Friday, October 24, 2008

தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் எம்.பி.க்கள் சட்டத்தரணிகளுக்கு "பிசாசுப் படை' அச்சுறுத்தல்



ஆட்கடத்தல், காணாமல்போதல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சட்டத்தரணிகளுக்கும் "பிசாசு படையணி' (மஹஷோன் பலகாய) எனும் பெயரில் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் பிரச்சினையொன்றை கிளப்பினர்.

இந்த அச்சுறுத்தல் கடிதங்கள் எம்.பி.க்களுக்கு தனிப்பட்ட ரீதியிலும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் இணையத் தளங்களிலும் வெளியிடப்பட்டிருப்பதாகவும் அவர்கள் சபாநாயகரிடம் முறையிட்டனர்.

எனினும், இந்தக் கடிதத்தை சபையில் வாசிக்க அரசதரப்பு கடும் எதிர்ப்பு வெளியிட்டதுடன், சபாநாயகரும் அதற்கு அனுமதி வழங்கவில்லை.

பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்கு பண்டார தலைமையில் கூடியது.

வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் பின்னர் சபாநாயகர் தினப்பணிகளை ஆரம்பிக்க முற்பட்ட போது குறுக்கிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட எம்.பி., லக்ஷ்மன் கிரியெல்ல ஆட்கடத்தல், காணமால்போதல் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி பேசும் தங்களது எம்.பி.க்களுக்கும், சட்டத்தரணிகளுக்கும் "பிசாசு படையணி' என்ற பெயரில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாக கூறி அது தொடர்பான அறிக்கையொன்றை வாசிக்க சபாநாயகரிடம் அனுமதி கேட்டார்.

எனினும், தனக்கு அதுபற்றி அறியத்தரப்படாமையால் அனுமதிக்க முடியாதென சபாநாயகர் மறுக்கவே, இது மிகவும் முக்கியமான பிரச்சினையென்றும் எம்.பி.க்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாகவும் வாசிக்க அனுமதி வழங்கினால் விபரங்களை தெரிந்துக்கொள்ள முடியுமென்றும் லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. சுட்டிக்காட்டினார்.

இதேநேரம், சபாநாயகருக்கு முன்னறிவித்தலின்றி சபைக்கு அறிக்கையொன்றை விடுக்க கடும் எதிர்ப்பு வெளியிட்ட சபை முதல்வரான அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, சிறப்புரிமை பிரச்சினையென்றால் மட்டுமே இதற்கு இடமளிக்க முடியுமென்றும் இல்லாவிட்டால் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு அமைவான சபை நடவடிக்கைகளை மீறுவதாக அமைந்து விடுவதோடு, நினைக்கும் போதெல்லாம் சபாநாயகருக்கு முன்னறிவித்தலின்றி அவசர விடயமென கூறி அறிக்கை விடுவது சம்பிரதாயமாகிவிடுமென்றும் சுட்டிக்காட்டினார்.

ரணில்

அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவின் கருத்தை ஆமோதித்து சபாநாயகரும் கருத்து வெளியிட்டார். அச்சமயம் குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவை நோக்கி ""இவர் ஏன் குளம்புகிறார்? இவரும் பிசாசு படையணியை சேர்ந்தவரா?' என்று கேள்வியெழுப்பினார்.

இதேநேரம், பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் 25 ஆவது பிரிவின் பிரகாரம் அவசரமானதும் முக்கியமானதுமொரு சூழ்நிலையில் இவ்வாறானவ அறிக்கைகளை விடுக்க முடியுமென எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான ஜோசப் மைக்கல் பெரேரா சபாநாயகரிடம் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், அச்சுறுத்தல் கடிதம் தனிப்பட்ட ரீதியில் மட்டுமன்றி இணையத்தளங்களிலும் வெளியிடப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதனையடுத்து, 25 ஆம் நிலையியற் கட்டளையை வாசிக்குமாறு சபாநாயகர் கூறவே, அதை வாசித்துக்காண்பித்த ஜோசப் மைக்கல் பெரேரா, பாராளுமன்ற சிறப்புரிமை பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டினார்.

அத்துடன், எம்.பி.க்களுக்கான பாதுகாப்புகள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கான குண்டு துளைக்காத வாகனம் தொடர்பாக உரிய பதில்களை வழங்காது அரசாங்கம் கடந்த பல மாதங்களாக இதை தட்டிக்கழித்து வரும் நிலையில் தற்போது தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் எம்.பி.க்களுக்கும் சட்டத்தரணிகளுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாக லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. கூறினார்.

எனவே, இது தொடர்பில் தனது அறிக்கையை சபைக்கு அறிவிக்க இடமளிக்குமாறும் அவர் சபாநாயகரை கேட்டார்.

எனினும், அதற்கு அனுமதியளிக்க முடியாதென தெரிவித்த சபாநாயகர், ஏற்கனவே கடிதத்திலுள்ள விடயங்களை லக்ஷ்மன் கிரியெல்ல கூறிவிட்டதால் அதை அறிக்கையாக விடுக்க வேண்டிய அவசியமில்லையென கூறியதுடன், எவ்வாறிருப்பினும் குறித்த அச்சுறுத்தல் கடிதத்தை தனக்கு சமர்ப்பிக்குமாறும் அது தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுக்க முடியுமென்றும் தெரிவித்தார்.

அத்துடன், நிகழ்ச்சி நிரலொன்றுக்கு அமையவே சபை நடவடிக்ககைகள் முன்னெடுத்துச் செல்லப்படுவதால் அதை மீறி செயற்பட முடியாதென கூறிய சபாநாயகர், அவ்வாறு மீறி செயற்பட்டால் எவரும் இவ்வாறான கடிதமொன்றை காண்பித்து அறிக்கை விடுக்க முடியுமென்ற தவறான சம்பிரதாயமொன்றுக்கு வழி வகுத்து விடுமொன்றும் சுட்டிக்காட்டினார்.

இதன் தொடர்ச்சியாக எம்.பி.க்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை சபையில் கிளம்பவே அச்சுறுத்தல் கடிதம் குறித்த பிரச்சினை அப்படியே அடங்கிவிட்டது.

No comments:

Post a Comment