Tuesday, September 16, 2008

அக்கராயனில் புலிகள் நடத்தியது "வாயு" தாக்குதல்? பீதியில் சிறிலங்கா படை



கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன் மற்றும் வன்னிவிளாங்குளம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மோதல்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய "வாயு" தாக்குதல்களினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 16-க்கும் அதிகமான சிறிலங்கா படையினர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பு ஆங்கில ஊடகமான டெய்லி மிரரில் இது தொடர்பாக இடம்பெற்றுள்ள செய்தி:

கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன் மற்றும் வன்னிவிளாங்குளம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மோதல்களில் புலிகள் ஒருவகையான "வாயு"வை பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர். இதனால் படையினருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்த்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வன்னிவிளாங்குளம் மற்றும் மேற்கு மாங்குளம் பகுதியில் புலிகளின் இத்தகைய தாக்குதலினால் ஆறு படையினருக்கு மூசுத்திணறல் ஏற்பட்டது.

அக்கராயன்குளத்தில் 57 ஆவது படையணியினர் மீதும் இதேமாதிரியான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்தாக்குதலில் பத்து படையினர் மூச்சுத்திணறலால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

கண்ணீர்புகைக் குண்டுகளை ஒத்ததான ஒரு வகை "வாயு"வை பயன்படுத்தி விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி வருவதாக சிறிலங்கா படையினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அதிகாரபூர்வமாக எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே விடுதலைப் புலிகள், "விசவாயு" தாக்குதலை நடத்தக்கூடும் என்று சிறிலங்கா படையினர் பீதியடைந்துள்ளனர்.

இத்தகைய தாக்குதல்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் மேலதிகமான மருத்துவ வசதிகளை வடபோர்முனைக்கு அனுப்பி வைக்குமாறு சிறிலங்காவின் சுகாதாரத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.

இது தொடர்பாக நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் சிறிலங்கா படைத்தரப்பினரும் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment