
யாழ்.குடாநாட்டிலுள்ள சிறிலங்கா படையினருக்கு விநியோகங்களை மேற்கொண்டுவந்த பிரதான கப்பல்களில் ஒன்றான எம்.வி.நிமல்லவ விடுதலைப்புலிகளின் தற்கொலை குண்டு தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர். |
இது குறித்து விடுதலைப்புலிகள் தெரிவிக்கையில் - காங்கேசன்துறை துறைமுகத்தில் தரித்து நின்ற படையினரின் பிரதான வழங்கல் கப்பல்களான எம்.வி.நிமல்லவ மற்றும் எம்.வி. றுகுணுவ ஆகியவற்றின் மீது இன்று புதன்கிழமை அதிகாலை 5.10 மணியளவில் கடற்புலிகளின் சிறப்பு அணிகள் மேற்கொண்ட தாக்குதலிலேயே ஒரு கப்பல் முற்றாக தாக்கியழிக்கப்பட்டது என்று கூறியுள்ளனர். தாக்குதலுக்குள்ளான மற்றைய கப்பலான எம்.வி. றுகுணுவ பலத்த சேதங்களுடன் சிறிலங்கா கடற்படையினரால் கட்டியிழுத்துச்செல்லப்பட்டுள்ளது. யாழ்.குடாநாட்டிலுள்ள பொதுமக்களின் உணவு விநியோகத்துக்கு இந்த கப்பல்களை பயன்படுத்துவதாக கூறிக்கொண்டு, இராணுவ வழங்கல்களை இந்த கப்பல்களை மேற்கொண்டுவந்தமை குறிப்பிடத்தக்கது. இன்று அதிகாலை இந்த கப்பல்கள் படையினருக்கான தமது வழமையான வழங்கல்பணியை முடித்தபின்னர் காங்கேசன்துறை துறைமுகத்தில் தரித்துநின்றவேளை, கடற்புலிகளின் மகளிர் துணைத்தளபதி கடற்கரும்புலி லெப்டினன்ட் கேணல் இலக்கியா தலைமையில் சென்ற அணி மின்னல்வேக தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் எம்.வி. நிமல்லாவ கப்பல் தீப்பற்றி எரிந்தவாறே மூழ்கத்தொடங்கியது. எம்.வி. றுகுணுவ கப்பல் கடும்சேதங்களுக்குள்ளானது. கரையிலிருந்து விரைந்து வந்த சிறிலங்கா கடற்படையினர் அதை மூழ்கவிடாது கரைக்கு இழுத்து செல்லும் முயற்சியில் ஈடுபட்டனர். இழப்புவிவரம் குறித்து விடுதலைப்புலிகள் தெரிவிக்கையில் - இந்த சம்பவத்தில் கடற்புலிகளின் மகளிர் துணைத்தளபதி கடற்கரும்புலி லெப்டினன்ட் கேணல் இலக்கியாவுடன் கடற்புலிகளின் கொமாண்டோ லெப்ரினென்ட் கேணல் குபேரன் வீரச்சாவடைந்தார் என்று குறிப்பிட்டுள்ளனர். தாக்குதலை அடுத்து துறைமுகப்பகுதியிலிருந்து சிறிலங்கா கடற்படையினர் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். படையினரின் கப்பல்கள் மீதூன இந்த தாக்குதலை அடுத்து யாழ். குடாநாட்டுக்கான சகல தொலைபேசி இணைப்புக்களும் படையினரால் துண்டிக்கப்பட்டன. முல்லைத்தீவு பகுதியை நோக்கி சிறிலங்கா கடற்படையினர் தொடர்ச்சியாக பீரங்கி தாக்குதல் நடத்தினர். |
No comments:
Post a Comment