Tuesday, September 16, 2008

இந்தியப் படையை அனுப்பியதைக் கண்டித்து தமிழ்நாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

சிறிலங்காவுக்கு ஆதரவாக இந்தியப் படை அனுப்பப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே இன்று திங்கட்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமை வகித்தார்.

வவுனியாவில் விடுதலைப் புலிகள் நடத்திய வானூர்தி தாக்குதலின் போது சிறிலங்காப் படையினருக்கு உதவியாக செயற்பட்டு வந்த இந்தியப் படையினரின் பொறியியலாளர்கள் இருவர் படுகாயமடைந்த செய்தி அம்பலமானது.

இது தமிழ்நாட்டுத் தமிழர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசின் இந்த தமிழின விரோதப் போக்குக்கு தமிழ்நாட்டுத் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் இலங்கைத் தமிழர்கள் மீதான சிறிலங்காவின் இனப்படுகொலைக்கு இந்திய அரசாங்கம் அளித்து வரும் படை உதவிகளைக் கண்டித்து முழக்கமிட்டனர்.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் பேசியதாவது:

விடுதலைப் புலிகளின் வானூர்தி தாக்குதல் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, புலிகளின் வானூர்திகளோ 20 கிலோ குண்டுகளைத்தான் வீசும். அதுவும் ஆறு முறைதான் தாக்குதல் நடத்தியிருக்கிறது. ஆனால் எமது சிங்கள இராணுவமோ 6 ஆயிரம் முறைகளுக்கு மேல் ஆயிரக்கணக்கான கிலோ கொண்ட குண்டுகளை தமிழர்கள் மீது வீசித் தாக்கியிருக்கிறது என்று ஒப்புக் கொண்டுள்ளார். அப்படியானால் இலங்கைத் தீவில் தமிழர்கள் மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல் எத்துணை கொடூரமானது என்பதை புரிந்து கொள்ளுங்கள். அத்தகைய சிறிலங்கா படையினருக்கு இந்திய அரசாங்கம் உதவுவது வன்மையான கண்டனத்துக்குரியது என்றார்.

திரைப்பட இயக்குநர் சீமான் பேசியதாவது:

சிங்களப் படையினரால் தமிழக மீனவர்கள் சுட்டுக்கொலை என்றுதான் இதுவரை செய்திகள் வெளியாகி உள்ளன.

ஒருபோதும் இந்திய மீனவன் சுட்டுக்கொலை என்று செய்தி வெளியானது இல்லை. அப்படியானால் தமிழ்நாடு என்பதும் தமிழ் மீனவன் என்பவனும் இந்தியா என்கிற நாட்டில் இல்லையா?

எதிரி நாடாக இருந்தாலும் இந்திய மீனவனை பாகிஸ்தான் சுட்டுக்கொன்றது இல்லையே?

தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான சிறிலங்காவின் தாக்குதலை எப்போதாவது இந்தியா வாய்திறந்து கண்டித்தது உண்டா?

ஏன்? எதற்காக? இப்படி எல்லோரும் சிங்களவனுக்குப் போட்டிப் போட்டு ஆதரவு தருகிறார்கள்? என்றார்.

ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்த தொல். திருமாவளவன் பேசியதாவது:

தமிழர்கள் மீதான படுகொலையை நிகழ்த்துவதில் இந்தியாவும் சிங்களமும் கைகோர்த்து செயற்பட என்ன காரணம்?

இங்கே ஏழை மாணவர்களுக்கு ஒரு லட்சம் ரூபா கல்விக்கடன் வழங்காமல் அவர்களை பிச்சை எடுக்க வைக்கின்ற அரசாங்கம், பல ஆயிரம் கோடிக்கு தளபாட உதவி- கடனுதவி கொடுக்கிறீர்களே ஏன்?

தளவாடங்கள்- பொறியியலாளர்கள் கொடுக்க சட்டத்தில் இடமிருக்கா?

சிறிலங்காவுக்கான ஆயுத உதவிகள் குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் விவாதித்தீர்களா?

யார் உங்களுக்கு அனுமதி தந்தது?

குறைந்தபட்சம் தமிழ்நாட்டு முதல்வரிடமாவது பேசினீர்களா?

இந்தியாவின் வெளிவிவகார கொள்கை என்பது தற்சார்புக் கொள்கை அல்ல. அது அமெரிக்காவின் கொள்கைதான்.

சிங்களவருக்கான இந்தியாவின் உதவி சரியா தவறா என்பது குறித்து பொதுமக்களிடத்தில் வாக்கெடுப்பு நடத்துங்கள். உண்மை தெரியும்.

சிறிலங்காவுக்கு ஆயுத உதவி செய்வோருக்கு எதிர்வரும் பொதுத்தேர்தலிலே தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றார் அவர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பல்வேறு தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.

No comments:

Post a Comment