Thursday, October 16, 2008

இலங்கை விவகாரத்தில் தலையிட காங்கிரஸ் தயக்கம்



இலங்கை இனப்பிரச்சினையில் தலையிட இந்தியாவின் ஆளும் தேசிய காங்கிரஸ் கட்சி தயக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் இரண்டு வாரத்துக்குள் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலக நேரிடும் என்று தமிழகத்தில் நடந்த அனைத்து கட்சிக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் தீர்மானத்தில், மத்திய அரசு, சிறிலங்கா அரசுக்கு பக்கத்து நாடு என்ற முறையில் நல்லெண்ண அடிப்படையில் வழங்கும் ஆயுத உதவிகள், இனப் படுகொலையைத் தீவிரப்படுத்தி, தமிழர்களை அழிக்கவே சிறிலங்கா அரசால் பயன்படுத்தப்படுகிறது.

அவற்றினை மத்திய அரசு உடனே நிறுத்த வேண்டும். மேலும், அங்கு இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு மனிதாபிமான உதவிகள் அனைத்தையும் செய்யவும் மத்திய அரசு முன்வர வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிசேக் சிங்வி கூறியதாவது:

இறையாண்மை கொண்ட அடுத்த நாடுகள் குறித்து கோரிக்கை வைப்பவர்கள், இந்தியாவின் இறையாண்மை என்பது நமது எல்லையுடன் முடிவடைகிறது என்பதை அறிய வேண்டும்.

அடுத்த நாட்டு உள்விவகாரத்தில் இந்திய அரசு தலையிட முடியாது. அடுத்த நாட்டின் உறவுகள் மத்திய அரசு சம்பந்தப்பட்ட விடயம். அடுத்த நாடுகளில் நடக்கும் வன்முறைகளைக் கண்டனம் செய்யும் போது, மத்திய அரசு இதைச் செய்யவேண்டும் என்று கூற முடியாது என்று கருதுகிறேன் என்றார் அபிசேக் சிங்வி.

"இலங்கைப் பிரச்சினையால் மத்திய அரசுக்கு எவ்வித சிக்கலும் இல்லை" என காங்கிரஸ் கட்சியின் மற்றொரு செய்தித் தொடர்பாளரான மணீஸ் திவாரி கூறினார்.

No comments:

Post a Comment