Monday, October 27, 2008

ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய மத்திய அரசுக்கு சிக்கலை உருவாக்க மாட்டோம்: கருணாநிதி



ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய மத்திய அரசுக்கு சிக்கலை உருவாக்க மாட்டோம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை நேற்று ஞாயிற்றுக்கிழமை 90 நிமிடம் வரை சந்தித்து பேச்சு நடத்திவிட்டு கருணாநிதி ஊடகவியலாளர்களுக்கு அளித்த பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கேள்வி: மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜியுடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்தியாக இருக்கிறதா?

பதில்: இதிலே குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களெல்லாம் முடிவடைந்தால்தான் முழு திருப்தி அடைய முடியும் என்று நம்புகிறேன்.

கேள்வி: உடனடி தீர்வு, போர் நிறுத்தம்தான் என்றால் நோர்வே தூதுக்குழு தலையிட்டதுபோல் இலங்கையில் உடனடி போர் நிறுத்தத்திற்கு முயற்சிக்கப்படுமா?

பதில்: இப்பொழுது நோர்வே மாதிரி எல்லாம் ஆகாது. அப்படி பேச்சு எதுவும் இல்லை.

கேள்வி: போர் நிறுத்தம் உண்டா?

பதில்: கிட்டத்தட்ட அவர் சொல்கிற மாதிரி 40 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறுகிற ஒரு போராட்டம் இது. இது நான்கு நாட்களில் முடியாது. நாம் போர் நிறுத்தம் வேண்டும் என்று சொன்னது, பொதுமக்களை இன்னல்களிலிருந்து காப்பாற்றுவதற்காக தான். இப்பொழுது சிறிலங்கா அரசு, நாங்கள் பொதுமக்களை நிச்சயமாக தாக்கமாட்டோம் என்ற உறுதிமொழியை அளித்திருக்கிறார்கள். போர் நிறுத்தத்திற்கு உடனே அமர்ந்து பேச வேண்டிய ஒரு சூழ்நிலை இருக்கிறது. அதை இந்தியாவே முன்னின்று நடத்துகிறதா? அல்லது வேறு நாடுகளுடைய முயற்சியால் நடைபெறுகிறதா? அல்லது வேறு ஏதாவது ஒரு அமைப்பின் மூலம் நடைபெறுவதா? என்பது பற்றி இன்னும் தீர்க்கமான முடிவுக்கு வரவில்லை. இருந்தாலும் போர் நிறுத்தத்திற்கான வழிமுறைகள் ஆராயப்பட்டு, அவைகள் மேற்கொள்ளப்படுவதற்கு தடை எதுவும் இப்பொழுது இல்லை.

கேள்வி: நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகல் பற்றி...

பதில்: அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார். இப்பொழுது அந்த முடிவை நிறைவேற்றினால், இந்தியாவிலே அரசியல் நிலைமை பல சிக்கல்களுக்கு ஆளாகும். ஆகவே அந்த முடிவை ஒத்திவையுங்கள் என்று பிரணாப் முகர்ஜி கேட்டுக்கொண்டிருக்கிறார்.

கேள்வி: மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி பேசும்போது, நான் முதலமைச்சரிடம் பேசினேன். அவர் மத்திய அரசுக்கு எந்த நெருக்கடியும் தரமாட்டேன் என்று உறுதிமொழி அளித்திருப்பதாக சொல்லியிருக்கிறாரே?

பதில்: மத்திய அரசுக்கு சிக்கல் உருவாக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டார். நிச்சயமாக உருவாக்க மாட்டேன் என்று சொன்னேன்.

கேள்வி: விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று பிரபாகரன் ஒரு அறிக்கை விட்டிருக்கிறாரே, அது பற்றி தங்கள் கருத்து என்ன?

பதில்: அதற்கு இந்திய அரசுதான் கருத்து தெரிவிக்க வேண்டும். நான் எப்படி கருத்து சொல்ல முடியும்!

கேள்வி: சிறிலங்காவின் தூதுக்குழு சார்பாக பசில் ராஜபக்ச கூறிய கருத்துகள் அனைத்தையும் மத்திய அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறதா? எதிர்த்தரப்பான இலங்கை தமிழ் அமைப்புகளும், இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதனை முழுமையாக மத்திய அரசு நம்பக்கூடாது. எங்கள் தரப்பின் கருத்தையும் கேட்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்களே?

பதில்: இன்றைக்குத்தான் வந்து சில கருத்துகளை சொல்லியிருக்கிறார். அதை நம்முடைய மத்திய அரசு சிந்தித்து முடிவெடுக்கும் என்று நான் நம்புகிறேன்.

கேள்வி: நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகலுக்கு 28 ஆம் நாள் கெடு கொடுத்திருந்தீர்களே, தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் அது தேவையில்லை என்று கருதுகிறீர்களா?

பதில்: இன்றைக்கு நடைபெற்ற நிகழ்ச்சியை நம்முடைய மத்திய வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜி விளக்கியிருக்கிறார். அதிலிருந்து புரிந்து கொள்ளுங்கள். அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அப்போது எடுத்த முடிவில் அந்த கட்சிகளுக்கிடையே மாறுபட்ட கருத்துகள் இருப்பதால் அவர்களையும் கலந்துகொண்டுதான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்றார் கருணாநிதி.

No comments:

Post a Comment