Monday, October 20, 2008

புதிய தகவல்களுடன்... சிறீலங்காவிற்கு வன்னியில் பேரழிவு கொல்லப்பட்ட, காயம்பட்ட படையினரால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன

கிளிநொச்சியை கைப்பற்றும் நோக்கத்துடன் வன்னியில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட ஆறு முனைகள் ஊடான முன்னகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன.

இதன்போது சிறீலங்காப் படை தரப்பு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கடும் இழப்புக்களைச் சந்தித்துள்ளதாக சிறீலங்கா படை தரப்பை ஆதராம்காட்டி ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுவரை தமது தரப்பில் 33 படையினர் கொல்லப்பட்டதோடு, 48 பேர் காயமடைந்ததாக படைதரப்பு கூறியுள்ளது. எனினும் படையினருக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் மிக அதிகம் என மருத்துவமனைச் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.

மன்னார் மற்றும் வவுனியா மருத்துவமனைகளில் தற்போது கொல்லப்பட்டும், காயம்பட்டும் கொண்டு வரப்பட்டுள்ள படையினரால் நிரம்பி வழிவதாகவும், இவ்வாறு நூற்றுக்கணக்கான படையினர் கொண்டுவந்து குவிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனைச் செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது காயம்பட்ட படையினர் தரம்பிரிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக ஏனைய மருத்தவமனைகளுக்கு அனுப்பிவைக்க அவசர ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் தெரியவருகின்றது.

இந்த இழப்பானது கடந்த பல மாதங்களில் ஏற்பட்ட மிக அதிகமான இழப்பு என சர்வதேச ஆங்கில ஊடகம் ஒன்று வர்ணித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் வன்னேரிக்குளம் முதல் நாச்சிக்குடா பகுதி வரை, ஆறு முனைகளில் சிறீலங்காப் படையினர் முன்னகர்வுகளில் ஈடுபட்டுள்ளனர். பெரும் இழப்புக்களுக்கும் இடையில் இன்று திங்கள் வரை படையினர் வல்வளைப்பு நடவடிக்கையில் தொடர்ச்சியாக ஈடுபட்டுடிருக்கின்றனர் என களமுனைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்னும் சில நாட்களில் கிளிநொச்சியைப் பிடித்துவிடுவோம், 48 மணி நேரத்தில் இலக்கை அடைந்துவிடுவோம் என சிறீலங்கா தரப்பு அறிவித்தக்கொண்டிருக்கும் நிலையில், கிளிநொச்சியை நெருக்க முடியாதளவிற்கு விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் இடம்பெற்று வருவதாக ளமுனைச் செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போதைய சண்டையில் தமது முழுமையான ஒட்டுமொத்த பலத்தையும் சிறீலங்கா தற்போது பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. கிபிர், மிக்-27 மிகையொலி தாக்குதல் விமானங்களின் குண்டு வீச்சு, எம்.ஜ 24 தாக்குதல் உலங்குவானூர்தியின் தாக்குதல்கள், பல்குழல் எறிகணைகள், ஆட்டிலறி மற்றும் மோட்டார் எறிகணைத் தாக்குதல், கனரக வாகனங்களின் சூட்டாதரவுடன் படையினர் பல முனைகளில் முன்னகர்வுகளை நான்கு நாட்களாக மேற்கொண்டுள்ளனர்.

சிறீலங்காப் படையினர் தனது முழுமையான சுடுதிறனைப் பிரயோகித்து, நிலங்களை ஆக்கிரமிக்கத் திட்டமிட்ட முன்னகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு வருகின்றது. இந்த முறியடிப்புச் சமரில் 12 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர் என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.விடுதலைப் புலிகளினால் உருவாக்கப்பட்ட மிதிவெடி மற்றும் பொறிவெடி கொலை வலையத்தினுள் சிக்குண்டு பலர் படையினர் உயிரிழந்ததோடு, தமது உறுப்புக்களை இழந்துள்ளதாக விடுதலைப் புலிகள் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனைப் படைதரப்பும் ஒத்துக்கொண்டுள்ளது. விடுதலைப் புலிகள் தரப்பில் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக சிறீலங்கா படைத்தரப்பு தெரிவிக்கும் அதேவேளை, தமது தரப்பில் இழப்புக்கள் அதிகம் என்றும் தெரிவித்திருந்தது. இந்தச் சண்டையில் 33 படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 48 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment