Thursday, March 12, 2009

புதுக்குடியிருப்பு, விசுவமடுவில் சிறிலங்கா படையினருக்கு அதிக இழப்பு: அறிக்கை சமர்ப்பிக்குமாறு சரத்துக்கு மகிந்த உத்தரவு



புதுக்குடியிருப்பு, விசுவமடு பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கடுமையான தாக்குதலில் சிறிலங்கா படையினருக்கு ஏற்பட்ட அதிக உயிரிழப்புக்கள் மற்றும் படையப் பொருட்களுக்கு ஏற்பட்ட அழிவுகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக விசுவமடுவில் படையினருக்கு ஏற்பட்ட கடுமையான இழப்புக்கள் தொடர்பாக போர்க் களத்தில் உள்ள படை உயரதிகாரிகளுடன் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நேரடியாக தொடர்பு கொண்டு வினவியதாகவும் கொழும்பு தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளையில் ஊடகத்துறை அமைச்சர் மகிந்த யாப்பா அபயவர்த்தன கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் வன்னி போர் நிலைமை குறித்து தெரிவித்த கருத்துக்களுக்கும் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச விசனம் தெரிவித்து விளக்கம் கோரியிருப்பதாகவும் தெரியவருகின்றது.

கனரக ஆயுதங்களை வன்னி போர்முனையில் படையினர் பயன்படுத்தவில்லை என்றும் அதனாலேயே படையினருக்கு கடந்த சில நாட்களில் கூடுதல் இழப்புக்கள் ஏற்பட்டிருந்தன என்றும் அமைச்சர் மகிந்த யாப்பா அபயவர்த்தன கொழும்பில் நேற்று முன்நாள் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளையில் புதுக்குடியிருப்பு, விசுவமடு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தமிழீழ விடுதலை புலிகள் நடத்திய கடுமையான தாக்குதலில் 700 படையினர் கொல்லப்பட்டும் 500-க்கும் அதிகமான படையினர் காயமடைந்தும் உள்ளதாக கொழும்பில் பெயர் குறிப்பிட விரும்பாத இராணுவ உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக விசுவமடு பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் படையினருக்கு கூடுதல் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன எனவும் காயமடைந்த அதிகாரிகள் தரத்திலான படையினர் சுமார் 77 பேர் வரை கொழும்பு தேசிய மருத்துவமனையிலும் மற்றும் கொழும்பு இராணுவ மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இந்த இராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.

எவ்வாறாயினும் புதுக்குடியிருப்பு, விசுவமடு பகுதிகளில் படையினருக்கு ஏற்பட்ட இழப்புக்கள் குறித்து அரசாங்கம் இதுவரை ஊடகங்களுக்கு எதுவும் தெரிவிக்கவில்லை.

சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் வழங்குகின்ற தகவல்களும் பாதுகாப்புத்துறை பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவிக்கின்ற கருத்துக்கள் மாத்திரமே கொழும்பு ஊடகங்களில் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment