Thursday, October 16, 2008

தமிழகத்தின் போர்நிறுத்த முனைப்பு விடுதலைப் புலிகளின் ஏற்பாடே – கோதபாய ராஜபக்ஷ:



இலங்கையில் போர்நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்ற தமிழக அரசியல் கட்சிகளின் தீவிர முனைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஓர் ஏற்பாடே என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இராணுவ ரீதியான முன்நகர்வுகள் எந்த காரணத்திற்காகவும் இடைநிறுத்தப்பட மாட்டாதென அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 29ம் திகதிக்குள் இலங்கையில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்த இந்திய மத்திய அரசு, இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்காவிடின் இந்திய நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பிக்கள் வகிக்கும் பதவிகளை இராஜினாமா செய்யப் போவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வாழும் தமிழர்கள் இலங்கையர்கள் என்பதனை எவரும் மறந்துவிடக் கூடாது, அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவது தங்களது கடமை என கோதபாய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

போர்நிறுத்தம் அமுல்படுத்துவதற்கு நியாயமான காரணம் இருக்க வேண்டும் என ஐ.ஏ.என்.எஸ். சேவைக்கு அளித்த தொலைபேசி செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் அமுல்படுத்தப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தங்களை புலிகள் எவ்வாறு பயன்படுத்தினர் என்பதனை எவரும் மறந்துவிடக் கூடாதென அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மெய்யான நோக்கமுடையோர் விடுதலைப் புலிகளைத் தீர்த்துக்கட்ட ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோதபாய கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ்ச் சிவிலியன்கள் மீது இராணுவப்படையினர் மேற்கொள்ளும் தாக்குதல்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக் கடற்பரப்பில் கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் குறுகிய காலத்தில் விடுதலை செய்யப்பட்ட போதிலும், இந்தியாவில் கைது செய்யப்படும் இலங்கை மீனவர்கள் 3 – 6 மாதம் வரை தடுத்து வைக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக அரசியல் கட்சிகளின் கோரிக்கை குறித்து மத்திய அரசு இலங்கையுடன் எவ்வித பேச்சுவார்த்தைகளையும் நடத்தவில்லை எனவும்;, இந்தப் பிரச்சினையின் ஆழம் குறித்து மத்திய அரசு நன்கு அறிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் கருணாநிதி, எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா ஆகியோருக்கு இலங்கை நிலவரம் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெளிவுபடுத்துவாரா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதலளித்த கோதபாய ராஜபக்ஷ அவ்வாறான விளக்கம் தேவையெனில் ஜனாதிபதி நிச்சயமாக விளக்கம் அளிப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment