Wednesday, October 22, 2008

கருணாவை மக்கள் நிராகரித்துள்ளனர் எங்கள் தலைவர் நந்தகோபன் என்கிறார்--பிள்ளையான்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணாவுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானுக்கும் இடையிலான முறுகல் நிலை மேலும் மேலும் உக்கிரமடைந்து செல்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருணாவை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளாக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என நேற்றைய தினம் கட்சி தகவல் வெளியிட்டுள்ளது.
இதேவேளை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருக்கும் சில உறுப்பினர்கள் தம்மை தலைமைப் பதவிலிருந்து விலக்க முயற்சி மேற்கொள்தாகவும், அதற்கு மக்கள் இடமளிக்க மாட்டார்கள் எனவும் கருணா குறிப்பிட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் நடத்திய சந்திப்பின் போது கருணா வெளியிட்ட கருத்துக்கள் கிழக்கில் பெரும் எதிர்ப்பலையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காவற்துறை அதிகாரங்கள் தேவையில்லை என அவர் வெளியிட்ட கருத்துக்கு கிழக்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகவும், இதற்கும் கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பொதுச்செயலாளர் குலேஸ்வரராஜா தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் காவற்துறை அதிகாரங்கள் தேவையில்லை என்ற நிலைப்பாட்டிலேயே கட்சியும், கட்சி உறுப்பினர்களும் இருப்பதாக கருணா தெரிவித்துள்ளார்.

இந்த கருத்துக்களுக்கு கிழக்கு மக்களும் இணக்கம் தெரிவிப்பார்கள் என தாம் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக கட்சி உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக கருணா குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை எனவும், கட்சி உறுப்பினர்கள் கருணாவிடம் காவற்துறை அதிகாரங்கள் தேவையில்லை என வெளியிட்ட கருத்து தொடர்பில் விளக்கமளிக்குமாறு கோரியுள்ளதாகவும் கட்சியின் பொதுச் செயலாளர் குலேஸ்வரராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உண்மையான தலைவர் குமாரசுவாமி நந்தகோபன் என்பவரே எனவும், கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் கருத்து வெளியிடும் போது அனைவரது அனுமதியையும் கருணா பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருணா தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உத்தியோகப் பற்றற்ற தலைவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருணா இந்த விடயங்கள் குறித்து உத்தியோகபூர்வமாக விளக்கமளிக்க வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

தன்னிச்சையாக இவ்வாறான கருத்துக்களை கருணா வெளியிட்டு வருகின்றமை வேதனையளிப்பதாக குலேஸ்வரராஜா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வாரத்தில் பிள்ளையான் குழுவிற்கும், கருணா குழுவிற்கும் இடையில் மட்டக்களப்பில் பகிரங்க மோதல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment