இதனைக் கேட்கிறேன். இந்தியாவும் கடக ராசிதான். ஆனால் இலங்கைத் தமிழர்களின் நலனுக்கு எதிராகவே இந்தியா நடந்து கொள்கிறதே ஏன்?

இங்கே ஒரு விடயத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்தியா கடக ராசி. ஆனால் பிரபாகரனுக்கு நவாம்சத்தில்தான் கடக லகனம் உள்ளது. எனவே தற்போது இந்தியா அவருக்கு உதவி செய்யாதது போல் நடந்து கொண்டாலும், எதிர்காலத்தில் அவருக்கு உதவும் நிலை உறுதியாக ஏற்படும். அதற்கான சாத்தியங்கள் ஜோதிட ரீதியாக வலுவாக உள்ளன.

நீங்கள் சொன்ன மாதிரி இந்தியா கடக ராசி, பூசம் நட்சத்திரம். புலிகள் தலைவருக்கு விருச்சிக ராசி, அனுஷம் நட்சத்திரம். நண்டுக்கும், தேளுக்கும் எப்போதுமே பகை கிடையாது.
ஏனென்றால் ஜோதிட ரீதியாக கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிகள் எப்போதுமே பகையாக கருதப்படாது. அவற்றிடைய உள்ளூர ஆத்மார்த்தமான அன்பு உள்ளது.

அரசியல் சூழல் காரணமாக தற்போது இந்தியாவின் நிலை மாறுபட்டிருக்கலாம். காரணம் இப்போது கடக ராசிக்கு ஏழரைச் சனி நடந்து கொண்டிருக்கிறது. இக்காலத்தில் விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களை இந்தியா பகைத்துக் கொள்ளலாம். அதுமாதிரிதான் கருத வேண்டும்.

எதிர்வரும் 27-9-2009 உடன் இந்தியாவுக்கான ஏழரைச் சனி நிறைவடைகிறது. அதன் பின்னர் இந்தியாவின் அயலுறவுக் கொள்கைகளில் சில மாற்றங்களை உறுதியாக நம்பலாம். எதிர்த்தவர்களை ஆதரிப்பதும், ஆதரித்தவர்களை எதிர்ப்பதும் போன்ற மாற்றம் ஏற்படலாம்.

முதல்வர் நல்ல முயற்சிகள் மேற்கொள்வார்

கேள்வி: அப்போது தமிழகத்தின் நிலை எப்படி இருக்கும்?

தற்போதைய முதல்வர் ஜோதிடப்படி கடக லக்னம், ரிஷப ராசியில் பிறந்துள்ளார். புலிகள் தலைவருக்கு நவாம்சத்தில் கடக லக்னம் என்பதால், தமிழகத்தில் நாடாளுபவரின் மூலம் ஆதரவான முயற்சிகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

கடந்த காலத்தில் சில கிரக அமைப்புகள் சரியில்லாமல் இருந்தது. ஆனால் இனி சிறப்பாக கிரக நிலை அமைய உள்ளதால் முதல்வரால் சில நல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என நம்பலாம்.

கேள்வி: ஆனால் சமீபத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக முதல்வர் எடுத்த எந்த நடவடிக்கைகளும் பலன் அளிக்கவில்லையே?

அதற்கு காரணம் தமிழகத்தை ஆளுபவருடைய கிரக அமைப்பு, மத்திய அரசை ஆளும் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் ஜாதக அமைப்புதான்.

சோனியாவின் ஜாதகப்படி அவர் மிதுன ராசி. பொதுவாக மிதுனம் என்பது புதனுடையது ராசி. நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி புதனும், விருச்சிகமும் பகையானவை என்பதால் சில சிக்கல்கள் ஏற்படுகிறது. இதன் காரணமாகவே இவ்விடயத்தில் மத்திய அரசு பின்வாங்குகிறது. அதனால்தான் தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு அங்கீகாரம் கிடைக்காமல் போகிறது.

கேள்வி: ஈழப் பிரச்சனையில் இந்தியாவின் பிரதமரான மன்மோகன் சிங்கின் ஜாதக அமைப்பு கருத்தில் கொள்ளப்படாதா?

நிச்சயம் கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால் இயங்கும் தசை, இயக்கும் தசை என்று இருப்பது போல்தான் அவரது ஜாதக அமைப்பை கருத்தில் கொள்ள வேண்டும்.

1 comment:

  1. பிரச்சனைகள் வரும்போது தான் ஜாதகத்தை கையில் எடுப்போம்.
    கட்டுரை ஆறுதல் தருகிறது.

    ReplyDelete