Friday, October 24, 2008

இந்திய விமானங்கள் உணவுப் பொட்டலங்களை போட்டது குறித்து ஜே.என். டிக்சிற் எழுதியவை




1987 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் இராணுவம் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்டிருந்த வடமராட்சி விடுவிப்பு இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தும்படி பலவந்தப்படுத்திய இந்திய அரசு, தொடர்ந்து புலிகள் இயக்கத்துக்காக வானத்திலிருந்து உணவுப் பொட்டலங்களை போட்ட காலகட்டத்தில் ஸ்ரீலங்காவில் இந்திய உயர் ஸ்தானிகராக பணியாற்றியவர். ஜே.என். டிக்சிற் ஆவார். பின்னர் அவர் மேற்படி தனது அனுபவங்களைப் பற்றி ""அசைன்மென்ற் கொழும்பு' என்ற பெயரில் (Assignment Colombo) புத்தகம் ஒன்றை வெளியிட்டார். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அந்த நூலிலிருந்து எடுக்கப்பட்ட தகவல்களில் 1987 ஜூன் மாதம் 4 ஆம் திகதி இந்திய விமானங்கள் யாழ்ப்பாணம் மேலாகப் பறந்து வழங்கல் பொட்டலங்கள் போட்ட சம்பவம் அதன் பின்னணியிலிருந்த நிலைமை மற்றும் இரண்டு அரசுகளுக்குமிடையே நிகழ்ந்த தொடர்புகள் பற்றி தெரிவிக்கப்பட்டிருக்கும் விபரங்கள் கீழே தரப்படுகின்றன.

1987 ஜூன் மாதம் 4 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில் டில்லியிலிருந்த ஸ்ரீலங்காவின் உயர் ஸ்தானிகர் திலகரத்ன அவசரமாக இந்திய பாதுகாப்பு அமைச்சர் நட்வார் சிங்கின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார். அங்கு வைத்து நட்வார் சிங் அவருக்குத் தெரிவித்த அறிவிப்பில் இந்திய அரசு அன்று பிற்பகல் 4 மணியளவில் யாழ்ப்பாணத்துக்கு விமானம் மூலமாக உணவு வழங்கல்களைச் செய்யவிருப்பதாக கூறினார். மேலும், இது சம்பந்தமாக ஆறு விடயங்கள் அடங்கிய செய்தி ஒன்றையும் ஒப்படைத்து அதனை உடனே ஸ்ரீலங்கா அரசுக்கு அனுப்பிவைக்குமாறு கூறினார். அவ்வாறு நட்வார் சிங் ஸ்ரீலங்கா அரசுக்கு அனுப்பிய செய்தியில் அடங்கியிருந்த 6 விடயங்கள் இவைதான்.

1. இந்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் அடங்கிய பொட்டலங்களை யாழ்ப்பாணம் பிரதேசங்களில் போடுவதற்குத் தீர்மானித்துள்ளது. இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டதன் காரணம் ஸ்ரீலங்கா அதிகாரிகள் அவற்றை கடல்மார்க்கமாக கொண்டுசென்று வழங்குவதற்கு அனுமதி கொடுக்காததாகும்.

2. ஆகாயம் மார்க்கமாக வழங்கல்களைச் செய்வதற்கு இந்திய விமானப் படையின் ஏ.என். 32 வகையான 5 விமானங்கள் ஈடுபடும். ஒவ்வொரு விமானத்திலும் வெளிநாட்டு மற்றும் இந்திய ஊடகப் பிரிதிநிதிகள் பயணம் செய்வர். வழங்கல்கள் விமானங்களில் ஏற்றப்படுவதற்கு முன் அவர்கள் வழங்கல்களைச் சோதனையிடுவர்.

3. வழங்கல் விமானங்களுடன் 4 மிராஜ் தாக்குதல் விமானங்கள் பாதுகாப்புக்காக பறக்கும் இந்த விமானங்கள் மீது கீழிருந்து தாக்குதல் எதனையும் மேற்கொள்ளாமல் இருப்பதை ஸ்ரீலங்கா அரசு உறுதிப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மிராஜ் தாக்குதல் விமானங்கள் பதில் தாக்குதல்களை மேற்கொள்ளும்.

4. இந்திய விமானப்படையின் இந்த ஏற்பாட்டுக்கான பிரதான விமானங்களின் நடவடிக்கைத் திட்டம், ஆகாயப் பிராந்தியப் பாதை, வழங்கல்கள் போடப்படும் இடங்கள் பற்றிய விபரங்களுடன் தகவல்கள் கொழும்பு விமானப்படைத் தகவல் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு அறிவிக்கப்படும்.

5. யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் தொடர்ந்து அவலங்களுக்குள்ளாகியிருக்கும் நிலைமையே இவ்வாறு இந்திய அரசு தீர்மானம் மேற்கொண்டதற்குரிய காரணமாகும். இதன்மூலம் இந்தப் பிராந்தியம் முழுவதும் சமாதானத்தையும் பாதுகாப்பையும் ஏற்படுத்த முடியும் என்பது கவனத்துக்குக் கொண்டுவரப்படுகிறது.

6. இந்த மனிதாபிமான நடவடிக்கைகளை இடையூறுகள் இன்றி நிறைவேற்றுவதை ஸ்ரீலங்கா அரசு உறுதி செய்யும் என்று இந்திய அரசு எதிர்பார்க்கிறது.

எவ்வாறாயினும் ஸ்ரீலங்கா உயர் ஸ்தானிகர் இந்தத் தகவலுடன் தமது அலுவலகத்துக்குச் சென்று கொழும்புக்கு தொலைபேசி மூலம் அறிவிப்பதற்குப் போதிய கால அவகாசம் இருக்கவில்லை. நட்வார்சிங் தனது தொலைபேசி மூலம் இதுபற்றி பின்னர் அழைப்பதாக திலகரத்னவுக்கு கூறியிருந்தார். எவ்வாறாயினும் வெளிவிவகார அமைச்சர் ஹமீத் மூலமாக முன்னரே விடயங்கள் அறிவிக்கப்பட்டிருந்ததால் வெளிவிவகார அமைச்சும் ஜனாதிபதி செயலாளர் அலுவலகமும் நேரப்போகும் விடயங்கள் பற்றி அறிந்திருந்தன. இதனால், அன்று பிற்பகல் 1.30 மணியிலிருந்தே ஸ்ரீலங்கா அரச அமைச்சரவை உருவாகிவரும் நெருக்கடி நிலைமை பற்றி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தது.

இவ்வாறு விமானம் மூலம் யாழ்ப்பாணத்தில் உணவுப் பொட்டலங்களை போட்ட இந்த நடவடிக்கைக்கு இந்திய விமானப்படை தரப்பில் இடப்பட்ட பெயர் ""ஒபரேஷன் பூமாலை' (பூமாலை நடவடிக்கை Operation Garland) என்பதாகும். பங்கருக்கு அருகிலுள்ள யலஹங்கா விமானப்படை முகாமிலிருந்தும் மதுரை தாம்பரம் விமான நிலையத்திலிருந்தும் ஜூன் 4 ஆம் திகதி 15.55 மணிக்கு இந்த விமானப்படை நடவடிக்கை ஆரம்பமானது. இந்த நடவடிக்கை கட்டுப்பாட்டாளராக இந்திய விமானப்படையின் தென்பிராந்திய கட்டளை அதிகாரி செயற்பட்டார். விமானங்கள் ஆகாயத்தில் எழுந்து பறந்து கொண்டிருக்கும்போது 10 நிமிடங்கள் கடந்த நிலையில் நட்வார் சிங் என்னை அழைத்து யாழ்ப்பாணம் மேலான இந்திய விமானப் படையின் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாக ஸ்ரீலங்கா அரசுக்கு அறிவிக்கும்படி கூறினார். அதன்படி ஸ்ரீலங்கா ஜனாதிபதியின் அலுவலகத்துக்கும் வெளிவிவகார அமைச்சுக்கும் நான் அறிவித்தபோது இரண்டு அலுவலகங்களிலிருந்தும் பதில் ஏதும் கிடைக்கவில்லை. இந்திய விமானங்கள் வழங்கல்களைப் போட வேண்டிய யாழ்ப்பாணத்திற்கு மேலாக குறித்த வான்பரப்புக்கு வந்தபோது நேரம் சுமார் 17.00 மணியாகும். 25 தொன் நிறை கொண்ட உணவுப் பொருட்களும் மருந்துப் பொருட்களும் போடப்பட்டன. ஸ்ரீலங்கா அரச படையினரால் மேற்கொள்ளப்படக் கூடிய எந்தவொரு வான் தாக்குதலுக்கும் பதில் நடவடிக்கை எடுப்பதற்குத் தயாராக 15.00 மணியிலிருந்து தென்னிந்திய விமானப்படை முகாமில் மேலதிக விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இந்த நடவடிக்கை பிற்பகல் 17.30 மணிக்கு முடிவடைந்ததாக கொழும்பில் எனது அலுவலகத்துக்கு இந்திய விமானப்படை தரப்பிலிருந்து அறிவித்தல் கிடைத்தது.

No comments:

Post a Comment