Tuesday, September 30, 2008

ஈழத் தமிழர்களுக்காக தி.மு.க. செய்தது என்ன?: முதல்வர் கருணாநிதி விளக்கம்



ஈழத் தமிழர்களுக்காக திராவிட முன்னேற்றக் கழகம் மேற்கொண்ட செயற்பாடுகள் மற்றும் எதிர்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அக்கட்சியின் தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான கலைஞர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட கேள்வி - பதில் வடிவிலான அறிக்கை:

கேள்வி: இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்தும் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு தி.மு.க.வை அழைக்கவில்லையே?

பதில்: தி.மு.க. தொடக்கம் முதல் இலங்கைத் தமிழர்களுக்கான ஆதரவான கட்சி என்பது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு நன்றாகத் தெரியும். எனவே நம்மை அழைக்க வேண்டாமென்று நினைத்து, இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக இதுவரை இருந்தவர்களையும், அரைகுறையாக ஆதரவு அளித்து வந்தவர்களையும் முக்கியமாக இந்தப் போராட்டத்திற்கு அழைக்க வேண்டுமென்று நினைத்து அழைத்திருக்கலாம். அதனால் என்ன? இலங்கைத் தமிழர்கள் நன்றாக விடயம் தெரிந்தவர்கள்.

அவர்களுக்கு உண்மையில் நமக்கு ஆதரவானவர் யார்? போலியாக ஆதரவு காட்டுவோர் யார் என்பதெல்லாம் நன்றாகவே தெரியும். இலங்கைத் தமிழர்களுக்காக ஒரே நாளில் அறிக்கை விடுத்து, அடுத்த நாளே 7 லட்சம் மக்களை தமிழகத் தலைநகரில் பேரணி நடத்திக்காட்டி, அவர்களுக்காகப் போராடிய கட்சி தி.மு.க. என்பதையும், சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளையே பதவி விலகிய கட்சி தி.மு.க. என்பதையும், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காகவே 1991 ஜனவரியில் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது என்பதையும், புதிதாகச் சொல்லி உலகத்திற்கு தெரிய வைக்க வேண்டிய அவசியமில்லை.

இந்தப் பிரச்சினையில் தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆட்சியின் நிலை என்ன என்பது பற்றி சட்டப்பேரவையிலேயே நீண்ட உரை நிகழ்த்தி விளக்கியிருக்கிறேன். எப்படியோ உண்ணாநிலை பந்தலில் அனைத்து கட்சித் தலைவர்கள் கூடும் போது 23.04.08 அன்று சட்டமன்றத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினையையொட்டி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப் பற்றி விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம் என்று அதில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment