Monday, October 20, 2008

விடுதலைப் புலிகள் தோல்வியடைவதை இந்தியா ஒருபோதும் விரும்பாது - ரில்வின் சில்வா


தமிழீழ விடுதலைப் புலிகள் தோல்வியடைவதை இந்தியா ஒருபோதும் விரும்பாது. அதனையே இன்று தமிழ் நாட்டை பயன்படுத்தி புதுடில்லி அரசாங்கம் யுத்தத்தை நிறுத்துவதற்கான அழுத்தத்தை வழங்கி வருகிறது. சிறி லங்கா நிலைமையை பார்வையிட இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு அழைப்பு விடுத்ததன் மூலம் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஸ எமது நாட்டின் கௌரவத்தை களங்கப்படுத்தி நாட்டைக் காட்டிக் கொடுத்துள்ளார் என்று ஜே.வி.பி.குற்றம் சாட்டுகிறது.

கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது: பிரிவினைவாத விடுதலைப்புலி பயங்கரவாதிகளுக்கு எதிராக எமது படையினர் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தி வருகையில் தூக்கத்திலிருந்து திடீரென விழித்தவர் போன்று தமிழ் நாட்டின் முதலமைச்சர் கருணாநிதி அனைத்து கட்சி மாநாட்டை கூட்டி போராட்டங்களை நடத்துகிறார்.

மத்திய அரசிலிருந்து பதவி விலகும் கடிதங்களை கையளிக்கின்றார்கள். இதன் பின்னணியில் இந்திய மத்திய அரசாங்கமே செயற்படுகின்றது. ஆனால் இது மறைக்கப்பட்டு தமிழ்நாடு மீது எமது அரசாங்கம் குற்றம் சுமத்தி உண்மையை மூடி மறைக்கின்றது. நீண்டகாலமாக இந்தியா எமது தேசிய பிரச்சினையில் தலையிட்டு அழுத்தத்தை பிரயோகித்து தனது அரசியல் பொருளாதார இராணுவ பயன்களை பெற்றுக்கொள்கின்றனர். இதற்கு சிறி லங்கா அரசாங்கமும் அடிபணிந்து போயுள்ளது.

கிழக்கில் வளங்கள் அனைத்தும் இந்தியாவிற்கு தாரைவார்க்கப்பட்டுள்ளன. எம்மை 1987 இல் ஆக்கிரமித்து உயிரிழந்த இந்தியப்படைக்கு நினைவுத்தூபியை அரசாங்கம் அமைத்துள்ளது. தேசப்பற்றாளராக மக்கள் மத்தியில் தம்மை அடையாளப்படுத்தும் ஜனாதிபதி மறுபுறம் இந்தியாவிடம் மண்டியிட்டுள்ளார். மன்னாரிலும் எண்ணெய் வள அகழ்வு மற்றும் மதுரையிலிருந்து கேபிள் மூலம் மின்சாரமும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. இந்தியா அழுத்தம் கொடுக்கும் போதெல்லாம் அரசாங்கம் இங்குள்ள வளங்களை தாரைவார்தது கப்பம் வழங்குகின்றது. விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்படுவதையும் இந்தியா விரும்பாது.

இங்கு பிரச்சினை இருந்தாலேயே அவர்களுக்கு நலம். யுத்தத்தால் பயங்கரவாதத்தை ஒழிப்போமென்ற ஜனாதிபதி, இன்று 13 ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக முன்னெடுக்கப்போவதாகத் தெரிவிக்கின்றார். காணி, காவற்துறை மற்றும் வெளிநாடுகளுடன் நேரடி தொடர்புகளை மாகாணங்களுக்கு வழங்கவும் இந்தியாவிற்கு உறுதியளித்துள்ளார். இதன் முன்னேற்பாடே கிழக்கு மாகாண முதலமைச்சரை அரசாங்கம் ஜப்பானுக்கு அனுப்பிவைத்தது. கிளிநொச்சியை கைப்பற்றிய பின்னர் தேர்தல் நடத்தப்பட்டால் இந்தியாவின் கைப்பொம்மையாக செயற்படுபவருக்கே பதவிகள் வழங்கப்படும்.

சிறி லங்கா படையினருக்கு பாதுகாப்புக்கான ஆயுதங்களையே வழங்குகின்றதே தவிர தாக்குதலுக்கான ஆயுதங்களை வழங்கவில்லை. மறுபுறம் விடுதலைப்புலிகளுக்கும் ஆயுதங்களை வழங்குகின்றது. பழுதடைந்த ராடார் கருவிகளை எமக்கு வழங்கிவிட்டு இஸ்ரேலில் இருந்து நவீன ஆயுதங்களை இந்தியா கொள்வனவு செய்கிறது. இந்த இரட்டை வேட நாடகமே அரங்கேற்றப்பட்டு வருகிறது. எமது பிரச்சினையில் இந்தியாவின் தலையீடு நியாயமானதென அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரான சந்திரசேகரன் தெரிவிக்கின்றார். இதற்கு எதிராக அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்தது. இக்கருத்து தொடர்பாக விசாரித்ததா.

இல்லை. விடுதலைப் புலிகளை முழுமையாக அழிக்கும் நோக்கம் ஜனாதிபதிக்கு கிடையாது. கிளிநொச்சியை கைப்பற்றி சிங்கக்கொடியை ஏற்றி மக்களை ஏமாற்றி அரசியல் லாபங்களை பெறுவதற்கே முயற்சிக்பப்படுகிறது. அரசாங்கம் அரசியல் லாபங்களை பெற்றுக்கொள்ளும் அதேவேளை இந்தியாவின் தேவையையும் நிறைவேற்றி பிரிவினைவாத பயங்கரவாதத்தையும் பாதுகாக்கின்றது. இந்திய அழுத்தம் அதிகரித்து வருகிறது. இதனை கவனத்திலெடுக்காமல் இருக்க முடியாதென மக்கள் மத்தியில் மாயை ஏற்படுத்தி விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கான கைங்கரியத்தையும் அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. தமிழ் மக்களுக்காக இந்தியா எதனையும் செய்யவில்லை.
இதுதான் உண்மை. ஆனால் தமிழ்மக்களின் எவ்வளவோ தேவைகளை நிறைவேற்றுகின்றதென்ற மாயை ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1987ஐ போன்ற ஒரு சூழல் உருவாகி வருகிறது. அன்று நாம் தடைசெய்யப்பட்ட போதும் அதற்கெதிரான போராட்டத்தை மேற்கொண்டோம். இந்தியாவின் தலையீடு கைவிடப்பட வேண்டும். இல்லாவிட்டால் சிறி லங்காவில் போராட்டங்கள் வெடிக்கும் என்றும் ரில்வின் சில்வா தெரிவித்தார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத், அநுர திஸாநாயக்கா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment