Thursday, September 18, 2008

வன்னிப்பெரு நிலப்பரப்பு மக்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கவலை



வன்னிப்பெரு நிலப்பரப்பில் மக்கள் இடம்பெயர்ந்துள்ள அவல நிலைமைகள் தொடர்பாக ஜரோப்பிய ஒன்றியத்தின் பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து தூதுவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஜெனீவாவில் நேற்று வியாழக்கிழமை அனைத்துலக மனித உரிமைகள் ஆணையத்தின் ஒன்பதாவது அமர்வு இடம்பெற்றது. அங்கு மனித உரிமைகள் பற்றிய விவாதத்தில் உரையாற்றும்போதே தூதுவர்கள் இவ்வாறு கவலை தெரிவித்தனர்.

போர் நடவடிக்கைகளினால் வன்னிப்பெரு நிலப்பரப்பில் உள்ள மக்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்குவதாகவும் நிவாரணங்கள் சுகாதார மற்றும் அடிப்படை வசதிகள் போதுமானவையாக இல்லை என்றும் ஜரோப்பிய ஒன்றியத்தின் பிரான்ஸ் தூதுவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை ஆட்கடத்தல், காணாமல் போதல், கொலைகள் போன்ற மனித உரிமைகள் அதிகரித்து வருகின்றன. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் சிறிலங்கா அரசாங்கத்தினால் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும் அவர் கண்டனம் தெரிவித்தார்.

அதேவேளை போர் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு பேச்சுக்கான சூழ்நிலையை ஏற்படுவதற்குரிய ஆரோக்கியமான கலந்துரையாடல் ஒன்றில் அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் ஈடுபட வேண்டும் நெதர்லாந்து தூதுவர் வலியுறுத்தினார்.

அனைத்துலக மனித உரிமைகள் ஆணையத்தின் ஒன்பதாவது அமர்வில் ஜக்கிய நாடுகள் சபையின் அனைத்துலக மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அமெரிக்கா ஹியூமன் றைற் வொச், அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் உட்பட மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, இந்த உரையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் அறிக்கைகளாக சிறிலங்கா அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் இராஜதந்திரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment