Monday, October 20, 2008

எதிர்வரும் 23 ஆம் திகதி முஹர்ஜி கொழும்பு வருகை


வடக்கின் தற்போதைய நிலைவரம், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகமவின் அழைப்பை ஏற்று இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி எதிர்வரும் 23ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பு வரவுள்ளதாக இராஜதந்திர வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் வியாழக்கிழமை காலை கொழும்பு வரவுள்ள பிரணாப் முகர்ஜி அன்றிரவே இந்தியா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கொழும்பில் தங்கியிருக்கும் வேளையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம, எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை பிரணாப் முகர்ஜி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் சிறி லங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிற்கும் இடையிலான தொலைபேசி உரையாடலின் தொடர்ச்சியாகவே பிரணாப் முகர்ஜிக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை இவ்விடயம் தொடர்பாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட இந்திய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் தலைமையிலான உயர்மட்டக் குழுவொன்று இன்று அல்லது நாளை புதுடில்லி செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை இவ்விடயம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம இந்தியா செல்லவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய விஜயத்தை நிறைவு செய்து கொண்டு அமைச்சர் போகொல்லாகம நேற்று நாடு திரும்பியதாகவும் அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் இந்திய விஜயம், இந்திய வெளிவிவகார அமைச்சரின் சிறி லங்கா விஜயம் நடைபெறவுள்ள தினங்கள் குறித்து தமக்கு எதுவும் தெரியாதென வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

இதேவேளை பிரணாப் முகர்ஜியின் விஜயம் குறித்து கருத்து தெரிவித்த இந்திய இராஜ தந்திரியொருவர், வடக்கு நிலைவரம், தமிழர்களின் பிரச்சினை குறித்து தமிழகத்தில் பாரிய எதிர்ப்பலை கிளம்பியுள்ள நிலையில் கொழும்பு வரும் வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இது தொடர்பாக சிறி லங்கா அரசாங்கத்தின் பதிலை நேரடியாக பெற்றுக் கொள்வார். அத்தோடு இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் பாதுகாப்பு, அவர்களுக்கான மனிதாபிமான உதவிகள் குறித்து சிறி லங்கா அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதி மகிந்தவிடம் கேட்டறிந்து கொள்வார்.

மோதல்களின்போது தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும், அவர்களுக்கான மனிதாபிமான உதவிகள், அத்தியாவசிய உணவுப்பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க வேண்டும் என்ற இந்தியாவின் கரிசனையை பிரணாப் முகர்ஜி சிறி லங்கா அரசாங்கத்திடம் மீண்டும் வலியுறுத்துவார். இதன் மூலம் தமிழகத்தில் தோன்றியுள்ள கொந்தளிப்பை அடக்குவதே இந்தியாவின் நோக்கமாகும். எனவே பிரணாப் முகர்ஜியின் சிறி லங்கா விஜயத்தின் மூலம் முக்கிய திருப்பம் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை. அடுத்த ஆண்டு ஏப்ரல் அளவில் மத்திய அரசாங்கத்துக்கான தேர்தல் நடைபெறவுள்ளதால் உறுதியான முடிவுகளை எடுப்பதற்கு மத்திய அரசிற்கு நேரமும் கவனமும் இல்லை. தற்போது தனது கூட்டணியில் உள்ள கட்சிகளை தொடர்ந்தும் தக்கவைப்பதிலேயே காங்கிரஸ் கட்சியின் கவனம் உள்ளது என்றார்.

No comments:

Post a Comment