Tuesday, March 30, 2010

ஈ.பி.டி.பி.- உதயன் பத்திரிக முறுகல்





"சாவகச்சேரி மாணவன் படுகொலை; ஈ.பி.டி.பி. உறுப்பினருக்குப் பிடியாணை! நாட்டை விட்டு வெளியேறவும் தடை' என்ற தலைப்பில் நேற்று "உதயன்', "சுடர் ஒளி' பத்திரிகைகளின் முதலாம் பக்கத் தில் வெளியான செய்திகளுக்காக அப்பத் திரிகைகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யத் தாம் தீர்மானித்திருக்கின்றார் என ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருக்கின்றார்.
"உதயன்' மற்றும் "சுடர் ஒளி' பத்திரிகைச் செய்திகளுக்கு எதிராக நஷ்டஈடுகோரி வழக்
குத் தாக்கல்' என்ற பெயரில் அவரது அமைச்சின் கடிதத் தலைப்பில் அவரது ஊடகச் செயலாளர் ஒப்பமிட்டு நேற்றுக் காலை விடுத்த அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
நேற்றைய திகதியிட்டு வெளியான அந்த அறிக்கையின் முழு விவரம் வருமாறு:
"உதயன்' மற்றும் "சுடர் ஒளி'ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்திருக்கும் இன்றைய தலைப்புச் செய்தியானது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மீது திட்டமிட்டு சுமத்தப் படும் ஒரு பொய்யான குற்றச்சாட்டாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களிலும் குறிப்பாகத் தேர் தல்களில் இப்பத்திரிகைகள் தருணம் பார்த்துக் காத்திருந்து எங்கள் மீது சேறு பூசும் தீய செயல் களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கிறது என்றும்
இதை நாங்கள் எம்மீது திட்டமிட்ட முறையில் தொடுக்கப்பட்டிருக்கும் ஒரு தேர்தல் வன்முறையாகக் கருதவேண்டியுள்ளது என்றும்
யாழ். தேர்தல் களத்தில் சிதைந்து போயுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு பிரிவினரான சம்பந்தன் குழுவின் சார்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர் சரவணபவன் என்பவருக்குச் சொந்தமான பத்திரிகைகள்தான் இந்த "உதயன்' மற்றும் "சுடர் ஒளி' பத்திரிகைகள் என்றும் தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா, இத்தகைய தேர்தல் வன்முறைக்கு எதிராக தாங்கள் ஜனநாயக ரீதியிலான நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தீர்மானிக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான உள்ளூர் மற்றும் வெளியூர் கண்காணிப்புக் குழுவிற்கு முறைப்பாடு செய்வதென்றும் கட்சி மீது களங்கம் ஏற்படுத்தியமைக்காக நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இரண்டாவது அறிக்கை
இதேசமயம், நேற்று மாலை ஈ.பி.டி.பி. கட்சியின் கடிதத் தலைப்பில் அமைச்சர் டக்ளஸின் அதே ஊடகச் செயலாளர் இன்னொரு அறிக்கையை அனுப்பி வைத்திருக்கின்றார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:
"உதயன்', "சுடர் ஒளி' ஆகிய ஊடகங்கள் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் மீது சுமத்தியிருப்பது திட்டமிட்ட அவதூறுப் பிரசாரங்களே அன்றி இதில் உண்மைத்தன்மை எதுவும் இல்லை. கடந்த காலங்களிலும் தேர்தல் நெருங்கும் தருணம் பார்த்து குறித்த இரு பத்திரிகைகளும் ஈ.பி.டி.பி. மீது மிக மோசமான அவதூறு பிரசாரங்களைக் கட்டவிழ்த்து விட்டிருந்த நிகழ்வுகளையும் மக்கள் நன்கு அறிவார்கள்.
மக்கள் மத்தியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு இருக்கும் ஆதரவுத் தளத்தைக் கண்டு அஞ்சும் சில சக்திகள் எதிர்வரும் தேர்தலிலும் ஈ.பி.டி.பி. பேராதரவு பெற்று வெற்றி பெறப் போகின்றது என்ற காழ்ப்புணர்ச்சியினால் சாவகச்சேரி மாணவன் கபில்நாத்தின் படுகொலை தொடர்பான தகவல்களைத் திட்டமிட்ட வகையில் திரிபுபடுத்திச் செய்திகளை வெளியிட்டிருக்கின்றன. இதற்குக் காரணம் "உதயன்', "சுடர் ஒளி' ஆகிய இரு பத்திரிகைகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு குழுவினருடன் இணைந்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரான சரவணபவனுக்குச் சொந்தமானவையாகும்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகப் பரப்பப்பட்டு வரும் இதுபோன்ற மோசமான அவதூறு பிரசாரங்களினால் நடந்து முடிந்த படுகொலைக்கான சூத்திரதாரிகளைக் கண்டு பிடித்துவிட முடியாது. உண்மையான சூத்திரதாரிகளைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு ஆக்கபூர்வமான முறையில் அனைத்து அரசியல் தரப்பினரும் அரசியல் பேதங்களை மறந்து முன்வரவேண்டும். இதன் மூலமே இது போன்ற வன்முறைக் கலாசாரங்களைத் தடுத்து நிறுத்தமுடியும்.
தேர்தல் காலத்தில் தவறான அவதூறுப் பிரசாரங்களைத் திட்டமிட்டுப் பரப்புவது என்பது தேர்தல் வன்முறைகளில் ஒன்றாகவே நோக்கப்படும். இதனால் இது குறித்து தேர்தல் வன்முறைகள் தொடர்பான கண்காணிப்புக் குழுவிடம் முறைப்பாடு செய்வதற்குமான நஷ்டம் கோரி குறித்த இரு பத்திரிகைகள் மீதும் வழக்குத் தாக்கல் செய்வதற்கும் எமது கட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது என்று உள்ளது.
ஆசிரியர் குறிப்பு
1. நீதிமன்ற, பொலிஸ் விசாரணைகளில் பிரஸ்தாபிக்கப்பட்ட விடயங்களே மேற்படி செய்தியில் இடம்பெற்றிருந்தன. மாணவன் கபிலநாத் படுகொலை தொடர்பான தொடர் செய்தியே அது. ஈ.பி.டி.பி. குறிப்பிடுகின்றமை போல அது அவதூறுப் பிரசாரம் அல்ல.அச் செய்தியில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தவறு என்றால் அப்படி நீதிமன்ற மற்றும் பொலிஸ் விசாரணைகளில் இடம்பெறவில்லை என்று டக்ளஸ் தேவானந்தா கருதுவாரானால் அவருக்கு நீதிமன்றத்துக்குச் சென்று உரிய பரிகாரம் காணும் முழு உரிமையுமுண்டு. நீதிமன்றில் இப்பிரச்சினையை எதிர்கொள்ள "உதயன்', "சுடர் ஒளி' தயாராகவே பார்த்து காத்து இருக்கிறது.
2. "இந்த மாணவனைக் கடத்திக் கொலை செய்த வெறியாட்டத்தை நடத்தியோர் சுயேச்சைக் குழு ஒன்றின் வேட்பாளர்களே என விசாரணையில் தெரியவந்திருப்பதாக' அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி நேற்று விடுத்த பகிரங்க அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்போது குறிப்பிடுகின்றமை போல அவர் "உதயன்', "சுடர் ஒளி' பத்திரிகைகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தால், மேற்படி சுயேச்சைக் குழுவுக்கு எதிராக அவரது கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு பற்றிய விடயங்களை நீதிமன்றத்தில் முன்வைத்து, அவற்றை நிரூபிக்குமாறு அவரது கட்சியைக் கோரும் அமிலச் சோதனைக்கும் அந்த வழக்கில் இடமிருக்கும் எனக் கருதுகிறோம். எனவே, அத்தகைய வழக்கை அவர் தொடுப்பதை வரவேற்றுக் காத்திருக்கிறோம்.
3. "உதயன்', "சுடர் ஒளி' இத்தகைய செய்தி பிரசுரித்தமையை "தேர்தல் வன்முறை' என்று விமர்சித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதற்கு எதிராகத் தாங்கள் ஜனநாயக ரீதியிலான நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தீர்மானித்திருக்கின்றார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். அப்பப்பா.....! எத்தகைய வரவேற்கத்தக்க போக்கு மாற்றம் இது........? "உதயன்', "சுடர் ஒளி' நாளிதழ்களுக்கு எதிராக அவரது இயக்கம் இலக்கு வைத்து முன்னெடுத்த கடந்தகால நடவடிக்கைகளை அறிந்துள்ள தமிழ் மக்களுக்கு இந்தப் போக்கு மாற்றத்தின் தாற்பரியம் வியப்புக்குரியதாகவே இருக்கும்.
4. எது, எப்படியென்றாலும் ஜனநாயக ரீதியிலான பதில் நடவடிக்கைகள் என்ற விடயத்தில் சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கவேண்டும் என்பதை அவருக்கு வலியுறுத்த விரும்புகிறோம்.

No comments:

Post a Comment