Monday, October 27, 2008

சிதம்பரத்தின் கொழும்பு வருகையின் பின்னணி என்ன?: ஐ.தே.க. கேள்வி



இந்தியாவின் மூத்த அமைச்சரும் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் இன்னும் சில நாட்களில் கொழும்புக்கு பயணம் செய்யவுள்ளதன் நோக்கம் என்ன என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் காசிம் கேள்வி எழுப்பியுள்ளார்.

போரை தொடர்ந்து நடத்த முடியாது என்பதனால் அரசாங்கம் சமாதான முயற்சி என்ற பெயரில் இந்தியாவின் உதவியை கோரியிருக்கின்றது எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தற்போதைய நிலைமை தொடர்பாக விளக்கமளித்த அவர், புலிகளுக்கு எதிரான போரை அரசாங்கம் தொடர்ந்து நடத்த வாய்ப்பில்லை எனவும் எடுத்துக்கூறியுள்ளார்.

இந்தியாவின் மூத்த அமைச்சர் சிதம்பரம் இன்னும் சில நாட்களில் கொழும்புக்கு வருகை தரவுள்ளதாக இரகசிய தகவல் கிடைத்துள்ளது. அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்துவதற்காவே அவர் கொழும்புக்கு வருகின்றார்.

அப்படியானால் அது என்ன தீர்வு? புலிகளுடனான போரை கைவிடப்பட்டுள்ளதா? இந்த கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் காசிம் வற்புறுத்தியுள்ளார்.

புலிகளுக்கு எதிராக படையினர் வெற்றி பெற்று வரும் நிலையில் யாரை கேட்டு புலிகளுடனான போரை அரசாங்கம் நிறுத்தியது என்றும் கேள்வி மேல் கேள்வி எழுப்பியதுடன் மூத்த அமைச்சர் ப.சிதம்பரம் வருகை தரவுள்ளமை தொடர்பில் அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment