Thursday, October 23, 2008

இலங்கைத் தமிழர்களுக்காக முதல்வர் பதவியை துறக்கவும் கருனாநிதி தயங்கக்கூடாது - மதுரை ஆதீனம்



இலங்கைத் தமிழர்களுக்காக தனது பதவியை துறக்கவும் முதல்வர் கருணாநிதி தயங்கக்கூடாது என்று மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். திருவாரூரில் மதுரை ஆதீனம் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியிலேயே இவ்வாறு கூறியுள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஈழத் தமிழ் இனப்படுகொலை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதற்கு எதிர்வரும் 28ஆம் திகதிக்குள் உரிய நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் தமிழக முதல்வர் கருணாநிதி தனது பதவியை துறக்க வேண்டும். தமிழகத்தில் நடைபெற்றுவரும் ஆட்சியை துறந்தால்தான் ஈழத் தமிழர் பிரச்சினையில் தீர்வு ஏற்படும் என மத்திய அரசும் சிறி லங்கா அரசும் கருதினால் அதற்கும் தமிழக முதல்வர் கருணாநிதி தயாராக இருக்க வேண்டும்.

ஈழத்தில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் உணவுப்பொருட்கள், மருந்துகள் கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு கோயில்களுக்குக்கூட செல்வதற்கு தமிழர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அங்கு தமிழர்கள் தெய்வத்தை கும்பிடுவதற்குக்கூட தடை செய்யப்பட்டுள்ளது. ஒரு நாட்டில் இனப்படுகொலை நடைபெறுவதை தடுக்க மனிதாபிமான அடிப்படையில்தான் பொதுவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமே தவிர இதில் சாதி, மத, அரசியல் வேறுபாடுகளை காட்டக்கூடாது.

சிறிலங்காவுக்கு, மத்திய அரசு இராணுவ, ஆயுத உதவிகள் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும். மத்திய அரசு சிங்கள இராணுவத்திற்கு போர் பயிற்சி அளிக்கக்கூடாது. இந்தியா முழுவதும் பயங்கரவாதம், தீவிரவாதம் தலைவிரித்தாடுகிறது. இதனால், அமைதியின்மை நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய மத்திய, மாநில அரசுகள் மதநல்லிணக்கத்திற்கென ஒரு துறையை ஏற்படுத்தி அதற்கு தனியாக ஒரு அமைச்சரை நியமிக்க வேண்டும்.

இதில் அமைச்சராக நியமிக்கப்படுபவர் நாட்டில் உள்ள அனைத்து மதத்தின் நல்லொழுக்கங்களை நன்று அறிந்தவராக தெரிந்து, அந்த பதவியில் நியமிக்கப்பட வேண்டும். இதனை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக மேற்கொண்டால் நாட்டில் அமைதி நிலவும் என்றார்.

No comments:

Post a Comment