Tuesday, October 28, 2008

தமிழ் மக்கள் அனைவரும் விடுதலைப் புலிகளாகவே பார்க்கப்படுகின்றனர்: "நசனல் போஸ்ட்"சிறிலங்காவின் தலைநகரில் கடத்தல்கள் அசாதாரணமவை அல்ல. தமிழ் மக்கள் அங்கு சந்தேகத்துடன் நடத்தப்படுவதுடன், தமிழீழ விடுதலைப் புலிகளாகவே பார்க்கப்படுகின்றனர் என்று கனடாவில் இருந்து வெளிவரும் "நசனல் போஸ்ட்" ஏடு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த ஏட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மாலினி தம்பிப்பிள்ளையின் நான்கு வயது மகள் தொடர்ந்து ஒரே கேள்வியை தனது தாயாரிடம் கேட்டு வருகின்றார். எல்லா குழந்தைகளுக்கும் தந்தை உள்ள போதும் எனது தந்தை எங்கே? என்பது தான் அந்த கேள்வி.

சிறிலங்காவில் பலவந்தமாக காணாமல் போன பல நூறு பேர்களில் (ஏன் பல ஆயிரமாக கூட இருக்கலாம்) உனது தந்தையும் ஒருவர் என்ற பதிலை இந்த பாலர் பாடசாலைக்கு செல்லும் குழந்தைக்கு புரிய வைப்பது கடினமானது.

கனடாவின் ரொறன்ரோ நகரில் உள்ள நப்கின் தொழிற்சாலையில் தொழில் புரிந்து வரும் திருமதி தம்பிப்பிள்ளை, தனது கணவர் காணாமல் போன நாள் தொடக்கம் பலரிடமும் உதவிகளை கேட்டு தபால்களை அனுப்பியவாறு உள்ளார். அவரது கணவர் கடந்த மாதம் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் வெள்ளை வானில் வந்தோரால் கடத்தி செல்லப்பட்டிருந்தார்.

எனக்கு எனது கணவர் வேண்டும், எனது குழந்தைக்கு அவரின் தந்தையார் வேண்டும் என ஸ்காபரோவில் உள்ள தனது இல்லத்தில் இருந்து வழங்கிய நேர்காணலின் போது அவர் தெரிவித்திருந்தார். அங்கு அவரின் கணவரின் புகைப்படம் காணப்பட்டது.

திருமதி தம்பிப்பிள்ளை ரொறன்ரோ நகருக்கு 1998 ஆம் ஆண்டு வந்திருந்தார். சிறிலங்காவில் 25 வருடங்களாக இடம்பெற்று வரும் போரில் இருந்து தப்பிப்பதற்காக கனடாவில் அடைக்கலம் புகுந்த பல ஆயிரம் தமிழ் மக்களில் இவரும் ஒருவர்.

இவர் 2003 ஆம் ஆண்டு சிறீதரன் சுப்பிரமணியம் என்பவரை திருமணம் செய்திருந்தார். அவரும் ஏற்கனவே கனடாவிற்கு குடிபெயர்ந்திருந்தவர். ஆனால் அவர் கனேடிய குடிமகனாக தன்னை ஆவணப்படுத்தி கொள்ள முனைந்த சமயத்தில் அவரின் புகலிட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டிருந்தார்.

சிறிலங்காவுக்கு திரும்பிய அவர் உணவகம் ஒன்றில் வேலை பார்த்து வந்ததுடன், அவரை மீண்டும் கனடாவுக்கு வரவழைப்பதற்கான விண்ணப்பத்தை அவரின் மனைவி மேற்கொண்டிருந்தார். சிறிலங்காவுக்கான கனடிய தூதரகம் அவரை நேர்காணலுக்கு அழைத்திருந்த போதும் அவரின் விண்ணப்பம் தொடர்பான முடிவுகள் எதனையும் கனடிய தூதரகம் தெரிவிக்கவில்லை.

கடந்த செப்ரம்பர் மாதம் 19 ஆம் நாள் காலை 10:20 நிமிடமளவில் சுப்பிரமணியமும் அவரது நண்பர் ஒருவரும் வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டிருந்தனர்.

இதே போன்ற ஏராளமான கதைகளை நாம் கேட்டுக்கொண்டிருந்கின்றோம் என கனடா தமிழ் காங்கிரசின் பேச்சாளர் டேவிட் பூபாலப்பிள்ளை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஒரு சுயாதீனமான விசாரணைக்குழுவை ஐக்கிய நாடுகள் சபை அமைத்து காணாமல் போனோர் மற்றும் கடத்தப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது காங்கிரசின் கோரிக்கை.

சுப்பிரமணியத்தின் விண்ணப்பம் மீதான முடிவை எடுப்பதற்கு கனடா அரசு அதிக காலம் எடுத்ததும் கடத்தப்படுவதற்கு துணை போய் உள்ளதாகவும், இதில் கனடா நாட்டின் செயற்பாடுகள் தோல்வி கட்டுள்ளதாகவும் பூபாலப்பிள்ளை மேலும் தெரிவித்துள்ளார்.

சுப்பிரமணியத்துடன் கடத்தப்பட்ட நபர் விடுவிக்கப்பட்டுள்ள போதும், சுப்பிரமணியம் தொடர்பான தகவல்கள் எதுவும் இல்லை.

கொழும்பில் உள்ள அவரின் குடும்பத்தினர் இது தொடர்பாக காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள போதும், தமது தடுப்புக்காவலில் சுப்பிரமணியம் இல்லை எனவும், அவர் தொடர்பான தகவல்கள் எதுவும் தெரியாது எனவும் காவல்துறையினர் கைவிரித்துள்ளனர்.

அவர் கடத்தப்பட்டதற்கான காரணங்களை என்னால் அனுமானிக்க முடியாது உள்ளது, எனது கணவர் சட்டத்திற்கு புறம்பாக செயற்படுவதில்லை. விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் அல்ல என திருமதி தம்பிப்பிள்ளை தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.

சிறிலங்காவின் தலைநகரில் கடத்தல்கள் அசாதாரணமவை அல்ல. தமிழ் மக்கள் அங்கு சந்தேகத்துடன் நடத்தப்படுவதுடன், விடுதலைப் புலிகளாகவே பார்க்கப்படுவதாக முறைப்பாடுகள் உண்டு.

சிறிலங்காவில் உள்நாட்டு போர் ஆரம்பித்ததில் இருந்து பல நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக மனித உரிமை கண்ணாணிப்பகம் கடந்த மார்ச் மாதம் தெரிவித்துள்ளது.

2005 ஆம் ஆண்டுக்கும் 2007 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 1,500-க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவை மேலும் தெரிவித்துள்ளன.

மனித உரிமை கண்காணிப்பகம் மற்றும் சிறிலங்காவின் மனித உரிமை குழுக்களில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளில் பெரும்பாலனவை அரச படையினரின் தொடர்புக்கான ஆதாரங்களை தெளிவுபடுத்தியுள்ளன.

கடத்தப்பட்டவர்களில் சிலர் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என சில தகவல்கள் தெரிவிக்கின்ற போதும், மேலதிக விசாரணைகள் எதுவுமின்றி அவர்களை மறைவான இடங்களில் தடுத்து வைப்பதை நியாயப்படுத்த முடியாது.

அண்மைக்காலமாக சிறிலங்காவின் உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ளது. விடுதலைப் புலிகளை கனடா அரசும் பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுத்தியுள்ளது.

சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை கடந்த மாதம் "நசனல் போஸ்ட்" ஏடு நேர்காணல் கண்ட போது, காணாமல் போனவர்களில் பலர் மேற்குலக நாடுகளுக்கு சென்றுள்ளதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment