Monday, September 15, 2008

இலங்கை கடற்படை மீண்டும் அட்டகாசம் - மீனவர்கள் படகுகள் உடைப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளை உடைத்தும், துப்பாக்கியால் சுட்டும் மிரட்டி விரட்டியுள்ளது இலங்கை கடற்படை.

நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பது போல, இலங்கை கடற்படையினரின் அட்டகாசத்தையும் அடக்க முடியவில்லை. தொடர்ந்து தமிழக மீனவர்களை தாக்கிவருகிறது இலங்கை கடற்படை.

தமிழக கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக முதல்வர் கருணாநிதி பலமுறை எச்சரிக்கை விடுத்தும், நயமான முறையில் கோரிக்கைகள் விடுத்தும் கூட, இலங்கை கடற்படையின் வெறிச் செயல் கொஞ்சமும் குறையவில்லை.

முன்பு குருவிகளை சுடுவது போல தமிழக மீனவர்களை சுட்டு வந்தனர். இப்போது தமிழக மீனவர்களின் படகுகளைத் தாக்கியும், மீனவர்களைக் காயப்படுத்தியும் வருகின்றனர். இது மட்டுமே அவர்களிடம் தெரியும் வித்தியாசமாகும்.

நேற்று காலை 500க்கும் மேற்பட்ட படகுகளில் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இரு பெரிய கப்பல்களில் கடற்படையினர் அங்கு வந்தனர்.

பின்னர் வானத்தை நோக்கி சுட ஆரம்பித்த கடற்படையினர், தமிழக மீனவர்களின் படகுகளையும் சரமாரியாக சுட்டுத் தள்ளினர். பின்னர் 25க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் மீது தங்களது கப்பல்களால் மோதி சேதப்படுத்தினர். இதில் ஒரு படகுமுற்றிலும் உடைந்து போனது.

அப்படியும் வெறி தணியாமல், மீன் பிடி வலைகளை துப்பாக்கிகளால் குத்திக் கிழித்து சேதப்படுத்திய பின்னர், இனிமேல் எல்லைப் பகுதியைத் தாண்டி வந்து மீன் பிடிக்கக் கூடாது. மீறினால் சுட்டு வீழ்த்தி விடுவோம் என எச்சரித்து விட்டு சென்றனர்.

இதைத் தொடர்ந்து மீனவர்கள் படகுகளுடன் கரைக்குத் திரும்பினர். உடைந்த படகையும் தங்களது படகுடன் கட்டி கொண்டு வந்தனர்.

இந்த சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களிடையே கோபத்தையும், கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்ந்தால், மீண்டும் பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.

No comments:

Post a Comment