Thursday, March 12, 2009

ஐரோப்பிய ஆணையகத்திற்கு முன்பாக அணிதிரளத் தயாராகும் புலம்பெயர் தமிழர்கள்



ஈழத்தமிழ் மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி தொடரும் புலம்பெயர் போராட்டங்களின் மத்தியில், ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் அனைவரும் எதிர்வரும் 16ஆம் நாள் ஐரோப்பிய ஆணையகத்திற்கு முன்பாக அணிதிரளத் தயாராகி வருகின்றனர்.

• பொதுமக்களுக்கான உடனடி உணவு, மருத்துவ உதவிகள் வழங்கப்பட வேண்டும்,
• ஆக்கிரமிப்புப் படைகள் வெளியேற்றப்பட வேண்டும்,
• தமிழரின் பாதுகாப்புக் கவசங்கள் கழையப்படக்கூடாது..


போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஐரோப்பிய ஆணையகத்தை நோக்கி பேரணியும், கண்டனக்கூட்டமும் இடம்பெறவுள்ளது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், விடுதலை இயக்கத்தையும் அங்கீகரிக்கோரும் இந்த மாபெரும் உரிமைப் போர் எதிர்வரும் 16ஆம் நாள் காலை 10:00 மணியளவில் பெல்ஜியத்தின் தலைநகர் Gare du nord, bd albert II (2) தொடரூந்து நிலையத்திலிருந்து ஆரம்பமாக இருக்கின்றது.

நாளாந்தம் பலியெடுக்கப்படும் எம் உறவுகளின் உயிர் குடிக்கும் பயங்கரவாத அரசின் முகத்திரையைக் கிழிக்கவும், அழிக்கப்படும் இனத்தைப் பாராமுகமாக இருக்கும் அனைத்துலகின் மனசாட்சியை உலுப்பவும் ஐரோப்பிய தமிழர்கள் அணிதிரள வேண்டும் என புலம்பெயர் ஐரோப்பிய தமிழ் இளையோர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

வன்னியில் பொதுமக்களிற்கு ஏற்படும் இழப்புக்கள் தொடர்பாகவும், மக்களின் அவலம் பற்றியும் சிறீலங்கா அரசு பொய்யான பரப்புரையை மேற்கொண்டு மேற்குலகை ஏமாற்றிவரும் இந்தக் காலகட்டத்தில், புலம்பெயர் தமிழ் மக்கள் அந்தப் பரப்புரையை உடைந்தெறிந்து, மக்களைக் காப்பது அவசியம் எனச்சுட்டிக்காட்டப்படுகின்றது.

புலம்பெயர்ந்த தமிழ் மக்களது ஓர்மம் நிறைந்த சழைக்காத தொடர் போராட்டங்கள் காரணமாகவே அனைத்துலக நாடுகள் ஈழப்பிரச்சினையில் சற்றேனும் கவனம் செலுத்த ஆரம்பித்திருப்பதுடன், அரசுக்கான கண்டனங்களையும், கட்டுப்பாடுகளையும் விதிக்க தலைப்பட்டிருப்பதால், ஐரோப்பிய ஆணையகத்திற்கு முன்பாக நடைபெறவுள்ள போராட்டத்திலும் மக்கள் பெரும் திரளாகக் கலந்துகொள்ள வேண்டிய அவசியம் பற்றியும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வன்னி மக்களின் அவலத்தை தடுத்து நிறுத்தக்கோரும் மற்றொரு போராட்டம் சுவிஸ்வாழ் தமிழ் மக்களால் ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் அதேநாள் நடத்தப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment