Tuesday, October 28, 2008

கொழும்பிலும் மன்னாரிலும் : தமிழீழ வான் புலிகள் தாக்குதல்



சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள எண்ணெய்க்குதம் அருகிலும், மன்னார் மாவட்டத்தில் உள்ள தள்ளாடி படைத்தளம் மீதும் தமிழீழ வான் புலிகள் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இத் தாக்குதல் தொடர்பாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளதாவது, தள்ளாடி சிறிலங்கா படைத்தளம் மீது இன்று செவ்வாய்க்கிழமை இரவு 10.50 மணியளவில் விடுதலைப் புலிகளின் விமானம் ஒன்று தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் பாரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. அதேநேரம் கொழும்பில் உள்ள எண்ணெய்க்குதம் அருகேயும் விடுதலைப் புலிகளின் விடூமானங்கள் குண்டுகளை வீசியுள்ளது என்று தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் வானூர்திக்கு எதிராக சிறிலங்கா படையினர் வானூர்தி துப்பாக்கிகள் தாக்குதலை நடத்தியுள்ளது என்று படைத்தரப்பு மேலும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: மன்னார் மாவட்டத்தில் உள்ள தள்ளாடி சிறிலங்கா தரைப்படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10:20 நிமிடத்துக்கு குண்டுத்தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் தள்ளாடி தரைப்படைத்தளம் பலத்த சேதமடைந்துள்ளது. பலர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர். அதேநேரம், சிறிலங்காவின் தலைநகரில் அமைந்துள்ள களனி திச அனல் மின் உற்பத்தி நிலையம் மீது நேற்று இரவு 11:45 நிமிடத்துக்கு வான்புலிகள் வெற்றிகரமான தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த இரு இடங்களிலும் தாக்குதலை நடத்தி விட்டு வானூர்திகள் பாதுகாப்பாக தளம் திரும்பியுள்ளன என்று விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வான் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சிறீலங்கா அறிவித்துள்ள நிலையில் வான் புலிகள் எவ்வாறு கொழும்பு வரை வந்து தாக்குதல் நடத்திவிட்டு மீண்டும் திரும்பிச் சென்றுள்ளனர் என்பது பெரும் ஆச்சரியமளிப்பதாக சர்வதேச ஆங்கில ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன

No comments:

Post a Comment