Wednesday, October 22, 2008

உலக நாடுகள் எம் பின்னால் இருக்கும் வரை இராணுவ முன்னெடுப்புக்கள் தொடரும் - அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிப்பு


பயங்கரவாதத்தை ஒழிப்போம் என்ற ஒரேயொரு தொனிப்பொருளின் கீழ் செயற்பட்டு வரும் உலக நாடுகள் அனைத்தும் நமது பின்னால் இருக்கும் வரையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ முன்னெடுப்புக்கள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும்.

கடந்த 30 வருடகால போர் வரலாற்றில் பலவீனமடைந்த விடுதலைப் புலிகள் இயக்கம் அவ்வாறான ஒவ்வொரு சந்தர்ப்பத்தின் போதும் மனிதநேயத்தை முன்னிலைப்படுத்தி உலக நாடுகளின் அனுதாபத்தினைப் பெற்றுக்கொள்கிறது. ஆனால் அவ்வாறான முயற்சிகள் இனிவரும் காலங்களில் அவர்களுக்கு ஒருபோதும் கைகொடுக்கப் போவதில்லை என்று அமைச்சரும் தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளருமாகிய கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற விஷேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் தொடர்ந்தும் கூறியதாவது:

இரண்டரை இலட்சத்துக்கும் அதிகமான அப்பாவித் தமிழ் மக்கள் அரச கட்டுப்பாடற்ற பகுதிகளில் தங்கியுள்ளனர். அவர்களுக்கும் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் அடிப்படை வசதிகள் போன்றன எதுவுமின்றி அவர்கள் அப்பகுதிகளில் பெரும் துன்பங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

அவ்வாறான மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் அப்பகுதிகளில் வாழும் மக்களுக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் போன்றவற்றை அனுப்பி அவர்களைப் பாதுகாக்கவென அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

ஆனால் மக்களுக்கான உணவுப் பொருட்களை கொண்டு செல்லும் பாதைகளை மூடி அம்மக்களை அதல பாதாளத்தில் தள்ளிவிட விடுதலைப் புலிகள் இயக்கம் முயற்சிக்கின்றது. இதன் மூலம் அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக பொதுமக்கள் பட்டினிச் சாவினை எதிர்க்கொள்கின்றார்கள் என்று மனிதநேயத்தைக் காரணம் காட்டி உலக நாடுகளின் அனுதாபத்தினை பெற்றுக்கொள்ள அவ்வியக்கம் முயற்சிக்கின்றது.

அவ்வாறான அனுதாபத்தினைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையின் ஒரு பாகமே இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றுமாறு இந்திய மத்திய அரசாங்கத்தின் மீதான தமிழ்நாட்டின் கட்டாயப்படத்தலுமாகும். ஆனால் அவற்றைக் கருத்திற்கொண்டு இராணுவ நடவடிக்கைகளை அரசாங்கம் ஒருபோதும் கைவிடாது.

இந்திய இலங்கை அரசாங்கங்களுக்குடையிலும் அவற்றின் தலைவர்களுக்குமிடையிலுமே அனைத்து ஒப்பந்தங்களும் உள்ளன. மாநில அரசுக்களின் கட்டுப்படத்தல்களுக்கு எமது அரசாங்கம் தலைசாய்க்க வேண்டிய அவசியம் இல்லை.

No comments:

Post a Comment