Wednesday, October 22, 2008

அலரி மாளிகைத் தகவலகளும் படைத் தளபதியின் தகவல்களும் முரணானவை - பாலித்த ரங்கே பண்டார



தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் அலரி மாளிகைத் தகவல்களும் இராணுவத் தளபதியின் கருத்துக்களும் நம்பகத்தன்மைக்கு முரணானவையாகும். பொய்ப் பிரசாரங்களின் எதிரொலியே இந்த நாட்டு பிரச்சினையில் தமிழகத்தின் கிளர்ச்சியும், இந்தியாவின் தலையீடும் அதிகரித்தமைக்கு காரணமாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.

மேற்கத்தேய நாடுகளைச் சுற்றிக் கொண்டிருக்கும் வெளிவிவகார அமைச்சருக்கு அண்டை நாடான இந்தியாவுக்கு சென்று சிறிலங்காவின் நிலைவரத்தை தெளிவுபடுத்த நேரமில்லாது போனது பரிகாசத்துக்குரியதாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே பாலித ரங்கே பண்டார மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்: 1992ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தின் போதும் அதன்பின்னர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தின் போதும் வடக்கில் மட்டுமல்ல கிழக்கிலும் பாரிய யுத்தத்திற்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்பட்டிருந்தது. அந்த சந்தர்ப்பங்களில் யுத்தகள நிலைவரத் தகவல்கள் உண்மைத் தன்மையை கொண்டிருந்தன.

ஆனால், கூட்டமைப்பு அரசாங்கத்தின் இன்றைய யுத்த நடவடிக்கைகள் சிறி லங்காவை மட்டுமல்ல இந்தியாவையும் சந்தேகத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. கடந்த ஒன்றரை வருட காலப்பகுதியில் மாத்திரம் 24 ஆயிரம் புலிகளை கொன்று அழித்திருப்பதாக அலரிமாளிகையும் அரச ஆதரவு ஊடகங்களும் தகவல்கள் வெளியிட்டு இருக்கின்றன. இதனை மெருகூட்டும் வகையில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மற்றும் ஜாதிக ஹெல உறுமயவின் சம்பிக்க ரணவக்க ஆகியோரது கைகளில் அலரிமாளிகைத் தகவல்கள் திணிக்கப்பட்டு அதற்கேற்றாற் போல் அவர்களும் பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால், இராணுவத் தளபதியின் அண்மைய கருத்துக்களின் அடிப்படையில் 11 ஆயிரம் விடுதலைப் புலிகளை கொன்றொழித்திருப்பதாக தெரிவித்திருக்கின்றார். அதுவே மிகைப்படுத்தப்பட்ட பொய்.இங்கு அலரிமாளிகைத் தகவல்களும் இராணுவத் தளபதியின் கருத்துக்களும் முன்னுக்குப்பின் முரணானவையாக இருக்கின்றன. இராணுவத் தளபதியின் கூற்றுப்படி நோக்கும் போது 11 ஆயிரம் புலிகள் கொல்லப்பட்டிருப்பின் மிகுதி 13 ஆயிரம் பேர் பொதுமக்களா? என்ற சந்தேகமும் கேள்வியும் எழுந்திருக்கின்றது.

அப்படியானால் 24 ஆயிரம் புலிகள் கொல்லப்பட்டு விட்டதான அலரிமாளிகையின் மற்றும் அரச ஊடகங்களின் செய்திகள் மக்களை ஏமாற்றுகின்ற பொய்ப் பிரசாரமேயன்றி வேறெதுவும் இல்லை. சிறிலங்காவின் நிலைவரங்கள் மற்றும் யுத்த தகவல்கள் தொடர்பில் கூர்ந்து கவனித்து வந்த தமிழகம், பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவதாக குறிப்பிட்டு தனது கிளர்ச்சியை ஆரம்பித்திருக்கின்றது.

அரசியல்கட்சிகள், சினிமாத்துறை, மாணவர் அமைப்புகள் என பல்வேறு தரப்புகளும் சிறிலங்காவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடத்தி வருகின்றன. இதன் உச்சகட்டமாக இந்திய மத்திய அரசாங்கம் சிறிலங்காவில் தலையிடுவதாய் அமைந்திருக்கின்றது. எமது ஆட்சியின் போது அணுகுமுறைகளில் தெளிவிருந்தது.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ராஜதந்திரங்களும் அண்டை நாட்டுடனான உறவும் நன்மைபயக்கக் கூடியவையாக இருந்தன. ஆனால், இன்றைய அரசாங்கத்திற்கு சிறந்த அணுகுமுறைகள் இல்லை. பொது மக்களைப் பாதுகாப்பதற்கான திட்டங்கள் இல்லை. நாட்டின் உண்மை நிலைவரங்கள் முடிமறைக்கப்பட்டு பொய்ப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதன் விளைவுதான் சிறி லங்கா மீதான இந்தியாவின் அழுத்தங்களுக்கு காரணமாகும்.

சிறிலங்காப் பிரச்சினை தொடர்பில் கோடிக் கணக்கில் செலவழித்து மேற்கத்தேய நாடுகளுக்கு விஜயங்களை மேற்கொள்கின்ற வெளிவிவகார அமைச்சர் வெறும் 13 ஆயிரம் ரூபாவை செலவழித்து அண்டை நாடான இந்தியாவுக்கு சென்று எமது நாட்டுப் பிரச்சினைகளை தெளிவுபடுத்த முடியாத நிலையேற்பட்டிருக்கின்றது.
இதுவும் இந்தியாவின் தலையீட்டுக்கு ஒரு முக்கிய காரணமாகும்.

ஜனாதிபதியிடம் நாட்டு மக்கள் வைத்த தற்காலிக நம்பிக்கையை அவர் கெடுத்துக் கொண்டிருக்கின்றார். நடந்து முடிந்த தேர்தல்களின் போது கிளிநொச்சியை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ விற்றுப் பிழைத்தார். தற்போது இந்தியாவும் தேர்தலை எதிர்கொள்வதற்காக கிளிநொச்சியை விற்றுக் கொண்டிருக்கின்றது. மொத்தத்தில் இந்திய அரசாங்கமும் சிறிலங்கா அரசாங்கமும் கிளிநொச்சியை விற்று பிழைப்பு நடத்தவே முயற்சிக்கின்றன என்றார்.

No comments:

Post a Comment