Tuesday, September 30, 2008

இந்தியாவின் பாணியில் தடுப்பரண்களை அமைத்துள்ள புலிகள்:தரைமார்க்கமாக முன்னேற முடியாமலிருக்கும் இராணுவம்



விடுதலைப் புலிகள் வன்னிப் போர்முனைகளில் இந்திய இராணுவத்தின் பாணியில் ஏற்படுத்தி வைத்துள்ள தடுப்பரண்களினால் இலங்கை இராணுவம் தரை மார்க்கமாக முன்னேற முடியாமல் தவிப்புக்குள்ளாகியுள்ளதாக இந்திய இணையத்தளமொன்று தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

விடுதலைப் புலிகள் குறித்து பல்வேறு விதமான கருத்துகள் நிலவி வந்தாலும், அவர்களின் இராணுவ உத்திகள் பெரும் வியப்பளிப்பவையாகவே உள்ளன என்பதை யாரும் மறுக்க முடியாது. ஒரு நாட்டின் இராணுவத்திடம் இருக்க வேண்டிய அத்தனை வசதியும் சாதுரியமும் புத்திசாலித்தனமும் ஆயுத, ஆள் பலமும் புலிகளிடம் உள்ளது.

இந்த நிலையில், புலிகள் ஏற்படுத்தி வைத்துள்ள பாதுகாப்பு அரண்கள் குறித்த வியப்பூட்டும் தகவல் வெளியாகியுள்ளன. அதில் என்ன ஆச்சரியம் என்றால், இத்தகைய பாதுகாப்பு அரண்களை இந்திய இராணுவமும் கையாளுகிறது என்பதுதான்.

பாகிஸ்தானுடனான போரின்போதுதான் இத்தகைய பாதுகாப்பு அரண்களை இந்தியா பயன்படுத்தத் தொடங்கியது. உண்மையில் இது பிரெஞ்சுப் பாணி தடுப்பரண் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தடுப்பரண் மேற்கு மன்னார் கடலோரப் பகுதியில் உள்ள நாச்சிக்குடா முதல், கிழக்கில் உள்ள அக்கராயன்குளம் வரையிலும் நீண்டு காணப்படுகிறது. "ஸிக் ஸாக்' வடிவிலும் மொத்தம் 3 கட்டங்களைக் கொண்டதாகவும் இந்தத் தடுப்பரண் உள்ளது.

முதலில் கண்ணிவெடிகள் பதிக்கப்பட்ட தளம் வருகிறது. அடுத்து பெரும் பள்ளம் வரும். இதைத் தொடர்ந்து வருவது தாக்குதல் நடத்தும் வீரர்கள் பதுங்கியிருந்து தாக்கக்கூடிய பதுங்கு குழிகள்.
இந்த மூன்றும் சேர்ந்ததுதான் புலிகளின் தடுப்பரணாகும். இந்தப் பதுங்கு குழிகளுக்குள் இருந்தபடி 360 பாகை கோணத்தில் எந்தப் பக்கம் உள்ள எதிரிகளையும் குறிபார்த்துத் தாக்க முடியுமாம்.

கண்ணிவெடிகளை இயக்குவதில் புலிகள் சாதுரியமானவர்கள் என்பது அனைவரும் அறிந்தது. இந்தப் பாதுகாப்பு அரண்களில் முதலில் வரும் கண்ணிவெடி பொறியிலிருந்து அவ்வளவு எளிதில் இராணுவத்தால் தப்ப முடியாதாம். ஒருவேளை அதற்கு அவர்கள் முயன்றால் பதுங்குகுழிகளிலிருந்து வரும் தாக்குதலையும் சமாளிக்க வேண்டும். கண்ணிவெடியையும் தாண்டி அவர்கள் வந்துவிட்டால் அகழிகள் எனப்படும் பள்ளங்களை அவர்களால் நிச்சயம் தாண்ட முடியாதாம்.

இந்த அகழிகள் 10 அடி ஆழமுடையன. இந்தப் பள்ளத்தை கவச வாகனங்களால் நிச்சயம் தாண்ட முடியாது. இப்படி எதிரிகளால் எளிதில் தங்களது பகுதிகளுக்குள் நுழைய முடியாத அளவுக்கு மிகச் சிறப்பான பாதுகாப்பு அரணை விடுதலைப் புலிகள் உருவாக்கி வைத்துள்ளனராம்.

இத்தகைய பாதுகாப்பு அரண்களை இதுவரை இலங்கைப் படையினர் சந்தித்ததில்லையாம். இதில் அவர்களுக்கு அனுபவமும் கிடையாதாம். இதுகுறித்தும் தெரியாதாம்.

ஐரோப்பிய நிறுவனங்கள் உதவி மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காகக் கொண்டு வந்த இயந்திரங்களைக் கொண்டு இந்த பாதுகாப்பு அரண்களை புலிகள் உருவாக்கியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே நில மார்க்கமாக விடுதலைப் புலிகளின் முக்கிய பகுதிகளுக்குள் இராணுவத்தால் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், விடுதலைப் புலிகளிடம் மிகவும் அதி நவீனமான ஆயுதங்கள் ஏராளமாக இருக்கிறதாம். ஆனால், போதிய ஆட்கள் இல்லாததே அவர்களின் தற்போதைய பின்னடைவுக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது. இதை இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் ஒப்புக் கொண்டுள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment