Wednesday, March 17, 2010

விடாமல் துரத்து-நித்தி ஓட்டம்


'மனிதன் ஆசைகளையும் பற்றுகளையும் துறந்து ஆன்மாவை லேசாக்கிக் கொண்டு ஆண்டவனை அடைய வைக்கிற திருவிழா கும்பமேளா! பாற்கடலைக் கடைந்தபோது விஷமும் அமுதமும் அடுத்தடுத்து சுரந்த புராண நம்பிக்கையோடு

தொடர்பு கொண்டது. பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை அலகாபாத், ஹரித்வார், உஜ்ஜையின், நாசிக் என்று சுழற்சி முறையில் நடக்கும் இந்தத் திருவிழாவை உலகம் முழுக்கத் திரும்பிப் பார்க்க வைப்பவர்கள் இங்கே கம்பீரமாகத் திரளும் சாதுக்கள்தான். அதிலும் 'நாகா சாதுக்கள்' எனப்படும் நிர்வாண சாதுக்கள் தனி கம்பீரம் கொண்டவர்கள் (இவர்களை 'நங்கா சாது' என்று கொச்சையாக சொல்பவர்களும் உண்டு). உச்சகட்ட நல்ல நேரத்தில் இந்த சாதுக்கள் படை படையாகத் திரண்டு, சாம்பலை மட்டுமே மறைப்பாகக் கொண்டு, தங்கு தங்கென்று நடந்து வந்து புனிதக் குளியல் போடுவார்கள். அந்தக் காட்சியை எட்ட நின்று காண்பதேகூட கோடிப் புண்ணியம் என்று நம்பி, திரள்திரளாக பக்தர்கள் கூடுவதும் வழக்கம். எப்போதும் ஆன்மிக கவரேஜாகவே அமையும் இந்த கும்பமேளா அனுபவம், இந்த முறை ஹரித்வாரில் 'நித்தியானந்தர் சேஸிங்'மேளாவாக மாறிவிட்டது'' என்று உற்சாகமாக(?) விவரிக்கிறார் அந்த ஏரியாவின் நிருபர்.

ஹரித்வாருக்கு தன் பக்த கோடிகளோடு நித்தி யானந்த சாமியார் வருவது ஒன்றும் புதிதல்ல. என் றாலும், இந்த முறை தென்னிந்தியாவில் சி.டி. கிளப் பிய பரபரப்புக்குப் பிறகு ஹரித்வார் வந்து இறங்கியவர் எங்கே இருக்கிறார் என்பதே மில்லியன் டாலர் ரகசிய மாக வைக்கப்பட்டது.

இரண்டு வீடியோக்களை மீடியாக்களுக்கு அனுப்பிய பிறகும் தனக்கு எதிரான அலை ஓயவில்லை என்றதும் கவலை கூடிப்போனதாம் நித்தியானந்தருக்கு. அப்போது தான் செல்வாக்கான அவருடைய டெல்லி சிஷ்யர் ஒருவர் அடுத்த யோசனை சொல்லியிருக்கிறார். 'டைம்ஸ் நவ்' தொலைக்காட்சி சேனலில் தனக்கிருக்கும் தொடர்பை பயன்படுத்தி நம்பிக்கையான நிருபரை அனுப்பி வைப்பதாகவும்... அவரிடம் சற்று விரிவாகவே கருத்துகளை வெளியிடலாம் என்றும் அந்த டெல்லி சிஷ்யர் சொல்ல... அப்படியே ஏற்பாடானது. ஹரித் வாரில் இருந்தபடி 12-ம் தேதி பரபரப்பு பேட்டி பதிவானது. அடுத்து 'ஆஜ்தக்' ஹிந்தி சேனலும் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதுவரை நித்தியானந்தர் விவகாரத்தில் எந்த கவனமும் செலுத்தாத வட இந்தியப் பத்திரிகையாளர்கள், இந்த டி.வி.சேனல் பேட்டி களுக்குப் பிறகுதான் நித்தியானந்தருக்கு வலைபோட ஆரம்பித்தனர்.

முதலில் பேட்டி எடுக்க வந்த டி.வி. நிருபரிடம், ''தயவு செய்து 'டைட் குளோஸ்-அப்' மட்டுமே வைத்து பேட்டி எடுங்கள். நான் இருக்கும் இடம் தெரியக்கூடாது!'' என்று நித்தியானந்தர் போட்ட கண்டிஷனை, டி.வி-யின் கேமராமேன்தான் பாவம் புரிந்து கொள்ளவில்லை. உற்சாகமாக சாமியார் பேசிக் கொண்டு இருந்தபோதே கேமரா லேசாக அந்த ஸ்தலத்தை ஒரு சுற்று சுற்றிவர... அதுவும் சேர்ந்தே டி.வியில் வெளியானது.

அதுவரை நித்தியானந்தரை தேடிக் கொண்டிருந்த நிருபர்கள் ''ஹே.... இது நம்மூரில் உள்ள 'ஜிஞ்சர்' என்ற ஹோட்டலில் எடுத்தது...'' என்று நச்சென்று கண்டுபிடித்து, நறுக்கென்று ஹோட்டல் வாசலில் ஆஜரானார்கள். ஆனால், அதற்குள் சாமியார் அங்கி ருந்து கிளம்பியிருந்தார். ஹோட்டல் அறை பி.கே.கர்க் என்ற பெயரில் புக்காகி இருந்தது. அங்கேயே துப்புத் துலக்கியதில் அடுத்து 'லீ கிராண்ட்' என்ற ஹோட்டலில் 104-ம் நம்பர் ரூமில் அவர் தங்கியிருப்பதும்... அந்த ரூமை எஸ்.கே.திவாரி என்ற பெயரில் பதிவு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கும் சுற்றி வளைத்தது நிருபர்கள் கூட்டம். அங்கிருந்த தியானபீட சிஷ்யர்களோ சாளுக்கிய புலிகேசிப் படையை மடக்கும் பல்லவப் படை கணக்காக அலையலையாக நின்று நிருபர்களை தடுத்திருக்கிறார்கள். ஒருமணி நேர முற்றுகையின் உச்சத்தில், நைஸாக ஹோட்டலின் வேறு வழியாக தன் மெய்க்காப்பாளர்களுடன் நழுவ ஆரம்பித்த நித்தியானந்தர்... தடாலடி யாக இனோவா கார் ஒன்றில் ஏறி பறக்கப் பார்த்தார். நிருபர்கள் விட்டால்தானே... வேறுவழியின்றி, தயாராக, தான் வைத்திருந்த அறிக்கையை எடுத்துப் படித்தார். சி.டி. பற்றியே திரும்ப திரும்பக் கேள்வி வர, பெரிதாக ஒரு கும்பிடு போட்டார் (அட்டை காட்சிகள்). ''சாமி என்னதான் சொல்ல வருது? நடிகையோட இருப்பது பற்றி கேட்கா தீங்கன்னு சொல்லுதா..? 'தப்பு பண்ணிட்டேன். மன்னிச்சுங்க'ன்னு சொல்லுதா?'' என்று விவாதித்தபடியே கலைந்தார்கள் நிருபர்கள்.

சாமியாரின் கார் இந்தப் பக்கம் பறந்த சில நிமிடங்களில், ஜுவாலாப் பூர் என்ற அந்த ஏரியாவின் போலீஸ் இன்ஸ்பெக்டர் சௌகான் வந்து இறங்கினார். ''கர்நாடகா, தமிழ்நாடு மாநில போலீஸ்களில் நித்தி யானந்தரை தேடுவது எந்த போலீஸ்? அவரை பிடித்துக் கொடுக்கும்படி உங்களுக்கு ஏதாவது உத்தரவு வந்ததா?'' என்று பத்திரிகையாளர்கள் குடைய... ''நித்தி யானந்தரா? யாரது? நான் இந்த ஹோட்டலுக்கு சும்மா ஒரு டீ சாப்பிட வந்தேன்...'' என்றாரே தவிர, டீ சாப்பிடாமலேயே பாய்ந்தோடி மறைந்தார் இன்ஸ் பெக்டர்.

மேற்கொண்டும் தொடர்ந்தது சேஸிங். வழக்கமாக இந்தப் பக்கம் வரும்போதெல்லாம் நித்தியானந்தர் தங்குகிற ரிஷிகேஷின் கோவிலூர் மடத்தில் விசாரித்தனர் அந்த ஏரியா நிருபர்கள். ''முன்பெல்லாம் வருஷா வருஷம் தன் பக்தர்களோட இங்கேதான் வந்து தங்குவார் சுவாமிஜி. குளிர்காலம் முடிந்ததும் பத்ரிநாத் புண்ணியத்தலம் திறக்கும் சமயத்தில்தான் பெரும்பாலும் அவர் விசிட் இருக்கும். வருஷத்துக்கு வருஷம் அவரோடு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது. அதிலும் வெளிநாட்டைச் சேர்ந்த கோடீஸ்வர பக்தர்கள் அதிகமாகிக்கொண்டே போனார்கள். ஏ.சி. உள்பட அவர்கள் எதிர்பார்த்த வசதிகளை முழுசாக எங்களால் பூர்த்தி செய்யமுடியவில்லை. அதனால் பக்கத்தில் உள்ள வசுந்தரா ஹோட்டலில் நித்தியானந்தர் தங்க ஆரம்பித்து விட்டார்!'' என்று அவர்களுக்கு பதில் வந்தது.

மடத்தின் மேலாளரான விசாலாட்சி மெய்யப்பன், ''அந்த சாமியா அப்படி பண்ணுச்சு? இப்பக்கூட நம்ப முடியலையே...'' என்று சொல்லிச் சொல்லி மாய்ந்து போனார்.

கடந்த சில வருடங்களில் கிடுகிடுவென தன்னுடைய செல்வாக்கையும் சாதுக்கள் பலத்தையும் ஹரித்வார் மற்றும் வாரணாசி வட்டாரங்களில் நித்தியானந்தர் வளர்த்துக் கொண்ட வேகத்தைப் பார்த்து உள்ளூர் சாதுக்கள் மிரண்டு போனார்களாம். சத்தியத்தைக் காப்பதற்காக ஹரிச்சந்திரன் வெட்டியானாக இருந்து சடலங்களை எரித்ததாகச் சொல்லப்படும் சுடுகாடு வாரணாசியில் இருக்கிறது. 'ஹரிச்சந்திரா காட்' எனப்படும் இந்த ஏரியாவையட்டி 'லீலாவதி சேவா டிரஸ்ட்' என்று ஒரு அறக்கட்டளை உள்ளது. கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகால பழைமை வாய்ந்த இந்த டிரஸ்டின் சொத்துக் கணக்கை சரியாக அறிந்தவர்கள் இல்லை. கடந்த சில வருஷங்களில் அந்த அறக்கட்டளையில் நித்தியானந்தர் முக்கியமான பங்கு வகிக்க ஆரம்பித்து விட்டார் என்றும், இதுபோன்ற செல்வாக்கான வேறு பல அறக்கட்டளைகளிலும் அவர் பலமாக கால்பதித்து விட்டார் என்றும் வடநாட்டு பத்திரிகையாளர்கள் மத்தியில் பேச்சு உலவுகிறது.

எப்படியோ... ஒட்டுமொத்தமாக நடந்த இந்த சேஸிங்கில் மார்ச் 15-ம் தேதி கொஞ்சம் முக்கியமான நாள். அன்றைய தினம் அமாவாசை! அதிலும் கும்பமேளாவின்போது மிக விசேஷமான கிரக காம்பினேஷனில் வந்த அமாவாசையாம். கிட்டத் தட்ட 750 வருடத்துக்கு பிறகு இப்படியரு தினம் அமைந்ததாகவும் சொல்கிறார்கள். அன்றைய தினம் கங்கையில் குளிப்பது ஒரு அசுவமேத யாகம் செய்த புண்ணியத்துக்கு சமம் என்றும் நம்பிக்கை. செய்த பாவங்களை எல்லாம் மொத்தமாகக் குளித்துத் தலைமுழுகி விட்டால், மறுபடி புனர்ஜென்மம் எடுத்த புண்ணியமும் சேரும் என்பது நிர்வாண சாதுக்களின் நம்பிக்கை.

'ஷாயி ஸ்நான்' (ராஜ குளியல்) என்ற இந்த குளியலை நித்தியானந்தரும் கட்டாயம் போட வருவார் என்று அத்தனை படித்துறைகளிலும் கேமராக்கள் சகிதம் காத்திருந்தனர் நிருபர்கள். புகழ்பெற்ற 13 'அகாடா'க்களில் ('அகாடா' என்பது சாதுக்களின் சபை) நித்தியானந்தர் எந்த 'அகாடா'வின் கீழ் வருகிறார் என்று கண்டுபிடிக்க முடியாததால்... எந்த கும்பலோடு அவர் கலந்து வந்து குளியல் போட்டார் என்பது தெரியாமலே நிருபர்கள் திரும்ப வேண்டி வந்தது.

இதற்கிடையே, ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள ஒரு பொதுநல வழக்கில் தலையைக் காட்டுவதற்காக ஏப்ரல் 2-ந்தேதி நித்தியானந்தர் நேரில் வருவார் என்பதே இதழ் முடிக்கும் நேரத்தில் காதைத் தொடும் செய்தி!

நன்றி- ஜீனியர் விகடன்

No comments:

Post a Comment