Monday, September 15, 2008

வன்னியிலிருந்து ஐநா அமைப்பினர் இன்று வெளியேறுகின்றனர்


ஓமந்தை வரை வாகனத் தொடரணிக்கு பாதுகாப்பு வழங்க விடுதலைப் புலிகள் இணக்கம் என்கிறார் ஐநாவின் பேச்சாளர் கோடன் வெயிஸ் வன்னியிலிருந்து ஐநா அமைப்பினர் அனைவரும் இன்று காலை 10 மணியளவில் வெளியேறுவதாகவும், இவர்களது வாகனத் தொடரணிக்கு விடுதலைப் புலிகள் பாதுகாப்பு வழங்க முன்வந்துள்ளதாகவும் ஐநாவின் இலங்கையில் உள்ள பேச்சாளர் கோடன் வெயிஸ் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக வன்னியில் இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்ற இராணுவ நடவடிக்கைகள் மிக மோசமடைந்துள்ளதையடுத்து, அங்கு மனித நேய பணிகளில் ஈடுபட்டுள்ள ஐநா அமைப்புக்கள் உட்பட சர்வதேச தொண்டு நிறுவனப் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பினை தம்மால் முடியாது எனக் கூறி அவர்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறி, வவுனியாவில் இருந்து பணியாற்றுமாறு அரசாங்கம் அறிவித்திருந்தது.

இதனையடுத்து கடந்தவாரம் வன்னியிலிருந்து மனிதநேய பணியாளர்கள் வெளியேறத் தொடங்கியதும், அவர்களை வெளியேற வேண்டாம் எனக்கோரி, அங்குள்ள மக்கள் ஐநா அமைப்பு அலுவலகங்களுக்கு முன்னால் கூடி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். மனித நேய பணியாளர்கள் வன்னியில் தொடர்ந்தும் தங்கியிருந்து தமது இன்னல்களைப் போக்க பணியாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, பல மகஜர்கள் பொதுமக்களினால், வன்னியில் உள்ள ஐநா அமைப்பினரின் ஊடாக ஐநாவின் செயலாளர் நாயகத் பன்கீ மூனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

எனினும், இருந்து ஐநா அமைப்புக்கள் உட்பட மனித நேய நிறுவனங்களை வன்னிப்பகுதியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற அரசாங்கத்தின் தீர்மானத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. வன்னியில் நிலைமைகள் மோசமடைநது செல்வதனால், அங்கிருந்து பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியேற வேண்டு ம் என்ற ஐநா அமைப்பினரின் தீர்மானத்திலும் மாற்றம் ஏற்படவில்லை.

இந்த நிலையில் ஐநா அமைப்பின் உயரதிகாரி ஒருவர் நேற்று கிளிநொச்சிக்குச் சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடனும், விடுதலைப் புலிகளுடனும் பேச்சுக்கள் நடத்தியதையடுத்து, நேற்று நண்பகலுடன் பொதுமக்களின் மறியல் நடவடிக்கை கைவிடப்பட்டதாக வன்னித் தகவல்கள் தெரிவி;க்கின்றன.

இந்தப் பேச்சுவார்த்தைகளில் இன்று காலை 10 மணியளவில் வன்னியில் உள்ள மனிதநேய அமைப்புக்கள் ஒரே வாகனத் தொடரணியில் வெளியேறுவது என்றும், அந்தத் தொடரணிக்கு விடுதலைப் புலிகள் ஓமந்தை சோதனைச்சாவடி வரையில் உரிய பாதுகாப்பை வழங்குவது என்றும் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் தகவல்கள்.

தற்போது கிடைத்த செய்திகளின் படி இன்னும் சில நிமிடங்களில் வாகன தொடரணி புறப்பட தயாராய் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது

No comments:

Post a Comment