Monday, January 5, 2009

பேச்சுவார்த்தை மூலம் புலிகளை பலவீனப்படுத்திய எங்களுக்கே கிளிநொச்சி வெற்றி சொந்தம்: ஐ.தே.க.

தமிழீழ விடுதலைப் புலிகளை சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து பலவீனப்படுத்திய எங்களுக்கே கிளிநொச்சி வெற்றி சொந்தம் என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
கண்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஐ.தே.கவின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி. திசநாயக்க பேசியதாவது:
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சியை கைப்பற்றிய படையினர் மற்றும் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச ஆகியோருக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
படையினர் பெற்ற வெற்றி பாராட்டுக்குரியதுதான். ஆனால் இந்த வெற்றிகளுக்கு அடிப்படைக் காரணம் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம்தான்.
2002 ஆம் ஆண்டு நோர்வேயின் ஏற்பாட்டுடன் போர் நிறுத்த உடன்படிக்கையை செய்து விடுதலை புலிகளை சமாதான பேச்சு நடத்தியதனால்தான் வடக்கு - கிழக்கு மாகாணத்தை இன்று படையினரால் மீட்க முடிந்தது.
அப்போது செய்துகொண்ட போர் நிறுத்த உடன்படிக்கை தொடர்பாக சிறிலங்கா சுதந்திர கட்சியும் அமைச்சர்களும் விமர்சித்தார்கள். ஆனால் இன்று அதன் பயனை அவர்கள் அனுபவிக்கின்றனர்.
மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இதனை மறந்து விடக்கூடாது. இன்று படையினர் பெற்ற வெற்றிக்கு ஐக்கிய தேசிய கட்சியும் காரணம் என்றார் அவர்.

No comments:

Post a Comment