Tuesday, October 28, 2008

ஈழத் தமிழர்களுக்காக 26 லட்சம் ரூபா நிதி குவிப்பு



இலங்கையில் பாதிப்புக்குள்ளான தமிழ் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் கருணாநிதி விடுத்த வேண்டுகோளை ஏற்று நிதி குவிந்தது. இன்று ஒருநாள் மட்டும் சுமார் 26 லட்ச ரூபா நிதி சேர்ந்தது.

இலங்கையில் தமிழ் மக்கள் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். அவர்களுக்கு உணவுப் பொருட்கள், உடைகள் மற்றும் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதைத் தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமை முதலமைச்சர் கருணாநிதி, தமது சொந்த நிதியாக 10 லட்சம் ரூபாவை தலைமைச் செயலாளர் சிறிபதியிடம் வழங்கினார். அதைத் தொடர்ந்து மாநில அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, வெள்ளக்கோயில் சாமிநாதன் ஆகியோர் தங்கள் ஒரு மாத சம்பள தொகையினை முதலமைச்சரிடம் நிதியாக வழங்கினர்.

மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராஜா, பழனிமாணிக்கம், ரகுபதி, வேங்கடபதி, ராதிகா செல்வி ஆகியோர் தலா 50 ஆயிரம் ரூபாய் நிதியினை முதலமைச்சர் கருணாநிதியிடம் இன்று வழங்கினார்கள்.



கவிஞர் வைரமுத்து ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கினார். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி 50 ஆயிரம் ரூபாயும், செ.குப்புசாமி வசந்தி ஸ்டான்லி, ஜின்னா, கிருஷ்ணசாமி ஆகியோர் தலா 25 ஆயிரம் ரூபாயும் இலங்கை தமிழருக்கான நிவாரண நிதியாக முதல்வரிடம் வழங்கினர். டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் வேந்தரும், புதிய நீதிக்கட்சி தலைவருமான ஏ.சி.சண்முகம் இலங்கை தமிழருக்கான நிவாரண நிதியாக 5 லட்சம் ரூபாவை முதலமைச்சர் கருணாநிதியிடம் இன்று வழங்கினார்.

தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக அதன் நிர்வாகி இரத்தினசபாபதி 3 லட்சம் ரூபாவும், முன்னாள் அமைச்சர் பூங்கோதை 25 ஆயிரம் ரூபாவும் நிதி உதவி வழங்கினார்.

முதலமைச்சரின் செயலாளர்கள் சண்முகநாதன், இராஜமாணிக்கம், இராஜரத்தினம், தேவராஜ், பிரபாகர் ஆகியோர் தலா 10 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கினார்கள்.

முதல்வர் அலுவலக சிறப்பு உதவியாளர் முத்து வாவாசி 5 ஆயிரம் ரூபாயும், மக்கள் தொடர்பு அலுவலர் மருதவிநாயகம் 5 ஆயிரம் ரூபாயும், முதல்வரின் அலுவலக முதுநிலை உதவியாளர் வெங்கட்ராமன் 2 ஆயிரம் ரூபாயும், டபேதார் ஏழுமலை ஆயிரம் ரூபாயும் இலங்கை தமிழருக்கான நிவாரண நிதியாக முதல்வரிடம் வழங்கினார்கள்.

No comments:

Post a Comment