Monday, October 27, 2008

எதிராக கருத்துக்கூற உரிமை உண்டு எனில் ஆதரித்து குரல் எழுப்பவும் உரிமை உண்டு: தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி


[திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2008, 09:21 மு.ப ஈழம்] [ந.ரகுராம்]
ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக கருத்துக்கூற உரிமை உண்டென்றால் ஆதரித்துக் குரல் எழுப்பவும் உரிமை உண்டு என்று தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியச் தண்டனைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதிமுக பொதுச்செயலார் வைகோ அவைத்தலைவர் கண்ணப்பன், இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டதை கண்டித்து வெளியிட்ட அறிக்கையிலேயே தமிழ்ப் படைப்பாளிக்ள் முன்னணி இவ்வாறு தெரிவித்துள்ளது.

தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை காக்க செப்ரெம்பர் 23 ஆம் நாள் ஒரு தொடர் முழக்க போராட்டத்தை சென்னையில் நடத்தியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்தின்போது ஈழத்தின் புகழ்மிக்க அரசியல் ஆய்வாளரான மு.திருநாவுக்கரசு எழுதிய இந்திய இராஐதந்திரத்தின் தோல்வி பற்றியதான இரண்டு கட்டுரைகளை சிறுபிரசுரமாக வெளியிட்டு விநியோகித்தும் இருந்தனர்.

அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், பிரிவினையைத் தூண்டுமாறு பேசியதாகவும் இந்தி தண்டனைச் சட்டத்தின் கீழும், சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச்சட்டத்தின் கீழும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அவைத் தலைவர் கண்ணப்பன், திரைத்துறை கலைஞர்களான இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிய கருத்துரிமையைப் பறிப்பதாகவும், ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பதாகவும் உள்ள அரசின் அடக்குமுறையை எழுத்தாளர்கள், படைப்பாளிகள் சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

ஒருபுறம் ஈழ மக்களுக்கும் ஈழ விடுதலைக்கும் ஆதரவாக இருப்பது போல காட்டிக்கொண்டு, இன்னொரு பக்கம் ஈழ விடுதலைக்கு குரல் கொடுப்போரை சிறையில் அடைப்பது என்னும் ஆட்சியாளர்களின் நடவடிக்கை, அவர்களின் இரட்டை முகத்தை அம்பலப்படுத்துகின்றது.

ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக கருத்துக்கூற உரிமை உண்டென்றால் ஆதரித்துக் குரல் எழுப்ப மற்றவர்களுக்கும் உரிமையுண்டு என்ற அடிப்படையில் சொல்லொண்ணாத் துயரங்களுக்கு ஆளாகி, சொந்த பூமியிலேயே அகதிகளாய் அலைகின்ற ஈழ மக்களுக்கும் அந்த மக்களின் விடுதலைக்கும் குரல் கொடுக்கும் சக்திகள் ஒருமித்த குரலில் இணைந்து அடக்குமுறையை எதிர்க்குமாறு தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி கேட்டுக்கொள்கின்றது.

கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு தமிழ்ப்; படைப்பாளிகள் முன்னணி கோருகின்றது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment