Monday, October 20, 2008

இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியா நடவடிக்கை - பல்லம்ராஜ்


இந்து சமுத்திரப்பகுதியில் பாதுகாப்பை உறுதிசெய்ய இந்தியா அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது. சிறி லங்கா பிரச்சினைக்கு உரிய தீர்வுகாண பிரதமர் மன்மோகன்சிங் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பல்லம்ராஜ் தெரிவித்தார். சிறி லங்காவில் வாழும் தமிழர்கள் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறி லங்காவுக்கு மத்திய அரசு ஆயுத உதவி, போர் பயிற்சி அளிக்கக்கூடாது. பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்து பொருட்கள் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதன் எதிரொலியாக, சிறி லங்காவில் நீண்ட காலமாக நிலவி வரும் பிரச்சினைக்கு தீர்வு கண்டு, முடிவு ஏற்பட மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்று பாதுகாப்புத்துறை ராஜாங்க அமைச்சர் எம்.எம். பல்லம்ராஜ் தெரிவித்தார்.

இராணுவக் கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட அவரிடம், சிறி லங்கா பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது என்று நிருபர்கள் கேட்டனர்.அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:சிறி லங்காவில் வாழும் தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்தவும், பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் சரியான தீர்வு காணவும் வேண்டும் என்பதை மத்திய அரசு அறிந்துள்ளது.

அந்த முடிவை எட்ட பிரதமர் மன்மோகன்சிங்கின் தலைமையிலான மத்திய அரசு சரியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிறி லங்காப் பிரச்சினையில் இந்தியா எந்த அளவுக்கு தலையிட முடியும் என்பதில் மத்திய அரசு தெளிவாக இருக்கிறது. முழுக்க, முழுக்க சிறி லங்காவின்; தற்காப்புக்காகத்தான் இந்தியா ஆயுதங்களை வழங்கி வருகிறது. அதே சமயம், அங்கு வாழும் தமிழர்கள் மீது மனித உரிமைகள் மீறப்படாமல் காக்கப்பட வேண்டும் என்பதிலும் இந்தியா அதிக கவனம் செலுத்தி நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

சிறி லங்காவில் நடக்கும் சண்டையை குறைக்க வேண்டும், அங்கு வாழும் தமிழர்களின் மனித உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்ற முடிவில் மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளும் அமைந்து உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். சிறிலங்காப் பிரச்சினையில் சீனாவும், பாகிஸ்தானும் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி ஆதாயம் அடைய முயற்சிக்கிறதா? என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், இந்துமகா சமுத்திரப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பட அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா எடுத்து வருகிறது என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment