Tuesday, September 30, 2008

யாழில் தேர் முட்டிகளில் தேடும் இராணுவத்தினர்

யாழ் குடாநாட்டிலுள்ள இந்து ஆலயங்களிலுள்ள தேர் முட்டிகளை இராணுவத்தினர் சோதனைக்கு உட்படுத்திவருவதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.
பயங்கரவாதிகள் மறைந்திருந்து தாக்குதல் நடத்தலாமென பாதுகாப்புத் தரப்பில் கூறப்படுகிறது. அண்மைக் காலமாக இராணுவத்தினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களைத் தொடர்ந்தே பாதுகாப்புத் தரப்பினர் இவ்வாறான தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்திருப்பதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம், யாழ் குடாநாட்டில் யாரும் இல்லாத வீடுகளையும் இராணுவத்தினர் சோதனைக் உட்படுத்திவருவதாகத் தெரியவருகிறது.

இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்துபவர்கள் யாருமில்லாத வீடுகளில் பதுங்கியிருப்பதாலும், யாருமற்ற வீடுகளில் சமூகவிரோத செயற்பாடுகள் நடைபெறுவதாலும் இந்தச் சோதனைநடவடிக்கைகளை இராணுவத்தினர் முன்னெடுத்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, யாழ்ப்பாணத்தின் தென்மராட்சிப் பகுதிகளில் ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஊடரங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் நேரத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கமைய தென்மராட்சியில் இரவு 7 மணியிலிருந்து ஊடரங்குச்சட்டம் அமுலுக்கு வருவதாகத் தெரியவருகிறது.

இதுஇவ்விதமிருக்க ஊடரங்குச்சட்டம் அமுல்படுத்தும் நேரங்களில் வீதிகளில் நடமாடுபவர்கள் மீது எந்தவிதமான எச்சரிக்கையுமின்றி துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்படும் எனக் கூறும் அநாமதேய சுவரொட்டிகள் குடாநாட்டின் தென்மராட்சி மற்றும் வடமராட்சிப் பகுதிகளில் ஒட்டப்பட்டிருப்பதாக யாழ் செய்திகள் கூறுகின்றன. எனினும், இது தொடர்பில் பாதுகாப்புத் தரப்பிலிருந்து எந்தவிதமான அறிவித்தல்களும் இதுவரை வெளியாகவில்லை.

No comments:

Post a Comment