Thursday, September 18, 2008

எந்திரன் - ரஜினி-ஷங்கர் வெற்றி கூட்டணியின் சீசன்-2 தொடங்கி விட்டது

ரஜினி-ஷங்கர் வெற்றி கூட்டணியின் சீசன்-2 தொடங்கி விட்டது. இங்கல்ல, படுஅமர்க்களமாக அமெரிக்காவில்.

ஏ.ஆர்.ரஹ்மானின் அதிரடியான இரண்டு பாடல்களுக்கு அமெரிக்காவில் ரஜினியும் ஐஸ்வர்யாவும் ஆட ஆரம்பித்துவிட்டார்கள்! `ஒரு கூடை சன்லைட்' பாடல்போல் இந்த இரண்டு பாடல்களுமே புது பாணியில் இருக்கிறது என்கிறது ரஹ்மான் வட்டாரங்கள். இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் அமெரிக்காவில்தான் அத்தனை ரகசியங்களும் இருக்கிறது.

உலகப் புகழ்பெற்ற காஸ்ட்யூம் டிஸைனரான மேரி-இ வோட், ஸ்டண்ட் மாஸ்டர் யென் வூ பிங்க் மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸில் மாயாஜாலம் காட்டும் ஸ்டேன்வின்ஸ்டன் என ஹாலிவுட் ஜாம்பவான்களுடன் கை கோர்த்திருக்கிறார் ஷங்கர்.

ரொம்ப சிம்பிளான கதைதான். விஞ்ஞானியான ரஜினி தனது தீவிரமான சோதனைகள் மூலம் ஒரு ரோபோவை உருவாக்குகிறார். ஒரு மனிதனைப் போலவே இந்த ரோபோ எல்லா விஷயங்களிலும் பட்டையைக் கிளப்புகிறது. ஒரு கட்டத்தில் ரோபோ தனது நல்ல கேரக்டரிலிருந்து மாறி வில்லன் போல அட்டகாசம் செய்ய ஆரம்பிக்கிறது. இதை உருவாக்கிய விஞ்ஞானி ரஜினி, எப்படிச் சமாளித்து வெற்றி பெற்று மக்களைக் காப்பாற்றுகிறார் என்பதே கதை. இதில் விஞ்ஞானியும் ரஜினிதான். ரோபோவும் ரஜினிதான். கதை சில வருடங்களுக்கு முன்பே முடிவாகிவிட்டாலும், தற்போது ரஜினியின் இமேஜ் மற்றும் சூழ்நிலைகளுக்கேற்ப திரைக்கதையிலும், வசனங்களிலும் சில மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறார் ஷங்கர்.

ரஜினியின் ரோபோ கேரக்டரைப் பொறுத்தவரை பிரபல ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் நடித்த `பை சென்ட்டெனியல் மேன்' படத்தில் வரும் ரோபோ கேரக்டரைப் போலவே உருவக்கப்பட்டிருக்கிறது. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய `ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ்' என்ற படமும் ஷங்கருக்கு இன்ஸ்பிரேஷன்.

`ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ்' படத்தில் விஷுவல் எஃபெக்ட்ஸில் தூள்கிளப்பியது அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டேன் வின்ஸ்டன் ஸ்டூடியோ. தற்போது இதே நிறுவனம்தான் எந்திரன் ரஜினியின் பரபர ஆக்ஷன் காட்சிகளை ஸ்பெஷல் எஃபெக்ட்ஸில் மிரட்ட இருக்கிறது.

உலகப் புகழ் பெற்ற ஸ்டண்ட் மாஸ்டர் யென் வூ பிங்க்கின் கால்ஷீட்டை மொத்தமாக வாங்கி வைத்திருக்கிறார்கள். இன்று உலகளவில் நம்பர் ஒன் மார்ஷியல் ஆர்ட்ஸ் ஸ்டண்ட் கோரியோகிராஃபர் இவர்தான். ஜாக்கிசானுக்கே வழி காட்டியவர்.

ரஜினிக்கு ஸ்பெஷல் பயிற்சியும் அளிக்கத் தயாராகிவிட்டார் யென். அமெரிக்காவில் நடைபெறப்போகும் இந்தப் பயிற்சிகள் ரஜினியின் உடல் வலிமையை மட்டுமல்ல மனவலிமையையும் கூட்டுமாம்.

ரோபோ ரஜினியின் காஸ்ட்யூமை வடிவமைக்கப் போவது மற்றொரு ஹாலிவுட் காஸ்ட்யூம் டிஸைனர் மேரி.இ.வோட். இவர்தான் `மென் இன் பிளாக்', `பேட்மேன் ரிட்டர்ன்ஸ்' போன்ற படங்களில் உலகின் கவனத்தைக் கவர்ந்தவர்.

விஞ்ஞானி ரஜினியின் ஸ்டைலான லுக்கிற்கு கியாரண்டி கொடுப்பவர் பாலிவுட்டின் காஸ்ட்யூம் டிஸைனர் மணீஷ் மல்ஹோத்ரா. `சிவாஜி'யில் ரஜினிக்கு காஸ்ட்யூம் டிஸைன் செய்தது இவர்தான். ``இந்த வருடம் வெல்வெட் டைப் காஸ்ட்யூம்களுக்கு வரவேற்பு இருக்கும். அதே போல ஸ்லிம் ஃபிட் உடைகள்தான் இப்ப ட்ரெண்ட்'' என்கிறார் மணீஷ். ஐஸ்வர்யாராயின் உடைகளையும் வடிவமைத்துவிட்டார்களாம். அந்த உடை டிசைன்களை பார்த்த ஐஸ் `வாவ்' என்று சொன்னதாக பாலிவுட் வட்டாரங்கள் சொல்லுகின்றன.

மொத்தத்தில் ரஜினி -ஷங்கர் கூட்டணி மீடியாவின் கவனத்தை மீண்டும் தங்கள் மீது கூர்ந்து கவனிக்க வைத்திருக்கிறது. அதனால் இனி கவர் ஸ்டோரிகளுக்கும், குட்டிச் செய்திகளுக்கும் பஞ்ச மிருக்காது..

No comments:

Post a Comment