Sunday, September 28, 2008

ஐ.நா.வின் வழித்துணையுடன் வன்னிக்கு உணவுப்பொருட்கள் கொண்டு செல்லப்படும்-இடம்பெயர்ந்த மக்களிடம் நேரடியாக விநியோகிக்கவும் ஏற்பாடு


வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலுள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கான உணவுப் பொருட்கள் எதிர்வரும் வியாழக்கிழமைக்கு முன்னர் அங்கு சென்றடையுமென கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. ஐ.நா. உலக உணவுத் திட்டத்தின் உணவுப் பொருட்களுடன் 60 பார ஊர்திகள் ஐ.நா. வின் கொடியை தாங்கியவாறு ஐ.நா. அதிகாரிகளின் வழித்துணையுடன் கட்டுப்பாடற்ற பகுதிக்கு செல்லவுள்ளதாகத் தெரிவித்த ஐ.நா.வின் கொழும்பு அலுவலகம், அங்கு தற்போது களஞ்சிய வசதிகள் இல்லாததால் உணவுப் பொருட்களை இடம்பெயர்ந்த மக்களிடமே நேரடியாக விநியோகிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் கூறியது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

அரசாங்கத்தின் உத்தரவுக்கு அமைய ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச தொண்டு நிறுவனங்கள் கடந்த 16 ஆம் திகதி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வெளியேறியதையடுத்து நேற்றுவரை அங்குள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கான உணவு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படவில்லை. இந்நிலையில் இடம்பெயர்ந்த மக்களுக்கான உணவு நிவாரணப் பொருட்களை தங்குத்தடையின்றி வழங்க வேண்டுமென அமெரிக்கா உட்பட ஐரோப்பிய ஒன்றியமும், ஐ.நா. வும் அரசாங்கத்துக்கு அழுத்தங்களை கொடுத்து வருகின்றன. இதனையடுத்தே உலக உணவுத் திட்டத்தின் உணவுப் பொருள், வாகனத் தொடரணியை ஐ.நா. அதிகாரிகள் வழித்துணையுடன் கட்டுப்பாடற்ற பகுதிக்கு அனுப்ப அரசாங்கம் அனுமதிவழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக கேசரிக்கு கருத்து தெரிவித்த கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தின் உயர் அதிகாரியொருவர் கடந்த 16 ஆம் திகதிக்குப் பின்னர் உலக உணவுத் திட்டத்தின் உணவுப் பொருட்கள் அடங்கிய வாகன தொடரணி ஐ.நா. கொடியை தாங்கியவாறு ஐ.நா. அதிகாரிகளின் வழித்துணையுடன் சில நாட்களில் வன்னிக்கு செல்லவுள்ளது. இவ்வாறு கொண்டு செல்லப்படும் உணவுப் பொருட்களை அங்கு களஞ்சியப்படுத்தி வைக்கும் வசதி தற்போது இல்லை. எனவே அவற்றை இடம்பெயர்ந்துள்ள மக்களிடம் நேரடியாக விநியோகிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த முதலாவது வாகனத் தொடரணியின் வெற்றி மிகவும் முக்கியமானது. ஏனெனில் இதன் பெறுபேற்றின் அடிப்படையிலேயே எதிர்கால விநியோக நடவடிக்கைகள் இடம்பெறும்.

இந்த உணவுப் பொருட்களின் விநியோகம் ஐ.நா. அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் நடைபெறும். விநியோக நடவடிக்கை முடிவடையும் வரை ஐ.நா. அதிகாரிகள் கட்டுப்பாடற்ற பிரதேசத்தில் தங்கியிருப்பர்.

வன்னிப் பகுதிக்கான உணவு விநியோகம் தொடர்ச்சியாக இடம்பெறுவது அவசியமானதாகும். தமது சொந்த இடங்களை விட்டு பாதுகாப்புத் தேடி இடம்பெயர்ந்துள்ள நிலையில் அவர்களுக்கான உணவு விநியோகம் சீராக இடம்பெறாவிட்டால் அவர்கள் பாரிய இன்னல்களுக்கு உள்ளாவர் என்றார். இதேவேளை, இவ்விடயம் தொடர்பில் ஐ.நா. முகவர் நிறுவனங்களுக்கும் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்குமிடையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது

No comments:

Post a Comment