Monday, January 5, 2009



வன்னிப்பெரு நிலப்பரப்பில் சிறிலங்காவின் திட்டமிட்ட இனப்படுகொலை நாள்தோறும் தொடர்கின்றபோதும் அனைத்துலக சமூகம் மௌனம் காத்து வருவதுடன் சிறிலங்காவுக்கே படைத்தரப்பு உதவிகளையும் வழங்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு வெளியிட்டுள்ள அறிக்கை:
- டிசம்பர் 17 இல் வட்டக்ககச்சி பகுதியில் 4 முறை சிறிலங்கா வான்படை நடத்திய தாக்குதலில் 5 மாத குழந்தை மற்றும் 25 வயது இளைஞர் கொல்லப்பட்டனர். 3 குழந்தைகள் உட்பட 13 பேர் ஏதிலிகளாயினர்.
- டிசம்பர் 19 இல் முள்ளிவாய்க்கால் கிராமத்தின் மீது நடத்தப்பட்ட வான்படைத் தாக்குதலில் 6 குழந்தைகள் உட்பட 11 பொதுமக்கள் படுகாயமடைந்தனர். அதே நாளில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதலில் முல்லைத்தீவு பொதுமருத்துவமனை நாசமடைந்தது. மருத்துவப் பணியாளர் இருவரும் காயமடைந்தனர்.
- டிசம்பர் 20 இல் சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் வட்டக்கச்சியில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பொதுமக்களின் குடியிருப்புக்கள் நாசமடைந்தன. இதே நாளில் முல்லைத்தீவு கடலோரப் பகுதிகளில் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் தற்காலிக குடியிருப்புக்களை இலக்கு வைத்து வான்படையினர் 8 குண்டுகளை வீச மீன்பிடி படகுகளும் தளபாடங்களும் அழிந்து போயின.
- டிசம்பர் 25 நத்தார் நாள் கிளிநொச்சி பொது மருத்துவமனையை இலக்கு வைத்து சிறிலங்கா படைத்தரப்பு மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் பலர் உயிர் தப்பினர்.
- டிசம்பர் 27 இல் சிறிலங்கா வான்படையினர் இயக்கச்சி, இரணைமடு மற்றும் வட்டக்கச்சி பகுதிகளில் பொதுமக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில் 24 வயது இளம்பெண் கொல்லப்பட்டார். 10 பொதுமக்கள் படுகாயமடைந்தனர். 18 வயது இளம்பெண் இரு கால்களையும் இழந்தார்.
- டிசம்பர் 30 இல் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் கிளிநொச்சி மருத்துவமனை கடும் சேதமடைந்தது.
- டிசம்பர் 31 இல் சிறிலங்கா படையினர் முல்லைத்தீவு - பரந்தன் வீதியில் உள்ள முரசுமோட்டை பகுதியில் மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில் மூவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். 16 பொதுமக்கள் படுகாயமடைந்தனர். கரைச்சி பகுதியில் அதே நாளில் இடம்பெயர்ந்த மக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
- ஜனவரி 1 இல் புதுவருடப் பிறப்பு நாளில் மீண்டும் முரசுமோட்டை மற்றும் கண்டாவளை பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் படுகாயமடைந்தனர்.
- ஜனவரி 2 இல் புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதலில் இரு நோயாளர் காவு வாகனங்களும் 13 பொதுமக்களும் படுகாமயடைந்தனர். அதே நாளில் முரசுமோட்டை 3 ஆம் கட்டையில் பொதுமக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பொதுமக்கள் படுகாயமடைந்தனர்.
- ஜனவரி 3 ஆம் நாள் வன்னி புளியம்போக்கணை பகுதியில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் பொதுமக்கள் படுகாயமடைந்தனர்.
வன்னிப் பெருநிலப்பரப்பில் 3 இலட்சத்து 30 ஆயிரம் தமிழ் மக்கள் உள்ளக அகதிகளாகி உள்ளனர்.
ஜெனீவா போர் அறமுறைகளுக்கு எதிராக தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு இனப்படுகொலையை சிறிலங்கா அரசு மேற்கொண்டு வருவது போர்க்குற்றமாகும். ஆனாலும் இது தொடர்பில் அனைத்துலக சமூகம் தொடர் மௌனம் காத்து வருகிறது. மாறாக சிறிலங்காவுக்கே படைத்தரப்பு உதவிகளை வழங்கி வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment