Monday, October 20, 2008

கண்டம் விட்டு கண்டம் தாக்கும் புதிய ஏவுகணைகள் ரஷ்யாவால் பரிசோதிப்பு

ரஷ்யாவானது கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கக்கூடிய மேலும் 3 ஏவுகணைகளை ஏவி கடந்த ஞாயிற்றுக்கிழமை பரிசோதித்தது. அணு நீர்மூழ்கி போர்க் கப்பலில் இருந்து ஏவப்பட்டு இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதிக தூரத்துக்கு பயணிக்கக் கூடிய ஏவுகணை தம்மிடம் இருப்பதாக ரஷ்யா அறிவித்து மறுநாள் இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இரு ஏவுகணைகள் ஏவப்படுவதை போர்க் கப்பல் ஒன்றில் இருந்து பார்வையிட்ட ஜனாதிபதி திமித் மெட்வேடேவ், இது ரஷ்யாவின் ஏவுகணைப் பாதுகாப்பு பலமாக இருப்பதை நிரூபிப்பதாக உள்ளது எனத் தெரிவித்தார்.

இந்த ஏவுகணைகளில் ஒன்று நோர்வேயின் கிழக்கேயுள்ள பாரென்ட்ஸ் கடலிலிருந்தும் மற்றையது ஜப்பானின் வடக்கேயிருந்தும் ஏவப்பட்டது. மூன்றாவது ஏவுகணையானது வடமேற்கு ரஷ்ய நிலப் பகுதியிலிருந்து ஏவப்பட்டது. இதனைத் தொடர்ந்து எதிர்காலத்தில் மேலும் பல ஏவுகணைகளை ஏவிப் பரிசோதிக்கவுள்ளதாக மெட்வேடேவ் தெரிவித்தார். அதேசமயம், முன்னதாக சனிக்கிழமை விமான தளமொன்றிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணையையும் ஜனாதிபதி திமித் மெட்வேடேவ் பார்வையிட்டார்.

இந்த ஏவுகணையானது மணிக்கு 11,500 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்ததாக கூறப்படுகிறது. அமெரிக்க கிழக்கு ஐரோப்பாவில் ஏவுகணை எதிர்ப்புத் தளங்களை அமைப்பதற்கு உடன்படிக்கைகளை செய்துகொண்டுள்ள நிலையில், அதனை எதிர்த்துவரும் ரஷ்யா தனது ஏவுகணைப் பரிசோதனைகளை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment