Thursday, March 26, 2009

"லாகூர் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் இந்தியப் படையினர் பாவனையில் உள்ளவை'


பாகிஸ்தானின் லாகூர் நகரில் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது இடம்பெற்ற தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ரொக்கட் லோஞ்சர்கள், வெடி பொருட்கள் என்பன இந்தியப் படையினர்

பயன்படுத்துபவையென அறியவந்துள்ளதாக பாகிஸ்தானின் "டோன்' (dawn) பத்திரிகை நேற்று புதன்கிழமை தெரிவித்திருக்கிறது.

தாக்குதல் இடம்பெற்ற பகுதியிலிருந்து 4 ரொக்கட் லோஞ்சர்களும் 9 வெடி பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இரசாயனப்பகுப்பாய்வு அறிக்கையின் பிரகாரம் இவை தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு இந்தியப் படைகளால் உபயோகிக்கப்பட்டவை என்று "டோன்' பத்திரிகை கூறியுள்ளது.

இவற்றுடன் 40 கிரனேட்டுகள் , 10 எஸ்.எம்.ஜி., 5 பிஸ்ரல்கள், இவற்றுடன் 577 எஸ்.எம்.ஜி. யின் ரவைகள், 160 ரவைகள் என்பனவும் அப்பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. தீவிரவாதிகள் அன்றைய தினம் 312 சன்னங்களை சுட்டு வெளியேற்றியிருந்ததுடன் 2 ரொக்கட்டுகளை ஏவியும் 2 குண்டுகளை வெடிக்க வைத்தும் தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.

தற்கொலை அங்கி எதுவும் அப்பகுதியில் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்கான நோக்கத்தடன் அவர்கள் அங்கு வரவில்லையெனத் தெரிகிறது. தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட எஸ்.எம்.ஜி. இயந்திரத் துப்பாக்கிகள் ரஷ்ய, ஜேர்மன் மற்றும் சீனத் தயாரிப்புகளாகும் என்று விசாரணையாளர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை டோனுக்கு தெரிவித்துள்ளார்.

லாகூரில் மார்ச் 3 இல் இடம்பெற்ற தாக்குதலில் பாகிஸ்தானின் 6 பொலிஸாரும் ஒரு வாகன சாரதியும் கொல்லப்பட்டனர். இலங்கை கிரிக்கெட் அணியின் 6 வீரர்கள் காயமடைந்தனர். இத்தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்ட போதும் இதுவரை ஒருவரும் கைது செய்யப்படவில்லை.

அரச முகவரமைப்பொன்றின் உதவியின்றி நாட்டிலுள்ள எந்தவொரு போராளி அமைப்புகளாலும் இத்தாக்குதலை நடத்தக் கூடிய ஆற்றல் இல்லையென்ற அபிப்பிராயத்தை விசாரணையாளர்கள் கொண்டுள்ளனர்.

"ஆயுதங்கள் மற்றும் தொடர்பாடல் வலைப்பின்னல் என்பவையே தாங்கள் இவ்வாறு கருதுவதற்கு காரணம் என்றும் அதாவது அரச முகவரமைப்பொன்றும் இதில் சம்பந்தப்பட்டுள்ளது' என்று விசாரணையாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

100 க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள போதும் இதுவரை எந்தவொரு பயங்கரவாதியும் கைது செய்யப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார். துரதிர்ஷ்டவசமாக சகல பயங்கரவாதிகளும் பழங்குடியினர் பகுதிக்கு தப்பிச் சென்றுவிட்டனர். பொலிஸாரின் தாமதமான செயற்பாட்டால் அவர்கள் தப்பிவிட்டனர் என்றும் விசாரணையாளர் தெரிவித்துள்ளார்.

நான்கு நோக்கத்துடன் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக விசாரணையாளர்கள் இப்போது உறுதியான விதத்தில் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான உறவுகளில் விரிசலை ஏற்படுத்துதல், வெளிநாட்டு விளையாட்டுக் குழுக்கள் பாகிஸ்தானுக்கு வருவதை நிறுத்துவது, பாகிஸ்தானின் ஸ்திரத்தன்மையை இழக்கச் செய்வது, தனது அரச முகவரமைப்பு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.யிலும் பார்க்க ஆற்றல் உடையது என்று பாகிஸ்தானுக்கு வெளிப்படுத்துவது என்பனவே தாக்குதலின் முக்கிய நோக்கங்கள் என்று விசாரணையாளர்கள் கூறியுள்ளனர்.

பஞ்சாப் மேலதிக பொலிஸ்மா அதிபர் சலாகுடீன் கான் நியாஸி தலைமையில் 4 உறுப்பினர்கள் அடங்கிய பொலிஸ் குழுவும் சமஷ்டி விசாரணை முகவர் நிலையம் , ஐ.எஸ்.ஐ. புலனாய்வு பிரிவு என்பனவற்றை உள்ளடக்கிய கூட்டு விசாரணைப் பிரிவும் லாகூர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துகின்றன.

No comments:

Post a Comment