Friday, September 19, 2008

ஐநாவுக்கு ஏற்றவாறு இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது – கோத்தபாய

ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு தேவையான வகையில் இராணவ நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாதென பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சர்வதேச தொண்டு நிறுவனங்கள் வன்னியிலிருந்து வெளியேற்றப்பட்டமை தொடர்பில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

சிவிலியன்களைப் போன்றே தொண்டு நிறுவன பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் அரசாங்கத்தின் கடப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிளிநொச்சியிலிருந்து வெளியேறி, வவுனியாவில் இருந்து இயங்குமாறு ஐக்கிய நாடுகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், இதனை வெளியேற்றமாக கருதக் கூடாது எனவும், ஓர் இடம் நகர்வாகவே கருதப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பூவியியல் அமைப்பு பற்றி தெளிவற்ற சில வெளிநாட்டு ஆய்வாளர்களே செய்திகளை திரிபுபடுத்தி வெளியிடுகின்றனர். ஆபிரிக்காவைப் போன்று ஆயிரம் கிலோ மீற்றருக்கு அப்பால் செயற்பாடுமாறு நாம் கோரவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பினால் வழங்கப்படும் உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் இன்னமும் அரசாங்க அதிபர்களின் ஊடாகவே விநியோகிக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, வவுனியாவிலிருந்து இருந்து இயங்குவதன் மூலம் எவ்வித சிக்கல்களும் ஏற்படாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாகரை, தொப்பிகல போன்ற பிரதேசங்களில் உணவு விநியோகம் மிகவும் சீராக இடம்பெற்றதென்பதனை எவரும் மறந்துவிடக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பிரபல ஆங்கில வார ஏட்டுக்கு அளித்த செவ்வியின் போது பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

பல அரச சார்பற்ற நிறுவனங்கள் வன்னியில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வந்ததாகவும், தற்போதைய கள நிலவரப்படி அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கக் கூடிய சாத்தியம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment