Wednesday, October 22, 2008

இந்தியாவின் நடவடிக்கை ஒரு நாள் விவாதத்துக்கு சிறீலங்கா அரசாங்கம் இணங்கவில்லை



வடக்கு பிரச்சினை தொடர்பில் இந்தியாவின் நடவடிக்கை தொடர்பில் எதிர்க்கட்சிகள் கோரிய ஒருநாள் விவாதத்தை நடத்துவதற்கு அரசாங்கம் இணங்கவில்லை. எதிர்க்கட்சிகளான மக்கள் விடுதலை முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகள் விடுத்த வேண்டுகோளுக்கே அரசாங்கம் இணங்கவில்லை. நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்திலேயே இவ்விரு கட்சிகளும் மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்தன.

இவ்வறான விவாதங்கள் பிழையான அர்த்தத்தை கற்பித்துவிடும் என்பதனால் இவ்வாரத்தில் விவாதத்தை நடத்துவதற்கு நேரத்தை ஒதுக்கமுடியாதுள்ளது என்று ஆளுந்தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர். வடமத்திய மாகாண முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் மேஜர் ஜெனரல் ஜானகபெரேரா தொடர்பிலான விவாதத்தை நடத்துவதற்கு நேரத்தை ஒதுக்கித்தருமாறு ஐக்கிய தேசியக்கட்சி கோரிக்கை விடுத்ததுடன் வரவுசெலவுத்திட்டத்தில் குழுநிலை விவாதத்தை நடத்துவது தொடர்பில் எதிர்க்கட்சிகள் கலந்தாலோசித்து முடிவெடுத்து அறிவிக்கவேண்டும் என்றும் ஆளுங்கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு வாகனமொன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சி விடுத்த வேண்டுகோளை பிரதமருடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பதற்கும் நேற்றைய கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டது.

No comments:

Post a Comment