Monday, October 27, 2008

கிழக்கில் ஜனநாயகம் என்ற அரசாங்கத்தின் கூற்றை சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் நிராகரித்துள்ளது



கிழக்கில் ஆயுதக் குழுக்கள் இருக்கும் வரை, அங்கு ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியாது என அமெரிக்கா நியூயோர்க்கை தலைமையகமாக கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

கண்காணிப்பகத்தின் சட்ட மற்றும் கொள்கைத் திட்டப்பணிப்பாளர் ஜேம்ஸ் ரோஸ் இது தொடர்பாக இலங்கையின் ஆங்கில இதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

அதிகாரிகளின் முன்னிலையிலேயே கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பொதுக்கூட்டம் ஒன்றிற்காக பொதுமக்கள் பேரூந்துகளின் மூலம் ஆயுததாரிகளால் பலவந்தமாக அழைத்து வரப்பட்டமை அங்கு ஜனநாயகம் இல்லை என்பதை எடுத்துக்காட்டுவதாக ரோஸ் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் கிழக்கில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளதாக கூறுகின்ற போதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவம், அரசாங்கத்தின் கூற்றில் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது என ஜேம்ஸ் ரோஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஒரு பிரிவினர் தமிழ்நாட்டுக்கு எதிரான இந்த கூட்டத்திற்குப் பொதுமக்களைப் பலவந்தமாக அழைத்து வந்தபோதும் மற்றும் ஒரு குழு அதனை தடுத்து நிறுத்தியதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.பொதுமக்கள் பலவந்தமாக பேரூந்துகளில் ஏற்றி வரப்பட்டமையை மட்டக்களப்பு பொலிஸாரும் ஏற்றுக்கொண்டதாக ஆங்கில இதழ் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு, கடத்தல்கள், கொழும்பின் தமிழ் வர்த்த்கர்களிடம் கப்பம் பெறல் உட்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்பு சபை, என்பன குற்றம் சுமத்தியுள்ளன.

அத்துடன் எல்லைகளற்ற பத்திரிகையாளர் சங்கம், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு, பொதுமக்களுக்கு எதிராக,கொலைக் குழுவாக செயற்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளதாகவும் இன்றைய ஆங்கில செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment